என் மலர்
தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை மையம் தகவல்
- குமரிக்கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக கோடை மழை பெய்ய தொடங்கியுள்ளது.
- மலை மாவட்டங்களை ஒட்டிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் வெயிலின் தாக்கம் சற்று குறையத் தொடங்கியுள்ளது.
சென்னை :
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து மக்களை வாட்டி வதைத்து வருகிறது. வெப்ப அலை விசியதால் மக்கள் மிகவும் அவதிப்பட்டனர். ஒரு சில மாவட்டங்களில் இயல்பை விட 3,4 டிகிரி செல்சியஸ் கூடுதலாக வெப்பநிலை இருந்தது.
தமிழகத்தின் வட மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருந்தது. 110 டிகிரி வரை தற்போது வெயில் தாக்கி வருகிறது.
இந்த நிலையில் குமரிக்கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக கோடை மழை பெய்ய தொடங்கியுள்ளது. மலை மாவட்டங்களை ஒட்டிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் வெயிலின் தாக்கம் சற்று குறையத் தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யவும், ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.
இன்று (11-ந்தேதி) முதல் 15-ந்தேதி வரை 5 நாட்களுக்கு நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 5 நாட்களுக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.