search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Almanac"

    • `பஞ்சாங்கம்’ என்பது மிகவும் உயிரோட்டமான சொல்.
    • பக்தர்களால் அதிகம் அறியப்படாத பழமையான ஆலயம்.

    ஜோதிடத்தில் `பஞ்சாங்கம்' என்பது மிகவும் உயிரோட்டமான சொல். நாள் அல்லது தினம், திதி, நட்சத்திரம், யோகம், கரணம் ஆகிய ஐந்து அங்கங்களில், யோகம் என்பது முக்கியமானது. நட்சத்திரமும், கிழமையும் இணைவதும் யோகம் தான். தவிர ஜோதிடத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட யோகங்கள் இருப்பதாகவும், அவற்றில் பல, தனிநபர் ஜாதகங்களில் இருப்பதாகவும் ஜோதிடர்கள் சொல்வதுண்டு.

    இந்த யோகங்களைத் தவிர இன்னும் சில யோகமும் உண்டு. 27 நட்சத்திரங்களை போல, 27 யோகங்களும் உள்ளன. அவற்றில் பிரீதி, ஆயுஸ்மன், சவுபாக்கியம், சோபனம், சுகர்மம், விருத்தி, ஹர்ஷணம், வஜ்ரம், சித்தி, வரியான், சிவன், சித்தம், சாத்தியம், சுபம், சுப்பிரம், பிராம்யம், ஐந்திரம் ஆகிய 17-ம் சுப யோகங்கள் ஆகும். மீதமுள்ள விஷ் கம்பம், அதிகண்டம், திருதி, சூலம், கண்டம், விகாதம், துருவம், வியதீபாதம், பரிகம், வைதிருதி ஆகிய 10-ம் அசுப யோகங்கள் ஆகும்.

    சுப யோகங்களில் பிறந்தவர்களுக்கு எந்த சிக்கலும் இல்லை. ஆனால் அசுப யோகங்களில் பிறந்தவர்கள், தங்களின் வாழ்க்கையில் பல துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருப்பார்கள். ஒரு சில குடும்பங்களில் நிறைய பேருக்கு திருமணமே கைகூடி வராத நிலையை நாம் பார்த்திருப்போம்.

    அண்ணன், தங்கை, அக்கா, அத்தை என ஒரு கூட்டமே திருமணமாகாமல், சரியான தொழில், உத்தியோகம் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும். ஒரு சிலர் குழந்தை இல்லாமல் இருப்பார்கள். சில குடும்பங்களில் தொடர் மரணங்கள், அகால மரணங்கள் போன்ற துன்பங்கள் நிகழலாம். இவற்றிற்கெல்லாம் இந்த அசுப யோகங்கள் காரணமாக அமையலாம்.

    அதேபோல் சில குடும்பங்களில் இறந்தவர்களின் ஆன்மாக்கள் சொர்க்கமா?, நரகமா?, மறுபிறவியா?, தண்டனையா? என்று, எதுவுமே இல்லாமல் ஒரு உறுதியற்ற தன்மையில் அல்லாடிக் கொண்டிருக்கும். அதற்கும் அசுப யோகத்துடன் அவரின் குடும்பத்தில் பிறந்தவர்களின் ஜாதகமே காரணம்.

    இவற்றிற்கெல்லாம் வழிபாட்டுத் தலமாக அமைந்ததுதான், திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே அமைந்துள்ள பக்தவத்சலப் பெருமாள் கோவில். பக்தர்களால் அதிகம் அறியப்படாத பழமையான ஆலயங்கள் பலவற்றில் இதுவும் ஒன்று.

    திருநெல்வேலியில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது, சேரன்மகாதேவி. இங்கிருந்து வடக்கே சுமார் 3 கிலோமீட்டர் தூரத்தில் தாமிரபரணி ஆற்றின் கரையில் இருக்கிறது, பக்தவத்சலப் பெருமாள் ஆலயம்.

