search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Annanagar"

    திருமங்கலம், அண்ணாநகர் உள்பட 4 சுரங்க மெட்ரோ ரெயில் நிலையங்களில் மின்விளக்குகள், ஏசி, ரெயில் இயக்கம் ஆகியவற்றின் மின் தேவைக்காக சூரிய ஒளி மின்சார வசதி அமைக்கப்பட்டுள்ளது. #MetroTrain
    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும் விரைவு பயணத்துக்காகவும் மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது. கோயம்பேடு-ஆலந்தூர், சின்னமலை-விமானநிலையம் வரை உயர்மட்ட பாதையிலும், திருமங்கலம்-சென்ட்ரல், சைதாப்பேட்டை-டி.எம்.எஸ் வரை சுரங்கப்பாதையிலும் மெட்ரோ ரெயில் பயணிகள் போக்குவரத்து சேவை நடந்து வருகிறது.

    பயணிகள், பொதுமக்கள் இடையே ஏற்பட்ட வரவேற்பையொட்டி சென்னை மாநகரம் முழுவதும் மெட்ரோ ரெயில் சேவை விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் 4 சுரங்க மெட்ரோ ரெயில் நிலையங்களில் மின்விளக்குகள், ஏசி, ரெயில் இயக்கம் ஆகியவற்றின் மின் தேவைக்காக சூரிய ஒளி மின்சார வசதி அமைக்கப்பட்டுள்ளது.

    திருமங்கலம், அண்ணா நகர் டவர், அண்ணாநகர் கிழக்கு, ஷெனாய் நகர் ஆகிய ரெயில் நிலையங்களில் 103 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கும் வகையில் சூரிய ஒளி மின்சார பேனல்கள் நிறுவப்பட்டுள்ளன. மெட்ரோ ரெயில் நிலையத்தில் ஒரு மாதத்திற்கு 13,800 யூனிட் மின்சாரம் தேவைப்படுகிறது.

    இந்த சூரிய ஒளி மின்சார வசதியால் வருடத்துக்கு ரூ.6.3 லட்சம் மின்சார செலவு குறைகிறது. உயர் மட்ட பாதை மெட்ரோ ரெயில் நிலையங்களில் 6 மெகாவாட் சூரிய ஒளி சக்தி மின்சாரம் தயாரிக்கும் வகையிலான சோலார் பேனல்கள் விரைவில் நிறுவப்பட உள்ளன.

    இதுகுறித்து மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    மெட்ரோ ரெயில் நிலையங்களில் இதுவரை 1.6 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரம் உள்பத்தி பேனல்கள் அமைக்கப்பட்டுள்ளது. சூரிய ஒளி பேனல்கள் மூலம் உற்பத்தியாகும் மின்சாரம் தினசரி மின் தேவைகளுக்கு பயன் உள்ளதாக இருக்கிறது.


    2016-ம் ஆண்டு கோயம்பேடு மெட்ரோ நிர்வாக அலுவலகத்தில் சூரிய ஒளி மின்சார வசதி தொடங்கப்பட்டு தினசரி 5 ஆயிரம் யூனிட் மின்சாரம் தயாரிக்கப்பட்டது. அதன் பிறகு 1 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாக அதிகரிக்கப்பட்டது.

    கோயம்பேடு மெட்ரோ அலுவலகத்தில் மாதத்திற்கு 1.35 லட்சம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன்மூலம் ரூ.22 லட்சம் மின்சார செலவு ஒவ்வொரு மாதமும் சேமிக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #MetroTrain
    சென்னை அண்ணா நகரில் ஓட்டலில் வாடிக்கையாளர்கள் தவற விட்டு சென்ற ரூ.25 லட்சத்தை ஓட்டல் ஊழியர் போலீசில் ஒப்படைத்தார். அவருடைய நேர்மைக்கு பாராட்டுகள் குவிகின்றன.
    கோயம்பேடு:

    சென்னை அண்ணாநகர், 6-வது நிழற்சாலை சந்திப்பில் சரவண பவன் ஓட்டல் உள்ளது. அந்த ஓட்டலுக்கு நேற்று முன்தினம் காலை 2 பேர் சாப்பிட வந்தனர். அப்போது அவர்கள் கொண்டு வந்த ஒரு பையை, தாங்கள் அமர்ந்து சாப்பிட்ட மேஜைக்கு அருகில் வைத்து விட்டு ஞாபக மறதியாக சென்றனர்.

    அவர்களுக்கு உணவு பரிமாறிய ஓட்டல் ஊழியர் ரவி அந்த பையை எடுத்து பார்த்தார். அதில் பணம் இருந்ததால் ஓட்டலின் கிளை மேலாளர் லோகநாதனிடம் அதை கொடுத்தார். அவர் அந்த பையை திறந்து பார்த்தபோது, அதில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக ரூ.25 லட்சம் இருப்பது தெரியவந்தது.

    அதை தவற விட்டுச்சென்ற வாடிக்கையாளர்கள் திரும்ப வந்து அதை பெற்றுக்கொள்வார்கள் என நினைத்து அவர்கள் காத்திருந்தனர். ஆனால் அந்த பணத்தை உரிமை கோரி யாரும் வரவில்லை.

    இதனால் அண்ணாநகர் இணை கமிஷனர் சுதாகருக்கு நேற்று தகவல் கொடுத்தனர். பின்னர் மேலாளர் லோகநாதன், ஊழியர் ரவி இருவரும் வாடிக்கையாளர் விட்டுச்சென்ற ரூ.25 லட்சத்தை அண்ணாநகர் போலீஸ் நிலையத்துக்கு சென்று இன்ஸ்பெக்டர் சரவணனிடம் ஒப்படைத்தனர். மேலும் அங்கு பதிவான கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளையும் போலீசில் கொடுத்தனர்.

    ஏழ்மை நிலையில் ஓட்டல் ஊழியராக வேலை பார்த்தாலும், பணத்தை பார்த்து அதற்கு ஆசைப்படாமல் நேர்மையுடன் போலீசில் ஒப்படைத்த ரவியை, இன்ஸ்பெக்டர் சரவணன் பாராட்டினார். மேலும் தன்னுடைய கைக்கெடிகாரத்தை இன்ஸ்பெக்டர் சரவணன், ரவிக்கு பரிசாக அளித்தார். அப்போது ஓட்டல் மேலாளரிடம், ரவிக்கு பதவி உயர்வு வழங்கவும் கேட்டுக்கொண்டார்.

    பணம் காணாமல் போனது குறித்து இதுவரை யாரும் போலீசில் புகார் அளிக்கவில்லை. எனவே ஓட்டலில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து பணத்தை விட்டுச்சென்றவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பணத்தை சம்பந்தப்பட்டவர்கள் வந்து பெறாத பட்சத்தில் தாசில்தார் மூலம் அரசு கருவூலத்தில் அந்த பணம் ஒப்படைக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

    ஓட்டல் ஊழியர் ரவியின் சொந்த ஊர் திருச்சி மாவட்டம் துறையூர் ஆகும். அவர் அந்த ஓட்டலில் 15 ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார். ரவியின் நேர்மைக்கு பரிசாக ஓட்டல் நிர்வாகம் அவருக்கு மேற்பார்வையாளர் பதவியை வழங்கியது.

    போலீசார் மட்டும் அல்லாமல் பொதுமக்கள் தரப்பிலும் ரவிக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்தவண்ணம் உள்ளன. 
    ×