search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "belli"

    • சுற்றுலாத்துறை அமைச்சா் ராமசந்திரன், மாவட்ட கலெக்டர் அம்ரித் ஆகியோா் கோப்பையை அறிமுகம் செய்து வைத்தனா்.
    • பொம்மன், பெள்ளி தம்பதி ஆசிய ஹாக்கி போட்டிக்கான கோப்பை முன்பு நின்று புகைப்படம் எடுத்தனர்.

    ஊட்டி:

    7-ஆவது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டி சென்னையில் ஆகஸ்டு 3-ந் தேதி தொடங்கி ஆகஸ்டு 12-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

    இந்தப் போட்டிக்கான இலச்சினையாக (லோகோ) வடிவமைக்கப்பட்டுள்ள யானை உருவத்தின் ஆடையில் ஆஸ்கா் விருது பெற்ற 'தி எலிபண்ட் விஸ்பெரா்ஸ்' குறும்படத்தில் நடித்த யானை பாகன் பொம்மனின் பெயா் சூட்டப்பட்டுள்ளது.

    இந்த போட்டியைப் பிரபலப்படுத்தும் விதமாக, இதில் வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்பட உள்ள கோப்பை தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கு எடுத்து செல்லப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.

    ஒவ்வொரு ஊரிலும் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவர்கள், இளைஞர்கள் அந்த கோப்பைக்கு உற்சாக வரவேற்பு கொடுத்து வருகிறார்கள்.

    அதன்படி, நேற்று நீலகிரி மாவட்டம், குன்னூரில் கோப்பை அறிமுக விழா ஹாக்கி நீல்கிரிஸ் அமைப்பு சார்பில் நடந்தது.

    சுற்றுலாத்துறை அமைச்சா் ராமசந்திரன், மாவட்ட கலெக்டர் அம்ரித் ஆகியோா் கோப்பையை அறிமுகம் செய்து வைத்தனா்.

    நிகழ்ச்சியில், ஆஸ்கா் விருது பெற்ற 'தி எலிபண்ட் விஸ்பெரா்ஸ்' குறும்படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி தம்பதி சிறப்பு விருந்தினா்களாக பங்கேற்றனா். தொடர்ந்து பொம்மனிடம் ஆசிய போட்டியில் இடம் பெற உள்ள மாதிரி ஜெர்சி மற்றும் ஹாக்கி ஸ்டிக் வழங்கப்பட்டது.

    அதன்பின்னர் பொம்மன், பெள்ளி தம்பதி ஆசிய ஹாக்கி போட்டிக்கான கோப்பை முன்பு நின்று புகைப்படம் எடுத்தனர். மேலும் அவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

    விழாவில் சுற்றுலாத்துறை அமைச்சா் ராமசந்திரன் பேசுகையில், இந்தியாவில் விளையாட்டுத் துறையில் மற்ற மாநிலங்களைவிட தமிழகம் மிகப்பெரிய வளா்ச்சி அடைந்துள்ளது. விளையாட்டுத் துறை மீது தமிழக அரசு தனி கவனம் செலுத்தி வருகிறது என்றாா்.

    முன்னதாக ஹாக்கி நீல்கிரிஸ் சார்பில் குன்னூர் லாலி மருத்துவமனையில் இருந்து, மாணவர்கள் மற்றும் ஹாக்கி வீரர்கள் கோப்பையுடன் ஊர்வலமாக வந்தனர்.

    இதில் குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் பூஷண குமார், குன்னூர் நகர மன்ற துணைத் தலைவரும், தி.மு.க. விளையாட்டுத்துறை அணியின் மாநில துணை செயலாளருமான வாசிம்ராஜா, தாசில்தார் கனி சுந்தரம், ஹாக்கி நீலகிரிஸ் தலைவர் ஆனந்த் கிருஷ்ணன், துணைத் தலைவா் சுரேஷ்குமாா், செயலாளா் பாலமுருகன், பொருளாளா் ராஜா மற்றும் மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ×