search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கூட்டணிக்கு ரெடி - ஆனால் இதனை ஏற்க தயாரா? : சீமான்
    X

    கூட்டணிக்கு ரெடி - ஆனால் இதனை ஏற்க தயாரா? : சீமான்

    • தற்காலிக தோல்விக்காக நிரந்தர வெற்றியை பறிகொடுக்க முடியாது.
    • மக்களை நம்பி தொடர்ந்து தனித்தே களத்தில் நின்று போராடுவேன்.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் பின்வருமாறு:-

    கேள்வி:-நாம் தமிழர் கட்சி தொடர்ச்சியாக தனித்தே போட்டியிட்டு வருகிறது. இதனால் வாக்கு சதவீதம் அதிகரித்து வந்த போதிலும் வெற்றி என்பது எட்டாக்கனியாகவே உள்ளதே? இது தொண்டர்கள் மத்தியில் சோர்வை ஏற்படுத்தி விடாதா?

    பதில்:- வாக்கு சதவீதம் அதிகரித்து வருவதே பெரிய வெற்றிதான். தலைவர், தொண்டர் என தனித்தனியே இருந்தால்தான் நீங்கள் சொல்வது போன்று சோர்வு, சலிப்பு எல்லாம் வரும். நாம் தமிழர் கட்சியில் அனைவருமே லட்சிய உறுதியுடன் புரட்சிகர அரசியலையே முன்னெடுத்துச் செல்கிறோம். 'சுதந்திர பசி கொண்ட மக்களை சோற்றுப்பசி ஒன்றும் செய்யாது' என்று எங்கள் தலைவர் சொல்கிறார்.

    தற்காலிக தோல்விக்காக நிரந்தர வெற்றியை பறிகொடுக்க முடியாது. தோற்கப் போகும் கோட்பாட்டை ஏற்று அதன் வெற்றிக்காக இன்று பாடுபடுவதைவிட என்றாவது ஒருநாள் ஜெயிக்கப்போகும் கோட்பாட்டை ஏற்று அதற்காக போராடி தோற்பதே மேன்மையானது என்கிறார் நேரு. அப்படித்தான் இதனை பார்க்க வேண்டும். அதனால் இங்கு சோர்வு என்பதே கிடையாது. எளிதாக எதுவும் நடந்து விடாது. ஒரே நாளில் மாறுதல் எப்படி நடக்கும். கத்தரிக்காய், வெண்டைக்காயை நீங்கள் பறிக்க வேண்டுமென்றால் கூட விதை போட்டு 3 மாதம் காத்திருக்க வேண்டியுள்ளது.

    புரட்சிகர மாறுதல் அரசியலில் எந்த விலையும் கொடுக்காமல் எப்படி வரும். எந்த பின்புலமுமின்றி நாங்கள் வளர்ந்து வருவதைத்தான் நீங்கள் பார்க்க வேண்டும். வாரிசு பின்புலம், கட்சி பின்புலம் எதுவுமின்றி எளிய பிள்ளைகளாகிய நாங்கள் ஒரு அரசியலை முன்னெடுத்து செல்கிறோம். அரசியல் அதிகாரம், பல ஆயிரம் கோடிகளை கொட்டி தேர்தலை சந்திக்கும் கட்சிகளுக்கு நடுவே எதுவும் இல்லாமல் வரும் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தும் மக்களின் கூட்டம் அதிகரித்துக் கொண்டே செல்வதும் வெற்றி தானே. சட்டமன்ற உறுப்பினராக, பாராளுமன்ற உறுப்பினராக, மாமன்ற உறுப்பினராக செல்வது மட்டுமே வெற்றி கிடையாது. எங்களது லட்சியங்கள் மக்களால் பெரிதும் வரவேற்கப்படுவதே வெற்றிதான்.


    கே:- பாரதிய ஜனதா, காங்கிரஸ், தி.மு.க., அ.தி.மு.க. என அனைத்து கட்சிகளும் கூட்டணி அரசியலையே முன்னெடுத்துச் செல்கின்றனர். அதனை எப்படி பார்க்கிறீர்கள்?

    ப:- கொள்கையில்லாத அரசியல் பாவம் என்கிறார் காந்தி. அப்படி கொள்கை அரசியலா? கூட்டணி அரசியலா? என்பதை பார்த்தால் கொள்கை அரசியலைத்தானே முன்னெடுக்க வேண்டும். கூட்டமாக சேர்ந்து கொள்ளையடித்தால், கொலை செய்தால் அது சரியானது என்றாகி விடுமா? அது குற்றம் இல்லையா? மக்களை முழுமையாக நம்பாதவர்கள், நேசிக்காதவர்கள்தான், ஆள்பலம் தேடுவார்கள். தனித்த வீரன், நேர்மையானவன், நான் மக்களை நம்புகிறேன்... நேசிக்கிறேன்.

    அவர்கள் என்னை ஆதரிக்கிறார்கள். அப்படி இருக்கும்போது ஆள் துணை எனக்கு எதற்கு? கூட்டத்தில் ஒருவனாக நிற்பதற்கு துணிவு தேவையில்லை. தனித்து நிற்பதற்குத் தான் துணிவு தேவை. அதனால் நாங்கள் அதனை கணக்கிலேயே எடுத்துக் கொள்வது இல்லை. எனவே மக்களை நம்பி தொடர்ந்து தனித்தே களத்தில் நின்று போராடுவேன்.

