என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Arunachal Swamy Temple"
- என்னை உட்கார்ந்த நிலையில் மண்ணையும் மலரையும் கொண்டு மூடிவிடுங்கள்,' என்று முகமலர்ச்சியோடு சேர்மன் அருணாசலம் சுவாமிகள் கூறினார்.
- சேர்மன் அருணாசல நாடாரின் சமாதி, தாமிரபரணி கரையில் உள்ளது. தற்போது நாள் தோறும் அங்கு பூஜை நடந்து வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள கிராமம் மேலப்புதுக்குடி. இங்கு பிறந்த குமாரசாமி நாடார் ஒரு நாள் தனது ஊருக்கு வந்த ஒரு முனிவரைத் தனது வீட்டுக்கு அழைத்து வந்து, பாத பூஜை செய்து, அருஞ்சுவை விருந்து அளித்தார். அப்போது அந்த முனிவர் ஒரு தெய்வீக ஏடு ஒன்றை குமாரசாமியிடம் கொடுத்தார்.
இந்த ஏட்டை தொடர்ந்து படித்து வந்ததன் பயனாக, மந்திரங்கள் சிலவற்றை கற்றுக்கொண்டு தினமும் தியானமும், பூஜையும் செய்து வந்தார். இதனால் பாம்பு, பூரான் போன்ற கொடிய விஷ ஜந்துகள் கடித்து பாதிக்கப்பட்டவர்களை இவர் வெறுமே பார்த்தாலே அந்த விஷம் இறங்கியது. ஏற்கெனவே விஷப்பூச்சிக் கடியல் சரும நோய் ஏற்பட்டவர்களும் இவர் பார்வை பட்டு குணமானார்கள். இதனால் மதுரைக்குத் தெற்கே இருந்து பலர் ஏரல் வந்து குமாரசாமி நாடாரின் பார்வை பெற்றுச் செல்வார்கள். இவருடைய புகழ் நாளுக்கு நாள் பரவியது. இவரது வழித்தோன்றலில் ஒருவர் ராமசாமி நாடார். மனைவி சிவனைந்தம்மாள். இவர்களுக்கு திருமணம் முடிந்து ஆண்டுகள் பல கழிந்த பின்னும் குழந்தைப் பேறு இல்லை.
ஒருநாள் தர்மம் கேட்டு, அவர்கள் இல்லம் வந்த ஒரு துறவி, "நீ செட்டியாபத்து சென்று அங்கு ஐந்து வீட்டு சாமியைத் தரிசனம் செய்து வா. உனக்கு ஆண் மகன் பிறப்பான்" என்று கூறினார். (ஏரலில் இருந்து 28 கி.மீ. தொலைவில் உள்ளது செட்டியாபத்து.) அதன்படி தம்பதிகள் செட்டியாபத்து கோயிலுக்குச் சென்று தரிசித்தனர். அன்றிரவு ராமசாமி கனவில் தர்மம் கேட்டுவந்த துறவி தோன்றி, 'உனக்கு ஆண் குழந்தை பிறக்கும், அதற்கு அருணாசலம் என்று பெயரிடு. அவன் தெய்வ நிலை கொண்டவனாக வளருவான்' என்று கூறினார். சில நாட்களில் சிவனைந்தம்மாள் கர்ப்பமுற்றாள். விக்கிரம ஆண்டு புரட்டாசி திங்கள் பதினெட்டாம் நாள் உத்திர நட்சத்திரத்தில், 2.10.1880 அன்று அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள். குழந்தைக்கு அருணாசலம் என்று பெயரிட்டனர். உடனே ராமசாமி நாடார் வேண்டுதல் நிறைவேறிய சந்தோஷத்தில் செட்டியாபத்து கோயிலில் அழகிய மண்டபம் கட்டினார்.
