search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "child selling case"

    குழந்தை விற்பனை சட்ட விரோதம் என்பதால் இடைதரகர்களாக செயல்பட்ட தனம், ஜெயகீதாவை போலீசார் கைது செய்தனர்.
    சென்னை

    சென்னை புழல் காவாங்கரையை கே.எஸ். நகரைச் சேர்ந்தவர் யாஸ்மின். இவருக்கும் மோகன் என்பவருக்கும் கடந்த 11 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 10 வயதில் மகள் உள்ளார்.

    இந்த நிலையில் யாஸ்மின் 2-வதாக கர்ப்பம் ஆனார். 5 மாத கர்ப்பிணியாக இருந்தபோது கணவர் மோகன் பிரிந்து சென்று விட்டார்.

    இதனால் 2-வது குழந்தையை பெற்று வளர்க்க முடியாதே என எண்ணிய யாஸ்மின் கருக்கலைப்பு செய்ய முடிவு செய்தார். இதற்காக ஜெயகீதா என்பவரின் உதவியை நாடினார்.

    அப்போது ஜெயகீதா குழந்தையை பெற்ற பிறகு அதனை நான் விற்பனை செய்து தருகிறேன் என கூறியுள்ளார். இதனை நம்பி யாஸ்மின் கடந்த 21-ந்தேதி வண்ணாரப்பேட்டையில் உள்ள ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.

    பின்னர் 5 நாட்கள் கழித்து ஜெயகீதாவின் உதவியுடன் குழந்தையை புரசைவாக்கத்தில் வைத்து விற்பனை செய்தார்.

    இதற்காக ஜெயகீதா கவரில் போட்டு கொடுத்த பணத்துடன் யாஸ்மின் சென்றபோது அவரை பின் தொடர்ந்த மர்ம நபர்கள் புளியந்தோப்பில் வைத்து வழிப்பறி செய்து பணத்தை பறித்துச் சென்று விட்டதாக தகவல் வெளியானது.

    இது தொடர்பாக யாஸ்மின் வேப்பேரி போலீசில் புகார் அளித்து இருந்தார். அவர் மீது சந்தேகம் எழுந்ததால் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர்.

    இதில் துப்பு துலங்கியது. குழந்தை விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக இடைத்தரகராக செயல்பட்ட ஜெயகீதா, தனம், லதா, ஆரோக்கிய மேரி ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது குழந்தை ரூ.2½ லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தது.

    விற்பனை செய்யப்பட்ட யாஸ்மினின் குழந்தை சென்னை மூலக்கொத்தளத்தில் இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது.

    இதையடுத்து கீழ்ப்பாக்கம் துணை கமி‌ஷனர் கார்த்திகேயன் மேற்பார்வையில் வேப்பேரி போலீசார் தீவிர விசாரணை நடத்தி குழந்தையை மீட்டனர்.

    இதில் ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்த சிவக்குமார் மற்றும் அவரது மனைவி ஸ்ரீதேவி ஆகியோர் யாஸ்மினிடம் குழந்தையை விலைக்கு வாங்கியது தெரிய வந்தது. பின்னர் ஸ்ரீதேவியின் தாய் வீடான மூல கொத்தளத்துக்கு சென்று தங்கியதும் கண்டு பிடிக்கப்பட்டது.

    ஸ்ரீதேவியின் கணவர் சிவக்குமாரும், இடைத்தரகரான ஆரோக்கிய மேரியும் ஒரே அலுவலகத்தில் பணிபுரிந்து வந்துள்ளனர். சிவகுமாருக்கு கடந்த 13 வருடங்களாக குழந்தை இல்லை. இதனை அறிந்து கொண்டு யாஸ்மினின் குழந்தையை ஆரோக்கியமேரி மூலமாக ஜெயகீதா விலைக்கு வாங்கி கொடுத்ததும் தெரியவந்தது.

    இதற்கிடையே ஜெகன் என்பவர் தனது மனைவி சந்தியாவுடன் வேப்பேரி போலீஸ் நிலையத்தில் ஆஜரானார். அவர் குழந்தை விற்கப்பட்டதாக வெளியான செய்தியையும் யாஸ்மின் வழிப்பறி நடைபெற்றதாக கூறியதையும் அறிந்தேன்.

    யாஸ்மின் என்னிடம் பணத்தை கொடுத்து இருந்தார். பின்னர் அவரே வாங்கி சென்று விட்டார் என கூறினார். இதுவும் இந்த வழக்கு விசாரணைக்கு உதவும் வகையில் அமைந்து இருந்தது.

    இதனைத் தொடர்ந்து தாய் யாஸ்மினை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் குழந்தையை பிரிய மனமின்றி அதுபோன்று நாடகம் ஆடியதாக தெரிவித்தார்.

    இதன் பிறகே குழந்தை விற்பனை விவகாரம் முடிவுக்கு வந்தது. யாஸ்மினையும் குழந்தையையும் அமைந்தகரையில் உள்ள காப்பகத்தில் தங்க வைத்தனர்.

    குழந்தை விற்பனை சட்ட விரோதம் என்பதால் இடைதரகர்களாக செயல்பட்ட தனம், ஜெயகீதாவை போலீசார் கைது செய்தனர்.

    இதன் பின்னணியில் உள்ள மற்றவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் யாஸ்மின் அளித்த வழிப்பறி புகார் பொய்யானது என்பது உறுதியானது. யாஸ்மின் பயணித்த ஓலா ஆட்டோ டிரைவரை கண்டுபிடித்து விசாரித்ததில் அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என்றும், தனக்கு சவாரி கட்டணமாக ரூ.110 கொடுத்தாகவும் அவர் தெரிவித்தார்.

    குழந்தையை விலைக்கு வாங்கிய தம்பதிகள் ரூ.3½ லட்சம் பணத்தை கொடுத்ததும், இதில் இடைத்தரகர்கள் ரூ.1 லட்சத்தை பங்கு போட்டு கொண்டதும் விசாரணையில் அம்பலமாகி இருக்கிறது.

    ×