search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bus collapsed"

    அன்னவாசல் அருகே மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருக்க திருப்பிய போது அரசு பஸ் கவிழ்ந்த விபத்தில் வாலிபர் பலியானார். 30 பேர் படுகாயமடைந்தனர்.
    அன்னவாசல்:

    மணப்பாறையில் இருந்து அன்னவாசல் வழியாக புதுக்கோட்டைக்கு அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பஸ்சை புதுக்கோட்டை மாவட்டம், தாவூதுமில் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (வயது 48) ஓட்டினார். கண்டக்டராக புதுக்கோட்டையை சேர்ந்த கிருஷ்ணன் இருந்தார். அந்த பஸ், அன்னவாசல்-புதுக்கோட்டை சாலையில் பெருஞ்சுனை என்ற இடத்தில் சென்ற போது, எதிரே லாரி ஒன்று வந்துள்ளது. அப்போது பெருஞ்சுனையில் இருந்து அன்னவாசலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற கருப்பையா மகன் மதியழகன் (24), லாரியை முந்திச் செல்ல முயன்றார். இதைக்கண்ட பஸ் டிரைவர், மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருக்க பஸ்சை திருப்பிய போது சாலையின் ஓரத்தில் பஸ் கவிழ்ந்தது. இருப்பினும் பஸ் மீது, மோட்டார் சைக்கிள் மோதியதில், மதியழகன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் பஸ் கவிழ்ந்ததில், அதில் பயணித்த 30 பேர் படுகாயம் அடைந்தனர்.

    உடனடியாக அப்பகுதி பொதுமக்கள் பஸ்சின் கண்ணாடியை உடைத்து பயணிகளை மீட்டனர். பின்னர் அவர்களை இலுப்பூர், அன்னவாசல் பகுதிகளில் இருந்து வந்த ஆம்புலன்ஸ்களில் ஏற்றி, சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த அன்னவாசல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உதவி செய்தனர். பின்னர் மதியழகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து திருக்கோகர்ணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
    விராலிமலை அருகே இன்று காலை பஸ் கவிழ்ந்த விபத்தில் அய்யப்ப பக்தர்கள் 16 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    விராலிமலை:

    ஆந்திர மாநிலம் கோத்தகிரி பகுதியை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்து விட்டு பஸ்சில் ஊர் திரும்பினர். 

    இன்று காலை திருச்சி அருகே உள்ள விராலிமலை  பூதக்குடி நான்கு வழிச் சாலையில் வரும் போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடி கவிழ்ந்தது. 

    இதில் பஸ்சில் இருந்த பக்தர்கள் கங்காதரன், நெறியன், சூரியகாந்தம்,  சுபத்ரா, யோக ரத்தினம் உள்பட 16 பேர் காயமடைந்தனர். அவர்களை விராலிமலை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
    திருப்பூர் அருகே பனியன் நிறுவன பஸ் கவிழ்ந்து 20 பேர் படுகாயம் அடைந்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர்- பல்லடம் சாலையில் தனியார் பனியன் கம்பெனி உள்ளது. இந்த கம்பெனியில் பல்லடம் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

    அவர்களை பனியன் கம்பெனிக்கு சொந்தமான பஸ்சில் தினமும் வேலைக்கு அழைத்து வருவது வழக்கம்.

    இன்று காலை பல்லடம் பகுதியில் இருந்து சுமார் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பனியன் நிறுவன பஸ்சில் வேலைக்கு வந்தனர்.

    இந்த பஸ் திருப்பூர் -பல்லடம் சாலையில் குங்குமம் பாளையம் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோடு ஓரம் தலை குப்புற கவிழ்ந்தது.

    இதில் பஸ்சில் பயணம் செய்த 20 பயணிகள் காயம் அடைந்தனர். அவர்களது தலை, கை, கால்களில் காயம் ஏற்பட்டது. அவர்கள் வலியால் அலறி துடித்தனர்.