அருணாசலம், மூலக்கரையில் இருந்த பாடசாலையில் கல்வி கற்றார். ஏரல், சிறுத்தொண்டநல்லூர், பழையகாயல் போன்ற கிராமங்களில் பெருமளவில் சொத்துகள் இவர்களது குடும்பத்துக்கு இருந்தன. அருணாசலம், பண்ணைவிளையில் மேல்படிப்பு படித்தார். அங்கு அவர் ஆங்கிலத்தையும் கற்றுக்கொண்டார். வாலிப பருவம் அவரை நெருங்க, அவர் தனது எண்ணத்தை இறைத் தேடலில் செலுத்தி வந்தார். தனது வழி முன்னோடிகள் செய்து வந்த விஷக்கடி மருத்துவத்தினையும் தொடர்ந்து செய்து வந்தார். இதனால் இப்பகுதி மக்களிடம் பேராதரவு பெற்றார்.
இதற்கிடையில் இவரது அறிவாற்றலையும், ஆங்கிலப் புலமையையும் கண்ட அன்றைய ஆங்கில அரசு இவரை சிறுதொண்டநல்லூருக்கு முன்சீப்பாக (நிர்வாக அதிகாரி) நியமித்தார்கள். அந்தப் பொறுப்பை அருணாசலம் சிறப்பாக செய்து வந்தார். சிறுவயதாக இருந்தாலும் வரி வசூல் செய்வது, அந்தக் கிராமத்தில் ஏற்படும் சிறு சிறு சண்டைகளை பஞ்சாயத்து பேசி முடிப்பது என்று 8 ஆண்டுகளாக சிறந்து விளங்கினார். இதற்கிடையில் ஒருநாள் ஊழலுக்குத் துணைபோகவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட, அக்கணமே அப்பதவியைத் துறந்தார். பிறகு ஆன்மீகத்தில் ஆழ்ந்து ஈடுபட்டார்.
அவருக்கு திருமணம் செய்ய உறவினர்கள் முன்வந்தனர். ஆனால், அவரோ '28 வயது ஆகட்டும். அப்ப பார்த்துக்கலாம்' என்று கூறிவிட்டார். அப்பழுக்கற்ற பிரம்மச்சாரியாக வாழ்ந்த இவரை கவனித்துவந்த அப்போதைய மாவட்ட கலெக்டர்கள் பிஷப்வெஸ்டன், பிஷப்ஸ்டோன் இருவரின் பரிந்துரைப்படி ஏரல் பஞ்சாயத்துக்கு சேர்மனாக (தலைவராக) அவரை நியமித்தார்கள். சேர்மன் அருணாசலம், ஏரலில் பள்ளிக்கூடங்களைத் தொடங்கினார்.
எண்ணெயால் எரியும் தெருவிளக்குகளை அமைத்தார். இரவு நேரங்களில் அணைந்து விடாமல் இருக்க பணியாளர்களை நியமித்தார். ஊருக்குள் கழிவு நீர் தங்காமல் இருக்க வடிகால் வசதி செய்தார். ஊராட்சி எல்லைக்குள் மரக்கன்றுகள் நட்டார். அனைத்து மக்களிடமும் அன்போடு பழகினார். அதிகம் பேசாமல் அமைதியுடன் திகழ்ந்த அருணாசலம், தனது ஆன்மிக சக்தியால், பின் நடப்பதை முன் அறியும் திறன் பெற்றார். ஒருநாள் அப்பகுதியைச் சேர்ந்த பால்நாடார் என்பவரை பாம்பு கடித்து விட்டது. அவரைக் கடித்த பாம்பையே திரும்ப வரவழைத்து அந்த விஷத்தினை உறியச் செய்தார்.
இதைக்கண்ட அனைவரும் அவருக்குள் ஏதே ஒரு தெய்வ சக்தி இருப்பதை உணர்ந்தனர். இதற்குப் பிறகு அவரை சேர்மன் சாமி என்றே அழைத்தனர். ஒருநாள் காலை சேர்மன் சுவாமி அருணாசலம் எழுந்தவுடன் தனது தம்பி கருத்தபாண்டியை அழைத்து, 'காலம் கனித்து விட்டது. நான் சிவனடி செல்லும் நாள் வந்துவிட்டது. வருகிற அமாவாசை அன்று ஆடி மாதம் 13 ம் நாள் செவ்வாய்க் கிழமை (27. 07. 1908) உச்சிப் பொழுதில் என்னை எம்பெருமான் சிவனோடு அர்ப்பணித்துக் கொள்வேன்.
