என் மலர்
தமிழ்நாடு
சென்னையில் களைகட்டிய ஓணம் கொண்டாட்டம்: "ஓண விருந்து" முன்பதிவு மும்முரம்
- மலையாள மக்கள் ஓண விழாவை, வீடுகளில் தினமும் பூக்கோலம் போடுவது, விளக்கேற்றி வழிபடுவது போன்ற பாரம்பரிய முறைப்படி கொண்டாடி வருகிறார்கள்.
- 2 பேருக்கு ஓண சாப்பாடு ரூ.900 முதல் ரூ.1800 வரை கட்டணம் விதித்து இதற்கான முன்பதிவு தொடங்கி விட்டன.
சென்னை:
மலையாள மக்களின் பாரம்பரிய விழாவான ஓணம் நாளை கொண்டாடப்படுகிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழா கடந்த 20-ந்தேதியே தொடங்கி விட்டது.
தமிழகத்தில் சுமார் 30 லட்சம் மலையாளிகள் வாழ்கிறார்கள். இதில் சென்னை மற்றும் கோவையில் மட்டும் 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர்.
சென்னையில் 125 ஆண்டுகள் பழமையான மலையாள கிளப் உள்ளது. இதுதவிர சிறிய கிளப்புகள் 100-க்கும் மேல் உள்ளன. மலையாள கிளப்பில் இந்த ஆண்டுக்கான ஓணம் விழாவை நடிகர் முகேஷ் தொடங்கி வைத்தார்.
கேரளாவின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. நாளை ஓண விருந்து மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. ஓண விருந்துக்கு முன்பதிவு செய்து வருகிறார்கள்.
மலையாள மக்கள் ஓண விழாவை, வீடுகளில் தினமும் பூக்கோலம் போடுவது, விளக்கேற்றி வழிபடுவது போன்ற பாரம்பரிய முறைப்படி கொண்டாடி வருகிறார்கள். சில கிளப்புகளில் ஓண சந்தை நடைபெறுகிறது. இங்கு கேரளத்தவர் அணியும் பாரம்பரிய உடைகள், உணவு வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஓண விழாவில் முக்கியமானது ஓண விருந்து. நாளை நடைபெறும் இந்த விருந்து நிகழ்ச்சியில் 25 வகையான உணவு வகைகளை வாழை இலையில் வைத்து சாப்பிட்டு மகிழ்வார்கள்.
இந்த சைவ சாப்பாட்டில் ஓலன், காளன், எரிசேரி, உப்பேரி, அன்னாசிபழ பச்சடி, கிச்சடி, புளி இஞ்சி, சிப்ஸ், கூட்டுக்கறி, அவியல், சாம்பார், தக்காளி ரசம், சம்பாரம் (இஞ்சி, மிளகாய் கலந்த மோர்) உள்பட 25 வகை இடம் பெற்றிருக்கும்.
இந்த உணவு வகைகளை வீடுகளில் தயாரித்து சாமி கும்பிட்டு குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் சாப்பிட்டு மகிழ்வார்கள்.
கல்லூரிகளில் அத்தப்பூ கோலம், திருவாதிரை நடனம் போன்ற பாரம்பரிய நிகழ்ச்சிகளை மாணவிகள் நடத்தி வருகிறார்கள். கோயம்பேட்டில் உள்ள செயின்ட் தாமஸ் கலைக்கல்லூரியில் வருகிற 2-ந்தேதி பூக்கோல போட்டி பிரமாண்டமாக நடத்தப்பட உள்ளது. இதில் 20-க்கும் மேற்பட்ட கோலங்கள் இடம்பெறும் என்றும், மாணவிகள் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற இருப்பதாக கல்லூரியின் செயலாளர் பிஜூ சாக்கோ தெரிவித்தார்.
ஓணத்தில் ஓண விருந்து சாப்பிட ஆர்வம் காட்டுவார்கள். அனைவரது வீடுகளிலும் அனைத்து வகைகளையும் தயார் செய்வது கடினம் என்பதால் ஓட்டல்களும் ஓண விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளது.
2 பேருக்கு ஓண சாப்பாடு ரூ.900 முதல் ரூ.1800 வரை கட்டணம் விதித்து இதற்கான முன்பதிவு தொடங்கி விட்டன. பெரும்பாலான ஓட்டல்களில் முன்பதிவும் முடிந்துவிட்டன.