என் மலர்
தமிழ்நாடு

திருப்பூரில் வீட்டில் அடைத்து வைத்து சிறுமியை கற்பழித்த வாலிபர்கள்
- சிறுமியின் உடல் நிலை பாதிக்கப்படவே அவரது பெற்றோர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றுள்ளனர்.
- டாக்டர்கள் பரிசோதித்த போது சிறுமி 4 மாத கர்ப்பமாக இருந்தது தெரியவரவே பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் ராக்கியாபாளையம் சின்னச்சாமி காம்பவுண்டு பகுதியை சேர்ந்த 17 வயதான சிறுமி 10-ம்வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். அவரது பெற்றோர் வேலைக்கு செல்லும் போது அந்த சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருப்பார்.
இந்தநிலையில் அதே காம்பவுண்டு பகுதியில் சூர்யகுமார் (வயது 28), அரவிந்த் (29) ஆகியோர் வசித்து வந்தனர். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.
சம்பவத்தன்று சூர்யகுமாரின் மனைவி மற்றும் அவரது 2 குழந்தைகள் வெளியூருக்கு சென்று விட்டனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட சூர்யகுமார், வீட்டில் தனியாக இருந்த 17 வயது சிறுமியிடம் நைசாக பேச்சுக்கொடுத்து அவரது வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்கு சென்றதும் சிறுமியை வீட்டில் அடைத்து வைத்து வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அப்போது அங்கு வந்த அரவிந்தும் சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார்.
இது பற்றி வெளியே சொன்னால் கொன்று விடுவோம் என்று 2 பேரும் சிறுமியை மிரட்டியுள்ளனர். மேலும் 2பேரும் அவ்வப்போது சிறுமியை தனியாக அழைத்து சென்று உல்லாசமாக இருந்துள்ளனர்.
இந்தநிலையில் சிறுமியின் உடல் நிலை பாதிக்கப்படவே அவரது பெற்றோர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றுள்ளனர். டாக்டர்கள் பரிசோதித்த போது சிறுமி 4 மாத கர்ப்பமாக இருந்தது தெரியவரவே பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர். இது பற்றி சிறுமியிடம் கேட்டபோது, அவர் நடந்த விவரத்தை கூறினார்.
உடனே இதுகுறித்து திருப்பூர் வடக்கு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி சூர்யகுமார், அரவிந்த் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர். சிறுமியை வீட்டில் அடைத்து வைத்து திருமணமான வாலிபர்கள் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.