search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chile regime"

    • அல்லெண்டே ஆட்சியை விட்டு அகற்றி ஆட்சியில் அமர்ந்தார் பினோசெட்
    • ஜராவின் கை விரல்கள் பூட்ஸ் கால்களால் நசுக்கப்பட்டது

    தென் அமெரிக்காவின் மேற்கு பகுதியில் உள்ள நாடு சிலி.

    1973 செப்டம்பரில் இங்கு ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட இடதுசாரி கட்சியை சேர்ந்த சால்வடோர் அல்லெண்டே எனும் அதிபரின் ஆட்சியை, அமெரிக்க உளவுத்துறை அமைப்பான சி.ஐ.ஏ.-வின் மறைமுக துணையுடன் ராணுவ கிளர்ச்சி மூலம் அகற்றி விட்டு, ராணுவ தலைவர் அக்ஸ்டோ பினோசெட் ஆட்சியை கைப்பற்றினார்.

    பிறகு பினோசெட் சுமார் 16 ஆண்டுகள் சிலியில் ஆட்சி புரிந்தார். அல்லெண்டேவின் தீவிர ஆதரவாளர் பாடகர் விக்டர் ஜரா. அமைதி வழிகளிலேயே பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பதை தனது லத்தீன் அமெரிக்க பாடல்கள் மூலம் நாட்டு மக்களுக்கு பிரசாரம் செய்து மிகவும் பிரபலமடைந்தவர் ஜரா.

    மேற்கத்திய பாடல் குழுக்களான யூ2 மற்றும் பாடகர்கள் பாப் டைலன் மற்றும் ப்ரூஸ் ஸ்ப்ரிங்ஸ்டீன் ஆகியோருக்கும் இவர் முன்னுதாரணமாக இருந்தார். 1973 கிளர்ச்சியும் ஆட்சி மாற்றமும் நடந்த சில தினங்களில், செப்டம்பர் 11 அன்று பினோசெட்டின் படையால் பாடகர் ஜரா கைது செய்யப்பட்டார்.

    அப்போது பினோசெட் அரசால் சிறை பிடிக்கப்பட்ட சுமார் 5 ஆயிரம் அரசியல் கைதிகளுடன் ஒரு விளையாட்டு அரங்கத்தில் ஜராவும் சிறை வைக்கப்பட்டு, சித்ரவதை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார். கிட்டார் வாசிப்பதிலும் வல்லவரான அவரது கை விரல்கள் துப்பாக்கியின் பின்புறத்தாலும், பூட்ஸ் கால்களாலும் நசுக்கப்பட்டது. அவர் உடலில் 44 இடங்களை துப்பாக்கி குண்டுகள் துளைத்தது.

    1990 வரை பினோசெட் ஆட்சியில் இருந்தார். பின்பு ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டார். போர் குற்றங்களுக்காக, பினோசெட் ஆட்சியின் பல ராணுவ அதிகாரிகள் மற்றும் பினோசெட் ஆதரவாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இதில் பாடகர் விக்டர் ஜராவின் கொலைக்கான விசாரணையும் அடங்கும்.

    பினோசெட் செய்த அரசியல் கொலைகளுக்காக தண்டனை பெறாமலேயே 2006-இல் உயிரிழந்தார். ஆனாலும் அவருக்கு துணை நின்ற ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்கள் மீது போர்குற்றம் புரிந்ததற்கான வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்தது.

    இதில் விக்டர் ஜராவை சித்ரவதை செய்து கொலை செய்த சிலி நாட்டின் அப்போதைய ராணுவ தளபதியாக இருந்த 85-வயதான ஹெர்னன் சகோன் மற்றும் அவருக்கு துணையாக இருந்த 7 ராணுவ வீரர்கள் ஆகியோரை "குற்றவாளிகள்" என இரு தினங்களுக்கு முன்பு அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    அவர்களுக்கு 25 ஆண்டு கால சிறை தண்டனை வழங்கப்பட்டது.

    இதனையடுத்து ஹெர்னனை சிறைக்கு அழைத்து செல்ல அதிகாரிகள் அவர் வீட்டுக்கு சென்ற போது ஒரு துப்பாக்கியை எடுத்து தன்னைத்தானே சுட்டுக்கொண்டு ஹெர்னன் உயிரிழந்தார்.

    பல வருடங்கள் ஆனாலும், விக்டர் ஜராவின் அநியாய மரணத்திற்கு நீதி வழங்கப்பட்டு விட்டதாக அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ×