search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Agni Deva"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அஸ்வினி துவங்கி, ரேவதி வரையிலான 27 நட்சத்திரங்களில் அக்னி நட்சத்திரம் கிடையாது.
    • அக்னி தேவனுக்கு உதவ ஒப்புக் கொண்ட கிருஷ்ணனும், அர்ஜூனனும் தங்களுக்கு தேவையான வில், அம்புகள் வேண்டும் என கேட்டனர்.

    கோடை காலம் என்றதுமே நினைவிற்கு வருவது அக்னி நட்சத்திரம் தான். அக்னி நட்சத்திர வெயில், சித்திரை வெயில், கத்தரி வெயில், கோடை வெயில் என பெயர்களில் இது சொல்லப்படுகிறது. ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் வெயின் தாக்கம் அதிகமாக இருக்கும் காலத்தை அக்னி நட்சத்திர காலம் என்கிறோம். உண்மையில் இந்த அக்னி நட்சத்திரம் என்றால் என்ன என்று பலருக்கும் தெரியாது. அக்னி என்பது வெப்பத்தை குறிக்கிறது. ஆனால் இதை நட்சத்திரம் என ஏன் குறிப்பிடுகிறார்கள் என்ற சந்தேகம் வரும்.

    அஸ்வினி துவங்கி, ரேவதி வரையிலான 27 நட்சத்திரங்களில் அக்னி நட்சத்திரம் கிடையாது. அப்படியானால் அக்னி நட்சத்திரம் என்றால் என்ன என்பது பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம்.

    சித்திரை மாதம் 21 ம் தேதி துவங்கி, வைகாசி மாதம் 14 ம் தேதி வரையிலான 21 நாட்களை அக்னி நட்சத்திர காலம் என்கிறோம். சித்திரை மாதத்தில் பரணி 3 ஆம் காலில் சூரியன் பிரவேசிக்கும் காலத்தை அக்னி நட்சத்திர காலம் என பஞ்சாங்கம் கூறுகிறது. இந்த காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படும். அறிவியல் படி சூரியன் என்பது ஒரு கோளாக இருந்தாலும், அதுவும் ஒரு விண்மீன் தான். அக்னி நட்சத்திர காலத்தில் சந்திரன், மட்டுமல்ல பூமியும் சூரியனுக்கு அருகில் இருக்கும்.


    சூரியனின் பயணத்தின் அடிப்படையிலேயே தமிழ் மாதங்கள் கணக்கிடப்படுகின்றன. அப்படி சூரியனின் சஞ்சாரத்தின் அடிப்படையில் அக்னி நட்சத்திர காலத்தில் முதல் மற்றும் கடைசி ஏழு நாட்கள் வெயிலின் தாக்கம் சுமாராகவும், இடையில் ஏழு நாட்கள் அதிகமாகவும் இருக்கும். இதனால் அறுவடை செய்யப்பட்ட வயல்களில் வெடிப்புக்கள் ஏற்படும். இந்த வெடிப்புக்களின் இடையில் இருந்து பூமிக்குள் இருந்து வெப்பம் வெளியாகும்.

    வைகாசி மாத இறுதியில் பெய்யும் மழை, வயல்களின் வெடிப்பின் வழியாக பூமிக்குள் சென்று வெப்பத்தை தணித்ததும் மீண்டும், வெடிப்புக்கள் மூடிக்கொள்ளும். அக்னி நட்சத்திரத்திற்கு இணையான வெப்பத்தை கொண்டது கார்த்திகை நட்சத்திரம் என்பார்கள். கார்த்திகை நட்சத்திரத்திற்குரிய தேவதை அக்னி பகவான் ஆவார். அக்னி நட்சத்திரம் என்ற வெப்ப காலம் எப்படி உண்டாயிற்று என்பதற்கு புராண கதை ஒன்றும் சொல்லப்படுகிறது.

