என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Beauty Tips"

    • வைட்டமின் ஈ நிரம்பிய பொருட்கள் சரும சுருக்கங்களை கட்டுப்படுத்தும்.
    • வயதுக்கு ஏற்பவே புரதங்களை சருமம் உற்பத்தி செய்கிறது.

    30 வயதை கடந்ததுமே சருமத்தில் சுருக்கங்கள் எட்டிப்பார்க்கக் கூடும். வயதுக்கு ஏற்பவே கொலாஜன் மற்றும் எலாஸ்டின் என்ற புரதங்களை சருமம் உற்பத்தி செய்கிறது. அவை சருமத்தை குண்டாகவும், இறுக்கமாகவும், மீள்தன்மையுடனும், இளமையுடனும் வைத்திருக்க உதவுகிறது. வயது அதிகரிக்கும்போது இவற்றின் உற்பத்தி குறைந்துவிடும். அதனால் சருமம் மெல்லியதாக மாறிவிடக்கூடும். அதுவே சுருக்கங்கள் எட்டிப்பார்க்க காரணமாகிவிடுகிறது.

    ஒருசில முக பயிற்சிகள் மற்றும் உணவு பழக்கவழக்கங்களை பின்பற்றுவதன் மூலம் விரைவாகவே சருமத்தில் சுருக்கங்கள் தோன்றுவதை தவிர்த்துவிடலாம். கண்களைச் சுற்றியுள்ள தோல் முகத்தின் மற்ற பகுதிகளை விட மெல்லியதாக இருப்பதால், முதுமைக்கான அறிகுறிகளான சுருக்கங்களை சட்டென்று வெளிப்படுத்த தொடங்கிவிடும்.

    பயிற்சி 1: தாடை எலும்பை உறுதியாக வைத்துக்கொண்டு, இரு கண்களையும் வலமிருந்து இடமாகவும், பின்பு இடமிருந்து வலமாகவும், மேலிருந்து கீழாகவும், கீழிருந்து மேலாகவும் சுழலவிடவும். கண்களைச் சுற்றியுள்ள சுருக்கங்களைத் தடுக்க உதவும் இந்த பயிற்சியை ஒவ்வொரு திசையிலும் ஐந்து முறை செய்யவும்.

    பயிற்சி 2: இரு விரல்களை கண்களின் உள் மற்றும் வெளிப்புற மூலைகளிலும், மற்ற விரல்களை தாடைப்பகுதியிலும் வைக்கவும். பின்பு கண்களை மூடி இறுக்கமாக அழுத்தவும். இதற்கிடையில், விரல்களை பயன்படுத்தி, கண்களின் வெளிப்புற மூலைகளை வெளிப்புறமாகவும் சற்று மேல்நோக்கியும் அழுத்தி தேய்க்கவும். இந்த நிலையில் சுமார் 5-10 விநாடிகள் வைக்கவும். பின்பு ஓய்வெடுக்கவும். அது போன்று 10 முதல் 25 முறை செய்யவும்.

    மல்லார்ந்த நிலையில் தூங்குவது முக தசைகளுக்கு அழுத்தம் கொடுப்பதை தவிர்க்க உதவும். சுருக்கங்களும் எட்டிப்பார்க்காது. மென்மையான தலையணையையும் உபயோகிக்கலாம். பட்டு துணியிலான தலையணை சிறந்தது.

    சுருக்கங்களை தடுக்கும் உணவுகள்: வெண்ணெய், ஆளிவிதை, சோயாபீன் போன்ற ஒமேகா-3 கொழுப்பு அமிலம் கொண்ட உணவு பொருட்கள், கருப்பு எள், பூசணி விதை போன்ற சருமத்தை அழகுபடுத்தும் ஊட்டச்சத்துக்கள், குறைந்த கொழுப்புள்ள பாலாடைக்கட்டி, பருப்பு வகைகள், முட்டைகள் மற்றும் கரும் பச்சை இலை கீரைகள், மிளகுத்தூள், ஆரஞ்சு, பப்பாளி மற்றும் ஸ்ட்ராபெர்ரி போன்ற வைட்டமின் சி உள்ளடங்கிய பொருட்கள், ஆலிவ் எண்ணெய், முழு கோதுமை, பாதாம், காலே போன்ற வைட்டமின் ஈ நிரம்பிய பொருட்களை உட்கொள்வதன் மூலம் சரும சுருக்கங்களை கட்டுப்படுத்தலாம்.

    சருமத்திற்கான மசாஜ்: தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் கொண்டு முகத்தை மசாஜ் செய்து வரலாம். கற்றாழை ஜெல்லையும் சருமத்திற்கு உபயோகிக்கலாம். முட்டையின் வெள்ளைக்கருவை சருமத்தில் தடவுவதும் சுருக்கங்களை விரட்டக்கூடும். வாழைப்பழத்தை மசித்து சருமத்தில் தடவலாம். வெள்ளரிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி 'பேஸ் பேக்'காக பயன் படுத்தலாம். காய்ச்சாத பாலில் பருத்தி பஞ்சுவை முக்கியும் சருமத்தில் பூசி வரலாம்.

    சரும சுருக்கத்தை தடுக்கும் வழிகள்: சருமத்தை எப்போதும் ஈரப்பதமாக வைத்திருங்கள். சருமம் எண்ணெய் பசை தன்மையுடன் இருந்தால் மாய்ஸ்சுரைசர் பயன்படுத்துங்கள். அது உங்கள் சரும வகைக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். வெளியே செல்லும்போது குறிப்பாக வெயிலின் ஆதிக்கம் நிலவும் சமயங்களில் மறக்காமல் சன்ஸ்கிரீனை உபயோகியுங்கள். கெட்டுப்போகாத ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள். உடலில் போதுமான அளவு நீர்ச்சத்தை பேணுங்கள். மதுப்பழக்கம், புகைப்பழக்கத்தை தவிருங்கள். அடிக்கடி முகம் சுளிப்பது, பற்களை கடிப்பது போன்ற பழக்கங்களை தவிருங்கள்.

    • கருவளையங்களை சரிசெய்ய அன்னாசி பழச்சாறு உதவும்.
    • பருவால் ஏற்பட்ட தழும்புகள் மறைய அன்னாசி பழத்தை டோனராக பயன்படுத்தலாம்.

