search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "after 113 years"

    ரஷிய, ஜப்பான் போரின்போது சுமார் ரூ.13 லட்சம் கோடி தங்கத்துடன் கடலில் மூழ்கடிக்கப்பட்ட ரஷிய போர்க்கப்பல், 113 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. #SunkenRussian #Warship
    மாஸ்கோ:

    ரஷியாவுக்கும், ஜப்பானுக்கும் இடையே 1904-1905 ஆண்டுகளில் போர் நடைபெற்றது.  1905-ம் ஆண்டு மே மாதம், போர் உச்சத்தில் இருந்தபோது, ரஷிய நாட்டுக்கு சொந்தமான ‘டிமிட்ரி டான்ஸ்கோய்’ என்ற போர்க்கப்பலை ஜப்பான் தாக்கி கடலில் மூழ்கடித்து விட்டது.

    அது ரஷியாவுக்கு பேரிழப்பாக அமைந்தது. அந்த போர்க்கப்பலில், 189 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான (சுமார் ரூ.13 லட்சம் கோடி) தங்கக்கட்டிகளும், நாணயங்களும் வைக்கப்பட்டு இருந்தன. இவை 5 ஆயிரத்து 500 பெட்டிகளில் வைக்கப்பட்டு இருந்தன.



    இந்த தங்க கட்டிகளும், நாணயங்களும் 2 லட்சம் கிலோ எடை உடையதாகும். இந்தக் கப்பலில் இருந்த சிப்பந்திகளில் 60 பேர் கொல்லப்பட்டு விட்டதாகவும், 120 பேர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

    மூழ்கடிக்கப்பட்டு 113 ஆண்டுகள் ஆன நிலையில் இப்போது இந்த போர்க்கப்பல், தென் கொரியாவில் உள்ளேஉங்டோ தீவு கடலில் 420 மீட்டர் ஆழத்தில் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

    இந்தக் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டு உள்ள இடம், கடற்கரையில் இருந்து 1.6 கி.மீ. தொலைவிலேயே உள்ளது.

    தென்கொரியா, இங்கிலாந்து, கனடா நாடுகளை சேர்ந்த வல்லுனர்கள்தான் இந்த கப்பலை இப்போது கண்டுபிடித்து இருக்கிறார்கள். அவர்கள் இந்த கப்பலை 2 நீர்மூழ்கி கப்பல்களை பயன்படுத்தி படம் எடுத்து உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

    அந்தப் படங்களில் இருந்து இந்த போர்க்கப்பல் பெரிதும் சேதம் அடைந்து இருப்பது தெரியவந்து உள்ளது.

    அதில் வைக்கப்பட்டு இருந்த தங்கக்கட்டிகள், தங்க நாணயங்கள் இப்போதும் இருப்பது கண்டறியப்பட்டால் பாதி அளவு ரஷியாவுக்கு வழங்கப்படும் எனவும், அதைப் பயன்படுத்தி வடகொரியா வழியாக தென்கொரியாவை ரஷியாவுடன் இணைக்கும் ரெயில்வே திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும் என்றும் கோரப்படும் என தெரியவந்து உள்ளது.

    10 சதவீதம், போர்க்கப்பல் கண்டுபிடிக்கப்பட்டு உள்ள உள்ளேஉங்டோ தீவின் சுற்றுலா திட்டங்களுக்காக செலவிடப்படும்; அந்தக் கப்பலுக்காக ஒரு அருங்காட்சியகமும் நிறுவப்படும் என கூறப்படுகிறது.

    ஆனால் கிரெம்ளினில் உள்ள ரஷிய அதிகாரிகள், இந்தக் கப்பலில் தங்கக்கட்டிகள், தங்க நாணயங்கள் இருந்தால், அவற்றை மொத்தமாக தங்களிடம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.  #SunkenRussian #Warship  #tamilnews
    ×