    கே:- நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்த கரும்பு விவசாயி சின்னம் வேறு ஒருவருக்கு ஒதுக்கப்பட்டு உள்ளதே? அதனை எப்படி அணுகப் போகிறீர்கள்? என்ன நினைக்கிறீர்கள்?

    ப:- வேண்டுமென்றே அது செய்யப்பட்டுள்ளது. ஒரு சின்னத்தை பெற்று சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்களில் ஒரு சதவீத வாக்கு பெற்றிருந்தாலே அந்த கட்சிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

    கரும்பு விவசாயி சின்னத்தில் 6 தேர்தல்களில் போட்டியிட்டுள்ளோம். அவர்கள் சொல்வது போல வரியும் கட்டியுள்ளோம். 7 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளோம். அப்படி இருக்கும்போது இரண்டே தொகுதியில் போட்டியிட்டு 71 ஓட்டுகளையே பெற்றவருக்கு எங்கள் சின்னத்தை எப்படி ஒதுக்கினார்கள்? அவருக்கு அவசரம் அவசரமாக சின்னத்தை ஒதுக்கி கொடுத்தது ஏன்?

    எனவே நாம் தமிழர் கட்சிக்கு தமிழகம்-புதுச்சேரியில் விவசாயி சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று வழக்குப் போட்டு உள்ளோம். அதற்கு தேர்தல் ஆணையம் என்ன பதில் சொல்லப்போகிறது? எனபதை பார்க்க வேண்டும். 4 அல்லது 5 நாட்களில் அது தெரிந்து விடும்.

    கே:- தனித்தே போட்டியிடுவது என்கிற முடிவெடுத்துள்ள போதிலும் கூட்டணி பற்றி ரகசிய பேச்சுவார்த்தையில் எங்களோடு கட்சிகள் ஈடுபட்டுள்ளன என்று கூறியுள்ளீர்கள்? எதிர்காலத்தில் கூட்டணிக்கான வாய்ப்பு உள்ளதா? இல்லை சீமான் தனி வழியிலேயே பயணிப்பாரா?

    ப:- நீங்கள் இப்படித்தான் (தனித்து) என்னை ஏற்க வேண்டும். என்னையென்றால் நான் கொண்டுள்ள தத்துவத்தை நீங்கள் ஏற்க வேண்டும். நான் தமிழ், தமிழர், தமிழ் தேசியத்தை முன்னெடுத்து பேசி வருகிறேன். நான் பேசுகிற அரசியலை எடப்பாடி பழனிசாமி பேசுகிறாரா? இல்லையா? இன்று அவர் வைத்திருக்கும் முழக்கம் என்ன? தமிழர் உரிமை மீட்போம். தமிழ்நாட்டை காப்போம் என்கிறார். இதைத்தானே நான் தொடர்ச்சியாக பேசி வருகிறேன்.

    இப்படி எனது அரசியலை ஏற்று உங்கள் கருத்தை ஏற்கிறேன் என்று என்னோடு பயணிக்க யாராவது வந்தால் அதுபற்றி அப்போது யோசிக்க வேண்டும். அதே நேரத்தில் முறைகேடாக ஆட்சி செய்து வழக்குகளை சந்தித்தவர்களுடன் சேர்ந்தால் அவர்கள் மீது இருக்கும் கோபம் எங்கள் மீதும் திரும்ப வாய்ப்பு உள்ளது.

    புதிய ஆற்றல்களாக அமைப்புகள் வந்தால் அவர்களோடு கூட்டணி சேர்ந்து பயணிக்கலாம். அதற்கு நாம் தமிழர் கட்சி தயாராக உள்ளது. மற்றவர்களின் தோள் மீது ஏறி நின்று நான் உயரமானவன் என்று காட்டிக் கொள்வதை விட தனித்து நின்று உண்மையான உயரத்தை காட்டுபவர்களே மேலானவர்கள். அப்படி இருக்கும்போது மக்களுக்கு முன்பு நான் ஏன் போலியான உருவத்தை காட்ட வேண்டும்.

    நான் இவ்வளவுதான் என்று தனித்து நின்று உண்மையான உருவத்தை காட்டிவிட்டு போய்விட வேண்டியதுதானே? தனித்து நின்றாலும் நாங்கள் தனித்துவத்தோடு நிற்கிறோம். அதனால் நாம் தமிழர் கட்சிதான் பெரிய கட்சி. 40 தொகுதியிலும் நான்தான் தனித்து போட்டியிடுகிறேன்.


    எனக்கு முன்பு விஜயகாந்த் மட்டுமே அப்படி களம் கண்டுள்ளார். 2014-ம் ஆண்டு ஜெயலலிதா அதுபோன்று தனித்து போட்டியிட்டு தேர்தலை சந்தித்து 37 இடங்களிலும் வெற்றி பெற்றார். பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதியிலும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதியிலும் தனித்து போட்டியிட போகிறோம். எனவே நாங்கள்தான் பெரிய கட்சி. தனித்து நிற்பதற்கு இப்போது யாருக்கும் தைரியம் இல்லை என்பதே உண்மையாகும்.

    இவ்வாறு சீமான் கூறினார்.

    Next Story
    ×