என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bhairava temple"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பைரவர் சிவனின் 64 திருஉருவத்தில் ஒருவர் ஆவார்.
    • செவ்வாய்க் கிழமையில் வரும் அஷ்டமி திதி மிகவும் விசேஷம்.

    சிவனின் அம்சமான கால பைரவரை எந்தெந்த நாளில், 12 ராசியினர் வழிட்டுவது சிறப்பு, எப்படி வழிபட வேண்டும் என்பதை பார்ப்போம்.

    பைரவர் சிவனின் 64 திருஉருவத்தில் ஒருவர் ஆவார். சொர்ண கால பைரவர், யோக பைரவர், ஆதி பைரவர், கால பைரவர், உக்கிர பைரவர் என பல பெயர்களில் அழைக்கப்படுகிறார்

    பைரவரின் சன்னதி ஒவ்வொரு சிவன் கோவிலிலும் வடகிழக்கு பகுதியில் நின்ற கோலத்தில் இருக்கும். அவர் ஐப்பசி மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமி தினத்தில் அவதரித்தார் என்பதால், ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமி தினம் மிகுந்த விசேஷமாக பார்க்கப்படுகிறது.


    பைரவர் விரதம் அனைத்து அஷ்டமி திதிகளிலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதிலும் செவ்வாய்க் கிழமையில் வரும் அஷ்டமி திதி மிகவும் விசேஷம் ஆகும்.

    பைரவர் விரதம் தொடர்ச்சியாக 21 அஷ்டமி திதிகளில் கடைப்பிடிப்பது மிகவும் சிறப்பானதாகும். இத்தகைய சிறப்பு மிக்க பைரவரை 12 ராசிக்காரர்கள் அதற்குரிய கிழமைகளில் வழிபட்டால், சிறந்த பலனை அடையலாம்.


    ஞாயிற்றுக்கிழமை

    சிம்ம ராசியினர் ஞாயிற்றுக் கிழமையில் வழிபடுவதால், திருமணம் கைகூடும். இந்த கிழமையில் சிம்ம ராசி உள்ள ஆண்கள், பெண்கள் இருவரும் ராகு காலத்தின் போது அர்ச்சனை, ருத்ராட்ச அபிஷேகம் செய்து வடை மாலை சாற்றி வழிபட்டால், திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணம் நடக்கும்.

    திங்கட்கிழமை

    கடக ராசியினர் திங்கட்கிழமை அல்லது சங்கடஹர சதுர்த்தி தினத்தில் பைரவருக்கு பன்னீர் அபிஷேகம் செய்து, சந்தன காப்பிட்டு, நந்தியாவட்டை மலர் மாலை அணிவித்து வழிபட்டு வந்தால், கண் சம்பந்தமாள நோய்கள் குணமாகும்.

    செவ்வாய்க்கிழமை

    மேஷம் மற்றும் விருச்சிக ராசியினர் செவ்வாய்க் கிழமையில் பைரவரை வழிபடுவதால் சிறப்பான பலன்களை பெறலாம். செவ்வாய்க் கிழமைகளில் மிளகு தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் இழந்த பொருளை திரும்ப பெறலாம்.

    புதன்கிழமை

    மிதுனம், கன்னி ராசியினர் புதன் கிழமைகளில் பைரவரை வழிபடுவதன் மூலம் நல்ல பலன்களை பெறலாம். புதன்கிழமை நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் பூமி வாங்கும் யோகம் கிடைக்கும்.


    வியாழக்கிழமை

    தனுசு, மீன ராசியினர் பைரவரை வியாழக்கிழமைகளில் வழிபடுவதன் மூலம் சிறப்பான பலன்கள் கிடைக்கும். குறிப்பாக பைரவருக்கு வியாழக் கிழமையில் விளக்கேற்றி வழிபட்டால் பில்லி சூனியம் விலகும் என்பது ஐதிகம்.

    வெள்ளிக்கிழமை

    ரிஷபம், துலாம் ராசியினர் வெள்ளிக்கிழமை அன்று கால பைரவரை வழிபடுவதால் சிறப்பான பலன்களை பெறலாம். வெள்ளிக் கிழமை மாலையில் வில்வ இலையாலும், வாசனை மலர்களாலும் சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வந்தால் வறுமை நீங்கி செல்வம் சேரும்.

    சனிக்கிழமை

    மகரம், கும்ப ராசியினர் சனிக்கிழமையன்று பைரவரை வழிபடுவதால் சிறப்பான பலன்களை பெறலாம். சனி பகவானுக்கு பைரவர் தான் குரு ஆவார். இதனால் அஷ்டமசனி, ஏழரை சனி அர்த்தாஷ்டமச் சனி விலகி நல்லதே நடக்கும் என்பது ஐதிகம். மேலும் தேய்பிறை அஷ்டமியில் பஞ்ச திபம் ஏற்றி வழிபட்டால் காலத்தால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கி நல்லவை வந்து சேரும்.

    தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் உள்ளது வைரவன் கோவில். இந்த கோவில் பைரவரின் வரலாற்றை விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    தென் கயிலாயம் என்று அழைக்கப்படுவது திருவையாறு. இங்கிருந்து சுவாமி மலைக்கு சிவபெருமான் புறப்பட்டார். ‘ஓம்’ என்னும் பிரணவத்தின் உட்கருத்தை உபதேசமாக பெறுவதற்காகத் தான், சிவபெருமான் இந்தப் பயணத்தை மேற்கொண்டார். அவரோடு மற்ற தெய்வங்களும் புறப்பட்டார்கள். வழியில் வைரவன் கோவில் என்னும் தலம் வந்த போது, பைரவரிடம் அங்கேயே தங்கியிருந்து அருள்புரியும் படி சிவபெருமான் கட்டளையிட்டார்.

