பகத் பாசில் - சமந்தா இருவரும் கணவன் மனைவி. இருவரும் பெரிதாக புரிதல் இல்லாமல் இருக்கின்றனர். ஒருநாள் இவர்களது வீட்டுக்கு வரும் சமந்தாவின் நண்பர் அங்கு மர்மமான முறையில் இறந்துவிடுகிறார்.
மறுபக்கம் காயத்ரியை திருமணம் செய்துகொண்ட விஜய் சேதுபதி, காயத்ரிக்கு குழந்தை பிறந்த நிலையில் வீட்டை விட்டு சென்றுவிடுகிறார். சில வருடங்களுக்கு பிறகு தனது மகனை பார்க்க மீண்டும் சென்னை வருகிறார். விஜய் சேதுபதியை வரவேற்க அவர்களது மொத்த குடும்பமும் ஆவலோடு காத்திருக்கிறார்கள். அவர் திருநங்கையாக வந்து நிற்க அனைவருக்கும் பேரதிர்ச்சி.
மற்றொரு புறத்தில் ரம்யா கிருஷ்ணன் - மிஷ்கின் தம்பதிக்கு ஒரு மகன். அவனுக்கு நான்கு நண்பர்கள். இவர்களது வாழ்க்கையில் ஏற்படும் ஒரு சம்பவம்.
இந்த மூன்று சம்பவங்களில் இடம்பெறும் கதாபாத்திரங்கள், போலீஸ் அதிகாரியான பகவதி பெருமாளுடன் ஒரு புள்ளியில் இணைகிறார்கள்.
கடைசியில் பகத் பாசில் - சமந்தா எப்படி தப்பித்தார்கள்? விஜய் சேதுபதி குடும்பத்தின் நிலை என்ன? ரம்யா கிருஷ்ணன் குடும்பத்தில் ஏற்பட்ட மாற்றம்? இவை அனைத்தும் கலந்த நல்லது, கெட்டது தான் படத்தின் மீதிக்கதை.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி திருநங்கை கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததற்காகவே அவருக்கு பாராட்டுக்களை தெரிவிக்க வேண்டும். ஷில்பா என்ற கதாபாத்திரத்தில் திருநங்கையாக, அவர்களது உணர்வையும், வலியையும் உணர வைக்கும்படி நடித்திருக்கிறார். போலீசிடம் சிக்கிக் கொள்ளும் காட்சிகள், மகனிடம் காட்டும் பாசம், மனைவியின் வலியை புரிந்து கொள்வது என தன்னை அந்த கதாபாத்திரமாகவே மாற்றியிருக்கிறார்.
சிறிய சிறிய இடங்களில் கூட தனது நடிப்பால் ஸ்கோர் செய்திருக்கிறார் பகத் பாசில். சமந்தாவுக்கு சவாலான வேடம். அந்த வேடத்தை ஏற்றுக் நடித்தது சமந்தாவின் துணிச்சல். சிறப்பாக நடித்திருக்கிறார். காயத்ரிக்கு அதிகமாக வசனங்கள் இல்லை என்றாலும் பார்வையாலேயே உணர்ச்சிகளை வெளிப்படுத்தியிருக்கிறார். ரம்யா கிருஷ்ணன் தனது அனுபவ நடிப்பால் அசத்தியிருக்கிறார். மிஷ்கின் கிறிஸ்தவ போதகராக தனது வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
பகவதி பெருமாள் காமெடி கலந்த வில்லத்தனத்தில் சில இடங்களில் சிரிப்பையும், சில இடங்களில் எரிச்சலையும் உண்டு பண்ணுகிறார்.
நண்பர்களாக வரும் 4 இளைஞர்களும் சேட்டை செய்துவிட்டு சென்றிருக்கிறார்கள். கொடுத்த வேலையை சிறப்பாக செய்து அசத்தியிருக்கிறார்கள். விஜய் சேதுபதியின் மகனாக மாஸ்டர் அஸ்வந்த் விஜய் சேதுபதிக்கு ஈடுகொடுத்து நடித்திருப்பது சிறப்பு. மிருணாலினி அழகு தேவதையாக வந்து செல்கிறார்.
தியாகராஜன் குமாரராஜாவின் 8 வருடங்கள் காத்திருப்பு வீண்போகவில்லை என்று கூறும்படி, தனது ஸ்டைலில் அனைத்தும் கலந்த ஏ சான்றிதழ் படத்தை உருவாக்கியிருக்கிறார். எனவே குடும்பத்தோடு சென்று பார்க்க முடியாவிட்டாலும், இளைஞர்களை கவரக்கூடியதாய் இருக்கிறது. முதல் பாதி காமெடி கலந்த விறுவிறுப்புடனும், இரண்டாவது பாதி காமெடி கலந்த சஸ்பென்சுடனும் நகர்கிறது. இரண்டாவது பாதியின் நீளத்தை கொஞ்சம் குறைத்திருக்கலாம்.
படத்தில் கடவுள் பக்தி, கணவன் - மனைவி புரிதல், திருநங்கைகளின் குடும்பம், பாலியல் தொழில் செய்பவர்களின் வாழ்க்கை, சாதி, மதம் என பலவற்றை திரைக்கதையினூடே திணித்திருக்கிறார். நன்மை, தீமை இரண்டும் கலந்தது தான் வாழ்க்கை. இந்த உலகத்தில் அனைவரும் நல்லவர்களும் இல்லை, கெட்டவர்களும் இல்லை. ஒரு செயல் ஒருவருக்கு நன்மையை கொடுத்தால் மற்றொருவருக்கு தீமையை தான் கொடுக்கும். அதுவே நியதி என்பதை புரிய வைத்திருக்கிறார். அனைத்தும் சரியுமில்லை, அனைத்தும் தவறுமில்லை, சரியாய் இருப்பது தவறாய் மாறலாம், தவறாய் இருப்பது சரியாய் மாறலாம் என்பனவற்றை விளங்க வைத்திருக்கிறார்.
யுவன் ஷங்கர் ராஜா பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். காட்சிகளை புதிய பரிணாமத்தில் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள் நிரவ் ஷா, பி.எஸ்.வினோத். சத்யராஜ் நடராஜனின் படத்தொகுப்பு கச்சிதம்.
மொத்தத்தில் `சூப்பர் டீலக்ஸ்' சுறுசுறுப்பு. #SuperDeluxe #SuperDeluxeReview #VijaySethupathi #FahadhFaasil #Samantha