    அன்னாசி பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் சி இரண்டும் அதிகமாக இருக்கின்றன. இவையிரண்டுமே சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். குறிப்பாக நார்மல் ஸ்கின் மற்றும் ஆயில் ஸ்கின் இரண்டுக்கும் மிகப் பொருத்தமாக இருக்கும். சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குவது தொடங்கி முகத்தை பளபளப்பாக்கவும் மாசு மருவற்ற சருமத்தை பெறவும் பல வழிகளில் அன்னாசியை பயன்படுத்த முடியும்.

    க்ளியர் சருமத்துக்கு அன்னாசி பழம்

    அன்னாசியில் வைட்டமின் சி நிறைந்திருப்பதால் இது பருக்களுக்கு எதிராக போராடும் தன்மையை கொண்டிருக்கிறது. பருக்களும் பருவால் ஏற்பட்ட தழும்புகளும் அதிகமாக இருந்தால் அதை சரிசெய்ய அன்னாசி பழத்தை டோனராக பயன்படுத்துங்கள்.

    அன்னாசி பழத்தின் சாறை சிறிதளவு எடுத்துக் கொண்டு முகம் மற்றும் பருக்கள் உள்ள இடங்களில் டோனராக ஸ்பிரே செய்து கொள்ள வேண்டும். அதை அப்படியே 15 நிமிடங்கள் வரை உலர விடுங்கள். பின் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவிக் கொள்ள வேண்டும். இப்படி செய்யும்போது விரைவிலேயே பருக்களும் பருவால் வந்த தழும்புகளும் மறைந்து க்ளியர் சருமத்தை பெற முடியும்.

    கருவளையம் நீங்க அன்னாசி

    அதிகப்படியான சோர்வு, வயதாவது போன்ற காரணங்களால் கண்களைச் சுற்றிலும் அடிப்பகுதியிலும் கருவளையங்கள் தோன்றும். இந்த கருவளையங்களை சரிசெய்ய அன்னாசி பழச்சாறு உதவும்.

    அன்னாசி பழத்தில் அதிகப்படியான ஆன்டி - ஆக்சிடண்ட்டுகள் இருக்கின்றன. இது வயதாவதால் உண்டாகும் கண் சுருக்கங்களை சரிசெய்ய உதவும். சிறிதளவு அன்னாசி பழத்தின் சாறினை எடுத்து அதை காட்டனில் நனைத்து கண்களின் மேல் வைத்து பத்து நிமிடங்கள் வரை கண்களை மூடி ஓய்வெடுங்கள். இதை தினமும் கூட செய்து வரலாம். இப்படி செய்து வரும்போது கண்களைச் சுற்றிலும் உண்டாகிற கருவளையங்கள் மற்றும் சுருக்கங்களை நீக்கச் செய்யும்.

    ஆரோக்கியமான நகங்களுக்கு அன்னாசி

    நகங்கள் அதிகமாக வறட்சியாவது, உடைதல் போன்ற பிரச்சினைகள் சிலருக்கு அடிக்கடி ஏற்படும். நகங்கள் ஆரோக்கியமில்லாமல் இருப்பதற்கு வைட்டமின் ஏ மற்றும் பி பற்றாக்குறை முக்கியக் காரணமாக சொல்லப்படுகிறது.

    நகங்களில் ஏற்படும் இதுபோன்ற பிரச்சினைகளுக்கு அன்னாசி பழச்சாறு மிகச்சிறந்த தீர்வாக இருக்கும். பைனாப்பிள் ஜூஸை குடிப்பதன் மூலம் வைட்டமின் பற்றாக்குறை சரிசெய்யப்படும். அதேபோல அந்த சாறினை நகங்களில் அப்ளை செய்யலாம். இப்படி செய்வதால் நகங்கள் உறுதியாகவும் அழகாகவும் மாறும்.

    அழகான பற்களுக்கு அன்னாசி

    அன்னாசி பழத்தில் உள்ள வைட்டமின் சி பற்களை ஆரோக்கியமாகவும் அழகாகவும் பராமரிக்க உதவுகிறது.

    முகம் எவ்வளவு அழகாக இருந்தாலும் பற்கள் மஞ்சள் கறை இல்லாமல் பளிச்சென வெண்மையாக இருந்தால் தான் முகத்தின் பளபளப்பு இன்னும் கூடும். இதற்கு அன்னாசி பழம் மிக உதவியாக இருக்கும்.

    அன்னாசி பழத்தின் சாறில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து, அதை டூத் பிரஷில் தொட்டு நன்கு பல் தேய்க்க வேண்டும். இப்படி வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் செய்தால் போதும். பற்கள் முத்து போல ஜொலிக்கும். அடிக்கடி செய்தால் இதிலுள்ள அமிலத்தன்மை பல் ஈறுகளில் எரிச்சலை உண்டாக்கும்.

    • அடிக்கடியோ, பலமுறையோ குளிப்பது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்திவிடும்.
    • குளிக்கும்போது சோப் அல்லது ஷாம்பு பயன்படுத்தினால் ஆபத்து இரண்டு மடங்காக அதிகரிக்கும்.

    தினமும் குளிப்பது நல்ல பழக்கம். அது சருமத்திற்கும் நன்மை பயக்கும். ஆனால் சிலர் ஒரு நாளைக்கு பல முறை குளிப்பார்கள். அப்படி உடல் சுத்தத்தை பராமரிப்பது ஆரோக்கியமான பழக்கம் என்றாலும் அது சருமத்திற்கு பாதுகாப்பானது அல்ல. ஏனெனில் உடலில் சென்சிட்டிவ் எனப்படும் அதிக உணர் திறன் கொண்ட பகுதிகளில் சருமமும் ஒன்றாகும். ஒரு நாளைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட முறையோ, அடிக்கடியோ குளித்தால் சரும செல்கள் எளிதில் பாதிக்கப்படலாம். வாரத்திற்கு 7 முறைக்கு மேல் குளிப்பதும் ஒவ்வொரு முறையும் சோப் அல்லது கிளென்சர் பயன்படுத்துவதும் சருமத்தில் படர்ந்திருக்கும் இயற்கை எண்ணெய் தன்மையை அகற்றி பாதுகாப்பு அடுக்கை சேதப்படுத்தும். சரும தொற்றுக்கும் வழிவகுத்துவிடும்.

    எத்தனை முறை குளிக்கலாம்?

    வாரத்திற்கு 10 முறை குளிப்பது தவறில்லை. ஆனால் ஏற்கனவே சரும பிரச்சினை கொண்டிருப்பவர்கள் வாரத்திற்கு 5 முறைக்கு மேல் குளிப்பது தீங்கு விளைவிக்கும் என்பது சரும நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. சருமத்தின் தன்மையை பரிசோதித்துவிட்டு மருத்துவரிடம் எத்தனை தடவை குளிப்பது பொருத்தமானது என்று ஆலோசனை கேட்கலாம்.