    அதன்படி பைரவர், வைரவன் கோவில் தலத்தில் காவிரி நதியின் வடகரையில் தெற்கு நோக்கி அமர்ந்தார். பழமையான இந்த ஆலயத்தின் வலதுபுறம் ஒரு வாய்க்கால் உத்திரவாகினியாக ஓடுகிறது. பைரவர் நோக்கிய தெற்கு முகத்தில் மயானம் உள்ளது. இது காசிக்கு சமமான பெருமையைப் பெற்ற இடமாகும்.

    முன் முகப்பைத் தாண்டியதும் விசாலமான மகா மண்டபம் உள்ளது. நடுவே நந்தியம்பெருமான் வீற்றிருக்கிறார். அடுத்துள்ள அர்த்த மண்டபத்தை அடுத்து கருவறை உள்ளது. காசியில் உள்ள கால பைரவரின் அத்தனை சக்திகளையும் உள்ளடக்கியவராக இங்குள்ள பைரவர் அருள்கிறார்.

    சிவபெருமானால் ஸ்தாபிதம் செய்யப்பட்ட இத்தல கால பைரவருக்கு, ஒவ்வொரு மாத தேய்பிறை அஷ்டமியிலும் அர்த்த ஜாமத்தில் உலக நலன் கருதி சுவர்ண ஆகர்ஷண பைரவ மூலமந்திரம் ஜபித்து சிறப்பு ஹோமம் நடைபெறுகிறது. அத்துடன் அன்று 108 வலம்புரி சங்காபிஷேகமும் கலசாபிஷேகமும் நடக்கிறது. இந்த ஹோமத்தில் கலந்து கொண்டு அர்த்த ஜாமத்தில் காலபைரவரை வழிபட அஷ்டலட்சுமிகளின் ஆசியும், கால பைரவரின் வரங்களும் ஒருங்கே கிடைக்கும் என்கின்றனர் பக்தர்கள்.

    இந்த கால பைரவரை அஷ்டமி திதியிலும், திருவாதிரை நட்சத்திரத்திலும் ஞாயிறு மற்றும் வியாழக் கிழமை உச்சி காலத்திலும், ஞாயிறு, செவ்வாய் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களின் ராகு காலத்திலும் வணங்குவது நல்ல பலனைத் தரும்.

    நவக்கிரகங்களை தன்னுடைய சரீரத்தின் சிரம் முதல் பாதம் வரை உள்ளடக்கியவர் கால பைரவர். எனவே இவருக்கு செய்யப்படும் அனைத்து பூஜைகளும் நவக்கிர கங்களின் தோஷங்களை நிவர்த்தியாக்கும் பூஜைக்கு நிகரானதாகும்.

    ராகுகால நேரத்தில் பைரவருக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனைகளில் கலந்து கொண்டு, அவரை வணங்கினால் பல நன்மைகள் கிடைக்கும். வர வேண்டிய பணம் வந்து சேரும். தர வேண்டிய பணத்தை திருப்பித் தர வேண்டிய சூழ்நிலை உருவாகும். சனியின் தாக்கம் தீரும். கடுமையான கர்மவினைகள் தீர்ந்து விடும். திருமண தடைகள் விலகும். புத்திரபாக்கியம் கிட்டும். பைரவரை பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் தீரும்.

    பஞ்சதீபம் என்பது இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணெய், நல்லெண்ணெய், பசு- நெய் ஆகியவை ஆகும். இவற்றை தனித்தனி தீபமாக ஏற்ற வேண்டும். அகல் விளக்கில் ஏற்றலாம். ஒன்றிலிருந்து ஒன்றை ஏற்றாமல் தனித்தனி தீபமாக ஏற்றி வழிபட்டால் எண்ணிய காரியங்கள் நிறைவேறும். மேலும் அஷ்டமி நாளில் பைரவரை சிவப்பு நிற அரளியால் வழிபட்டால் நல்ல மக்கள் செல்வங்களைப் பெறலாம்.

    இந்த ஆலயம் காலை 11 மணி முதல் 12 மணி வரையிலும், ஞாயிறு மட்டும் மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும் திறந்திருக்கும்.

    அமைவிடம்

    தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு- கும்பகோணம் சாலையில் திருவையாறில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது வைரவன் கோவில். இந்த சிற்றூரில் சாலை ஓரத்திலேயே ஆலயம் இருக்கிறது. பஸ் வசதிகள் உள்ளன.
    மகா பைரவர்- மகாபைரவியுடன் அருள்பாலிக்கும் தலமாகவும், பைரவப் பெருமான் சிவலிங்க ரூபமாக காட்சியளிக்கும் தலமாகவும் இந்த ஆலயம் திகழ்கிறது.
    ஆதியும் அந்தமும் இல்லாதவர் சிவபெருமான். இந்த பிரபஞ்சத்திலுள்ள ஜீவராசிகள் மட்டுமின்றி ஏனைய பிற இறை வடிவங்களையும் படைத்தவரும் அவரே. அசுரர்களால் உலகம் துன்பமடையும் பொழுதெல்லாம், சிவபெருமான் தனது அம்சமாகவும், வலிமைமிக்க ஞானமூர்த்தியாகவும் பைரவரை உருவாக்கினார் என்றும், எட்டுதிசைகளிலும் அவரை குடிகொள்ளச் செய்து உலகினைக் காக்கும் பொறுப்பை அளித்து, அதன் மூலம் அசுரர்களை வென்று உயிர்களுக்கு அமைதியளித்தார் என்றும் பைரவர் தோற்றத்தைப் பற்றி புராணங்கள் கூறுகின்றன.

