search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "1984 riots"

    சீக்கியர்களுக்கு எதிராக நடந்த வன்முறையை ‘நடந்தது, நடந்து விட்டது’ என்று கூறியதற்காக நாட்டு மக்களிடம் சாம் பிட்ரோடா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
    சண்டிகர்:

    இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி, கடந்த 31-10-1984-ம் அன்று டெல்லியில் உள்ள தனது வீட்டில் சீக்கிய பாதுகாவலர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

    அந்த படுகொலைக்குப்பிறகு சீக்கியர்களுக்கு எதிராக நாடு முழுவதும் வன்முறை வெறியாட்டங்கள் நடந்தன. இதில் 3,325 சீக்கியர்கள் பலியாகினர். ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்தனர். அவர்களுக்கு சொந்தமான பலநூறு கோடி ரூபாய் மதிப்புள்ள உடைமைகள் சூறையாடி, சேதப்படுத்தப்பட்டன.

    தற்போது பாராளுமன்ற தேர்தலின்போது இந்த பிரச்சனையை மையப்படுத்தி பாஜகவினர் பிரசாரம் செய்து வருகின்றனர்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய காங்கிரஸ் கட்சியின் வெளிநாடுவாழ் இந்தியர்கள் அமைப்பின் தலைவரான சாம் பிட்ரோடா ‘அது 1984-ம் ஆண்டில் நடந்து முடிந்துப்போன கதை. நீங்கள் கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் என்ன சாதித்திருக்கிறீர்கள்? என்ற கேள்விக்கு பதில் சொல்லுங்கள்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

    ‘ஆனது ஆகிப்போனது, முடிந்துப்போன கதை’ என சீக்கிய மக்களின் உயிரிழப்பை துச்சப்படுத்தும் வகையில் சாம் பிட்ரோடா தெரிவித்த இந்த கருத்துக்கு பிரதமர் மோடி, அமித் ஷா மற்றும் சில சீக்கிய அமைப்புகளை சேர்ந்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இந்த விவகாரத்தை மையப்படுத்தி டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர்  ராகுல் காந்தி வீட்டின் அருகே பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



    இந்நிலையில், இதுதொடர்பாக இன்று கருத்து தெரிவித்த ராகுல் காந்தி, சீக்கியர்களுக்கு எதிராக நடந்த வன்முறையை ‘நடந்தது, நடந்து விட்டது’ என்று கூறியதற்காக  சாம் பிட்ரோடா நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    பஞ்சாப் மாநிலம், பத்தேகர் சாஹிப் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய அவர், ‘1984-ம் ஆண்டில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக சாம் பிட்ரோடா தெரிவித்த கருத்து முற்றிலும் தவறானது. இதற்காக நாட்டு மக்களிடம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்.

    இதை நான் அவருக்கு தொலைபேசி மூலம் தெரிவித்திருக்கிறேன். இப்படிப்பட்ட கருத்தை கூறுவதற்காக நீங்கள் வெட்கப்பட வேண்டும். பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் நான் தெரிவித்திருக்கிறேன்’ என குறிப்பிட்டார்.
    ×