    அதிகமாக குளித்தால் சருமத்திற்கு என்ன பாதிப்பு நேரும்?

    பாக்டீரியா, கிருமிகள் மற்றும் வறட்சி போன்றவை தாக்காமல் இருக்க சருமத்தில் இயற்கையாகவே பாதுகாப்பு அடுக்கு உருவாக்கப்பட்டிருக்கும். ஒரு நாளைக்கு ஒருமுறை குளிப்பது சருமத்தை சுத்தமாக வைத்திருக்க உதவும். இறந்த செல்களை நீக்குவதற்கு வித்திடும். ஆனால் ஒரு நாளில் அடிக்கடியோ, பலமுறையோ குளிப்பது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்திவிடும்.

    அப்படி குளிக்கும்போது ஒவ்வொரு முறையும் சோப் அல்லது ஷாம்பு பயன்படுத்தினால் ஆபத்து இரண்டு மடங்காக அதிகரிக்கும். அதாவது சருமம் வறட்சி அடைவது, சரும எரிச்சல், சரும தொற்று போன்ற பாதிப்புகள் உண்டாகும். அதிக நேரம் குளிப்பதன் காரணமாக ஒவ்வாமை, நோய்த்தொற்று கூட ஏற்படலாம். அடிக்கடி குளிக்கும் செயல்முறையின்போது உடலை அதிகமாக சுத்தம் செய்தால், சருமத்தை பாதுகாப்பதற்காக ஆன்டிபாடிகளாக செயல்படும் நல்ல பாக்டீரியாக்கள் மற்றும் கிருமிகள் உடலில் இருந்து நீங்கிவிடும். மேலும் பாக்டீரியா எதிர்ப்பு சோப்புகளை அதிகம் பயன்படுத் துவது, சரும நோய்த்தொற்றுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். நல்ல நுண்ணுயிரிகளை உடலில் இருந்து அகற்றிவிடும்.

    குளிக்கும் நேரத்தை குறையுங்கள்

    ஒன்றுக்கு மேற்பட்ட தடவை குளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தால், குளிக்கும் நேரத்தை குறையுங்கள். உதாரணமாக, தினமும் 10 நிமிடங்கள் குளித்தால், அதை 5 நிமிடங்களாக குறையுங்கள். எவ்வளவு குறைவாக சருமத்தில் தண்ணீர் படிகிறதோ அவ்வளவு குறைவாக சரும பிரச்சினைகள் ஏற்படும்.

    சூடான நீரை தவிருங்கள்:

    அதிகமாக குளித்தால், சுடுநீரை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். சுடுநீர் சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெய்களை அகற்றி, சருமத்தை வறண்டு போகச் செய்து விடும். வெதுவெதுப்பான அல்லது சாதாரண நீரை பயன்படுத்துவதை உறுதி செய்யுங்கள். அதிலும் குளிர்ந்த நீரை பயன்படுத்துவது மிகவும் நல்லது. ஏனெனில் குளிர்ந்த நீர் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யும். சரும ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். சரும வறட்சி, அரிப்பு, வீக்கம் போன்ற பாதிப்புகளை குறைக்கும். சரும துளைகள் திறப்பதை தடுக்கும். கூடுமானவரை15 நிமிடங் களுக்கு மேல் குளிப்பதை தவிர்க்க வேண்டும்.

    மென்மையான குளியல் சோப்பைப் பயன் படுத்துங்கள்:

    குளிப்பதற்கு பயன்படுத்தும் சோப் உள்ளிட்டவை ரசாயன கலப்பு அதிகம் அல்லாமல் இயற்கை தயாரிப்புகளாக இருப்பது நல்லது. இரண்டாவது முறை குளிக்க விரும்பினால் சோப்பை தவிர்த்துவிட்டு தண்ணீரில் அப்படியே குளிப்பதுதான் நல்லது. சருமத்தை மென்மையாகவும் ஈரப்பதமாகவும் வைத்திருக்க மென்மையான அல்லது பால் கலந்த ஈரப்பதமூட்டும் சோப்பை பயன்படுத்தலாம். இது அதிகப்படியான குளியலால் ஏற்படக்கூடிய தோல் பிரச்சினைகளை குறைக்கும்.

    உடலை உலர வையுங்கள்:

    குளித்து முடித்ததும் உடலை உலர்வடைய செய்வதற்கு டவலை கொண்டு அழுத்தமாக தேய்க்கக்கூடாது. அது சருமத்தில் உராய்வை, எரிச்சல் உணர்வை ஏற்படுத்தும். உடலில் இருக்கும் இயற்கையான ஈரப்பதத்தை அகற்றி விடும். டவலை கொண்டு மென்மையாக துடைப்பதுதான் சரியானது. உடலில் படிந்திருக்கும் அதிகப்படியான நீரை அகற்றும் விதத்தில்தான் துடைக்க வேண்டும். குளித்து முடித்ததும் 'பாத் ரோப்' எனப்படும் மென்மையான உடையை அணிவது நல்லது. சருமம் மென்மையாகவும், மிருதுவாகவும், ஈரப்பதமாகவும் இருக்க வேண்டுமெனில், மாய்ஸ்சுரைசர் பயன்படுத்துவது அவசியமானது.

    • ஆப்பிளில் உள்ள வைட்டமின் சி சரும செல்களுக்கு மிகவும் நல்லது.
    • பிம்பிள் தழும்பு, கரும்புள்ளிகளை குறைக்கும்.

    ஆப்பிளில் மனித உடலுக்குத் தேவையான அத்தியாவசிய கனிமச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. ஆப்பிள் சருமத்திற்கு புத்துணர்ச்சி அளித்து புத்துயிர் அளிக்கவும் செய்யும். ஆப்பிளில் உள்ள வைட்டமின் சி சரும செல்களுக்கு மிகவும் நல்லது. இது கொலாஜன் உற்பத்திக்கு உதவி, சருமத்தின் நெகிழ்வுத்தன்மையை தக்க வைக்க உதவும். ஆப்பிளில் உள்ள காப்பர், சருமத்தைத் தாக்கும் தீங்கு விளைவிக்கும் புறஊதாக் கதிர்களின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பு அளிக்கும். மேலும் ஆப்பிளில் இருக்கும் வைட்டமின் ஏ, சருமத்தை புற்றுநோய் செல்களில் இருந்து பாதுகாப்பளிக்கும்.

    * ஆப்பிளில் உள்ள வைட்டமின்கள் சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிக்க உதவும் மற்றும் சருமத்தை பொலிவாகவும் வைத்துக் கொள்ளும். மேலும் இது சருமத்தில் உள்ள அதிகப்படியான அழுத்தத்தைக் குறைத்து, சோர்வை நீங்கி, புத்துயிர் அளிக்கவும் செய்யும். உங்கள் முகத்தின் பொலிவை உடனடியாக அதிகரிக்க நினைத்தால், இந்த மாஸ்க்கைப் போடுங்கள்.

    ஆப்பிள் - 1, தண்ணீர் - 1 கப்

    ஆப்பிளின் தோலை நீக்கிவிட்டு, சிறு துண்டுகளாக வெட்டி மிக்ஸியில் போட்டு சிறிது நீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த விழுதை முகத்தில் தடவி 15 நிமிடம் நன்கு ஊற வைத்து, குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி முதல் முறை செய்யும் போதே, முகத்தில் ஒரு நல்ல மாற்றம் தெரியும்.

    * ஆப்பிளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், இயற்கையாகவே சருமத்திற்கு பிரகாசத்தை வழங்க உதவும். இதில் உள்ள டானிக் அமிலம், மென்மையான சருமத்தைப் பெற உதவும். இந்த மாஸ்க்கை வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்த நல்ல பலன் கிடைக்கும்.

    1 ஆப்பிள் தோல், 1 டீஸ்பூன் தேன்

    ஆப்பிளின் தோலை நன்கு மென்மையாக பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும். அதில் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும். 15 நிமிடம் கழித்ததும், முகத்தை வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.

    * கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆப்பிள் மாஸ்க் பிம்பிள் தழும்புகளையும், கருமையான புள்ளிகளையும் குறைக்கும். நல்ல மாற்றத்தைக் காண்பதற்கு, இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 2 முறைப் பயன்படுத்த வேண்டும்.

    ஆப்பிள் - 1, தேன் - 1 டீஸ்பூன், எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்

    ஆப்பிளை துருவி அதிலிருந்து சாற்றினை கையால் பிழிந்து ஒரு பௌலில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் தேன், எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 20 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும். இறுதியில் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

    • மேக்கப்பை கலைப்பதற்கு என பிரத்யேக லோஷன் இருக்கிறது.
    • இரவு தூங்க செல்லும் முன், கட்டாயமாக மேக்கப்பை கலைக்க வேண்டும்.

    மேக்கப் செய்வதற்கு முன், முகத்தை நன்றாக கழுவவேண்டும். முகத்தில் பரு, சிறுசிறு துளைகள் இருந்தால் அதை 'பிரைமர்' எனப்படும் பூசு பொருள் கொண்டு சரிசெய்த பிறகு, 'பவுண்டேஷன்' பூச வேண்டும். நம்முடைய நிறத்திற்கு ஏற்ற பவுண்டேஷன்களை தேர்வு செய்வது கடினம் என்றாலும், அதில் அதீத கவனம் செலுத்தினால் மேக்கப் செய்திருப்பதே தெரியாத அளவிற்கு 'நீட்'டாக இருக்கும்.

    எண்ணெய் பசை தன்மை கொண்டவர்கள், 'காம்பாக்ட் பவுடர்' பயன்படுத்துவது நல்லது. கண்களுக்கு கீழ் இருக்கும் கருவிழிகளை 'கன்சீலர்' கொண்டு சீராக்கலாம். மேக்கப்பை கூடுதல் பொலிவாக்க, 'பிரான்சர்' கொண்டு ஜொலிக்க வைக்கலாம்.

    'கான்டர்' என்பதை பயன்படுத்துவதன் மூலம் குண்டாக தெரியும் முகத்தை கூட, ஒல்லியாக காட்டமுடியும். மேக்கப் விஷயத்தில் கண் மற்றும் புருவம் மிக முக்கியமானது. ஏனெனில் கண் புருவங்கள்தான், முக அழகை நிர்ணயிக்கக்கூடியவை. அதை அழகாக்க 'ஐ புரோ பவுடர்', 'ஐ லைனர்', 'மஸ்காரா' போன்றவை புழக்கத்தில் இருக்கின்றன. இறுதியாக உதடுகளை 'லிப் பாம்', 'லிப் லைனர்', 'லிப்ஸ்டிக்' கொண்டு அழகாக்கலாம்.

    மேக்கப்பை கலைப்பதற்கு என பிரத்யேக லோஷன் இருக்கிறது. இல்லாதபட்சத்தில் தேங்காய் எண்ணெய் தேய்த்து, மேக்கப்பை கலைக்கலாம். இரவு தூங்க செல்லும் முன், கட்டாயமாக மேக்கப்பை கலைக்க வேண்டும்.

    ஏனெனில் மேக்கப் கிரீம் பூசுவதால் அடைக்கப்பட்டிருக்கும் சரும துளைகள் அதற்கு பிறகுதான் சுவாசிக்க ஆரம்பிக்கும்.

    • உடை தேர்வு மற்றும் அலங்கார விஷயங்களில் கவனமாக இருங்கள்.
    • ஆடம்பரமான மேக்கப்பை தவிர்த்துவிடுங்கள்.

    தமிழ்நாட்டின் பல்வேறு கிராமங்களில் வளர்ந்த பெண்களும், படித்து முன்னேறி பெருநகரங்களுக்கு வேலைக்கு செல்கிறார்கள். அப்படி உங்களுக்கும், பெருநகர ஐ.டி. நிறுவனங்களில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தால், உடை தேர்வு மற்றும் அலங்கார விஷயங்களில் கவனமாக இருங்கள்.

    அதுநாள் வரை, மேக்கப் விஷயங்களில் ஆர்வம் இல்லாமல் உங்களுக்கு என ஒரு பிரத்யேக 'ஸ்டைல்'-ஐ கடைப்பிடித்திருக்கலாம். ஆனால் அது பெருநகர வாழ்க்கைக்கு பொருந்தாது. முடிந்தவரை, நகர சூழலுக்கு ஏற்ப சின்னச்சின்ன மேக்கப் மற்றும் உடை அலங்கார நுணுக்கங்களை கற்றுக்கொள்ளுங்கள். பணிச்சூழல், உடன் பணிபுரிபவர்களை பற்றி அறிந்த பிறகு, அலுவலகத்திற்கு அணிந்து செல்லக்கூடிய ஆடை, அலங்கார பொருட்களை வாங்கலாம்.