    ‘பைரவர்’ என்றால் ‘பயத்தைப் போக்குபவர்’, ‘பாபத்தையும் இன்னல்களையும் நீக்குபவர்’ என்று பொருள். படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் ஒடுக்குதல் ஆகிய முத்தொழில்களின் மூலமாக, பல கோடி உயிர்களை காப்பதற்காக படைக்கப்பட்ட பைரவருக்கு, சிவபெருமானின் கையில் இருக்கும் திரிசூலமே ஆயுதமாக வழங்கப்பட்டிருக்கிறது.

    படைத்தல் தொழிலை உடுக்கையும், காத்தல் தொழிலை கையில் உள்ள கபாலமும், அழித்தல் தொழிலை உடலில் பூசிய விபூதியும் குறிக்கும். பைரவரை, பூஜை செய்தால் மட்டுமே ஆபத்துகளில் இருந்து காப்பாற்றுவார் என்றில்லை. இக்கட்டான நேரத்தில் முழு மனதுடன் அவரை நினைத்தாலே போதும். நம்மை துன்பங்களில் இருந்து உடனடியாக காப்பார்.

    பைரவர் தோற்றம் :
     
    பைரவர் தோன்றியது பற்றி இருவிதமான வரலாறுகள் கூறப்படுகின்றன. பெண்கள் பலவீனமானவர்கள் என்று கருதிய தானகாசுரன் என்னும் அசுரன், ‘பெண்களால் மட்டுமே எனக்கு மரணம் நிகழ வேண்டும்’ என்ற வரத்தைப் பெற்றான்.

    அந்த வரத்தின் காரணமாக, பிரம்மதேவன் முதலான தேவர்களை அவன் துன்புறுத்தினான். அவனது கொடுமையில் இருந்து விடுபட, தேவர்கள் அனைவரும் சிவபெருமானை வேண்டினர். சிவபெருமானும் தனது அம்சமான காளியைத் தோற்றுவித்து, தானகாசுரனை அழிக்க கட்டளையிட்டார். அதன்படியே அசுரனை அழித்த காளி, அதன் பிறகும் கோபத் தீயுடன் உலகெங்கும் சுற்றித் திரிந்தாள். அவளது கோபத் தீயினால், உலக உயிர்கள் அனைத்தும் துன்பமடைந்தன.

    இதையடுத்து மாயையை, ஒரு பாலகன் உருவில் இடுகாட்டில் கிடந்து அழும்படி செய்தார் ஈசன். அங்கு வந்த காளி, குழந்தையை தூக்கி அணைத்து பால் கொடுத்தாள். காளியிடம் பால் குடித்த அந்தக் குழந்தை, பாலுடன் காளியின் கோபத் தீயையும் சேர்த்து பருகியது. அதனால் காளியின் கோபம் தணிந்து, உலக உயிர்கள் காப்பாற்றப்பட்டன.

    காளியின் கோபத்தைத் தணித்த குழந்தை ‘ஷேத்திரபாலர்’ என்று அழைக்கப்பட்டது. ‘ஷேத்திரம்’ என்றால் ‘மண்’ என்று பொருள். மண்ணில் கிடந்த பாலகன் என்பதால், ‘ஷேத்திரபாலர்’ அதாவது ‘மண்ணின் மைந்தர்’ என்று அழைக்கப்பட்டார். நாய் வாகனத்தின் மீது அமர்ந்திருக்கும் அந்த ஷேத்திரபாலரே, பைரவர் திருவடிவம் என்று லிங்க புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    அந்தகாசுரன் என்னும் அசுரன், சிவபெருமானை நினைத்து பஞ்சாக்கினி வளர்த்து கடுந்தவம் செய்தான். அதன் வாயிலாக சிவபெருமானிடம் இருந்து எண்ணற்ற வரங்களைப் பெற்றான். பின்னர் தேவர்களை வென்றான். தோல்வியுற்ற தேவர்களை, பெண்களின் ஆடையை அணிந்து கொண்டு தனக்கு சேவகம் செய்யும்படி கூறி அவமதித்தான்.

    அசுரனின் கொடுமையை தாங்க முடியாத தேவர்கள், பெண் வேடத்துடனேயே சிவபெருமானைச் சந்தித்து, தங்கள் இன்னல்களை அகற்றும்படி வேண்டினர். அவர்களின் துயரம் கேட்டு சிவபெருமான் கோபம் கொண்டார். அவர் அடைந்த உக்கிரத்தால் உடல் வெப்பமாகி, நெற்றியில் வியர்வை உருவானது. அந்த வியர்வையில் இருந்து மகா பைரவர், அதிஉக்கிரத்துடன் தோன்றினார். அந்தகாசுரன் மீது போர் தொடுத்து, தனது சூலாயுதத்தில் அவனை குத்தித் தூக்கியவாறு, மூன்று உலகங்களிலும் வலம் வந்தார் என்பது மற்றொரு வரலாறு.



