search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழகத்துக்கு மீண்டும் வருகிறார்: பிரதமர் மோடி 4-ந்தேதி கல்பாக்கம் செல்கிறார்
    X

    தமிழகத்துக்கு மீண்டும் வருகிறார்: பிரதமர் மோடி 4-ந்தேதி கல்பாக்கம் செல்கிறார்

    • நந்தனம் திடலில் பிரமாண்ட பொதுக்கூட்ட மேடை மற்றும் ஹெலிகாப்டர் இறங்கு தளங்கள் அமைக்கும் பணி இரவு-பகலாக நடந்து வருகிறது.
    • தேர்தல் பிரசாரத்துக்காக இந்த மாத இறுதியிலும் பிரதமர் மோடி தமிழகம் வர இருப்பதாகவும் அதற்கான பயண திட்டங்கள் தயாராகி வருவதாகவும் கட்சியினர் தெரிவித்தனர்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் வரவிருக்கும் நிலையில் பிரதமர் மோடி தமிழகத்துக்கு அடிக்கடி வருவது அரசியல் களத்தை கலகலக்க வைத்துள்ளது.

    பிரதமர் மோடி கடந்த இரண்டு மாதத்தில் 3 முறை தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஜனவரி மாதம் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்துக்கு முன்னதாக திருச்சி ஸ்ரீரங்கம், ராமேசுவரம் ஆகிய கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தினார்.

    கடந்த மாதம் மீண்டும் திருச்சி வந்தார். அப்போது திருச்சி விமான நிலையத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி மற்றும் பட்டமளிப்பு விழாக்களில் பங்கேற்றார். மீண்டும் கடந்த மாதம் இறுதியில் 2 நாள் பயணமாக தமிழகம் வந்தார்.

    அப்போது பல்லடத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி மற்றும் மதுரை, தூத்துக்குடி, நெல்லையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இது கட்சியினரிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியது. தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் அரசியல் ரீதியாக அவர் ஆற்றிய உரை அரசியல் களத்தை அதிர வைத்தது.

    இந்த நிலையில் மீண்டும் பிரதமர் மோடி வருகிற 4-ந்தேதி (திங்கட்கிழமை) தமிழகம் வருகிறார். முன்னதாக காலையில் தெலுங்கானா மாநிலம் ஆதிலாபாத்தில் நடைபெறும் 2 நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அதன்பிறகு அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வருகிறார்.

    பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் கல்பாக்கம் அணுமின் நிலையத்துக்கு செல்கிறார். அங்கு ரூ.400 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள விரைவு எரி பொருள் மறுசுழற்சி உலையை தொடங்கி வைக்கிறார். இது முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது.

    கல்பாக்கம் நிகழ்ச்சியை முடித்து கொண்டு ஹெலிகாப்டரில் சென்னை வருகிறார். நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் வந்து இறங்குகிறார். பின்னர் அங்கு நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.

    இதற்காக நந்தனம் திடலில் பிரமாண்ட பொதுக்கூட்ட மேடை மற்றும் ஹெலிகாப்டர் இறங்கு தளங்கள் அமைக்கும் பணி இரவு-பகலாக நடந்து வருகிறது.

    பிரதமர் வருகை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக காவல்துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை உயர் அதிகாரிகள் பொதுக்கூட்டம் நடைபெறும் நந்தனம் திடலில் ஆலோசனை நடத்தினார்கள். அதைத் தொடர்ந்து செய்ய வேண்டிய ஏற்பாடுகள் பற்றியும் ஆலோசனை வழங்கினார்கள்.

    இந்திய விமானப்படை அதிகாரிகள் ஹெலிகாப்டர் இறங்கும் இடம், அதை சுற்றிலும் உள்ள மரங்கள், கட்டிடங்களை பார்வையிட்டார்கள். மொத்தம் 3 ஹெலிகாப்டர்கள் தரை இறங்கும். அதை நாளை தரையிறக்கி ஒத்திகை பார்க்க திட்டமிட்டு உள்ளார்கள்.

    4-ந்தேதிக்கு முன்னதாக கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணி கட்சி தலைவர்களையும் மேடையில் இடம்பெற வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    தற்போதைய நிலையில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், புதிய நீதிக்கட்சி ஏ.சி.சண்முகம், பாரிவேந்தர், தேவநாதன் யாதவ் ஆகியோர் கலந்து கொள்வது உறுதியாகி உள்ளது. மற்ற கட்சிகளிடமும் பேசி வருகிறார்கள்.

    பொதுக்கூட்டத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த தொண்டர்களை திரட்டும் வேலையில் கட்சியினர் ஈடுபட்டுள்ளார்கள்.

    தேர்தல் பிரசாரத்துக்காக இந்த மாத இறுதியிலும் பிரதமர் மோடி தமிழகம் வர இருப்பதாகவும் அதற்கான பயண திட்டங்கள் தயாராகி வருவதாகவும் கட்சியினர் தெரிவித்தனர்.

    Next Story
    ×