நான் உயிர் நீத்தாலும் எப்போதும் உங்களுடன்தான் இருப்பேன். என்னை நம்பி வருபவர்களுக்கு வேண்டிய வரம் அளிப்பேன். அவர்களை காலம் காலமாக காத்துவருவேன். என் ஆவி பிரிந்தவுடன் நமது குல வழக்கப்படி என் உடலை எரித்து விடாதீர்கள். இறந்தோருக்கான சடங்குகளை செய்யுங்கள். அப்போது வானத்தில் கருடன் ஒலி கொடுத்து என்னை மும்முறை வலம் வருவார். கருடன் நிழல் என் உடல்மீது படும். அப்போது என்னை உட்கார்ந்த நிலையில் மண்ணையும் மலரையும் கொண்டு மூடிவிடுங்கள்,' என்று முகமலர்ச்சியோடு சேர்மன் அருணாசலம் சுவாமிகள் கூறினார்.
அவர் கூறிய நாள் வந்தது. நிறைந்த அமாவாசை தினம். முன்னரே கருத்தபாண்டி நாடார் மூலம் தகவல் அறிந்த உற்றார், உறவினர், நண்பர்கள், நகர மக்கள் என பலரும் அவரது இல்லம் முன்பு கூடினர். பகல் 11 மணிக்கு சேர்மன் அருணாசலம் சுவாமி 'வருகிறேன்' என்று கூடியிருந்த அனைவரையும் புன்னகை முகத்துடன் பார்த்துச் சொல்லி கையசைத்தபடி தனது அறைக்குள் சென்றார். கட்டிலில் படுத்தார். கண்களை மூடினார். உச்சிப் பொழுது வந்தது.(பகல் 12 மணி) உறங்கிய நிலையிலேயே சிவனடி அடைந்தார். சுவாமி கூறியபடி தென்மேற்கில் உள்ள தாமிரபரணி நதிக்கரையில் படர்ந்த ஆலமரத்தின் அடியில் சுவாமியின் உடலை அமர்ந்த கோலத்தில் வைத்தனர். உரிய சடங்குகள் நடத்தப்பட்டன. கருடன் சங்கொலியுடன் சுவாமியை வலம் வந்தது. கருடன் நிழல் சுவாமி உடலில் பட்டது. சுவாமிகள் படித்த நூல்கள், பயன்படுத்திய விலை மதிப்பு மிக்க பொருட்கள், உயர்ந்த அணிகலன்கள் ஆகியவற்றை சுவாமியின் காலடியில் வைத்து சுவாமியை மலர்களாலும், மண்ணாலும் மூடினார்கள்.
சுவாமி தெய்வ நிலையடைந்த ஒருசில நாளில் அவரோடு வைக்கப்பட்ட விலை உயர்ந்த பொருட்களைத் திருடிச் சென்றிட திருடர்கள் குழியைத் தோண்ட முயன்றபோது, பாம்புக் கூட்டம் படையெடுத்து வந்து அவர்களை விரட்டியது. அஞ்சி நடுங்கிய திருடர்கள் ஓடினர். இந்தக்காட்சி ராமசாமி நாடாருக்கு கனவில் தெரிந்தது. அவர் உடனே ஓடி வந்து பார்த்தார்.
அங்கு மண் தோண்டப்பட்டு இருப்பதையும் அதன் அருகே கடப்பாறை மற்றும் மண்வெட்டி இருப்பதையும் கண்டார். உடனே இனி தெய்வநிலை பெற்ற தெய்வ மகனுக்குக் கட்டிடம் கட்டத் தீர்மானித்து சிறிய கட்டிடம் ஒன்றை கோயிலாகக் கட்டினார். சுவாமிகள் உயிரோடு இருந்த போது அவரிடம் நோய் தீர்க்க மருந்து வாங்கி உண்டவர் ஆதிதிராவிடப் பெண்ணான சுடலைப் பேச்சி. அவர் தனக்கு நோய் தீரவில்லையே என்று சுவாமி சமாதிக்கு வந்து வேண்டி அழுதாள். உடனே அந்தப் பெண்ணுக்கு காட்சி கொடுத்த சுவாமி 'தீர்த்தமும் நிலக்காப்பும் உனக்கு மருந்தாகும்' என்று கூறினார். அதன்படி அவரது நோய் தீர்ந்தது.