    இதுபோல் அநேக அசுரர்கள் தோன்றும் போதெல்லாம், சிவ பெருமான் அநேக பைரவர்களைத் தோற்றுவித்து அவர்களை அழித்தார். பொதுவாக சிவாலயங்களில் பைரவரின் திருவுருவம் ஆலயத்தின் வடகிழக்கு திசையில் இடம்பெற்றிருக்கும். தவிர அஷ்ட பைரவர்கள் தனித்தனியாகவும், ஒன்றாகவும் பல ஆலயங்களில் இடம்பிடித்திருப்பார்கள். இருப்பினும் சிவபெருமானால் முதன்முதலாக உருவாக்கப்பட்டவரும், அஷ்ட பைரவர்களை உருவாக்கியவருமான ஆதி மகாபைரவ மூர்த்திக்கான ஆலயம் சோழவரம் என்ற ஊரில் இருக்கிறது.

    இவ்வாலயம் பல சிறப்புகளைக் கொண்டுள்ளது. மகாபைரவர் பூவுலகில் முதன்முதலில் தம் திருவடிகளை எடுத்து வைத்த புண்ணிய பூமியாகவும், மகா பைரவர்- மகாபைரவியுடன் அருள்பாலிக்கும் தலமாகவும், பைரவப் பெருமான் சிவலிங்க ரூபமாக காட்சியளிக்கும் தலமாகவும் இந்த ஆலயம் திகழ்கிறது.

    மூலவரின் திருநாமம் மகா பைரவேஸ்வரர் என்பதாகும். அம்பாளின் திருநாமம் மகா பைரவேஸ்வரி. உற்சவர்களின் திரு நாமம் கல்யாண பைரவர், கல்யாண பைரவி. எட்டு அல்லது அதற்கு மேலான எண்ணிக்கை கொண்ட இலைகள் கொண்ட வில்வ மரம் தல விருட்சமாக உள்ளது. ஆலய தீர்த்தம் ‘பைரவ அமிர்த தீர்த்தம்’ ஆகும். திராவிட கட்டிடக் கலையம்சத்துடன் கட்டப்பட்டுள்ள இந்த ஆலயம், ராஜராஜசோழன் காலத்தில் கட்டப்பட்டதாக சொல்லப்பட்டாலும், அதற்கான ஆதாரம் எதுவும் இல்லை.

    அகத்திய மகரிஷி இந்த ஆலய மகா பைரவரை வணங்கி வழிபட்டுள்ளார். அஷ்டதிக்கு பாலகர்களும், அஷ்டவசுக்களும் இவ்வாலய இறைவனை வணங்கி பேறு பெற்றள்ளனர். இந்தத் திருத்தலம் உள்ள சில பகுதிகளை தாங்கியும், புறவெளி சுத்திகரிப்பு பணியையும் அஷ்டதிக்கு பாலகர்களும், அஷ்ட வசுக்களும் செய்து வருகின்றனர். எனவே இத்தலம் வாஸ்து சக்தி நிறைந்ததாக விளங்குகிறது. வாராந்தி வாஸ்து நாளான செவ்வாய்க்கிழமைகளிலும், வருடத்தின் எட்டு வாஸ்து நாட்களிலும் இந்த ஆலயத்தில் வாஸ்து பூஜை செய்யப்படுகிறது. புதிய வீடு கட்டுபவர்கள் அதுபோன்ற நாட்களில் இங்கு வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.

    ஆலய அமைப்பு :

    கிழக்கு நோக்கிய இந்த ஆலயம், தரைமட்டத்தில் இருந்து உயர்த்தப்பட்ட பீடத்தில் விமானம் வரை கருங்கல்லால் கட்டப்பட்ட கற்றளி ஆகும். செப்புக்காப்பு செய்யப்பட்ட படிக்கட்டு வழியே மேலேச் சென்றால், மகாநந்தி, உச்சிஷ்ட கணபதியும், வள்ளி - தெய்வானை சமேத முருகப்பெருமானும் உள்ளனர். இவர்களுக்குப் பின்புறம் சிவலிங்க ரூபத்தில் மகா பைரவர் அருள்பாலிக்கிறார். மூலவருக்கு இடதுபுறத்தில் மகா பைரவி தென்திசை நோக்கி வீற்றிருந்து அருள்புரிகிறார்.

    பிரகார சுற்றில் தெற்கில் விநாயகர், பிரளய காலமூர்த்தி, நடராஜர், முருகப்பெருமான், தட்சிணாமூர்த்தி ஆகியோரும், மேற்கில் லிங்கோத்பவர், வடக்கில் பிரம்மா, காலபைரவர், அர்த்த நாரீஸ்வரர், துர்க்கை, கங்காவிஜர்ணமூர்த்தி ஆகியோரது திருவுருவங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

    ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி தினத்தன்று, இவ்வாலயத்தில் சிறப்பு பூஜை வெகு விமரிசையாக நடைபெறுகிறது. கார்த்திகை மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமி காலபைரவ அஷ்டமியாக கொண்டாடப்படுகின்றது. அன்றையதினம் எட்டுவிதமான அபிஷேகங்களுடன் சிறப்பு பூஜைகளும், திருக்கல்யாணமும், வீதியுலாவும் நடத்தப்பெறுகிறது.

