search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bathrakaliamman temple"

    ஆலமரத்தில் மணியைக் கட்டி அம்மனை வழிபடும் கோவிலாக, கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், பொன்மனா என்ற இடத்தில் அமைந்திருக்கும் பத்ரகாளி கோவில் இருக்கிறது.
    ஆலமரத்தில் மணியைக் கட்டி அம்மனை வழிபடும் கோவிலாக, கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், பொன்மனா என்ற இடத்தில் அமைந்திருக்கும் பத்ரகாளி கோவில் இருக்கிறது.

    தல வரலாறு

    எட்டுக்கெட்டு என்று அழைக்கப்பெற்ற குடும்பத்தின் தலைவர், வயலுக்குத் தேவையான விதை நெல் வாங்குவதற்காகப் படகு ஒன்றில் ஆலப்புழை சென்றார். அங்கே ஒரு சிறுமி தனியாக நின்று அழுது கொண்டிருப்பதைக் கண்டார். விதை நெல்லை வாங்கிக் கொண்டு உடனே ஊர் திரும்ப வேண்டும் என்பதால், அந்தச் சிறுமியைக் கண்டுகொள்ளாமல் சென்றார்.

    விதை நெல்லை வாங்கிக் கொண்டு திரும்பி வந்த போதும், அதே இடத்தில் அந்தச் சிறுமி அழுது கொண்டிருந்தாள். அவள் மீது இரக்கம் கொண்ட அவர், சிறுமியைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு வீடு திரும்பினார். அந்தச் சிறுமியைத் தன் வீட்டிலேயேத் தங்க வைத்து வளர்த்துப் பின்னர் திருமணமும் செய்து கொடுத்தார்.

    சில தலைமுறைகளுக்குப் பின்பு, அவரது குடும்பத்தின் மரபுரிமையினருக்குக் கடுமையான நோய் ஒன்று ஏற்பட்டது. அதனால் அவர்கள் துன்பத்தில் தவித்தனர். ‘தங்கள் குடும்பத்தினருக்கு மட்டும் இப்படி ஒரு நோய் வருவது ஏன்?’ என்பதைத் தெரிந்து கொள்ள விரும்பிய அவர்கள், ஒரு ஜோதிடரை அழைத்துக் காரணம் கேட்டனர். அந்த ஜோதிடர், ‘முந்தையக் காலத்தில் அக்குடும்பத்தின் தலைவர் அழைத்து வந்த சிறுமி, இந்த உலகைக் காக்கும் தேவி’ என்றும், ‘அவளைப் பிற்காலத்தில் வந்தவர்கள் மறந்து போய்விட்டதால், அக்குடும்பத்தினருக்கு நோயும் துன்பமும் தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கிறது’ என்றும் கூறினார்.

    உடனே அந்தக் குடும்பத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து, அந்தப் பகுதியில் ஒரு சிறிய கோவிலை உருவாக்கி, அதில் தேவியின் சிலையை நிறுவி வழிபடத் தொடங்கினர். அதன் பிறகு, அந்தக் குடும்பத்தினருக்கு ஏற்பட்டு வந்த நோய் நீங்கியதுடன், அவர்கள் வாழ்வில் வளமும் செல்வமும் அதிகரிக்கத் தொடங்கின என்று இக்கோவில் அமைந்த தல வரலாறு சொல்லப்படுகிறது.

    கோவில் அமைப்பு

    ஒரு பகுதியில் அரபிக்கடல். மறுபகுதியில் திருவனந்தபுரத்தில் இருந்து சோரனூர் செல்லும் கால்வாய். இவை இரண்டுக்கும் இடையில் ஒரு தீவு போன்று இருக்கும் பொன்மனா என்ற இடத்தில் அமைந்திருக்கும் இக்கோவிலில் பத்ரகாளி நின்ற நிலையில் காட்சி தருகிறார். மேக்கத்தில் எனப்படும் வனப்பகுதியில் இக்கோவில் அமைந்திருக்கிறது. எனவே இத்தல தேவியை ‘காட்டில் மேக்கத்தில் தேவி’ என்றும், ‘காட்டில் மேக்கத்தில் பத்ரகாளி’ என்றும், ‘காட்டில் மேக்கத்தில் அம்மா’ என்றும் அழைக்கின்றனர்.