கிறிஸ்தவர்கள் புதைக்கப்பட வேண்டிய இடத்தில் அருணாசல சுவாமியை புதைத்து விட்டனர். ஆகவே அங்கு எழுப்பப்பட்டிருக்கும் சுவாமியின் கோயிலை அப்புறப்படுத்த வேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்த சிலர் கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர். அப்போது கலெக்டர்களாக இருந்த மெக்வர், டேவிட்சன் இருவரும் இந்தக் கோரிக்கையை பிஷப்பாக இருந்த ஆர்தர் வில்லியத்திடம் தெரிவித்தனர். இதனையடுத்து கலெக்டர்கள், பிஷப்புடன் சேர்ந்து நெல்லையில் இருந்து ஏரலுக்கு குதிரையில் வந்தனர். கோயிலுக்கு வருமுன்பு குதிரைகள் முரண்டு பிடித்து நின்றன.
ஆகவே அவர்கள் குதிரையை விட்டு இறங்கி கோயிலுக்கு வர, கோயிலின் முன்பு சேர்மன் அருணாசலம் சுவாமி கணக்கு எழுதுவது போல அமர்ந்து இருந்தார். அதைப் பார்த்த அவர்கள் பயந்து வெடவெடத்து, காலணிகளை கழற்றி விட்டு, தொப்பிகளை இடுப்பில் இறக்கி வைத்து விட்டு சுவாமியை வணங்கினர். நெல்லை சென்றதும் கலெக்டர், கோயில் அமைந்திருந்த இரண்டு ஏக்கர் நிலத்தினை முறைப்படி பட்டாபோட்டு கொடுத்துவிட்டார். இந்த வரலாறு அரசு ஆவணங்களில் உள்ளது.
சேர்மன் அருணாசல நாடாரின் சமாதி, தாமிரபரணி கரையில் உள்ளது. தற்போது நாள் தோறும் அங்கு பூஜை நடந்து வருகிறது. அங்கு சேர்மனின் போட்டோ பிரேம் செய்து வைக்கப்பட்டுள்ளது. செவ்வாய், வெள்ளி அமாவாசை பௌர்ணமி தினங்களில் இவரை தரிசிக்க சாதி, மதம் பாராமல் வரும் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக தாமிரபரணி கரையில் கூடுகிறார்கள். பில்லி, சூனியத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அங்குள்ள புற்று மண்ணை மருந்தாக உண்ணுகிறார்கள்.
உடம்பிலும், கை, கால்களிலும் பூசிக்கொள்கின்றனர், அவர்களுக்கு உடனே குணம் தெரிகிறது என்று ஆங்கிலேய கலெக்டர் பேட்துரை திருநெல்வேலி கெஜட்டர் என்ற நூலில் எழுதியுள்ளார். மனிதனாக வாழ்ந்து தெய்வமாக வணங்கப்படும் சேர்மன் சுவாமி சமாதி, இருக்கும் இடத்தில் சுவாமியின் தந்தை தனது கைகளால் சிறிது மண்ணை எடுத்து லிங்கம் போல் பிடித்து வைத்துள்ளார். அந்த லிங்கம் இன்று இரண்டு அடிக்கு மேல் வளர்ந்து உள்ளது. தாமிரபரணி ஆற்று நீரில் லிங்கத்தினை பல ஆண்டுகளாக அபிஷேகம் செய்தும் அந்த லிங்கம் கரையாமல் உள்ளது. அந்த லிங்க அபிஷேக தீர்த்தத்தினால் வலிப்பு நோய், மனநோய், அரிப்பு, கட்டி என பல நோய்கள் தீருகிறது.