    யமுனை நதிக்கரையில் காண்டவ வனம் என்ற காடு அமைந்திருந்தது. அரிய மூலிகை செடிகள் இருந்ததால் அதிலிருந்து வரும் வாசனை ஆற்றங்கரைக்கு வருபவர்களை கவர்ந்தது இழுத்தது. இந்த மூலிகைகள் நன்கு வளர வேண்டும் என்பதற்காக அடிக்கடி மழையை பொழிய செய்தான் மழையின் அதிபதியான இந்திரன். இயற்கை அழகு நிறைந்திருந்த இந்த காட்டிற்கு அருகில் இருந்த யமுனையில் கிருஷ்ணனும், அர்ஜூனனும் நீராட வந்தனர்.

    அவர்கள் குளித்து விட்டு கரையேறிய போது அந்தணர் ஒருவர் வந்து, எனக்கு அதிக பசியாக உள்ளது. இந்த வனத்தில் உள்ள பசிப்பிணி தீர்க்கும் மருந்துகளை சாப்பிட்டால் எனது பசி போய் விடும். இந்த வனத்திற்குள் செல்ல எனக்கு உதவி செய்ய முடியுமா? என கேட்டார். அவரது தோற்றத்தில் இருக்கும் வித்தியாசத்தை கண்டுபிடித்த கிருஷ்ணன், வந்திருப்பது அக்னி தேவன் என்பதை புரிந்து கொண்டார். அவரிடம் கிருஷ்ணனும், அர்ஜூனனும் விபரம் கேட்டனர்.


    அதற்கு பதிலளித்த அக்னி தேவன், சுவேதசி என்ற மன்னனுக்காக துர்வாச முனிவர் நூறாண்டுகள் தொடர்ந்து யாகம் ஒன்றை நடத்தினார். யாகத்தின் விளைவால் அதிகப்பட்டியான நெய்யை சாப்பிட்டதால் மந்த நோய் என்னை தாக்கி விட்டது. அந்த மந்த நோய் நீங்குவதற்கு ஏற்ற மூலிகைச் செடிகள் இந்த வனத்திற்குள் தான் உள்ளது. ஆனால் நான் இந்த வனத்திற்குள் நுழைய முயற்சி செய்யும் போதெல்லாம் இந்திரன் மழையை பெய்ய வைத்து விடுகிறான். அதனால் என்னால் இந்த வனத்திற்குள் செல்ல முடிவதில்லை எனக் கூறி தனது நிலையை விளக்கினான்.

    அக்னி தேவனுக்கு உதவ ஒப்புக் கொண்ட கிருஷ்ணனும், அர்ஜூனனும் தங்களுக்கு தேவையான வில், அம்புகள் வேண்டும் என கேட்டனர். அக்னி தேவனும் சக்தி வாய்ந்த காண்டீப வில் அம்புகளை அளித்தான். உனது பசி பிணி தீர்த்துக் கொள்ள 21 நாட்கள் மட்டும் இந்த காட்டிற்குள் செல்லலாம். அந்த சமயத்தில் இந்திரன் மழையை பெய்யவிடாமல் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என கிருஷ்ணர் கூறினார். அதே போல் அக்னி தேவன் காட்டிற்குள் சென்றதும் மழையை பெய்ய வைத்தான் இந்திரன். அதனை அம்புகளை எய்தி அர்ஜூனன் தடுத்து நிறுத்த, காட்டிற்குள் இருக்கும் மூலிகைகளை சாப்பிட்டு, தனது பிணியை தீர்த்துக் கொண்டான் அக்னி தேவன்.

    அக்னி தேவன், காண்டவ வனத்தை அழித்து, தனது பசியை தீர்த்துக் கொள்ளும் காலமே அக்னி நட்சத்திர காலமாக மாறியது என புராணங்கள் கூறுகின்றன. இதற்கு ஏற்ற படி அக்னி நட்சத்திர காலத்தில் என்ன செய்யலாம், என்னவெல்லாம் செய்யக் கூடாது, சாப்பிடும் உணவு பழக்கங்கள் உள்ளிட்ட அனைத்தையும் நமது முன்னோர்கள் மாற்றி அமைத்துள்ளனர்.

    • அஷ்டதிக் பாலகர்கள் எட்டு திசைகளுக்கு உரிய காவலர்கள்.
    • எண்திசை நாயகர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர்.

    அஷ்டதிக் பாலகர்கள் எட்டு திசைகளுக்கு உரிய காவலர்கள் ஆவர். இவர்கள் எண்திசை நாயகர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர். அஷ்டதிக் பாலகர்களில் அஷ்டம் என்றால் எட்டு, திக் என்றால் திசை, பாலகர்கள் என்றால் காப்பவர்கள் என்பது பொருளாகும். கிழக்கு, தென்கிழக்கு, தெற்கு, தென்மேற்கு, மேற்கு, வடமேற்கு, வடக்கு, வடகிழக்கு ஆகியவை எண்திசைகள் ஆகும். இந்த எண்திசைகளுக்குரிய அதிபதிகளாக முறையே இந்திரன், அக்னி தேவன், யமன், நிருதி, வருண தேவன், வாயு தேவன், குபேரன், ஈசானன் விளங்குகின்றனர்.

    அஷ்டதிக் பாலகர்கள் நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களையும் கண்காணிக்கின்றனர் என்று கருதப்படுகிறது. மேலும் இவர்கள் உயிர்களின் செயல்களுக்கு சாட்சியாகவும் இருப்பதாகவும் இந்துமதத்தில் நம்பப்படுகிறது. இவர்களை வணங்கினால் எல்லா வளங்களும் கிடைப்பதாக கருதப்படுகிறது. அஷ்டதிக் பாலகர்கள் கோபுரங்கள், வாயில்கள், சுவர்கள், கூரைகள் ஆகியவற்றில் ஓவியங்களாகவும், சிலைவடிவிலும் காணப்படுகின்றனர். இனி ஒவ்வொருவரையும் பற்றிக் காண்போம்.

    இந்திரன்

    இவர் கிழக்கு திசையின் அதிபதியாகக் கருதப்படுகிறார். தேவர்களின் தலைவனாகவும் உள்ளார். இவரின் துணைவியார் இந்திராணி அல்லது சசிதேவி என்று அழைக்கப்படுகிறார். இவர் ஐராவதம் என்னும் வெள்ளை யானையினை வாகனமாகக் கொண்டவர். இவரின் ஆயுதம் மின்னலைப் போன்ற வலிமையுள்ள வஜ்ராயுதம் ஆகும். இவரே அஷ்டதிக் பாலகர்களின் தலைவர் ஆவார். இவரை வழிபட எல்லா வளங்களையும், ஆரோக்கியத்தையும் அருளுவார்.

    அக்னி தேவன்

    இவர் தென்கிழக்கு திசையின் அதிபதியாகக் கருதப்படுகிறார். நெருப்பிற்கான அதிகாரம் இவருடையது. வேள்வின்போது இடப்படும் நிவேதானப் பொருட்களை அக்னி மற்ற தெய்வங்களுக்கு எடுத்துச் செல்வதாக கூறப்படுகிறது. இவருடைய துணைவியார் சுவாகா தேவி ஆவார். இவருடைய வாகனம் ஆட்டுகிடா ஆகும். இவருடைய ஆயுதம் தீச்சுவாலையுடன் கூடிய வேல் ஆகும். இவரை வழிபட தேக வனப்பு மற்றும் பலம், மனஅமைதி, குடும்ப மேன்மை கிடைக்கும்.