    எல்லோருடைய கவனத்தையும் சட்டென ஈர்க்கும் நிறங்களிலான உடைகளையும், உதட்டு சாயங்களையும், அலங்கார பொருட்களையும் தவிர்ப்பது நல்லது. ஆடம்பரமான மேக்கப்பை தவிர்த்துவிடுங்கள். அதற்காக மேக்கப் இல்லாமலும், பணிக்கு செல்லாதீர்கள். அதேபோல, அணியும் உடைக்கு ஏற்ற காலணி அல்லது ஷூ தேர்வும் முக்கியம்.

    சுடிதார், குர்த்தி, ஜீன்ஸ், லெக்கின்ஸ், பலாசோ, பிளேசர்ஸ்... இவை எல்லாம் ஐ.டி. கலாசாரத்தில் பொதுவானவை. அதனால் இத்தகைய உடைகளை தேர்ந்தெடுத்து உடுத்தலாம். பணியிடம் பழக்கமானதற்கு பிறகு, உங்களுக்கான 'ஸ்டைலை' மேம்படுத்திக் கொள்ளுங்கள்.

    உங்களுக்கு மேக்கப் விஷயங்களில் ஈடுபாடு இல்லை என்றாலும் பரவாயில்லை, ஆனால் முகப்பொலிவை தக்க வைக்கும் சிறுசிறு விஷயங்களிலாவது ஆர்வம் செலுத்துங்கள். அதாவது, முகத்தை சுத்தமாக பராமரிப்பது; நக பூச்சு பூசவில்லை என்றாலும் நகங்களை சுத்தமாக பராமரிப்பது, முகம் கருக்காமல் இருக்க 'சன்ஸ்கிரீன்' போடுவது, யாரும் குறை சொல்லாதபடி தலை முடிகளை பராமரிப்பது போன்ற சின்னச் சின்ன விஷயங்களில் கவனமாக இருங்கள்.

    • பெண்களுக்கு முகத்தில் வளரும் முடியால் அவர்களின் அழகு கெடும்.
    • முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை நீக்கும் எளிய வழிகள் இதோ...

    ஹார்மோன் கோளாறு மற்றும் சில குறைபாடுகள் காரணமாக சில பெண்களுக்கு முகத்தில் முடி வளரும். இவ்வாறு முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை நீக்கும் எளிய வழிகள்:

    குப்பைமேனி பொடி, கோரைக்கிழங்கு பொடி, கஸ்தூரி மஞ்சள் பொடி, சுட்ட வசம்பு பொடி இவைகளை சம அளவில் எடுத்து எலுமிச்சை பழச்சாற்றில் கலந்து முகத்தில் பூசி 2 மணி நேரம் கழித்து கழுவ வேண்டும்.

    மாவுச் சத்து அதிகமான உணவுப் பொருட்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், பேக்கரி உணவுகள் போன்றவற்றை இயன்றவரை தவிர்க்கலாம்.

    நார்ச்சத்து அதிகம் உள்ள அவரை, கொத்தவரை, பீன்ஸ், பீர்க்கங்காய், புடலங்காய், சுரைக்காய், கோவைக்காய், பூசணிக்காய், பிரண்டைத் தண்டு, கரிசலாங்கண்ணி கீரை, கறிவேப்பிலை, முருங்கைக் கீரை, பொன்னாங்கன்னி கீரை, நூல்கோல், ப்ராக்கோலி, கம்பு, சாமை, வரகு, தினை, குதிரை வாலி, சோளம், கேழ்வரகு, சிவப்புக் கொண்டைக் கடலை, பச்சைப் பட்டாணி, பாசிப்பயறு, கொள்ளு இவைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    சித்த மருத்துவ   நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா, எம்.டி. (சித்தா)

    மின்னஞ்சல்: doctor@dt.co.in,

    வாட்ஸ் அப்: 7824044499

    • நகப்பூச்சை நீக்க நெயில் பாலிஷ் ரிமூவரை உபயோகிப்பார்கள்.
    • இது நகத்திலும், அதைச் சுற்றியுள்ள சருமத்திலும் பாதிப்பை உண்டாக்கும்.

    கைவிரல்களுக்கு மகுடமாக இருப்பது நகங்கள். அவற்றை பராமரிப்பதில் பெண்கள் தனி ஆர்வம் காட்டுவார்கள். அணியும் ஆடைகளுக்கு ஏற்ற நிறத்தில் நகங்களுக்கு சாயம் பூசுவார்கள். அதை நீக்குவதற்கு நெயில் பாலிஷ் ரிமூவர் எனும் ரசாயனத்தை உபயோகிப்பார்கள். இதைத் தொடர்ந்து பயன்படுத்தும்போது நகங்களிலும், அதைச் சுற்றியுள்ள சருமத்திலும் பாதிப்பை உண்டாக்கும். இதைத் தவிர்த்து, எளிய முறையில் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே நகங்களின் பளபளப்பை சேதப்படுத்தாமல் நகப்பூச்சை நீக்க முடியும். அதற்கான வழிகள் இங்கே...

    எலுமிச்சை: எலுமிச்சையில் இருக்கும் அமில மூலக்கூறுகள் நகப்பூச்சுக்குள் ஊடுருவும் தன்மை கொண்டது. சில துளிகள் எலுமிச்சை சாறினை நகங்களில் விட்டு தேய்ப்பதன் மூலம் நகப்பூச்சை நீக்க முடியும். எலுமிச்சை சாறுடன் சிறிதளவு சோப் அல்லது வினிகர் கலந்தும் பயன்படுத்தலாம்.

    பற்பசை: பற்பசையில் எத்தில் அசிடேட் எனும் ரசாயன கலவை உள்ளது. இது நெயில் பாலிஷ் ரிமூவர் தயாரிப்பிலும் பயன்படுகிறது. சிறிதளவு பற்பசையை எடுத்து நகங்களில் தடவி, ஐந்து நிமிடம் கழித்து மெதுவாக துடைத்து எடுப்பதன் மூலம் நகப்பூச்சை எளிதாக நீக்க முடியும்.

    சானிடைசர்: சானிடைசர் தற்போது அனைவரது வீட்டிலும் பயன்படுத்துகிறோம். அதை நகப்பூச்சை நீக்குவதற்கும் உபயோகிக்கலாம். நகங்களின் மீது சிறிதளவு சானிடைசரை தெளித்து பஞ்சு கொண்டு துடைத்து எடுக்கலாம்.

