search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chief Ministership"

    • கூட்டத்தில் பல்வேறு பரபரப்பு விவாதங்கள் நடந்ததாக கூறப்படுகிறது.
    • கர்நாடகாவில் முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் பதவி காலியாக இல்லை.

    பெங்களூரு:

    கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்து ஓராண்டு ஆகிறது. முதல்-மந்திரியாக சித்தராமையா உள்ளார். துணை முதல்-மந்திரியாக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரான டி.கே.சிவக்குமார் உள்ளார்.

    கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தபோது நீண்ட இழுபறிக்கு பிறகு சித்தராமையாவுக்கு முதல்-மந்திரி பதவியும், டி.கே.சிவக்குமாருக்கு துணை முதல்-மந்திரி பதவியும் வழங்கப்பட்டது. அப்போது முதல்-மந்திரி பதவி ஆளுக்கு 2½ ஆண்டுகள் அதிகாரத்தை பகிா்ந்து அளிப்பது என்று வாய்மொழியாக ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

    ஆனால் அவ்வப்போது சித்தராமையாவின் ஆதரவாளர்கள் கூடுதல் துணை முதல்-மந்திரி பதவி உருவாக்க வேண்டும் என்றும், டி.கே.சிவக்குமார் ஆதரவாளர்கள் அவருக்கு முதல்-மந்திரி பதவி வழங்கவும் போர்க்கொடி தூக்கி வருகிறார்கள்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்-மந்திரி சித்தராமையாவின் ஆதரவு மந்திரி கே.என்.ராஜண்ணா மேலும் 3 துணை முதல்-மந்திரி பதவிகளை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    மேலும் ஒருவருக்கு ஒரு பதவி மட்டுமே வழங்க வேண்டும் என்றும் அவர் கூறினார். அதாவது துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், கட்சியின் மாநில தலைவராகவும் உள்ளார். அவருக்கு ஒரு பதவி மட்டுமே வழங்க வேண்டும் என மந்திரி கே.என் ராஜண்ணா மறைமுகமாக கூறி வருவதாக சொல்லப்படுகிறது.

    இந்த நிலையில் கே.என்.ராஜண்ணாவின் பேச்சுக்கு டி.கே.சிவக்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி சென்றிருந்த முதல்-மந்திரி சித்தராமையா, முதல்-மந்திரி மாற்றம் பற்றி டி.கே.சிவக்குமாரின் தூண்டுதலின் பேரில் மடாதிபதி, சிலர் பேசி வருவதாக கட்சி மேலிட தலைவர்களிடம் புகார் அளித்து இருந்தார்.

    அதுபோல் டி.கே.சிவக்குமாரும் டெல்லி சென்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம், கூடுதல் துணை முதல்-மந்திரி பதவி கேட்டு மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் பேசி வருவதை கூறியதுடன், எக்காரணம் கொண்டும் துணை முதல்-மந்திரிகளை கூடுதலாக நியமிக்க கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார்.

    இதற்கிடையே கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாா் தலைமையில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பெங்களூரு குயின்ஸ் ரோட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதும் இருந்து 190 நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இதில் கலந்துகொண்ட டி.கே.சிவக்குமார் ஆதரவாளர்கள் அவருக்கு முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். மேலும் சில நிர்வாகிகள், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி பேசும் மந்திரிகளுக்கு நோட்டீஸ் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

    இதுகுறித்து விரைவில் முடிவு செய்வதாக டி.கே.சிவக்குமாா் உறுதியளித்தார். சில மந்திரிகள் தன்னை பணிய வைத்துவிடலாம் என்று கருதி பேசுகிறார்கள். அதற்கெல்லாம் பணிந்து செல்பவன் நான் கிடையாது என்று டி.கே.சிவக்குமார் கட்சி நிர்வாகிகளிடம் கூறியதாக கூறப்படுகிறது.

    இந்த நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அவர் பங்கேற்கவில்லை.

    அதனால் முதல்-மந்திரி சித்தராமையா இல்லாமல் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் நடந்து முடிந்துள்ளது. இந்த கூட்டத்தில் பல்வேறு பரபரப்பு விவாதங்கள் நடந்ததாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே கர்நாடக நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் பைரதிசுரேஷ் கூறியதாவது:-

    கர்நாடகாவில் முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் பதவி காலியாக இல்லை. கூடுதலாக 4 அல்லது 5 துணை முதல்-அமைச்சர்கள் பதவி ஏற்பதா என்பது குறித்து கட்சியின் மேலிடம் முடிவு செய்யும் என்றார்.

    ×