சுவாமிகள் ஜீவ சமாதி அடைந்து 100 வருடங்கள் கடந்துவிட்டன. ஆனால், தற்போதும் சுவாமிகள் பலவிதத்தில் தனது ரூபத்தினை மக்களுக்குக் காட்டி வருகிறார். திருச்செந்தூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரி முதல்வராக பணியாற்றிய சற்குணம் என்பவர் ஒருசமயம் ஏரலுக்கு சுவாமியைக் கும்பிட குடும்பத்துடன் வந்துள்ளார். அவர்கள் தாமிரபரணியில் நீராடியபோது அவரது மகன் நீரில் முழ்கி விட்டான். உடனே அவர் ''சேர்மா! என் மகனை காப்பாற்று'' எனக் குரல் எழுப்பியுள்ளார்.
அப்போது அங்கு வந்த பெரியவர் ஒருவர் ஆற்றில் இறங்கி அவர் மகனை காப்பாற்றினார். சற்குணம் மகனை அரவணைத்துக்கொண்டு காப்பாற்றிய பெரியவருக்கு நன்றி சொல்ல அவரை கூப்பிட்டபோது அவரை காணவில்லை. மகனைக் காப்பாற்றியது சேர்மன் சுவாமிகளே என்று அனைவரும் நம்பினர். ஏரல் சுவாமி கோயிலில் மந்திர மை இடுவது வழக்கம். இந்த மந்திர மை ஆல், அரசு, வேம்பு, துளசி, வில்வம், சந்தனம், கற்பூரம் ஆகிய பொருட்களைச் சேர்த்து யாகத்தில் நெய்யிட்டு எரித்து பஸ்பமாக்கி அதனைச் சுவாமியின் முன்னர் வைத்து வழிபாடு செய்து தருகிறார்கள். இந்த மந்திர மையை இட்டுக்கொள்ளும் பக்தர்கள் திருஷ்டி, பேய், பிசாசுகள் விலகுவதாக அனுபவபூர்வமாக சொல்கிறார்கள்.
குலசேகரபட்டினம் அருணாசல பிள்ளை என்பவர் சுவாமி கோயிலுக்குத் தவறாமல் அரிசி தருவார். ஒருமுறை இரவில் தென்திருப்பேரையில் இருந்து அரிசியை ஒரு நார்ப்பெட்டியில் வைத்துக்கொண்டு ஏரலுக்கு வந்தார். அப்போது ஆற்றில் வெள்ளம் வந்த காரணத்தினால் தனியாக எப்படி அக்கரைக்குப் போவது என்று அவர் தவிக்க, ஒரு பெரியவர் தனது பிரம்பை அவர் கையில் கொடுத்து 'இதைப் பிடித்துக் கொண்டு என் பின்னால் வா,' என்றார். பிள்ளை அந்த பிரம்பை பிடித்தவுடன் மறுகரை வந்து விட்டதை உணர்ந்தார். சரி நமக்கு உதவி செய்பவருக்கு ஏதாவது செய்யலாம் என்று அவர் அந்தப் பெரியவரைத் தேடியபோது அவரைக் காணவில்லை. தன்னை வழிநடத்தி வந்தது சேர்மன் சுவாமிதான் என்று அவரும் அவர் அனுபவத்தைக் கேட்டவரும் கருதினர்.
இங்கு சித்திரைத் திருவிழா மற்றும் ஆடி அமாவாசை, தை அமாவாசை ஆகியவை முக்கிய விழாக்களாகும். மாதம்தோறும் அமாவாசையிலும், பௌர்ணமியிலும் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. சுவாமி இங்கு ராஜகோலத்தில், நின்றபடி காட்சி தருகிறார். இங்கு நான்கு கால பூஜை நடக்கிறது. மனநோய், பேய்பிடி, விஷப்பூச்சிக்கடி, வீண்பயம், குடும்பப் பிரச்னை, மன அழுத்தம் என அனைத்தையும் போக்கும் பரிகாரத் தலமாக இந்தக் கோயில் திகழ்கிறது. தென் மாவட்ட மக்களின் வழிபாட்டு தெய்வங்களில் ஏரல் சேர்மன் சுவாமியும் ஒருவர்.
திருநெல்வேலி-திருச்செந்தூர் பிரதான சாலையில் தென்திருப்பேரையிலிருந்து இடதுபுறம் திரும்பிச் சென்றால் ஏரல் தாமிரபரணிக்கரையில் சேர்மன் அருணாசல சுவாமிகள் அருளைப்பெறலாம்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்