search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    துபாயில் விமான நிலைய ஓடுபாதையில் இப்தார் நிகழ்ச்சி
    X

    துபாயில் விமான நிலைய ஓடுபாதையில் இப்தார் நிகழ்ச்சி

    • பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல கலாசாரங்களை கொண்ட விமான நிலைய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
    • நோன்பு திறக்கும் நேரம் வந்ததும் அனைவரும் பிரார்த்தனை செய்து நோன்பை திறந்தனர்.

    துபாய்:

    ரமலான் நோன்பையொட்டி இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. பள்ளிவாசல்கள், கூடாரங்களில் நடைபெறும் இப்தார் நிகழ்ச்சிகளில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று நோன்பு திறந்து வருகின்றனர். இந்த நிலையில் உலகில் முதல் முறையாக துபாய் சர்வதேச விமான நிலைய ஓடு பாதையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. விமானங்கள் தரையிறக்கப்படும் ஓடுபாதையில் நடந்த இப்தார் நிகழ்ச்சியில் அமீரகம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல கலாசாரங்களை கொண்ட விமான நிலைய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பேரீச்சம் பழம், தண்ணீர், ஜூஸ், பிரியாணி உள்ளிட்டவை வழங்கப்பட்டது.

    இந்த நோன்பு திறக்கும் நேரம் வந்ததும் அனைவரும் பிரார்த்தனை செய்து நோன்பை திறந்தனர். அவர்கள் நோன்பை திறந்த போது விமானங்கள் தரையிறங்குவது, புறப்படுவது நடந்து கொண்டிருந்தது.


    இது குறித்து துபாய் விமான நிலைய அதிகாரி கூறும்போது, துபாய் சர்வதேச விமான நிலைய ஊழியர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை ஏற்படுத்தும் வகையில் விமான நிலைய ஓடுபாதையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

    இதில் பலரும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். மிகவும் பரபரப்பான சூழலில் வேலை செய்து வந்தவர்கள் அதனை மறந்து பலரும் விளையாட்டாக பேசிக் கொண்டு மன இறுக்கத்தை மறந்து செயல்பட்டனர்.

    விமான நிலையத்தின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் ஊழியர்களின் பங்களிப்பு முக்கியமானது அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தொடர்ந்து இதுபோன்ற வித்தியாசமான நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்றார்.

    துபாயில் கின்னஸ் உலக சாதனைகள் பல வித்தியாசமான முறையில் படைக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக விமான ஓடு பாதையில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.

    Next Story
    ×