    ஹேர் ஸ்பிரே: நெயில் பாலிஷ் ரிமூவருக்கு பதிலாக ஹேர் ஸ்பிரேவையும் பயன்படுத்த முடியும். கிண்ணத்தில் சிறிதளவு ஹேர் ஸ்பிரேவை ஊற்றி அதில் பஞ்சினை நனைத்து, நகங்களை அழுத்தி துடைப்பதன் மூலம் நகப்பூச்சை நீக்கலாம். டியோடரண்டும் இதற்கு உதவும்.

    வாசனை திரவியம்: டிஷ்யூ பேப்பர் அல்லது பஞ்சில் சிறிது வாசனை திரவியத்தை தெளித்து அதைக் கொண்டு நகங்களை அழுத்தித் துடைப்பதன் மூலமும் நகப்பூச்சை நீக்க முடியும்.

    வெந்நீர் மற்றும் சோப்பு: வெந்நீரில் சிறிதளவு சோப்பைக் கலந்து அதில் நகங்களை சிறிதுநேரம் வைத்திருங்கள். பின்னர் நகவெட்டியில் உள்ள தேய்ப்பானை பயன்படுத்தி நகப்பூச்சை நீக்கலாம்.

    நகங்களுக்கான பராமரிப்புகளை தினமும் செய்ய வேண்டுமா?

    உங்கள் நகங்கள் வலுவாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதற்கு தினமும் அவற்றை சுத்தம் செய்து மாய்ஸ்சுரைசர் பூச வேண்டும். இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை டிரிம் செய்ய வேண்டும்.

    நகங்களுக்கு பெட்ரோலியம் ஜெல்லி பூசலாமா?

    நகங்கள் வறண்டு போவதைத் தடுக்க தினமும் இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு பெட்ரோலியம் ஜெல்லியை நகங்களின் மீது பூசலாம்.

    கர்ப்பிணி பெண்கள் நகப்பூச்சு பூசலாமா?

    உடல் ஆரோக்கியத்துக்கு தீங்கு உண்டாக்கும் ரசாயனக் கலவைகள் சேர்க்காத நகச்சாயங்களை பயன்படுத்தலாம்.

    நகங்களை கடிப்பது அவற்றுக்கு சேதம் ஏற்படுத்துமா?

    நகம் கடித்தல் சுகாதாரம் இல்லாத பழக்கமாகும். இது நடத்தைக் கோளாறாகக்கூட இருக்கலாம். நகக்கணுக்கள் பாதிக்கப்படும்போது நகத்தின் ஆரோக்கியத்தில் பிரச்சினை ஏற்படலாம்.

    • தரமற்ற காலணிகளை அணிவதைத் தவிர்க்கவும்.
    • ஒழுங்கற்ற தரைத்தளங்களில் காலணி இல்லாமல் நடப்பதை தவிர்க்கவும்.

    எப்போதும் நீரில், சேற்றில் நின்று கொண்டு வேலை செய்பவர்களுக்கும், தொடர் மழை காலத்தில் வெள்ளம் சூழ்ந்து தண்ணீரில் தத்தளிக்கும் மக்களுக்கும் இருக்கும் பெரிய பிரச்சினை சேற்றுப்புண், பித்த வெடிப்பு. மழைநீர், சேற்றுநீர், சுகாதாரமற்ற நீரில் நடப்பது மற்றும் நீண்டநேரம் நிற்பது, உடல் எடை அதிகமாக இருப்பது, காலில் செருப்பு அணியாமல் கரடுமுரடான பாதையில் நடப்பது, தேய்ந்து போன ஒழுங்கற்ற, தரமற்ற செருப்புகளை தொடர்ந்து பயன்படுத்துவது, குளிக்கும்போது பாதங்களை அழுக்கு தேய்த்துக் குளிக்காதது, பாதம், குதிகாலில் அழுக்கு சேர்வது போன்றவை இதற்கு காரணமாக இருக்கலாம்.

    சொரியாசிஸ் என்ற காளாஞ்சக படை தோல் நோய், கரப்பான், தைராய்டு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், நாள்பட்ட தோல் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், நீண்ட நேரம் செருப்பு மற்றும் தரமற்ற ஷூக்களை பயன்படுத்துவது, வெளியில் சென்று வந்தபிறகு கை, கால்களை சுத்தமாகக் கழுவாததாலும், ஒரு சில மருந்துகளின் ஒவ்வாமையாலும், தொற்றுநோய் கிருமிகளாலும் சேற்றுப் புண், பித்த வெடிப்பு ஏற்படலாம். நடந்தால் தாங்கமுடியாத வலி, குத்தல், நீண்ட நேரம் நிற்க முடியாமை, கைவிரல், கால்விரல் இடுக்குகளில் புண், வலி, ஒருவித துர்நாற்றம் போன்றவை அறிகுறிகளாக ஏற்பட கூடும்.

    வெளியில் சென்று வீடு திரும்பியவுடன் கை, கால், முகத்தை நன்கு கழுவ வேண்டும். குளிக்கும்போது உடலின் அழுக்கை வெளியேற்ற வேண்டும். ஒழுங்கற்ற தரைத்தளங்களில் காலணி இல்லாமல் நடப்பதை தவிர்க்கவும். தரமற்ற காலணிகளை அணிவதைத் தவிர்க்கவும். வாரம் ஒருமுறை அல்லது இருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்கலாம். மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எந்த மருந்துகளையும் தொடர்ந்து எடுத்துக்கொள்ளக் கூடாது. சத்துள்ள காய், கீரை, பயறு, பழ வகைகளைத் தினசரி சேர்த்துக்கொள்ள வேண்டும். தொற்றுநோய்கள் தாக்காமல் இருக்கவும் உடலின் எதிர்ப்புச் சக்தி குறையாமல் இருக்கவும் ஒழுங்குமுறையை கடைபிடிக்க வேண்டும்.

    கிளிஞ்சல், நெல்லிக்காய், சிற்றாமணக்கு நெய் சேர்ந்த மருந்து, வங்கச்செந்தூரம், மிருதார்சிங்கி, மயில்துத்தம், வெண்ணெய் சேர்ந்த மருந்து, வீரம், பசுவெண்ணெய் சேர்ந்த மருந்து, ஊமத்தை இலைச்சாறு, தேங்காய் நெய் சேர்ந்த மருந்து, கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சேர்ந்த மருந்து, படிகார நீர் போன்ற வெளிப்பூச்சு மருந்துகள் பயன்படுத்தினாலும் சேற்றுப் புண், பித்த வெடிப்பு விரைந்து குணமடையும்.

