என் மலர்
புதுச்சேரி

குளிர்கால கூட்டம்- புதுவை சட்டசபை நாளை கூடுகிறது
- சபையில் இரங்கல் தீர்மானம், பொதுத்துறை நிறுவனங்களின் அறிக்கைகள் தாக்கல் செய்யப்படுகிறது.
- குளிர்கால கூட்டம் என தெரிவிக்கப்பட்டாலும், சபை நாளை ஒரு நாள் மட்டுமே நடைபெறும்.
புதுச்சேரி:
புதுவை சட்டசபையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு 22-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
சட்டசபையை 6 மாதத்திற்கு ஒருமுறை கூட்ட வேண்டும் என்பது விதி. இதன்படி 6 மாத காலம் முடிவடைய உள்ளதால் புதுவை சட்டசபை நாளை கூட்டப்படுகிறது. நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு சட்டசபை கூடுகிறது. சபாநாயகர் ஏம்பலம் செல்வம் குறள் வாசித்து சபை நிகழ்வுகளை தொடங்கி வைக்கிறார்.
சபையில் இரங்கல் தீர்மானம், பொதுத்துறை நிறுவனங்களின் அறிக்கைகள் தாக்கல் செய்யப்படுகிறது. குளிர்கால கூட்டம் என தெரிவிக்கப்பட்டாலும், சபை நாளை ஒரு நாள் மட்டுமே நடைபெறும். இதனிடையே மத்திய அரசு புதுவைக்கு 2023-24ம் ஆண்டுக்கு ரூ.3 ஆயிரத்து 124 கோடியை மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கியுள்ளது.
புதுவை சட்டசபையில் கடந்த 12 ஆண்டாக புதுவையில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. இந்த ஆண்டு மார்ச் மாதம் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்ய அரசு நடவடிக்கை எடுத்தது.
இதற்காக மாநில திட்டக்குழுவை கூட்ட துறைவாரியாக ஒதுக்கப்பட வேண்டிய நிதி விபரங்களை பெற்று ரூ.11 ஆயிரத்து 600 கோடிக்கு வரைவு பட்ஜெட்டை மத்திய அரசு ஒப்புதலுக்காக அனுப்ப உள்ளது. இதற்கு மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் மார்ச் மாதம் சட்டசபை கூட்டப்பட்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.