search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நடைபயணத்தால் ராகுலுக்கு ஏமாற்றமே மிஞ்சும்- குஷ்பு கிண்டல்
    X

    நடைபயணத்தால் ராகுலுக்கு ஏமாற்றமே மிஞ்சும்- குஷ்பு கிண்டல்

    • தமிழகத்தில் பா.ஜனதா வளர்ந்து இருப்பதாக தி.மு.க.வே ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளது.
    • தமிழ் நாட்டில் காங்கிரசுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்காது. எதிர்பாராத படுதோல்வியே கிடைக்கும்.

    சென்னை:

    ராகுல்காந்தியின் நடைபயணம் பற்றி பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு கூறியதாவது:-

    காங்கிரஸ் கட்சி இந்திய மக்களிடம் இருந்து விடை பெற்றுவிட்டது. இல்லாத ஊருக்கு வழி தேடுவதை போல் இல்லாத கட்சிக்காக ஊர் ஊராக ராகுல் நடைபயணம் செல்கிறார். இந்த நடைபயணம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. கடைசியில் மிஞ்ச போவது ஏமாற்றமே.

    கன்னியாகுமரியில் தொடங்கி 9 மாநிலங்களை கடந்து விட்டதாக சொல்கிறார். அவர் சென்றதும் மக்களும் அவரை மறந்து விட்டார்கள்.

    அவர் நடைபயணம் சென்று கொண்டிருக்கும்போது தான் குஜராத்தில் தோல்வி, டெல்லியில் படுதோல்வி என்ற தகவலும் அவருக்கு சென்றது. அந்த நடைபயணத்தில் மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டு இருந்தால் வாக்களித்து வெற்றி பெற செய்து இருப்பார்கள்.

    புதிதாக தலைவராக பொறுப்பேற்ற கார்கே அடித்த 'டைமிங்' காமெடி தான். காங்கிரஸ் தலைவர்களின் உண்மையான முகத்தை காட்டியது. உலகமே மீண்டும் கொரோனா வருகிறதே என்ற பீதியில் இருக்கிறது. அதற்காக மத்திய அரசு எடுத்துள்ள கட்டுப்பாட்டு நடவடிக்கை டெல்லியில் ராகுல் நடைபயணத்தை முடக்க செய்யும் சதி வேலை என்கிறார்.

    இப்படித்தான் ஒவ்வொருவரும் ராகுலிடம் நல்ல பெயர் வாங்க அவரை சுற்றி இருந்து ஜால்ரா தட்டுவார்கள். கொரோனா கட்டுப்பாட்டையே அரசியலாக்கும் இவர்களுக்கு மக்கள் மீது எந்த அக்கறையும் கிடையாது. பாராளுமன்றத்துக்குள் செல்லவே முக கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதே? அதை ஏன் விமர்சிக்கவில்லை.

    மக்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை. நமக்கு அரசியல் செய்ய வேண்டும் என்ற குறுகிய எண்ணம்தான். இதுதான் காங்கிரஸ் வீழ்ச்சிக்கு காரணம்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்திலும மிகப்பெரிய மாற்றம் வரும். தமிழகத்தில் பா.ஜனதா வளர்ந்து இருப்பதாக தி.மு.க.வே ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளது. எனவே தமிழ் நாட்டிலும் இனி காங்கிரசுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்காது. எதிர்பாராத படுதோல்வியே கிடைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×