    அமைவிடம் :

    விக்கிரவாண்டியில் இருந்து தஞ்சாவூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் திருப்பனந்தாளில் இருந்து 6 கிலோமீட்டர் தெற்காகவும், கும்பகோணத்தில் இருந்து 12 கிலோமீட்டர் வடக்காகவும் உள்ளது சோழவரம். இந்த ஊரின் சாலையோரத்திலேயே ஆலயம் இருக்கிறது. சென்னை, கும்பகோணம், வடலூர், காட்டுமன்னார்கோயில், ஜெயங்கொண்டம் ஆகிய ஊர்களிலிருந்து அடிக்கடி பேருந்து வசதிகள் உள்ளன. ஆலயத்தின் அருகில் உள்ள ரெயில் நிலையம் கும்பகோணம் ஆகும்.
    புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது துர்வாசபுரம் என்ற திருத்தலம். இங்கு திருப்பாதாளேஸ்வரர் என்ற ஆலயம் அமைந்துள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்
    புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது துர்வாசபுரம் என்ற திருத்தலம். இங்கு திருப்பாதாளேஸ்வரர் என்ற ஆலயம் அமைந்துள்ளது. துர்வாசபுரம், திருமா, துருமா என்ற பெயர்களிலும் வழங்கப்படுகின்றன. ‘துருமா’ என்பது துர்வாச முனிவரை குறிப்பது என்று சொல்லப்படுகிறது. அவர் இந்தப் பகுதியில் வாழ்ந்து தவம் புரிந்ததாகவும், இத்தல இறைவனை இங்கேயே தங்கியிருந்து இன்றளவும் வணங்கி வருவதாக கூறப்படுகிறது. துர்வாச முனிவர் தவ நிலையில் இருப்பதால் இந்த ஊரில் பேரொலி எழுப்பும் வெடிகளை யாரும் வெடிப்பதில்லை என்கிறார்கள்.

    திருப்பாதாளேஸ்வரர் ஆலயம் உருவானதற்கு, ஒரு கதை கூறப்படுகிறது. அதாவது, துர்வாசபுரத்தில் இருந்து நாள்தோறும் ஒருவன் ராசசிங்கமங்கலத்துக்குப் (ராங்கியம்) பால் கொண்டு சென்றான். அவன் பால் கொண்டு செல்லும் போது, குறிப்பிட்ட இடத்திற்கு வந்ததும், கால் தடுமாறியோ பிறவாறோ கலயத்திலிருந்து பால் கொட்டிப் போவது வாடிக்கையானது. கலயமும் உடைந்து போய்விடுமாம். வழக்கமாகிப் போன இந்த நிகழ்வுக்கு, அந்த பகுதி தூய்மையில்லாமல், கரடும் முரடுமாக இருப்பது தான் காரணம் என்று நினைத்த அவன், மண்வெட்டி, கோடரியுடன் அந்தப் பகுதிக்கு வந்தான்.

    பின்னர் அந்த இடத்தைச் செம்மைப்படுத்தும் பணியில் இறங்கினான். அங்கிருந்த ஒரு மேட்டுப் பகுதியை சீர்செய்தபோது, ஒரு கல்லைக் கண்டான். அந்தக் கல்லே தான் கொண்டு செல்லும் பாலைக் கவிழ்த்துவிட காரணம் என்பதை உணர்ந்த அவன், அந்தக் கல்லை அடியோடு தோண்டி எடுக்க வேண்டும் என்று நினைத்தான். ஆனால் அவன் தோண்டத் தோண்ட பள்ளம்தான் பெரிதாகிக் கொண்டே போனதே தவிர, கல்லின் அடிப் பாகத்தை காண முடியவில்லை.

    பிறகு தான் அது ஒரு சிவலிங்கம் என்பதைக் கண்டான். ஈசன் தான் திருவிளையாடல் மூலமாக தினமும் தான் கொண்டு வரும் பாலை தடுத்து வாங்கிக்கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்தான். அன்று முதல் தினமும் இந்தப் பகுதி வழியாக செல்லும் போது, சிவலிங்கத்தின் மீது தான் கொண்டு வரும் பாலில் ஒரு பகுதியை அபிஷேகித்துவிட்டுச் செல்வான். இந்த தினசரி வழிபாடு காரணமாக, அந்த பால் வியாபாரி செல்வச் செழிப்பு மிகுந்தவனாக மாறினான். அவனிடம் இருந்து ஆடு மாடுகள் பெருகின. நிலத்தில் விளைச்சல் அதிகரித்தது. அவன் கோடீஸ்வரனாக மாறிப்போனான். இதையடுத்து அந்தப் பகுதியில் சுயம்புலிங்கத்திற்கு ஆலயம் எழுப்பப்பட்டது என்று தல புராணக் கதை சொல்லப்படுகிறது.

    துர்வாசபுரத்தில் எழுந்தருளியிருக்கும் திருப்பாதாளேஸ்வரர், தானே தோன்றி உருவான சுயம்புலிங்க மூர்த்தியாவார். இந்த சுயம்பு லிங்கத்திற்கு இன்னும் பல கதைகள் சொல்லப்படுகிறது. இங்கே கருவறை கட்டப்பட்டபோது விநாயகர், சகஜரிநாயகி, சண்டிகேஸ்வரர், சூரியன், சந்திரன் ஆகியவைகள் நிறுவப் பெற்றிருக்க வேண்டும். திருக்கோவிலின் இரண்டாவது கால கட்ட வளர்ச்சியில் பைரவர் சன்னிதி, அம்மன் சன்னிதி, கோவில் மண்டபம் ஆகியவை கட்டப்பட்டிருக்கலாம் என்பது கல்வெட்டு மூலமாக அறியமுடிகிறது. அதன்பிறகு வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணியர் சன்னிதி, பெரிய மண்டபம் போன்றவை அமைக்கப்பட்டிருக்கின்றன. கோவில் அர்த்த மண்டபத்தில் உள்ள மேல் விதானத்தில் உள்ள கற்கள் ஒவ்வொன்றிலும் இரட்டை மீன் சின்னங்கள்
    செதுக்கப்பட்டுள்ளன.