    வியாச முனிவரால் பெருமைப்படுத்தப்பட்ட 12 ஆலயங்களில் இதுவும் ஒன்று. இந்த ஆலயத்தின் அடிப்பகுதியில் நரசிம்மப் பெருமாள் யோக நிலையில் கோவில் கொண்டிருப்பதாக ஐதீகம். பல நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான இந்த ஆலயம், 1921-ம் ஆண்டு முதல் தொல்லியல் துறை காட்டுப்பாட்டில் இருக்கிறது.

    அசுப யோகங்களில் பிறந்தவர்களின் முன்னோர்களுடைய ஆன்மா சாந்தி பெற, சேரன்மகாதேவியில் உள்ள பக்தவத்சலப் பெருமாள் கோவிலில் செய்யும் வழிபாட்டு முறைதான் சிறப்பானது என்பது ஆன்மிகவாதிகளின் கருத்தாகும். தாமிரபரணியை ஒட்டினாற்போல் அமைந்துள்ள இந்த ஆலயத்தின் பிரமாண்டம் நம்மை வியக்க வைக்கிறது.

    கிழக்கு நோக்கி அபயக்கரம் நீட்டி அருளும் பக்தவத்சலப் பெருமாள், `நான் இருக்கிறேன்.. இனி உன் துன்பம் நீங்கி விடும்" என்பதுபோல் முத்திரைக் காட்டி கருவறையில் நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார். கருவறைக்கு வெளியே வலதுபுறத்தில் லட்சுமிதேவியுடன் நரசிம்மர் அருள்பாலிக்கிறார்.

    அசுப யோகங்களில் ஏதாவது ஒன்றில் பிறந்திருந்தாலும் கூட, அவர்கள் தன் துயரங்கள் நீங்க நேராக இந்தத் திருத்தலம் வந்து, கோவிலைத் தொட்டுச் செல்லும் தாமிரபரணி ஆற்றில் நீராடி வழிபட வேண்டும். இதுபற்றியும், இந்த நதி பற்றியும் வியாசரால் எழுதப்பட்டுள்ளது. அது தாமிரபரணி மகாத்மீயத்தில் காணப்படுகிறது.

    10 வகையான அசுப யோகத்தில் பிறந்தவர்கள், குடும்பத்தில் உள்ளவர்களின் ஆத்மா நற்கதி அடையாத தோஷம் உள்ளவர்கள், இங்கு வந்து நதியில் நின்று, தன் குடும்பத்தில் இறந்த ஆன்மாக்களை நினைத்து நீராடினால், அவர்களின் ஆன்மா நற்கதி அடையும் என்று, தாமிரபரணி மகாத்மீயம் கூறுகிறது.

    மேலும் மேற்கண்ட தோஷம் உள்ளவர்கள், இந்த நதியில் நீராடி, வியாசர், மார்க்கண்டேயர், அகத்தியர், சப்த நதிகள், பக்தவத்சலப் பெருமாள் ஆகியோரை தரிசித்து, அன்னதானம் செய்தால் `நவகிரிச்சினி பலன்' (ஒரு லட்சம் காயத்ரி உச்சரித்த பலன்) கிடைப்பதுடன், தோஷங்களும் நீங்கி சிறப்பான பலன் கிடைக்கும் என்கிறார்கள்.

    சில ஆலயங்களுக்கு நாம் என்னதான் முயற்சித்தாலும், அந்த இறைவனின் கருணைப் பார்வை நம்மீது படவில்லை என்றால், அங்கு செல்ல முடியாத நிலையே ஏற்படும். இருப்பினும் அந்த இறைவனை நினைத்து மனமுருக வேண்டிக்கொண்டால், அவரை வழிபடுவதற்கான வாய்ப்பை அவரே ஏற்படுத்தித் தருவார். இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் 11.45 மணி வரை திறந்திருக்கும்.

    ×