    யமன்

    இவர் தெற்கு திசையின் காவலர் ஆவார். இவர் எமதர்மன், தருமராஜா, தருமதேவன், காலதேவன் என அழைக்கப்படுகிறார். அவர் இறப்பின் கடவுள் ஆவார். சூரியதேவனின் மகனாகவும், சனிபகவானின் சகோதரராகவும் இவர் குறிப்பிடப்படுகிறார். யமனின் சகோதரி யமி அல்லது யமுனை என்ற நதியாகவும் கூறப்படுகிறார். இவர் தேவர்களில் மிகவும் மதிநுட்பம் வாய்ந்தவராகக் கருதப்படுகிறார். இவருடைய துணைவியார் குபேர ஜாயை ஆவார். இவர் எருமைகிடா வாகனத்தினைக் கொண்டவர். இவருடைய ஆயுதம் பாசக்கயிறு ஆகும். யமனை வழிபட்டால் தீவினைப்பயன்களை அகற்றி நல்வினைப் பயன்களை பெறலாம்.

    நிருதி

    இவர் தென்மேற்கு திசையின் அதிபதி ஆவார். இவரின் துணைவியார் கட்கி ஆவார். இவருடைய வாகனம் பிரேதம். இவருடைய ஆயுதம் கட்கம் என்னும் வாள் ஆகும். இவரை வழிபட எதிரிகள் பயம் நீங்கி வீரம் உண்டாகும்.

    வருண பகவான்

    இவர் மேற்கு திசையின் காவலர் ஆவார். இவர் மழைக்கான கடவுள் ஆவார். ஆறு, குளம், ஏரி, கடல் நீர்நிலைகள் இவரின் ஆதிக்கத்திற்கு உட்பட்டதாகக் கருதப்படுகின்றன. ஐவகை நிலங்களில் ஒன்றான நெய்தல் நிலத்திற்கு உரிய தெய்வமாக வருணன் போற்றப்படுகிறார். இவருயைட துணைவியார் வாருணி ஆவார். இவருடைய வாகனம் மரகம் என்ற மீன் ஆகும். இவர் வருணாஸ்திரம் என்ற ஆயுதத்தைக் கொண்டுள்ளார். இவரை வழிபட தேவையான மழை கிடைத்து உணவு பஞ்சம் தீரும்.

    வாயு பகவான்

    வாயு வடிவமற்றவர். மக்களின் உயிர் மூச்சு, பிராணனுக்கு ஆதாரமாக உள்ளவர். இவர் வடமேற்கு திசையின் காவலர் ஆவார். இவர் உலக இயக்கத்திற்குக் காரணமான காற்றிற்கான கடவுள் ஆவார். அனுமானும், பீமனும் வாயு புத்திரர்கள் என்று புராணங்கள் குறிப்பிடுகின்றன. இவரின் துணைவியார் வாயுஜாயை ஆவார். இவருடைய வாகனம் மான் ஆகும். இவர் அங்குசம் என்னும் ஆயுதத்தைக் கொண்டுள்ளார். இவரை வழிபட்டால் நீண்ட ஆயுளையும் பலத்தையும் பெறலாம்.

    குபேரன்

    இவர் வடக்கு திசையின் அதிபதியாவார். செல்வத்தின் அதிபதியாகவும் இவரைக் கூறுவோர் உண்டு. இவர் சிவனை நோக்கி தவம் இருந்து வடக்கு திசையின் அதிபதியானதாக புராணங்கள் கூறுகின்றன. இவரின் துணைவியார் யட்சி ஆவார். இவர் மதுஷனை வாகனமாக கொண்டுள்ளார். இவரின் ஆயுதம கதை ஆகும். இவரை வழிபட சகல செல்வங்களுடன் சுக வாழ்வு கிடைக்கும்.

    ஈசானன்

    இவர் வடகிழக்குத் திசையின் அதிபதியாவார். இவர் மங்களத்தின் அதிபதியாவார். இவர் மங்களத்தின் வடிவம் ஆவார். சிவபெருமானின் ஐந்து முகங்களில் ஈசானமும் ஒன்று. இவரின் துணைவியார் ஈசானயஜாயை ஆவார். இவர் எருதினை வாகனமாகக் கொண்டவர். திரிசூலம் இவரின் ஆயுதமாகும். இவரை வழிபட அறிவும், ஞானமும் கிடைக்கும். நாமும் அஷ்டதிக் பாலகர்களை வழிபட்டு எல்லா வளமும் பெறுவோம்.

    ×