search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "augest"

    பாராளுமன்ற தேர்தலில் அதிக இடங்களை பிடித்துள்ள தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கான் சுதந்திர தினமான ஆகஸ்ட் 14-ம் தேதிக்குள் பாகிஸ்தான் பிரதமராக பதவி ஏற்கிறார். #ImranKhan #ImranasPakPM
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் பாராளுன்றத்துக்கு கடந்த 25-ம் தேதி நடந்த தேர்தலில் 116 தொகுதிகளில் இம்ரான் கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி வெற்றி பெற்றது. முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி 64 தொகுதிகளிலும், மறைந்த முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி 43 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

    முத்தாஹிதா மஜ்லிஸ் அமல் வேட்பாளர்கள் 12 இடங்களிலும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (காயிதே ஆஸம் பிரிவு), பலூசிஸ்தான் தேசிய கட்சி, பாகிஸ்தான் முத்தாஹிதா குவாமி இயக்கம், பலூசிஸ்தான் அவாமி கட்சி, அவாமி தேசிய கட்சி, அவாமி முஸ்லிம்  லீக், பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சானியத் மற்றும் ஜம்ஹூரி வட்டான் ஆகிய கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் தலா ஒரு இடங்களில் வென்றுள்ளனர். ஆக உதிரி கட்சிகளிடம் தற்போது 20 எம்.பி.க்கள் உள்ளனர். இதுதவிர 14 தொகுதிகளில் சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

    பாகிஸ்தானில் ஆட்சி அமைக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 137 எம்.பி.க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், இந்த தேர்தலில் போதிய பெரும்பான்மையை எந்த கட்சியும் பெறவில்லை. அதிக இடங்களை பெற்ற கட்சி என்ற வகையில் கூட்டணி அரசு அமைக்க இம்ரான் கான் கடந்த இருநாட்களாக சில தலைவர்களுடன் மும்முரமாக பேசி வருகிறார்.



    இதற்கிடையில், 5 பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிட்ட இம்ரான் கான், அவை ஐந்திலுமே வெற்றி பெற்றுள்ளார். இம்ரான் கட்சியின் சார்பில் கைபர் பக்துங்கவா மாகாணத்தின் முதல் மந்திரியாக முன்னர் பொறுப்பேற்றிருந்த பர்வேஸ் கட்டாக் என்பவர் இந்த தேர்தலில் பாராளுமன்றத்துக்கும் கைபர் பக்துங்கவா சட்டசபைக்கும் போட்டியிட்டு இரண்டிலுமே வெற்றி  பெற்றுள்ளார்.

    இதுமட்டுமின்றி, கைபர் பக்துங்கவா மாகாணத்தில் 66 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி அங்கு மீண்டும் ஆட்சி அமைக்கவுள்ளது. முதல் மந்திரியாக  பர்வேஸ் கட்டாக்-கை மீண்டும் நியமிக்க இம்ரான் கான் தீர்மானித்துள்ளார்.

    பாகிஸ்தான் முஸ்லிம் லீக் வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் உள்துறை மந்திரி நிசார் அலி கான் சவுத்ரியை எதிர்த்து போட்டியிட்ட இம்ரான் கட்சி வேட்பாளரான குலாம் சர்வார் கான் இந்த தொகுதியில் வெற்றி பெற்றதுடன் மேலும் ஒரு பாராளுமன்ற தொகுதியிலும் வென்றுள்ளார்.

    எனவே, தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி சார்பில் குலாம் சர்வார் கான் ஒரு தொகுதியில் தனது எம்.பி.பதவியை ராஜினாமா செய்ய வேண்டியுள்ளது. இதேபோல், பக்துங்கவா மாகாண முன்னாள் முதல் மந்திரி பர்வேஸ் கட்டாக் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்யவுள்ளார்.

    மேலும், 5 தொகுதிகளில் வெற்றிபெற்ற இம்ரான் கான் 4 தொகுதிகளில் ராஜினாமா செய்ய வேண்டியுள்ளது. இதனால், தற்போது 116 ஆக இருக்கும் இம்ரான் கான் கட்சியின் பலமானது, 6 எம்.பி. தொகுதி உறுப்பினர்களின் ராஜினாமாவுக்கு பின்னர் 110 ஆக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே, 27 எம்.பி.க்களின் தயவுடன்தான் இம்ரான் கானின் பிரதமர் நாற்காலி கனவு மெய்ப்பட வேண்டும் என்னும் சூழல் உருவாகியுள்ளது.

    எந்த நிலையிலும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் அல்லது பாகிஸ்தான் மக்கள் கட்சியின் ஆதரவை நாட மாட்டேன் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ள இம்ரான் கான் சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். பாராளுமன்ற தேர்தலில் சுயேட்சைகளாக போட்டியிட்டு வெற்றிபெற்ற 14 எம்.பி.க்களிடமும் அவர் ஆதரவு கேட்டுள்ளார்.

    இந்நிலையில், பாகிஸ்தான் சுதந்திர தினமான ஆகஸ்ட் 14-ம் தேதிக்குள் இம்ரான் கான் பிரதமராக பதவி ஏற்று விடுவார் என தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் மேலிட தலைவர் நயீனுல் ஹக் குறிப்பிட்டுள்ளார். #ImranKhan #ImranasPakPM  
    ×