    இதனை கேட்டதும் அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு திருப்பூர், பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விபத்து காரணமாக திருப்பூர் -பல்லடம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    நெல்லை அருகே இன்று காலை அரசு பஸ் தலைகுப்புற கவிழ்ந்த விபத்தில் முதியவர் ஒருவர் பலியானார். 90 பயணிகள் படுகாயம் அடைந்தனர். #busaccident

    ஆலங்குளம்:

    நெல்லையில் இருந்து இன்று காலை தென்காசிக்கு ஒன் டூ ஒன் பஸ் புறப்பட்டு சென்றது. பஸ் நிலையத்தில் தென்காசிக்கு காத்திருந்ததால் ஏராளமான பயணிகள் இந்த பஸ்சில் ஏறினர். 

    வழக்கத்தை விட ஒரு மடங்கு அதிகமான பயணிகள் பஸ்சில் ஏறினர். மொத்தம் 90 பயணிகள் பஸ்சில் இருந்தனர். பஸ்சை டிரைவர் விசாக கணேசன் ஓட்டினார். கபாலி கண்டக்டராக இருந்தார். பஸ் சாலையில் வழக்கத்தை விட அதிக வேகத்தில் சென்றது. பஸ்சில் இருந்த பயணிகள் ஒருவித அச்சத்துடனே பயணித்தனர். 

    சிலர் டிரைவர், கண்டக்டரிடம் மெதுவாக செல்லுமாறு கூச்சலிட்டனர். எனினும் பஸ்சின் வேகம் குறைய வில்லை. பஸ் ஆலங்குளம் ஊரின் கீழ்புறம் சிவலார் குளம் விலக்கு அருகே சென்றபோது முன்னால் ஒரு பள்ளி பஸ் சென்றது. அதை அரசு பஸ் முந்த முயன்றது. இந்த வேளையில் முன்னால் சென்ற பள்ளி பஸ் பிரேக் போட்டதால் அரசு பஸ்சை டிரைவர் ஓரமாக திருப்பினார். இதனால் பஸ் ரோட்டோரம் கவிழ்ந்தது. 

    இதில் பஸ் இருந்த 30 பயணிகளுக்கு பலத்த காயமும், 60 பேருக்கு லேசான காயமும் ஏற்பட்டது. 90 பயணிகளும் ஒருவர் மீது ஒருவர் விழுந்து பலத்த காயமடைந்தார்கள். பஸ்சில் பயணம் செய்த கடையநல்லூர் அருகேயுள்ள சிவராம்பேட்டையை சேர்ந்த ஈஸ்வரன் (83) சம்பவ இடத்திலேயே பலியானார். அவருடன் இருந்த அவரது மனைவி கோமதியம்மாளுக்கும் காயம் ஏற்பட்டது. #busaccident

    வேப்பூரில் இன்று காலை பஸ் கவிழ்ந்து பீகாரை சேர்ந்த 38 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
    வேப்பூர்:

    பீகார் மாநிலத்தை சேர்ந்த சிலர் தமிழக பகுதியில் உள்ள கோவில்களில் சாமி தரிசனம் செய்வதற்காக ஆன்மிக சுற்றுலா செல்ல முடிவு செய்தனர். அதன்படி அவர்கள் பீகார் மாநிலத்தில் இருந்து ஒரு பஸ்சில் ராமேசுவரம் நோக்கி புறப்பட்டனர். அந்த பஸ்சை பீகாரை சேர்ந்த முகமதுஅரிப் (வயது 50) என்பவர் ஓட்டினார்.

    அந்த பஸ் இன்று அதிகாலை 3.30 மணியளவில் கடலூர் மாவட்டம் வேப்பூர் பஸ் நிலையம் அருகே உள்ள மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் திடீரென தாறுமாறாக ஓடி சாலையின் குறுக்கே இருந்து தடுப்பு கட்டையில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் பஸ்சின் இடிபாடுகளுக்குள் சிக்கி  38 பேர் படுகாயம் அடைந்தனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்த வேப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் படுகாயம் அடைந்த 32 பேரை மீட்டு விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கும், 6 பேரை பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த விபத்தினால் அந்த வழியாக வாகனங்கள் எதுவும் செல்ல முடியாமல் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கபட்டது. விபத்தில் சிக்கி சாலையின் குறுக்கே கவிழ்ந்து கிடந்த  பஸ் பொக்லைன் எந்திரம் மூலம் அப்புறபடுத்தப்பட்டது. அதன் பின்னர் அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது. 