    பைரவர் கோவில், கோவில், பைரவர், திருப்பாதாளேஸ்வரர் கோவில்,

    முன்காலத்தில் ஆலயத்தில் குடிகொண்டிருக்கும் திருப்பாதாளேஸ்வரரின் நேரடிப் பார்வை பட்டு, எதிரே இருந்த வயல்வெளிகள் கருகிப்போயினவாம். சிவபெருமான் சீற்றமாக இருப்பதை அறிந்த மக்கள், அவரது கோபத்தைத் தணிக்க அவரது மூத்த மைந்தனான விநாயகப்பெருமானை அவருக்கு முன்பாக ஆலயத்தில் பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். அதன்பிறகு அதுபோன்ற சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை என்று கூறுகிறார்கள்.

    பொது மக்களால் இக்கோவில், ‘பாதாளேஸ்வரர் கோவில்’ என வழங்கப்பெற்றாலும், ஆலயத்திற்குள் ‘சுந்தரேஸ்வரர் திருக்கோவில்’ என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆலயத்தில் உள்ள அம்பாளின் திருநாமம் பாகம்பிரியாள் என்பதாகும். முற்காலத்தில் இந்த அம்மனை ‘சகஜரி நாயகி’ என்று அழைத் திருக்கிறார்கள். திருமணத்தடையால் திருமணம் தள்ளிப்போகும் பெண்கள், இந்த ஆலயத்திற்கு வந்து இறைவியை வணங்கிச் சென்றால் விரைவில் திருமணம் நடைபெறும் என்கிறார்கள். அப்படி தங்களது நேர்த்திக்கடன் நிறைவேறிய பெண்கள், தம்பதி சமேதராக இந்த ஆலயத்திற்கு வந்து, அம்மனுக்கு வளையல் காணிக்கை செலுத்திச் செல்கின்றனர்.

    சங்கடம் தீர்க்கும் பைரவர் :

    இத்தல பைரவர் சக்தி வாய்ந்தவராக கருதப்படுகிறார். இவரிடம் குழந்தைகளுக்காக பூஜை செய்வது மிக, மிக சிறப்பு. அவர்களின் ஆரோக்கியம், கல்வி நலுனுக்காக தனியாக பூஜை செய்ய வேண்டும். இத்தல பைரவர் மிகவும் உக்கிரமானவர் என்பதால், பைரவருக்கு ஆராதனை செய்த கற்பூர ஆரத்தியை பக்தர்களுக்கு தருவதில்லை. திருச்செந்தூரில் முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்த நிகழ்வை சஷ்டி விழாவாக கொண்டாடுவது போல், இத்தல பைரவர், சம்பாசுரனை வதம் செய்த நிகழ்வு ‘சம்பா சஷ்டி விழா’ என்ற பெயரில் கார்த்திகை மாதத்தில் நடத்தப்படுகிறது.

    பைரவர் சன்னிதியில் பூசணிக்காயை பாதியாக வெட்டி, உள்ளே உள்ள விதை முதலியவற்றை நீக்கி, அகல் போல் ஆக்கி, அதனுள் நல்லெண்ணையை நிரப்பி, நூல் திரிகளை வைத்து விளக்கேற்றிப் பிரார்த்தனை செய்தால், குடும்பத்தில் ஏற்படும் பில்லி- சூனியங்கள், மாந்திரீகள் எல்லாம் நீங்கிவிடுமாம். அதேபோல் கால பைரவருக்குச் சாம்பிராணி புகை போட்டு வழிபாடு செய்தால், திருடு போன பொருட்களெல்லாம் திரும்பக் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் இங்கு நிலவுகிறது. ஒவ்வொரு மாத தேய்பிறை அஷ்டமி நாளில் இங்கே வந்து சிறப்பு அபிஷேகத்தில் கலந்து கொள்வது மிகச் சிறப்பாகும். 
    ஷேத்ரபாலபுரத்தில் உள்ள பைரவர் சிரித்த முகத்தோடு தன்னுடைய வாகனமான நாய் இல்லாமல் காட்சி தருகிறார். இதனால் இவரை ‘ஆனந்த கால பைரவர்’ என்று அழைக்கிறார்கள்.
    ஷேத்ரபாலபுரம்... இந்த ஊர் மயிலாடுதுறைக்கும் கும்பகோணத்துக்கும் இடையில் உள்ள குற்றாலம் தாலுக்காவில் இருக்கிறது. இங்கு பைரவர் தனித்து அருள்பாலிக்கும் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்திற்கு தனி வரலாறு உள்ளது.

    சாதாரணமாக அனைத்து ஆலயங்களிலும் உள்ள பைரவர் சிலைகளில் அவருடன் நாயும் இருப்பதைக் காணலாம். அதுமட்டுமின்றி அந்த பைரவர்கள் எல்லாம் சாந்தமான முகத்தைக் கொண்டு காட்சி தருவது இல்லை. ஆனால் ஷேத்ரபாலபுரத்தில் உள்ள பைரவர் சிரித்த முகத்தோடு தன்னுடைய வாகனமான நாய் இல்லாமல் காட்சி தருகிறார். இதனால் இவரை ‘ஆனந்த கால பைரவர்’ என்று அழைக்கிறார்கள்.