    கோவில் வளாகத்தில் நாகராஜா, கணபதி, சுடலை மாடன், யோகீஸ்வரர் மற்றும் யட்சி சன்னிதிகளும் உள்ளன. கடற்கரையில் இக்கோவில் அமைந்திருந்தாலும், கோவில் வளாகத்தில் அமைந்திருக்கும் இரு கிணறுகளில் மிகவும் சுவையான நல்ல தண்ணீர் கிடைக்கிறது. இங்கு வரும் பக்தர்கள் இந்த நீரைப் புனித நீராகப் பெற்று அருந்திச் செல்கின்றனர்.

    இயற்கை அழகு நிறைந்த பகுதியில் அமைந்திருக்கும் இக்கோவிலில், மணிக்கெட்டு, அருநாழி, புடவை சமர்ப்பித்தல், புஷ்பாஞ்சலி என்பது போன்ற சில சிறப்பு வழிபாடுகளும் நடத்தப் பெறுகின்றன. கார்த்திகை மாதம் ‘12 விளக்கு உற்சவம்’ என்று அழைக்கப்படும் 12 நாட்கள் நடைபெறும் ஆண்டுத் திருவிழா நடைபெறுகிறது. இவ்விழாவில் கேரளா மட்டுமின்றி, தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் அதிகளவில் கலந்துகொள்கின்றனர். இவ்விழாக் காலத்தில் கோவிலைச் சுற்றிலும் பக்தர்கள் தங்கிப் பஜனைப் பாடல்களைப் பாடி அம்மனை வழிபடுகின்றனர். இவ்வழிபாட்டிற்காகக் கோவிலுக்கு அருகில் ஆயிரத்துக்கும் அதிகமான கூடாரங்கள் அமைத்துக் கொடுக்கப்படுகின்றன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

    மணி கட்டி வழிபடும் ஆலமரம்

    ‘மணிக்கெட்டு’ வழிபாடு

    ஆலய வளாகத்தில் உள்ள ஆலமரத்தில் மணியைக் கட்டி வழிபட்டால், பக்தர்களின் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும் என்கிற நம்பிக்கை நிலவுகிறது. இதனை ‘மணிக்கெட்டு’ என்றும், ‘மணிச்சூடல்’ என்றும் அழைக்கின்றனர். இந்த ‘மணிகெட்டு’ வழிபாடு நடைபெறுவதற்கு, இக்கோவிலில் நிகழ்ந்த ஒரு சம்பவமே காரணமாக அமைந்திருக்கிறது.

    ஒரு சமயம், தேவியின் சன்னிதிக்கு எதிரே இருக்கும் கொடிமரத்தில் தொங்கவிடப்பட்டிருந்த மணிகளில் ஒன்று கீழே விழுந்து கிடந்தது. அதனைக் கண்டெடுத்த பக்தர் ஒருவர், அதைப் பக்தியுடன் எடுத்து, ஆலய வளாகத்தில் இருந்த ஆலமரக் கிளை ஒன்றில் கட்டித் தொங்க விட்டிருக்கிறார். அப்போது, அவருக்குள் மிகுந்த பக்தியும், இறையுணர்வும் தோன்றி இருக்கிறது. அதற்குப் பின்னர், அவருடைய கோரிக்கைகள் அனைத்தும் தேவியின் அருளால் நிறைவேறி இருக்கின்றன.

    இதற்கிடையே கொடிமரத்தில் இருந்த மணி கீழே விழுந்ததால் அதற்கான பரிகார பூஜை செய்ய தேவப் பிரசன்னம் பார்க்கப்பட்டது. அப்போது, பக்தர்கள் தனக்கு மணிகளைக் காணிக்கையாக்கி இந்த ஆலமரத்தில் கட்டினால், தான் மிகவும் மகிழ்ச்சியடைவதாகத் தேவி தெரிவித்தாள். அதனைத் தொடர்ந்து, கோவிலில் இருக்கும் ஆலமரத்தில் மணிகளைக் கட்டும் வழிபாடு, முதன்மை வழிபாடாகி விட்டது என்கின்றனர்.

