search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Arudra darshan ceremony"

    • திருவாதிரை மற்றும் ஆருத்ரா விழா மிகவும் பிரசித்தி பெற்றது.
    • நடராஜர் சன்னதி ஆருத்ரா தரிசன தினத்தில் மட்டும் திறக்கப்படும்.

    ராமநாதபுரம்:

    கடவுளுக்கு உகந்த மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை மற்றும் ஆருத்ரா விழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். குறிப்பாக நடராஜரை இந்த நாளில் வழிபட்டால் துன்பங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

    ராமநாதபுரம் அருகே திருஉத்தரகோசமங்கை கிராமத்தில் பழமையும், பெருமையும் வாய்ந்த மங்களநாதர் கோவில் அமைந்துள்ளது. இங்கு மரகத நடராஜர் சன்னதி தனியாக அமைந்திருக்கிறது. அங்குள்ள பச்சை மரகதக்கல்லால் ஆன 6 அடி உயரம் கொண்ட மரகத நடராஜர் சன்னதி ஆருத்ரா தரிசன தினத்தில் மட்டும் திறக்கப்படும்.

    நடராஜப்பெருமாள் சிதம்பரத்தில் அம்பலத்தில் ஆடியதாகவும், மதுரையில் கால் மாறி ஆடியதாகவும், திருஉத்தரகோசமங்கையில் அறையில் ஆடியதாகவும் வரலாறு. மற்ற கோவில்களில் நடராஜரின் கற்சிலைகள், பஞ்சலோக சிலைகளையே காணமுடியும். இங்கு பச்சை மரகதக்கல்லால் உருவாக்கப்பட்ட நடராஜர் சிலை இருக்கிறது.

    மத்தளம் முழங்க மரகதம் உடைபடும் என்ற முதுமொழிக்கு ஏற்ப மரகத நடராஜர் சிலை ஆண்டின் அனைத்து நாட்களிலும் சந்தனம் பூசி பாதுகாக்கப்படுகிறது. ஆருத்ரா தரிசனத்திற்காக மட்டும் சந்தனக்காப்பு களையப்பட்டு மரகத நடராஜர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அன்று ஒரு நாள் மட்டும் அந்த சன்னதி விழாக்கோலம் பூண்டிருக்கும்.

    இந்த ஆண்டு ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு திருஉத்தரகோசமங்கை மங்களநாதர் கோவிலில் கடந்த 18-ந்தேதி காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது. அப்போது முதல் தினமும் சுவாமி-அம்பாள், நடராஜரும் மக்களுக்கு விஷேசமாய் அருள்பாலித்து வருகின்றனர்.

    விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனம் களைதல் வைபவம் இன்று நடை பெற்றது. இதற்காக மரகத நடராஜர் சன்னதி இன்று காலை 8 மணிக்கு திறக்கப்பட்டது. அப்போது நடராஜர் மீது பூசப்பட்ட சந்தனங்கள களையப்பட்டு ஜொலிக்கும் மரகதக்கல்லில் சுய உருவமாக நடராஜர் காட்சியளித்தார். அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் பக்தி பெருக்குடன் நடராஜரை வழிபட்டனர்.

    பின்னர் பால், பன்னீர், மாபொடி, மஞ்சப்பொடி, திரவியப்பொடி, தேன், இள நீர் உள்பட 32 வகையான பொருட்களால் நடராஜருக்கு மகா அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் நடராஜரை வரிசையாக சென்று தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இன்று நள்ளிரவில் மீண்டும் நடராஜருக்கு அபிஷேகம் நடைபெறும்.

    நாளை அதிகாலையில் சூரிய உதயமாகும் நேரத்தில் நடராஜருக்கு மீண்டும் சந்தனம் சாத்தப்பட்டு சிறப்பு அலங்காரங்களுடன் பூஜை நடைபெறும். நாளை மாலை வரை மட்டுமே மரகத நடராஜர் சன்னதியில் தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். அதன் பிறகு நடராஜர் சன்னதி மூடப்படுகிறது.

    இந்த கோவிலின் சிறப்பே இங்கு அருள்பாலிக்கும் மரகதக்கல் நடராஜர் மீது பூசிய சந்தனத்தை சூடான நீரில் கரைத்து அருந்தினால் எந்த நோயாக இருந்தாலும் குணமாகும் என்பது ஐதீகம். மருத்துவ குணம் நிறைந்த இந்த சந்தனத்தை பக்தர்கள் போட்டி போட்டு வாங்கி செல்கிறார்கள்.