    இந்த ஆலயத்தில் பைரவரே பிரதான தெய்வம். அவருக்கு மட்டுமே அனைத்து முக்கிய பூஜைகளும் நடைபெறுகின்றன. முருகன், விநாயகர், செல்லி அம்மன் மற்றும் ஐயப்பனுக்கு சிறு சன்னிதிகள் இருந்தாலும், அவர்கள் அனைவருக்கும் பைரவருக்கு அடுத்த முக்கியத்துவம்தான் தரப்படுகிறது. பைரவருக்கு அடுத்து விநாயகர் முக்கியத்துவம் பெற்றுள்ளார். மற்றவர்கள் அதன் பிறகே முக்கியத்துவம் பெறுகின்றனர்.

    ஷேத்ரபாலபுரம் மிகச் சிறிய கிராமப் பகுதியாகும். ஆனால் இங்குள்ள கால பைரவர் ஆலயத்தினால் இந்த கிராமம் சிறப்பு வாய்ந்த ஒரு ஊராக அடையாளம் காணப்பட்டுள்ளது. ஆலயம் மிகப் பெரியது அல்ல என்றாலும், அதிக சக்தி வாய்ந்த ஆலயம் இதுவாகும். அந்த கால சிறிய கட்டிடமாக கோவில் இருக்கிறது. நுழைவு வாசலில் உள்ளூர் பக்தர்கள் சிலரது நன்கொடையால் மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.

    காசியில் உள்ள கால பைரவருக்கும் மேலானவர், இங்குள்ள கால பைரவர் என்று கூறுகிறார்கள். ஷேத்ரபாலபுரத்தைத் தவிர காலபைரவருக்கு என தனி ஆலயம் வேறு எங்குமே கிடையாது. பல ஆலயங்களிலும் பைரவர் தனி சன்னிதியில் மட்டுமே காட்சி தருவார். ஆனால் அவருடைய வாகனமான நாய் இல்லாமல், மூலவராக பைரவர் மட்டுமே உள்ள, மூன்று கால பூஜைகளை செய்தவாறு உள்ள தனி ஆலயம் காசியில் கூடக் கிடையாது.

    அந்த வகையில்தான் காசி கால பைரவரை விட, ஷேத்ரபாலபுரத்தில் உள்ள ஆனந்த கால பைரவர் சிறப்பு வாய்ந்தவராக கருதப்படுகிறது. கால பைரவருக்கு என ஏற்படுத்தப்பட்ட இந்த தனி ஆலயம் எழுந்தக் காலம் தெரியவில்லை. ஆனால் மிக மிகப் பழமையான ஆலயம் என்பது மட்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த ஆலயத்துக்குள் நுழைந்ததுமே நம்மை அறியாமல் ஒரு சிலிர்ப்பும் ஏற்படுகிறது.

    பைரவரின் தோற்றத்தைப் பற்றிக் கூறப்படும் கதைகளில் இருந்து விலகி, வித்தியாசமான தல புராணத்துடன் உள்ள இந்த ஆலயத்தின் பின்னணிக் கதையை நாமும் அறியலாம். இந்தக் கதை பைரவரின் பிறப்புப் பற்றியக் கதையில் பெரும் மாறுதலானக் கதையாக உள்ளது.

    ‘ஒருமுறை பிரம்மா பூலோகத்துக்கு வந்திருந்தார். அப்போது ஐந்து தலையுடன் இருந்த பிரம்மா பூலோகத்துக்கு வந்து செருக்குக் கொண்டு அனைத்து கடவுளையும் விட தானே சக்தி வாய்ந்தவர் என்று அனைவரிடமும் கூறிக் கொண்டார். விஷ்ணுவையும், சிவபெரு மானையும் பழித்தார்.

    இப்படி அவர் இருக்கையில் ஒருநாள் பூமிக்கு சிவபெருமான் தனது மனைவி பார்வதி அவர்களுடன் ருத்திரரும் துணைக்கு வந்திருந்தார். அவர்கள் மூவரையும் கண்ட பிரம்மா தன் நிலையை மறந்து தனது ஐந்தாவது தலையினால் ஏற்பட்ட செருக்கால் சிவபெருமானை நிந்தித்தார். இதனால் கோபமுற்ற சிவபெருமான், பிரம்மாவின் அந்த குறிப்பிட்ட தலையைக் கிள்ளி எறியுமாறு ருத்திரருக்கு ஆணையிட்டார். சிவபெருமானின் ஆணையை ஏற்ற ருத்திரரும் உடனடியாக தன்னை பைரவராக உருமாற்றிக் கொண்டு, பிரம்மாவின் ஐந்தாவது தலையை தனது விரல் நகத்தினால் கிள்ளி எறிந்தார். தலையை இழந்த பிரம்மா தன் தவறை உணர்ந்தார். தன்னை விட்டு விடுமாறு பைரவரிடம் வேண்டிக் கொண்டு அவரை துதிக்கத் தொடங்கினார்.

    பிரம்மாவை உயிருடன் விட்டு விட்ட பைரவர், அங்கிருந்து கிளம்பி சிவபெருமானுடன் சென்றார். ஆனால் பிரம்மாவின் தலையைக் கிள்ளி எறிந்ததினால், பைரவருக்கு பிரும்மஹத்தி தோஷம் தொற்றிக் கொண்டது. அவர் கையில் வைத்திருந்த சூலமும் உடனடியாக மறைந்து போனது. பிரம்மாவின் ஐந்தாவது தலையும் ஒரு கபாலமாக உருமாறி பைரவர் கையில் ஒட்டிக் கொண்டது.



    ரத்த பிட்சை

    ‘உலகம் முழுவதும் சுற்றித் திரிந்து ரத்த பிட்சை எடுத்து கையில் உள்ள கமண்டலம் நிறையும் அளவிற்கு ரத்தத்தை நிரப்பிக் கொண்டால் மட்டுமே அந்த சாபம் விலகும்’ என்று சிவபெருமான் அவருக்கு சாப விமோசனத்துக்கான வழியைக் கூறினார்.

