என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aaroor Dass"

    • பிரபல திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ் வயது மூப்பு காரணமாக காலமானார்.
    • சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர் உள்ளிட்ட பல்வேறு நடிகர்களின் படத்திற்கு வசனம் எழுதியுள்ளார்.

    சென்னை:

    தமிழ்த் திரையுலகின் பிரபல வசனகர்த்தா ஆரூர்தாஸ் வயது மூப்பு காரணமாக தி. நகரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று காலமானார். அவருக்கு வயது 91.

    திருவாருர் மாவட்டத்தில் பிறந்த ஆரூர்தாஸ் முன்னணி நடிகர்கள், நடிகைகள் நடித்த 1000 திரைப்படங்களுக்கு வசனம் எழுதிய எழுத்தாளர். கடந்த ஜூன் மாதம் அவருக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதை தமிழக அரசு வழங்கி சிறப்பித்தது.

    இந்நிலையில், சினிமா வசனகர்த்தா ஆரூர்தாஸ் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது:

    திருவாரூர் மண்ணில் பிறந்து ஆயிரம் திரைப்படங்களுக்குக் கதை, திரைக்கதை, வசனம் எழுதி திரையுலகில் தனி முத்திரை பதித்த முதுபெரும் வசனகர்த்தா ஆரூர் தாஸ் அவர்கள் முதுமை காரணமாக மறைவெய்தினார் என்பதை அறிந்து மிகுந்த துயரமுற்றேன். அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தனது சொந்த ஊரான திருவாரூருடன் இயற்பெயரான ஏசுதாஸின் பிற்பாதியை இணைத்து ஆரூர்தாஸ் எனப் பெயர் வைத்துக் கொண்டு தான் பிறந்த மண்ணைப் பெருமைப்படுத்தியவர் ஆரூர்தாஸ் அவர்கள். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஆகியோரது பெரும்பாலான படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதிய இவர், பாமரமக்கள் மனதிலும் "பாசமலர்" திரைப்பட வசனங்கள் மூலம் நீங்கா இடம்பெற்றிருப்பவர்.

    அவரது கலைச்சேவையைப் பாராட்டி முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் கலைமாமணி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டவர்.

    தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கிய வாழ்நாள் சாதனையாளருக்கு முத்தமிழறிஞர் கலைஞர் பெயரிலான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதினை இந்த ஆண்டு ஜூன் 3-ம் நாள் கலைஞர் அவர்களின் பிறந்தநாளில் ஆரூர்தாஸ் அவர்களின் இல்லத்துக்கே சென்று வழங்கி மகிழ்ந்தேன்.

    தன் வசனங்களின் மூலம் திரையுலகை ஆண்ட அவர் தற்போது நம்மிடம் இல்லை என்றாலும் அவர் ஆற்றிய கலைப்பணிகள் என்றென்றும் தமிழ் திரையுலகிலும்- படங்களை பார்த்து ரசித்த நெஞ்சங்களிலும் நிலைத்து நிற்கும். கதை வசனகர்த்தா ஆரூர் தாஸ் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கலை உலகினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    ஆரூர்தாசுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதும், பரிசுத் தொகை ரூபாய் பத்து இலட்சமும் வழங்கப்படுகிறது.
    சென்னை:

    தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கிய வாழ்நாள் சாதனையாளருக்கு முத்தமிழறிஞர் கலைஞர் பெயரில் “கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது” தமிழ்நாடு அரசின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 3 அன்று வழங்கப்படும் என்று செய்தி மற்றும் விளம்பரத் துறையின் மானியக் கோரிக்கையின் போது அறிவிப்பு வெளியிடப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டது.

    விருதாளரைத் தேர்ந்தெடுக்க திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் தலைமையில்,  நடிகர் சங்கத் தலைவர் திரு.நாசர்,  திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் ஆகியோர்களை உறுப்பினர்களாகக் கொண்ட  குழு அமைக்கப்பட்டு, 2022-ஆம் ஆண்டிற்கான  கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதிற்காக பலநூறு திரைப்படங்களுக்கு வசனங்கள் எழுதிய புகழ்பெற்ற வசனகர்த்தா ஆரூர்தாஸ் (வயது 90) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. 

    நடிகருக்கென்று தனிபாணி கொள்ளாமல்,  தன்னை முன்னிறுத்தாமல், கதாபாத்திரம் அறிந்து உணர்ந்து, வசனம் எழுதி, தான் பங்காற்றிய படங்களுக்கு செழுமை சேர்த்தவர்.   

    திருவாரூர் மாவட்டத்தில் பிறந்த ஆரூர்தாஸ், முன்னணி நடிகர்கள்,  நடிகைகள் உள்ளிட்டோர் நடித்த 1,000  திரைப்படங்களின் உரையாடலில் அழுத்தமான பங்கு வகித்தவர். தனது ஊரான திருவாரூர் பெயரையும், தன் பெயரில் உள்ள ஏசுதாஸில் உள்ள பிற்பாதியையும் இணைத்து ஆரூர்தாஸ் என பெயர் வைத்துக் கொண்டார்.  60 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்த் திரையுலகில் நெடியப் பணிப்புரிந்த  அனுபவம் ஒரு சாதனையாகும்.  

    கலைஞர் கருணாநிதியின் பிறந்த தினமான நாளை (3.6.2022) ஆரூர்தாசுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதும், பரிசுத் தொகை ரூபாய் பத்து இலட்சமும் வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
    ×