search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "27 years"

    ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டு 27 ஆண்டுகள் ஆகியும் வழக்கு விசாரணை முடிவடையாமல் உள்ளது. #RajivGandhi #DeathAnniversary
    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 1991-ம் ஆண்டு மே மாதம் 21-ந் தேதி தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்துக்காக வந்தபோது ஸ்ரீபெரும்புதூரில் விடுதலைப்புலிகள் இயக்கத்தினரின் பெண் மனித வெடிகுண்டால் படுகொலை செய்யப்பட்டார். இந்த படுபாதக செயலில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளிகள் அனைவரும் தற்போது தண்டனை அனுபவித்து வருகின்றனர். எனினும் இந்த சதியின் பின்னணி குறித்து எந்த தகவலும் இதுவரை முழுமையாக கண்டறியப்படவில்லை.

    இதற்கிடையே, ராஜீவ்காந்தி படுகொலையின் சதி குறித்து சி.பி.ஐ. தலைமையில் 1998-ம் ஆண்டு அமைக்கப்பட்ட பல்நோக்கு ஒழுங்குமுறை கண்காணிப்பு முகமை விசாரணை நடத்தி வருகிறது.

    இந்த முகமை அளிக்கும் தகவல்கள் சுப்ரீம் கோர்ட்டிடம் பகிர்ந்தும் கொள்ளப்படுகிறது. இந்த விசாரணை நீண்டுகொண்டே போவதால் விரைவில் முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடந்த மார்ச் மாதம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    இந்த விசாரணையின்போது நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்விடம், பல்நோக்கு ஒழுங்குமுறை கண்காணிப்பு முகமை கூறுகையில், ‘இது தொடர்பாக இலங்கை உள்பட பல்வேறு நாடுகளில் விசாரணை நடத்தவேண்டி உள்ளது. தற்போது கொழும்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிக்சன் என்கிற சுரென் என்பவரிடமும் இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டி இருக்கிறது’ என்று தெரிவித்தது.

    அதற்கு நீதிபதிகள் அமர்வு வெளிநாட்டவர்களிடம் விசாரணை நடத்த இந்திய தூதரகங்கள் வழியாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதுபற்றி 4 வாரங்களுக்குள் விசாரணையின் தகுதிநிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியது.

    ஆனாலும் ராஜீவ்காந்தி படுகொலையின் சதி பின்னணி குறித்த விசாரணை மந்த கதியில்தான் நடந்து வருகிறது. 27 ஆண்டுகளாகியும் இது தொடர்பான விசாரணை முடிவடையாமல் நீண்டுகொண்டே செல்வது விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.

    நேற்று ராஜீவ்காந்தியின் 27-வது நினைவு தினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  #RajivGandhi #DeathAnniversary

    ×