என் மலர்
தமிழ்நாடு
வெளியானது "லியோ": 500 தேங்காய்கள் உடைத்து ரசிகர்கள் கொண்டாட்டம்
- இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் தயாராகி உள்ள "லியோ" திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது.
- படம் வெளியானதும், தியேட்டருக்கு வெளியே பட்டாசு வெடித்தும், அங்கு வந்தவர்களுக்கு இனிப்பும் வழங்கி லியோ படத்தை கொண்டாடினர்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் தயாராகி உள்ள "லியோ" திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது.
தமிழகத்தில் காலை 9 மணிக்கு திரைப்படம் வெளியானது. படம் வெளியானதையொட்டி ரசிகர்கள் அதிகாலையிலேயே கொண்டாட்டத்தை தொடங்கினர்.
அந்த வகையில் கோவை மாவட்டத்திலும், லியோ திரைப்படம் இன்று வெளியானது. மாவட்டத்தில் மொத்தம் 100 தியேட்டர்களில் விஜயின் லியோ வெளியாகியது.
படம் 9 மணிக்கு தான் வெளியாகியது என்றாலும் கோவையில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் காலை 5 மணியில் இருந்தே ரசிகர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அவர்கள் தியேட்டர் வளாகத்தில் ஒன்று திரண்டு மேள, தாளங்கள் முழங்க படத்திற்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மேலும் மேள, தாளத்தின் இசைக்கு ரசிகர்கள் ஏற்ப உற்சாக ஆட்டமும் போட்டனர். மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த விஜய் பேனருக்கு பாலாபிஷேகமும் செய்தனர்.
படம் வெளியானதும், தியேட்டருக்கு வெளியே பட்டாசு வெடித்தும், அங்கு வந்தவர்களுக்கு இனிப்பு வழங்கியும் லியோ படத்தை கொண்டாடினர்.
கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள தியேட்டருக்கு அதிகாலையிலேயே ரசிகர்கள் வந்தனர். அவர்கள், அங்கு லியோ படத்தை வரவேற்று பெரிய பெரிய பேனர்கள் வைத்தனர்.
தொடர்ந்து அதற்கு பாலாபிஷேகம் செய்ததுடன், அங்கு தேங்காயும் உடைத்தனர். தமிழக ரசிகர்கள் மட்டுமின்றி அண்டை மாநில கேரளாவில் இருந்தும் அதிகமான ரசிகர்கள் இங்கு படம் பார்க்க வந்திருந்தனர்.
தமிழக-கேரள ரசிகர்கள் அனைவரும் இணைந்து, பாடல்களை இசைக்க விட்டும், மேள தாளங்களை அடிக்க வைத்து ஒன்றாக கூடி ஆட்டம், பாட்டமாக படத்தினை வரவேற்றனர். இதனால் அந்த பகுதியே திருவிழாபோல் காட்சியளித்தது.
இதேபோல் கருமத்தம்பட்டி, நீலாம்பூர் பகுதிகளில் உள்ள தியேட்டர்களிலும் உற்சாகம் களை கட்டியது. அங்கு பேனருக்கு பாலாபிஷேகம், 500 தேங்காய் உடைத்து தங்கள் வரவேற்பை படத்திற்கு அளித்தனர்.
புறநகர் பகுதிகளில் உற்சாகம் களைகட்டிய போதும், மாநகர பகுதிகளில் ஆர்ப்பாட்டம் இல்லாமல் ரசிகர்கள் திரைப்படத்தை கண்டு ரசித்து சென்றனர்.
மாநகரில் பாலாபிஷேகம், மேள, தாளங்கள் முழங்க தடை விதிக்கப்பட்டதை அடுத்து, ரசிகர்கள் எந்தவித ஆர்ப்பாட்டமும் இன்றி அமைதியாக நீண்ட வரிசையில் காத்திருந்து, படத்தை பார்த்தனர்.
சரியாக 9 மணிக்கு படம் வெளியானதும், திரையில் விஜயை பார்த்த சந்தோஷத்தில் ரசிகர்கள் விசில் அடித்தும், பேப்பர்களை பறக்கவிட்டும் தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.