    இந்த விழாவையொட்டி, ராமநாதபுரம் மாவட்டத்திற்கு இன்று (26-ந்தேதி) உள்ளூர் விடுமுறை அறி வித்து கலெக்டர் விஷ்ணு சந்திரன் உத்தரவிட்டுள்ளார். அதேபோல் பல்வேறு ஊர்களில் இருந்து உத்தரகோச மங்கைக்கு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.

    ஒரே ஆண்டில் நடைபெறும் இரண்டாவது ஆருத்ரா தரிசன விழா இதுவாகும். அதாவது இந்த ஆண்டின் (2023) ஜனவரி மாதம் 5-ந்தேதி ஒரு ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

    விழாவையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை உத்தரவின் பேரில் கீழக்கரை டி.எஸ்.பி. சுதிர்லால் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • 5 சபைகளில் முதல் சபையான ரத்தின சபையாக திகழ்கிறது.
    • ஆருத்ரா தரிசன விழா விமரிசையாக நடப்பது வழக்கம்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த திருவாலங்காட்டில் உள்ள வடாரண்யேஸ்வரர் கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இது நடராஜபெருமானின் 5 சபைகளில் முதல் சபையான ரத்தின சபையாக திகழ்கிறது. இங்கு ஆண்டு தோறும் மார்கழி மாதம் திருவாதிரை நாளில் ஆருத்ரா தரிசன விழா விமரிசையாக நடப்பது வழக்கம்.

    இந்த ஆண்டு ஆருத்ரா தரிசன விழா வருகிற 26-ந் தேதி விமரிசையாக நடைபெற உள்ளது. இதற்காக திருவா லங்காடு கோவிலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பக்தர்களின் வசதிக்காக கோயில் மற்றும் சுற்றுப்புற பகுதியில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

    விழாவையொட்டி வருகிற 26-ந்தேதி காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெறுகிறது. தொடர்ந்து இரவு ரத்ன சபாபதி பெருமாள் கோவில் வளாகத்தின் பின்புறத்தில் உள்ள தல விருட்சத்தின் கீழ் அபிஷேகம் மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார்.

    அதைத்தொடர்ந்து விபூதி அபிஷேகத்துடன் ஆருத்ரா தரிசன விழா தொடங்குகிறது. நடராஜருக்கு நெல்லிப்பொடி, வில்வப்பொடி, பால், தேன் மற்றும் பழங்கள் என 33க்கு மேற்பட்ட வகையான அபிஷேகங்கள் விடிய விடிய மறுநாள் காலை வரை நடைபெறும்.

    இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்வார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அபிஷேகம் முடிந்ததும் சிறப்பு அலங்கா ரத்தில் மகா தீபாராதனை நடைபெறும்.

    பின்னர் 27-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு, கோபுர தரிசனம், பகல், 12 மணிக்கு, அனுக்கிரக தரிசனமும் 28-ந் தேதி காலை, 9 மணிக்கு, சாந்தி அபிஷேகமும் நடை பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் ஸ்ரீதரன், செயல் அலுவலர் ரமணி, மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    • திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
    • அரசமர மேடையில் 3 முறை வலம் வரும் பட்டி சுத்துதல் நிகழ்ச்சி நடந்தது.

    பேரூர்,

    பேரூர் பட்டீசுவரர் கோவிலில், ஆருத்ரா தரிசன விழா இன்று காலை வெகு சிறப்பாக நடந்தது.

    ஆருத்ரா தரிசன விழா இன்று அதிகாலை 3 மணிக்கு பட்டீசுவரர், பச்சைநாயகி அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து, காலசந்தி பூஜை நடத்தப்பட்டு, நடராஜர், சிவகாமி அம்மன், மாணிக்கவாசகர், சடையநாதர் ஆகிய மூர்த்திகளுக்கு சிறப்பு திருமஞ்சனமும் நடந்தது.

    4 மணிக்கு மேல் பால், பன்னீர், தயிர், சந்தனம், திருமஞ்சனப்பொடி, இளநீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, ருத்ர கலச தீர்த்தாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, நடராஜர், சிவகாமி அம்பாளுக்கு புது அங்கவஸ்திரம் சாத்துபடி செய்யப்பட்டு, கோபூஜை முடிக்கப்பட்டு மகாதீபாராதனை நடந்தது. அப்போது, வேத மந்திரமும், திருவம்பாவை முதலான உபசாரங்களும் நடந்தது.

    இதையடுத்து, சாமி உள்வீதி பிரகாரத்தில் வலம் வந்து ராஜகோபுரம் வழியாக, வெளிவந்து, அரசமர மேடையில் 3 முறை வலம் வரும் பட்டி சுத்துதல் நிகழ்ச்சி நடந்தது.

