என் மலர்
தமிழ்நாடு
தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து மழை பெய்து கொண்டே இருக்கிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
- நாட்டில் எப்படி மழை பெய்து கொண்டிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும்.
- கோபாலபுரத்திற்கு எத்தனையோ பிரதமர்கள் வந்திருக்கிறார்கள்.
சென்னை:
சென்னை கோபாலபுரம் அவ்வை சண்முகம் சாலையில் உள்ள கீதாபவன் கல்யாண மண்டபத்தில் ஸ்ரீகீதாபவன் அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பு அறக்கட்டளை சார்பில் 54 மாற்றுத் திறனாளிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.
திருமணங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது:-
இன்றைக்கு நான் ஒரு உயர்ந்த பொறுப்பில் இருக்கிறேன். உங்களால் உருவாக்கப் பட்டிருக்கக் கூடிய அந்த உயர்வுப் பொறுப்பில் உங்களால் உட்கார வைக்கப்பட்டிருக்கிறேன். நான் பிறந்து, வளர்ந்து, படித்து, ஆளாகி வளர்ந்த பகுதி இந்த ஆயிரம் விளக்கு பகுதிதான். அதிலும் குறிப்பாக இந்த கோபாலபுரம் பகுதிதான்.
நான் மட்டுமல்ல நம்முடைய தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக இருந்த நம்மையெல்லாம் ஆளாக்கிய நம்முடைய தலைவர் கலைஞரும் வாழ்ந்த பகுதி, அவர் கோலோச்சிய இடம், இந்த கோபாலபுரம்.
கோபாலபுரம் என்பது தமிழ் மொழிக்கும் தமிழினத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் இன்னும் சொன்னால் இந்தியத் துணைக் கண்டத்திற்கே ஒரு தலையாய இடமாக, மறக்க முடியாத இடமாக வரலாற்றில் விளங்கிக் கொண்டிருக்கிறது.
கோபாலபுரத்திற்கு எத்தனையோ பிரதமர்கள் வந்திருக்கிறார்கள். எத்தனையோ குடியரசுத் தலைவர்கள் வந்திருக்கிறார்கள். எத்தனையோ வெளிநாட்டு தலைவர்கள் எல்லாம் வந்து போயிருக்கிறார்கள். அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சிறப்புக்குரிய இந்தப் பகுதியில் உங்களுடைய திருமணம் நடைபெறுகிறது. இதைவிடப் பெருமை உங்களுக்கு வேறு எதுவும் கிடைக்கப் போவ தில்லை.
கடந்த செப்டம்பர் மாதம் நடந்த மாற்றுத்திறனாளிகள் மாநாட்டில் உங்களுக்காக நமது அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களைப் பற்றி விரிவாக எடுத்துக் கூறியிருக்கிறேன். உங்கள் கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்றித் தருவோம்.
நாட்டில் எப்படி மழை பெய்து கொண்டிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். எப்போது ஆட்சிக்கு வந்தோமோ அப்போதில் இருந்து விடாமல் மழை பெய்து கொண்டிருக்கிறது. ஆட்சிக்கு வந்தவுடன் கொரோனா, அந்த கொடிய நோயில் இருந்து சிறிது மீண்டு வந்தோம். வந்தவுடன், பார்த்தீர்கள் என்றால் மழைதான். 10 நாள் கூட இடைவெளி இல்லை, பெய்து கொண்டே தான் இருந்தது.
வேடிக்கையாக ஒரு செய்தி சொல்கிறேன். 1996-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபோது, நான் மேயராக வந்தேன். சென்னை மாநகர மேயராக வந்தபோது, அடுத்த நிமிடமே மழை ஆரம்பித்தது. 20 நாட்கள் தொடர்ந்து பெய்து கொண்டே இருந்தது.
மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை எல்லாம் நாங்கள் பார்த்து சீர்படுத்திக் கொண்டிருந்தோம். அப்போது முதல்-அமைச்சராக இருந்த கலைஞர், நானும் பார்வையிட வேண்டும் என்று சொன்னார்.
உடனே மாநகராட்சி வாகனத்தில் கலைஞரை அழைத்துக்கொண்டு, சென்னை முழுவதும் சுற்றிப் பார்த்தோம். காரில் போய்க் கொண்டிருக்கும் போது சொன்னார், மு.க. ஸ்டாலின் சென்னைக்கு மேயராக வந்ததில் இருந்து மழை பேயாக பெய்கிறது என்று சொன்னார்.
இப்போது குடிநீர் பிரச்சினையே இல்லை. அந்த அளவுக்கு மழை பெய்து கொண்டிருக்கிறது. அந்த மழையையும் சமாளித்துக் கொண்டிருக்கிறோம்.
மழை நீர் வடிகால் பணிகளை நாங்கள் முழுமையாக செய்து முடிக்கவில்லை. 80 முதல் 95 சதவீதம் தான் முடித்திருக்கிறோம், அதற்கே மக்களிடம் இருந்து பாராட்டு வருகிறது. இன்னும் பணிகள் இருக்கிறது. அதையும் வரக்கூடிய காலகட்டத்தில் செய்து முடிப்போம்.
எந்தப் பிரச்சினையாக இருந்தாலும், அதை உடனுக்குடன் நிவர்த்தி செய்யக்கூடிய ஆட்சிதான், நடந்து கொண்டிருக்கிறது. மக்களுக்கு சேவை செய்வதன் மூலமாக உடல் நலிவு ஏற்பட்டாலும். அதைப்பற்றி கவலைப்படாமல் நான் இன்றைக்கு என்னுடைய பணியை செய்து கொண்டிருக்கிறேன். இந்த ஆட்சிக்கு நீங்கள் என்றைக்கும் துணை நிற்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதா ஜீவன், எழிலன் எம்.எல்.ஏ., சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் நே.சிற்றரசு மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.