என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வருவாய்-ரூ.1,522கோடி , செலவு- ரூ.1,518 கோடி , உபரி-ரூ.4.10 கோடி: திருப்பூர் மாநகராட்சியில்  பட்ஜெட் தாக்கல்
    X

    வருவாய்-ரூ.1,522கோடி , செலவு- ரூ.1,518 கோடி , உபரி-ரூ.4.10 கோடி: திருப்பூர் மாநகராட்சியில் பட்ஜெட் தாக்கல்

    • பட்ஜெட் மீது மேயர் தினேஷ்குமார் உரையாற்றினார்.
    • பொதுமக்களின் தண்ணீர் தேவைக்கேற்ப மாமன்ற உறுப்பினர்களிள் வேண்டுகோளின் அடிப்படையில் ஆழ்துளை கிணறுகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சியில் 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதி குழு தலைவர் கோமதி பட்ஜெட்டை வெளியிட்டார். அதனை மேயர் தினேஷ்குமார் பெற்றுக்கொண்டார். துணை மேயர் பாலசுப்பிரமணியம், கமிஷனர் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    2025- 26ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் ரூ.1,522 கோடியே 7 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது. செலவினம் 1,517 கோடியே 97 லட்சம். உபரி ரூ.4 கோடியே 10 லட்சம் என நிதி குழு தலைவர் கோமதி தெரிவித்தார்.

    இதன் பின்னர் பட்ஜெட் மீது மேயர் தினேஷ்குமார் உரையாற்றினார். மேலும் மாநகராட்சி சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் குறித்தும் விளக்கினார். அதன் விவரம் வருமாறு:-

    புதிய குடிநீர் திட்டத்தின் கீழ் புதிய நீராதாரம் உருவாக்குதல், நீராதாரத்திலிருந்து தலைமை சுத்திகரிப்பு நிலையம் வரை 19.83 கி.மீ. நீளத்திற்கு பிரதான குழாய்கள் அமைத்தல், 196.00 மில்லியன் லிட்டர்கொள்ளளவு கொண்ட சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல், சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து மாநகர் முழுமை பகுதிக்கும் 144.028 கி.மீ. நீளத்திற்கு நீருந்து குழாய் அமைத்தல், 29 இடங்களில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டுதல், 1192.331 கி.மீ. நீளத்திற்கு குடிநீர் விநியோக குழாய்கள் பதித்தல் ஆகியவற்றில் பெரும்பான்மையான பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்கள்பயன்பாட்டிற்கு நான்காவது குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதுவரை 98சதவீத பணிகள் முடிவுற்றுள்ளது.

    இப்பணிகள் இவ்வாண்டில் முடிக்கப்பட்டு 3 நாட்கள் இடைவெளியில் குடிநீர் விநியோகம் முழுமையாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

    பொதுமக்களின் தண்ணீர் தேவைக்கேற்ப மாமன்ற உறுப்பினர்களிள் வேண்டுகோளின் அடிப்படையில் ஆழ்துளை கிணறுகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    திருப்பூர் மாநகராட்சியில் பாதாள சாக்கடைத் திட்டத்தில் 544.281 கி.மீ.நீளத்திற்கு கழிவுநீர் சேகரிக்கும் குழாய்கள் அமைத்தல், 9 கழிவு நீரேற்று நிலையங்கள் கட்டுதல், 44.086 கி.மீ. நீளத்திற்கு கழிவுநீர் உந்து குழாய்கள் அமைத்தல், 71 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு சுத்திகரிப்பு நிலையங்கள் கட்டுதல், 62,835 வீட்டு இணைப்புகள் வழங்குதல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றது. இதுவரை 97 சதவீத பணிகள் முடிவுற்றது. இப்பணிகள் இவ்வாண்டில் முழுமையாக முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

    திருப்பூர் மாநகராட்சி பகுதியில் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை மண்டலத்துக்கு 2 வார்டு வீதம் பரிசோதனை அடிப்படையில் வீடு தோறும் தரம் பிரித்து வழங்க ஒவ்வொரு வீட்டுக்கும், பச்சை, சிவப்பு வண்ணங்களில் இரண்டு பக்கெட்டுகளை வழங்கிட உள்ளோம். பின்பு மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்.

    திருப்பூர் மாநகராட்சி பகுதியில் 249.06 கி.மீ. நீளத்திற்கு ரூ.133.00 கோடி திட்ட மதிப்பீட்டில் சேதமடைந்த சாலைகள் சீரமைக்கப்படும். மேலும் 18.18 கோடி மதிப்பீட்டில் 26.53 கி.மீ. நீளத்திற்கு மண் சாலைகள் தார் சாலைகளாக மாற்றியமைக்கப்படும். பழுதடைந்துள்ள கான்கிரீட் சாலைகள் 90.00 கி.மீ. நீளத்திற்கு ரூ.30.00 கோடி திட்ட மதிப்பீட்டில் சீரமைக்கப்படும்.

    திருப்பூர் மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளாலும், இயற்கை சீற்றம் போன்ற நிகழ்வுகளால் சேதம் ஏற்பட்டுள்ள சாலைகள் ரூ.7கோடி மதிப்பீட்டில் பழுது நீக்கப்படும். அவினாசி ரோடுமேம்பாலம் முதல் நல்லாத்துப்பாளையம் கேட் தோட்டம் வரையிலான பகுதிகளில் புதிய இணைப்பு சாலை அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் ஆய்வு செய்யப்பட்டு கருத்துருக்கள் அனுப்பப்பட்டு, உரிய அனுமதி பெற்று பணிகள் மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×