    இதையடுத்து, கோவிலின் முக்கிய ரத வீதிகளின் வழியே, மேளதாளங்கள் முழங்க திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது ரோட்டின் இருபுறங்களிலும் நின்றிருந்த ஏராளமான பக்தர்கள் சாமியை தரிசித்தனர்.

    மேலும், கோவிலின் மேற்கு ரத வீதியின் வழியே வரும்போது, மேற்கு கோபுர வாசல் முன்பாக மாணிக்கவாசகருக்கு நடராஜ பெருமான் அருள் காட்சி கொடுக்கும் பொருட்டு, மாலை எடுத்து சாத்தப்பட்டது.

    உடனே சிவகாமி அம்பாள், நடராஜரை வலம் வந்து, மேற்கு கோபுர வாசல் வழியே கோவிலுக்குள் எழுந்தருளினர். அப்போது ராஜகோபுர வாசலின் உள்புறம் நடை சாத்தப்பட்டது. இதையடுத்து, நடராஜர் வெளிவீதி வழியே வலம் வந்து ராஜகோபுர முன் வாசலில் எழுந்தருளினார்.

    அப்போது சுந்தரசாமி, பல்லக்கில் எழுந்தருளச் செய்து, ராஜ கோபுர வாசல் திறக்கப்பட்டு, சிவகாமி அம்பாள் மற்றும் நடராஜப் பெருமானுக்கும், 3 முறை திருஊடல் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது, கோவில் ஓதுவா மூர்த்தி ஊடல் பாடல்களைப் பாடினார். தொடர்ந்து, நடராஜப் பெருமானிடம் இருந்து, ஒதுவா மூர்த்தியிடம் மாலை கொடுக்கப்பட்டு, சிவகாமி அம்பாளுக்கு சாத்துபடி செய்யப்பட்டது. உடனே சிவகாமி அம்பாள் ராஜகோபுரம் வழியே வந்து, நடராஜ பெருமானை வலம் வந்து, இருவரும் சமேதரராக கோவிலில் உள்ள கனகசபை மண்டபத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு ஆருத்ரா தரிசன காட்சியளித்தனர். விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகம் செய்திருந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    • ஒவ்வொரு ஆண்டும் ஆருத்ரா தரிசன விழா வெகு சிறப்பாக நடப்பது வழக்கம்.
    • மாணிக்கவாசகர் திருவீதி உலாவும், திருவெம்பாவை உற்சவமும் நடக்கிறது.

    பேரூர்

    மேலைச்சிதம்பரம் என்று அழைக்கப்படும் பேரூர் பட்டீசுவரர் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் ஆருத்ரா தரிசன விழா வெகு சிறப்பாக நடப்பது வழக்கம்.

    ஆருத்ரா தரிசன விழா நாளை மறுநாள் (6-ந் தேதி) நடக்கிறது. இந்த விழாவானது, கடந்த 28-ந் தேதி காலை கனகசபை மண்டபத்தில் எழுந்தருளியுள்ள நடராஜர், சிவகாமி அம்பாள், மாணிக்கவாசகர் ஆகியோருக்கு காப்பு அணிவித்தலுடன் தொடங்கியது.

    இதைத் தொடர்ந்து காலை, மாலை மாணிக்கவாசகர் திருவீதி உலாவும், திருவெம்பாவை உற்சவமும் நடக்கிறது.

    நாளை மறுநாள் (6-ந் தேதி) ஆருத்ரா தரிசன விழா, அதிகாலை 3.00 மணிக்கு பட்டீசுவரர், பச்சை நாயகி அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜையுடன் தொடங்குகிறது.

    பின்னர், காலசந்தி பூஜை நடத்தப்பட்டு, நடராஜர், சிவகாமியம்மன், மாணிக்கவாசகர், சடையநாதர் ஆகிய மூர்த்திகளுக்கு சிறப்பு திருமஞ்சனமும், 4 மணிக்கு மேல் பால், பன்னீர், இளநீர், சந்தனம், திருமஞ்சனப் பொடி உள்ளிட்ட 16 வகை விசேஷ திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, ருத்ர கலச தீர்த்தாபிஷேகம் நடக்கிறது. இறுதியாக, 6 மணிக்கு மேல் நடராஜரும், சிவகாமி அம்பாளும் சமேதரராக எழுந்தருளி, கனகசபை மண்டபத்தில் பக்தர்களுக்கு ஆருத்ரா தரிசன காட்சியளிக்கின்றனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.  

    ×