என் மலர்
தமிழ்நாடு

மதுபோதையில் பள்ளிக்கு வந்த தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்
- சம்பவத்தன்று இவர் வகுப்பறைக்குள் மது அருந்தி வந்ததாக கூறப்படுகிறது.
- 5 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பள்ளியில் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருந்தனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டாரத்துக்கு உட்பட்ட ஆர். பாலக்குறிச்சியில் வைரவன்பட்டி பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக எம். அந்தோணி பணியாற்றி வந்தார்.
10-க்கு உட்பட்ட மாணவர் எண்ணிக்கை கொண்ட இந்த பள்ளியில் அந்தோணி ஒற்றை ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
சம்பவத்தன்று இவர் வகுப்பறைக்குள் மது அருந்தி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் தொடர்ச்சியாக விடுமுறை எடுத்து வந்துள்ளார். இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது. பெற்றோர்கள் கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்து வந்தனர்.
தொடர் புகாரின் காரணமாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சண்முகம், பொன்னமராவதி வட்டார கல்வி அலுவலர் ராம திலகத்திடம் முறையான விசாரணை நடத்த உத்தரவிட்டார். பின்னர் நடைபெற்ற விசாரணையில் குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து மாவட்ட கல்வி அதிகாரி அந்தோணியை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். மேலும் அருகாமையில் உள்ள இன்னொரு பள்ளி ஆசிரியரை பணியமர்த்தி உள்ளனர். இது தொடர்பாக பள்ளியின் நிர்வாக குழு உறுப்பினர் இந்திரா கூறும் போது, தலைமை ஆசிரியரின் செயல்பாடுகள் தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
5 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பள்ளியில் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருந்தனர். ஆனால் அந்தோணியின் நடத்தையால் தற்போது 7 குழந்தைகள் மட்டுமே கல்வி பயின்று வருகிறார்கள். ஆகவே தலைமை ஆசிரியர் பிரச்சனையை கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக கண்டுகொள்ளாமல் இருந்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.