    விபத்து குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காயரம்பேடு கிராமத்தில் இருந்து தனியார் மினி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் குழந்தைகள் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
    தாம்பரம்:

    காஞ்சீபுரம் மாவட்டம் காயரம்பேடு கிராமத்தில் இருந்து தனியார் மினி பஸ் கூடுவாஞ்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தது. காயரம்பேடு பள்ளிக்கூடம் அருகே பஸ் சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் தாறுமாறாக ஓடியது.

    பின்னர் சாலை ஓரமாக பஸ் கவிழ்ந்தது. இதில் பஸ்சில் பயணம் செய்த 2 குழந்தைகள் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த கிராம மக்கள் பஸ் டிரைவரை பிடித்து கூடுவாஞ்சேரி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஊட்டி-கூடலூர் சாலையில் 30 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்த விபத்தில் சுற்றுலா பயணிகள் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கோவை:

    கர்நாடகா மாநிலம் பெங்களூர் பிந்தலூர் வித்யாரன்யபுரா பகுதியை சேர்ந்த 31 பேர் ஒரு தனியார் சுற்றுலா பஸ் மூலம் நேற்று முன்தினம் ஊட்டிக்கு சுற்றுலா வந்தனர்.

    ஊட்டியில் பல்வேறு சுற்றுலா தளங்களை கண்டுரசித்த அவர்கள் நேற்று மாலை மீண்டும் பெங்களூருக்கு திரும்பினர்.

    சுற்றுலா பஸ் ஊட்டி-கூடலூர் சாலையில் உள்ள தவளமலை கொண்டை ஊசி வளைவு அருகே இரவு 8 மணியளவில் சென்றது.

    அப்போது எதிரே வந்த வாகனத்துக்கு வழிவிடுவதற்காக சுற்றுலா பஸ்சை டிரைவர் சாலையோரமாக ஒதுக்கினார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பஸ் எதிர்பாராதவிதமாக 30 அடி பள்ளத்தில் உருண்டு கவிழ்ந்தது.

    இதில் பஸ்சுக்குள் இருந்தவர்கள் தலைகீழாக கவிழ்ந்தனர். சிலர் வெளியே தூக்கி வீசப்பட்டனர்.

    இந்த விபத்தில் 2 ஆண்களும், ஒரு பெண்ணும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். காயம் அடைந்தவர்கள் வலி தாங்க முடியாமல் கதறி அழுதனர்.

    இந்த விபத்து பற்றி தெரியவந்ததும் கூடலூர் டி.எஸ்.பி. ரவிச்சந்திரன் தலைமையில் நடுவட்டம் போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்து நடந்த இடம் அடர்ந்த வனப்பகுதி என்பதால் மின்விளக்குகள் இல்லாமல் இருள் சூழ்ந்து காணப்பட்டது. இதன் காரணமாக மீட்பு பணிகள் மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த வழியாக வந்த வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரியவிட்டு மீட்பு பணிகள் நடந்தது.

    விபத்தில் காயம் அடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் வாகனங்கள் மூலம் கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி மேலும் ஒரு பெண் பலியானார். இதனால் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது. இவர்களில் பெங்களூர் தொட்டபெல்லாபுராவை சேர்ந்த ரவிக்குமார் நாயக்(28), ராஜராஜேஸ்வரி நகரை சேர்ந்த கணேசன்(18) ஆகிய 2 பேரின் பெயர் விவரங்கள் மட்டுமே தெரியவந்தது. பலியான 2 பெண்களின் பெயர் விவரம் தெரியவில்லை.


    இந்த விபத்தில் காயம் அடைந்த 27 பேருக்கும் கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 2 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவர்களுக்கு மட்டும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மற்றவர்கள் லேசான காயம் அடைந்ததால் மேல் சிகிச்சைக்காக கர்நாடகா மாநிலம் மைசூர் மற்றும் பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    சுற்றுலா பயணிகள் கன்னடத்தில் பேசியதால் அவர்கள் குறித்த விவரங்களை சேகரிப்பதில் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டது.

    இந்த விபத்தின் காரணமாக ஊட்டி - கூடலூர் சாலையில் கடுமையாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. #tamilnews

    ×