search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "chidambaram petition"

    ஏர் செல் மேக்சிஸ் வழக்கு தொடர்பாக தன் மீது சி.பி.ஐ. கூறுகிற குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என்று டெல்லி கோர்ட்டில் ப. சிதம்பரம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. #aircelmaxiscase #pchidambaram
    புதுடெல்லி:

    மத்தியில் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சி காலத்தில், ப.சிதம்பரம் நிதி மந்திரியாக இருந்தார்.

    அப்போது 2006-ம் ஆண்டு மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான குளோபல் கம்யூனிகேசன் சர்வீசஸ் ஹோல்டிங்க்ஸ் லிமிடெட், ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3 ஆயிரத்து 500 கோடி முதலீடு செய்தது.

    இந்த முதலீட்டுக்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிகள் குழுவின் அனுமதியை பெறாமல், விதிமுறைகளை மீறி வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் மூலம் ப.சிதம்பரம் அனுமதி அளித்து விட்டார் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இந்த அனுமதியைப் பெறுவதற்கு ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும் கூறப்படுகிறது.

    இது தொடர்பாக அவர்கள் மீது சி.பி.ஐ. மற்றும் மத்திய அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் தனித்தனியே வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்குகளை டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டு விசாரித்து வருகிறது.

    சி.பி.ஐ. வழக்கில் கைது செய்யப்படுவதை தவிர்க்க, ப. சிதம்பரம் கடந்த மே மாதம் டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அவர் நாளை (26-ந் தேதி) வரை கைது செய்யப்படாமல் இருக்க சி.பி.ஐ. கோர்ட்டு விலக்கு அளித்துள்ளது.

    இந்த நிலையில் ப.சிதம்பரம் ஜாமீன் மனுவின் மீது சி.பி.ஐ. பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில் அவர் மீது சரமாரியாக குற்றம் சாட்டி உள்ளது. குறிப்பாக, “ப. சிதம்பரமும், அவரது மகன் கார்த்தி சிதம்பரமும் விசாரணைக்கு ஒத்துழைப்பது இல்லை. எனவே அவர்களை காவலில் வைத்து விசாரிக்க வேண்டும்” என கூறி உள்ளது.

    அதுமட்டுமின்றி, “அவர்கள் ஒத்துழைப்பு இல்லாமல் இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நிர்ணயித்து உள்ள கால வரையறைக்குள் விசாரித்து முடிப்பது மிகவும் சிரமம்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    சி.பி.ஐ.யின் பதில் மனு மீது ப.சிதம்பரம் தரப்பில் சி.பி.ஐ. கோர்ட்டில் நீதிபதி ஓ.பி. சைனி முன்னிலையில் பதில் மனுவை வக்கீல்கள் பி.கே. துபே, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தாக்கல் செய்தனர்.

    அதில், “ சி.பி.ஐ. கூறும் குற்றச்சாட்டுகள் ஆதாரம் இல்லாதவை. இந்த வழக்கில் என்னை காவலில் வைத்து விசாரிக்க தேவை இல்லை. எல்லாமே ஆவண ரீதியிலான ஆதாரங்கள்தான். அவை எல்லாமே சி.பி.ஐ. வசம்தான் உள்ளன. வழக்கின் ஆதாரங்களை, சாட்சியங்களை நான் கலைத்து விடுவேன் என்று கூறுவதற்கு சி.பி.ஐ. எந்த ஆதாரமும் தாக்கல் செய்யவில்லை” என கூறப்பட்டுள்ளது. #aircelmaxiscase #pchidambaram
    ×