    ஆகவே பைரவரும் ஒரு கையில் கபாலம், மறு கையில் கமண்டலம் என இரண்டையும் ஏந்திக் கொண்டு பன்னிரண்டு ஆண்டுகள் அங்கும் இங்கும் அலைந்து ரத்த பிட்சை எடுத்து வரலானார். பல்வேறு இடங்களுக்கும் சென்று ரத்த பிட்சை எடுத்து வந்தாலும், கமண்டலத்தில் ரத்தம் நிறையவில்லை என்பதால் வருத்தமுற்று விஷ்ணுவிடம் சென்றார்.

    விஷ்ணு பகவான், பைரவரிடம், ‘நான் பூலோகத்தில் பத்து அவதாரங்களை எடுக்கப்போகிறேன். ஒவ்வொரு அவதாரத்தின் போதும் எதிரிகளைக் கொன்று, அவர்களது ரத்தத்தை உங்களுக்கு அளித்து கமண்டலத்தை நிரப்புகிறேன்’ என்று உறுதி கூறினார். விஷ்ணு பத்து அவதாரங்களை எடுத்தப் பின் அவர் தங்கி இருந்த இடத்துக்கு பைரவர் சென்றார். அங்கு விஷ்ணு அவருக்கு அளித்த ரத்த பிட்சையால் கமண்டலம் நிறைய, பைரவரின் பிரும்மஹத்தி தோஷம் விலகியது.

    பைரவர் எந்த இடத்தில் நின்று கொண்டு சாப விமோசனத்தைப் பெற்றாரோ, அந்த இடமே ‘ஷேத்ரபாலபுரம்’ என்று கூறப்படுகிறது. தோஷம் விலகிய பைரவர் அங்கிருந்த ஒரு தடாகத்தில் குளித்தவுடன், அந்த தாடகத்தில் மறைந்திருந்த சூலம் அவருடன் வந்து சேர்ந்து கொண்டது. அதனால்தான் அந்த தடாகத்தின் பெயர் ‘சூலதீர்த்தம்’ என்றானது.

    தடாகத்தில் குளித்தப் பின் பைரவர் வெளியில் வந்ததும், அங்கு பால உருவில் விநாயகர் தோன்றினார். ‘இந்த ஷேத்திரம் ஈசனின் பாலகனைப் போலவே, வினைகளை தீர்க்கும் இடமாக அமையும்’ என்று பைரவர், விநாயகப் பெருமானுக்கு அருளினார். அதன் காரணமாகவே இந்த தலத்திற்கு ‘ஷேத்ரபாலபுரம்’ என்ற பெயர் ஏற்பட்டது என்கிறது தல புராணம்.

    காசிக்குச் சென்றுவிட்டு திரும்பிய கால பைரவரை, இந்த தலத்தில் வந்து பிரம்மா, இந்திரன், நவக்கிரகங்கள் போன்றவர்கள் பூஜித்து துதித்த கதை உள்ளது. நவக்கிரகங்களின் சக்தி வாய்ந்த ஆலயங்கள் இந்தத் திருத்தலத்தைச் சுற்றி (கும்பகோணம்) அமைந்திருப்பதற்கு அதுவும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. ஆரம்ப காலத்தில் இந்த ஆலயத்தின் மகிமை பலருக்கும் தெரியாமல் இருந்தது. ஆனால் சனாதன முனிவர்கள் போன்ற பெருமை வாய்ந்த ரிஷி முனிவர்கள் இங்கு வந்து பைரவரை வழிபட்ட காலத்துக்குப் பிறகே, இந்த ஆலயத்தின் பின்னணி தெரிய வந்ததாக புராணக் கதை ஒன்று கூறப்படுகிறது. அது மட்டும் அல்ல பஞ்சபாண்டவர்களும் இங்கு வந்து பைரவரை பூஜித்து உள்ளார்கள்.

    ஆலய தீர்த்தங்கள்

    இந்த ஆலயத்தைச் சுற்றி சூல தீர்த்தம், காவிரி தீர்த்தம், கணேச தீர்த்தம், சக்கர தீர்த்தம் மற்றும் கந்த தீர்த்தம் என்ற ஐந்து தீர்த்தங்கள் உள்ளன. ஆலயத்தின் வடக்குப் புறத்தில் உள்ள காவிரி தீர்த்தத்தை ‘சங்கு முக தீர்த்தம்’ என்று அழைக்கிறார்கள். அதற்குக் காரணம் அது சங்கு வடிவில் அமைந்து இருந்ததே. அதில் குளிப்பது காசியில் குளித்தப் புண்ணியத்தை தரும் என்று இந்த ஆலய தல வரலாறு சொல்கிறது. ஆலயத்தின் இடதுபுறத்தில் உள்ளது, சூல தீர்த்தம் ஆகும்.

    அமைவிடம்

    ஷேத்ரபாலபுரம் திருத்தலம் மயிலாடு துறையில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் 8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மயிலாடுதுறை அல்லது கும்பகோணத்தில் இருந்து பேருந்தில் சென்று ஷேத்ரபாலபுரத்து பேருந்து நிலையத்தில் இறங்க வேண்டும். பின்னர் அங்கிருந்து பத்து அல்லது பதினைந்து மீட்டர் தொலைவில் உள்ள சிறு சாலை பைரவர் ஆலயத்திற்குச் செல்லும் வழியைக் காட்டும். 
    ×