என் மலர்
தமிழ்நாடு

பள்ளிகளில் காலை உணவு திட்டம் செப். 15-ந்தேதி தொடங்க வாய்ப்பு: ஏற்பாடுகள் தீவிரம்
- முதற்கட்டமாக 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் காலைச் சிற்றுண்டி திட்டத்தை செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
- 1,545 பள்ளிகளில் பயிலும் 1,14,095 மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கு ரூ.33.56 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
அரசு பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார்.
இதில் முதல்கட்டமாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை வரும் செப்டம்பர் 15-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முதற்கட்டமாக 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் காலைச் சிற்றுண்டி திட்டத்தை செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த 1,545 பள்ளிகளில் பயிலும் 1,14,095 மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கு ரூ.33.56 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் காலை சிற்றுண்டி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னை மாநகராட்சியில் 36 பள்ளிகளில் 5941 மாணவ, மாணவியர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட உள்ளது.
14 மாநகராட்சிகளில் 318 பள்ளிகளில் 37,740 மாணவ, மாணவியர்களுக்கும், 23 நகராட்சிகளில் 163 பள்ளிகளில் 17,427 மாணவ, மாணவியர்களுக்கும் காலை சிற்றுண்டி வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.