    • தேவைக்கும் அதிகமான பவுண்டேஷனை பயன்படுத்த வேண்டாம்.
    • பவுண்டேஷனை தாடையின் ஓரத்தில் பரிசோதனை செய்து வாங்குவது நல்லது.

    மேக்கப் என்றாலே, அதற்கு அடித்தளமாக இருப்பது பவுண்டேஷன் (Foundation) தான். சருமத்தின் நிறத்துக்கு, தன்மைக்கு ஏற்ப பவுண்டேஷனை தேர்வு செய்யும்போதுதான், மேக்கப் சரியான முறையில் வெளிப்படும். பவுண்டேஷன் சரியாக இல்லையெனில், மொத்த மேக்கப்பும் சொதப்பிவிட வாய்ப்புள்ளது. இப்படி, மேக்கப்பில் மிக முக்கிய அம்சமான பவுண்டேஷனை சருமத்துக்கு ஏற்ப எப்படி தேர்ந்தெடுப்பது என்பது குறித்துப் பார்க்கலாம்.

    பவுண்டேஷன் பயன்படுத்தும் முன் முதலில் கவனிக்க வேண்டிய விஷயம் சரும வகைதான். எண்ணெய்ப்பசை சருமம், வறண்ட சருமம், நார்மல் சருமம், காம்பினேஷன் சருமம் என இந்த அடிப்படை நான்கு சரும வகைகளில் என்ன மாதிரியான சருமத்தை கொண்டுள்ளோம் என்பதை கொண்டே பவுண்டேஷனை தேர்ந்தெடுக்க வேண்டும்.

    எண்ணெய்ப்பசை சருமம் என்றால் பவுடர் பவுண்டேஷன் அல்லது எண்ணெய் இல்லாத திரவ வடிவிலான பவுண்டேஷனை (Liquid Foundation) பயன்படுத்தவும்.

    வறண்ட சருமம் என்றால் ஈரப்பதம் கொடுக்கவல்ல லிக்விட் பவுண்டேஷன், க்ரீம் பவுண்டேஷன் பயன்படுத்தலாம்.

    காம்பினேஷன் சருமம் என்றால் லிக்விட் அல்லது பவுடர் பவுண்டேஷன் பயன்படுத்தலாம்.

    முகப்பரு உள்ள மற்றும் சென்சிட்டிவ் சருமம் என்றால், ஆல்கஹால் மற்றும் நறுமண பொருள்கள் கலந்த பவுண்டேஷனை தவிர்ப்பது நல்லது.

    சரும நிறத்தை முகத்தில் இல்லாமல் தாடை பகுதி அல்லது கழுத்துப் பகுதி நிறத்தை கொண்டே கணக்கிட வேண்டும். அப்படி செய்வதன் மூலமே பவுண்டேஷனில் சரியான ஷேடை (shade) தேர்ந்தெடுக்க முடியும். மேலும் குளிர்காலம், கோடைக்காலம் என்று சருமத்தின் நிறம் மாறும் என்பதால் ஒவ்வொரு முறை பவுண்டேஷன் வாங்கும் போது நிறத்தை கவனிப்பது நல்லது.

    சருமத்தின் அண்டர்டோன் (Undertone) பற்றிய அறிய வேண்டும். வார்ம் (Warm) அண்டர்டோன் உள்ளவர்களின் சருமம் பீச், மஞ்சள், அல்லது தங்க நிறத்தில் இருக்கும். இவர்கள் வார்ம் டோன்க்கு பொருந்தும் பவுண்டேஷன் ஷேடை (shade) தேர்ந்தெடுக்க வேண்டும். கூல் (Cool) அண்டர்டோன் உள்ளவர்களின் சருமம் பிங்க், ரெட் நிறத்தில் இருக்கும். இவர்கள் கூல் டோன்க்கான பவுண்டேஷன் ஷேடை தேர்ந்தெடுக்க வேண்டும். நியூட்ரல் (Neutral) அண்டர்டோன் உள்ளவர்கள், மேலே சொன்ன இரண்டின் சீரான கலவை சருமத்தை கொண்டிருப்பார்கள்.

    பவுண்டேஷன் உங்கள் சருமத்தில் எந்த மாதிரியான இறுதிப் பொலிவை (Finish) ஏற்படுத்த விருபுகிறீர்களோ, அதற்கேற்ப dewy, matte, semi-matte மற்றும் luminizing finish வகைகளில் ஒன்றை தேர்ந்தெடுக்கலாம்.

    பவுண்டேஷனை வாங்கும் முன், பெரும்பாலும் அதனை கைகளில் பரிசோதித்து வாங்குவோம். ஆனால் கையின் நிறமும், முகத்தின் நிறமும் ஒன்றுபோல் இருக்காது என்பதால் தாடையின் ஓரத்தில் பரிசோதனை செய்து வாங்குவது நல்லது. தாடையின் நிறம்தான் முகத்திற்கேற்ப இருக்கும். தற்போது விர்ச்சுவல் ட்ரை வசதி இருப்பதால் அதையும் பயன்படுத்தலாம்.

    டிப்ஸ்

    * பவுண்டேஷனை முகத்தில் அப்ளை செய்ய வட்டமான பவுண்டேஷன் பிரெஷ், மேக்கப் ஸ்பொஞ் என வசதிக்கு ஏற்ப வாங்கிக்கொள்ளவும். ஆனால் அது தரமானதாக இருந்தால்தான் சிறப்பான ரிசல்ட் கிடைக்கும்.

    * பவுண்டேஷனுடன் ப்ரைமர் (Primer) பயன்படுத்துவது நல்ல, நீடித்த மேக்கப்புக்கு அவசியம்.

    * தேவைக்கும் அதிகமான பவுண்டேஷனை பயன்படுத்த வேண்டாம். சிறிது சிறிதாக தேவையான இடங்களில் இட்டு, சீராக தடவும் போது இயற்கையான லுக் கிடைக்கும்.

    • மருதாணி கறைகளை அகற்றுவதில் ஆலிவ் எண்ணெய் சிறப்பாக செயல்படும்.
    • எலுமிச்சையில் இருக்கும் சிட்ரிக் அமிலம் மெகந்தியை விரைவாக நீக்கக்கூடியது.