    இதற்காக சிவப்பு நிறத்திலான கயிற்றில் கட்டப்பட்ட, 15 முதல் 20 கிராம் எடையுள்ள சிறிய அளவிலான மணிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் இந்த மணிகளை வாங்கி, ஆலமரத்தினை ஏழு முறை வலம் வந்து மரத்தின் விழுது அல்லது கிளையில் அந்த மணியைக் கட்டிவிட்டு, அம்மனை வழிபட்டுச் செல்கின்றனர். ஒவ்வொரு நாளும், நூறு பக்தர்களாவது மணியைக் கட்டி வழிபடுகிறார்கள். சிறப்பு விழாக்களின்போது இந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.

    ஒளியாக காட்சி தந்த தேவி

    திருவாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மா, ஒரநாடு ராஜா என்பவரைச் சந்தித்துவிட்டு, கடல் வழியாகக் கப்பலில் திரும்பிக் கொண்டிருந்தார். கப்பலின் மேற்பரப்பில் நின்றிருந்த அவருக்கு, கடற்பரப்பின் மேலே திடீரென்று ஒரு ஒளி தோன்றி, மீண்டும் கடலினுள் சென்று மறைவது தெரிந்தது. தைப்பூச நாளில் தனக்குக் காட்சியளித்த அந்த ஒளி என்னவென்று தெரியாமல், அதை வணங்கியபடி நாடு திரும்பினார்.

    அதன் பிறகு, ஒரு நாள் அவரது கனவில் தோன்றிய தேவி, கடலில் ஒளியாகத் தோன்றி மறைந்தது தானே என்றும், அங்கிருக்கும் கோவிலில் தான் பத்ரகாளியாக இருப்பதையும் தெரிவித்தாள். உடனே மன்னர், அந்தக் கோவிலுக்குச் சென்று தேவியை வழிபட்டார். அங்கு தேவியானவள், மன்னனுக்கு சிவன், விஷ்ணு, பிரம்மா என்று மும்மூர்த்திகளின் வடிவில் காட்சியளித்தாள்.

    அதன் பின்னர், மன்னன் அந்தக் கோவிலை விரிவுபடுத்திக் கட்டியதுடன், அவ்வப்போது அங்கு வந்து தேவியை வழிபட்டுச் சென்றார். மன்னர் இக் கோவில் வழிபாட்டுக்கு வரும் போது தங்குவதற்காகச் சிறிய அரண்மனை ஒன்றும் கட்டப்பட்டது. அந்த அரண்மனையை அங்குள்ளவர்கள் ‘கொட்டாரக்கடவு’ என்கின்றனர்.

    இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், காயங்குளம் எனும் ஊரிலிருந்து 26 கிலோ மீட்டர், கருநாகப்பள்ளி எனும் ஊரிலிருந்து 17 கிலோ மீட்டர், சவரா எனும் ஊரிலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவிலும் இருக்கும் பொன்மனா என்ற இடத்தில் அமைந்திருக்கும் இக்கோவிலுக்குச் செல்லப் பேருந்து வசதிகள் இருக்கின்றன. ஜாநகர் என்னும் இடத்திலிருந்து கோவிலுக்குச் செல்ல இலவசப் படகு வசதியும் செய்யப் பட்டிருக்கிறது.

    தேனி மு.சுப்பிரமணி

    எலவத்தடி பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    பண்ருட்டி அருகே உள்ள எலவத்தடி கிராமத்தில் பத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த அப்பகுதி மக்கள் முடிவு செய்தனர். அதன்படி பத்ரகாளியம்மன் கோவில் மற்றும் விநாயகர், முருகன், தட்சணாமூர்த்தி, பரிவார மூர்த்திகள் சன்னதிகளில் புனரமைப்பு பணிகள் நடந்து முடிந்த நிலையில் கும்பாபிஷேக விழா கடந்த 28-ந்தேதி கணபதி பூஜையுடன் தொடங்கியது.

    இதை தொடர்ந்து தினசரி யாக சாலை பூஜை நடைபெற்று வந்தது. கும்பாபிஷேக நாளான நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு 4-ம் கால யாக சாலை பூஜை, விநாயகர் பூஜை, வருண பூஜை நடந்தது. தொடர்ந்து 9.30 மணிக்கு யாகசாலையில் இருந்து புனிதநீர் அடங்கிய கலசங்கள் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் பின்னர் பத்ரகாளியம்மன் கோவில் விமான கலசத்தின் மீது புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இதையடுத்து அங்கு திரண்டிருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. இதில் எலவத்தடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை பெரியகொரமத்தி படையாட்சி வகையறாக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர். 
    ×