    பெண்கள் கைகளிலும், கால்களிலும் மருதாணி வைத்துக்கொள்வது பல காலமாக வழக்கத்தில் இருந்து வருகிறது. மருதாணி இலைகளுடன் மேலும் சில இயற்கையான பொருட்களைச் சேர்த்து, பக்குவமாக அரைத்து கைகளில் வைத்துக்கொள்வதற்கு தற்போது பலருக்கும் நேரமில்லை. அதனால் பெரும்பாலானவர்கள் மருதாணி கோன்களை நாடுகின்றனர். இதன் மூலம் வரையப்படும் 'மெகந்தி டிசைன்கள்' கண்களைக் கவரக் கூடியதாக இருக்கும். அதேசமயம் ஒன்றிரண்டு நாட்களிலேயே நிறம் திட்டுத்திட்டாக மங்கத் தொடங்கும். அதை சீக்கிரமே முழுவதுமாக நீக்குவதற்கு பலரும் விரும்புவார்கள். அதற்கான குறிப்புகளை இங்கே காண்போம்.

    ஆன்டி பாக்டீரியல் தன்மை கொண்ட சோப்புகள், இறந்த செல்களை நீக்கும் ஆற்றல் கொண்டவை. இவை கைகளில் படிந்துள்ள நிறங்களை விரைவாக மறையச் செய்யும். எனவே அடிக்கடி கைகளை ஆன்டி பாக்டீரியல் சோப் கொண்டு கழுவவும். பின்பு கைகளில் சிறிது தேங்காய் எண்ணெயைத் தடவவும். உப்பு சிறந்த சுத்தப்படுத்தியாகும். இது கைகளில் படிந்துள்ள நிறங்களை எளிதாக நீக்கும். ஒரு கிண்ணத்தில் உப்பு கலந்த தண்ணீரை எடுத்துக்கொள்ளுங்கள். கைகளை அதில் மூழ்க வையுங்கள். 20 நிமிடம் கழித்து வெளியே எடுத்து பருத்தித் துணியால் ஈரத்தை ஒற்றி எடுங்கள். இவ்வாறு தினமும் ஒரு வேளை செய்துவந்தால் மருதாணி விரைவாக நீங்கும்.

    முகத்துக்கு உபயோகிக்கும் ஸ்கிரப்பர் கிரீமை கைகளில் பூசி மென்மையாக 'ஸ்கிரப்' செய்யுங்கள். இதனால் கைகளில் வரைந்துள்ள மெகந்தி முழுவதுமாக நீங்கவில்லை என்றாலும், அதன் நிறம் நன்றாக மங்கி இருக்கும்.

    வெதுவெதுப்பான தண்ணீர் மருதாணியின் மூலக்கூறுகளை தளர்ச்சி அடையச் செய்யும். எனவே கைகளை லேசான சூடுள்ள தண்ணீரில் சிறிது நேரம் வைத்திருந்து மென்மையாக 'ஸ்கிரப்' செய்யுங்கள்.

    மருதாணி கறைகளை அகற்றுவதில் ஆலிவ் எண்ணெய் சிறப்பாக செயல்படும். ஆலிவ் எண்ணெய்யுடன் சிறிது உப்பைக் கலக்கவும். இந்த எண்ணெய்யில் பஞ்சைத் தொட்டு கைகளில் மென்மையாகத் தேய்க்கவும். இதை 10 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும். பின்பு சோப் போட்டு கைகளைக் கழுவவும். இவ்வாறு ஒரு நாளில் பல முறை செய்தால் மெகந்தி விரைவாக நீங்கும்.

    எலுமிச்சையில் இருக்கும் சிட்ரிக் அமிலம் மெகந்தியை விரைவாக நீக்கக்கூடியது. எலுமிச்சை சாற்றை நேரடியாக கைகளில் தடவலாம் அல்லது எலுமிச்சை சாறு கலந்த தண்ணீரில் கைகளை சிறிது நேரம் மூழ்கி இருக்கச் செய்யலாம்.

    பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை இரண்டும் பிளீச் செய்யும் தன்மை கொண்டவை. இவை இரண்டையும் பசை போலக் கலந்து கைகளில் மெகந்தி வரைந்துள்ள இடங்களில் பூசவும். 10 நிமிடம் கழித்து ஸ்கிரப்பர் கொண்டு வட்ட இயக்கத்தில் மென்மையாக ஸ்கிரப் செய்யவும். பின்னர் இளஞ்சூடான நீரில் கைகளைக் கழுவவும்.

    நகங்களில் படிந்துள்ள மெகந்தியை நெயில் பாலிஷ் ரிமூவர் கொண்டு எளிதாக அகற்றலாம்.

    • இந்த சரும பொடி எந்த வித அலர்ஜியையும் ஏற்படுத்தாது.
    • இந்த பொடியை எப்படி செய்வது என்பதை பற்றி பார்ப்போம்…

    நம் முன்னோர்கள் பயன்படுத்திய இயற்கையான சரும தங்க குளியல் பொடியை எப்படி செய்வது என்பதை பற்றி பார்ப்போம்…

    இந்த சரும பொடி எந்த வித அலர்ஜியையும் ஏற்படுத்தாது. முக்கியமாக பருக்கள், தழும்பு, கரும்புள்ளி போன்ற எந்த விதமான தோல் அலர்ஜியையும் குணப்படுத்தும்.

    செய்முறை

    ரோஜா பூ - 1 கப்

    ஆவாரம் பூ - 1 கப்

    பச்சை பயிறு - அரை கப்

    கஸ்தூரி மஞ்சள்- அரை கப்

    பூலான் கிழங்கு பொடி - 2 டீஸ்பூன்

    மிக்ஸி ஜாரில் ஆவாரம் பூ, பச்சை பயிறு, ரோஜா பூ, சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும். அடுத்து அதனுடன் கஸ்தூரி மஞ்சள் பொடி பூலான் கிழங்கு பொடி சேர்த்து அரைத்துகொள்ளவும்.

    இப்போது அருமையான தங்க குளியல் பொடி தயார்…

    இதை அனைவரும் உபயோகப்படுத்தலாம்.. மூன்று மாதம் வரை இந்த தங்க குளியல் பொடியை பயன்படுத்திக்கொள்ளலாம்..

    பயன்படுத்தும் முறை

    இரண்டு ஸ்பூன் இந்த பொடியை கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு அதனுடன், ரோஸ் வாட்டர், அல்லது பால், தயிர் எதனுடன் வேண்டும் என்றாலும் சேர்த்துகொண்டு கலக்கி கொள்ள வேண்டும்.

    அதன் பின்னர் உடல் முழுவதும் தடவிக்கொண்டு, அரை மணிநேரம் கழித்து குளித்துவிடலாம்.. ஒரு வாரத்திற்குள் இதன் சிறப்பை நீஙகள் காணலாம்…

    ×