search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "chithirai thiruvizha"

    • அதிகாலை 3.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு அதிகாலை 3.45 மணிக்கு கொடியேற்ற மண்டபம் வந்தார்.
    • விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் வருகிற 6-ந் தேதி நடைபெறுகிறது.

    திருச்சி:

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. இதையொட்டி இன்று அதிகாலை 3.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு அதிகாலை 3.45 மணிக்கு கொடியேற்ற மண்டபம் வந்தார். பின்னர் காலை 5.30 மணிமுதல் காலை 6.15 மணிக்குள் மேஷ லக்னத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து காலை 7.30 மணிக்கு நம்பெருமாள் கொடிமண்டபத்தில் இருந்து புறப்பட்டு காலை 7.45 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைந்தார். மாலை 4.30 மணிமுதல் 5.30 மணிவரை பேரிதாடனம் நடைபெறுகிறது.

    பின்னர் மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் புறப்பட்டு சித்திரை வீதிகள் உலா வந்து இரவு 8.30 மணிக்கு சந்தனு மண்டபம் வந்தடைகிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு யாகசாலையை சென்றடைகிறார். அங்கு நம்பெருமாள் திருமஞ்சனம் கண்டருளுகிறார்.

    பின்னர் அங்கிருந்து புறப்பட்டு நாளை 29-ந் தேதி அதிகாலை 2 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைகிறார். விழாவின் இரண்டாம் நாளான நாளை (29-ந்தேதி) மாலை கற்பகவிருஷ வாகனத்திலும், 30-ந்தேதி காலை சிம்ம வாகனத்திலும், மாலை யாளி வாகனத்திலும், 1-ந்தேதி காலை இரட்டை பிரபை வாகனத்திலும், மாலை கருட வாகனத்திலும், 2-ந்தேதி காலை சேஷ வாகனத்திலும், மாலை அனுமந்த வாகனத்திலும், 3-ந்தேதி காலை தங்க ஹம்ச வாகனத்திலும், மாலை யானை வாகனத்திலும் நம்பெருமாள் எழுந்தருளி சித்திரை வீதிகளில் உலா வருகிறார்.

    4-ந்தேதி நெல்லளவு கண்டருளுகிறார். 5-ந்தேதி காலை வெள்ளி குதிரை வாகனத்திலும், மாலை தங்க குதிரை வாகனத்திலும் வீதி உலா வருகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் வருகிற 6-ந் தேதி நடைபெறுகிறது. 7-ந்தேதி சப்தாவரணம் நடைபெறுகிறது. 8-ந்தேதி ஆளும்பல்லக்குடன் சித்திரை தேர்திருவிழா நிறைவடைகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரியப்பன், கோவில் உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன், அதிகாரிகள், மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    • அழகருக்கு தண்ணீர் பீய்ச்சி அடிப்பதில் பாரம்பரிய விதிகளையே கடைபிக்க வேண்டும்.
    • அரசின் நடவடிக்கைகள் நீதிமன்றத்திற்கு திருப்தி அளிக்கிறது.

    மதுரை சித்திரை திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. அதிலும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் சிறப்பானது. அழகர் ஆற்றில் இறங்கும்போது அவர் மீது தண்ணீர் பீய்ச்சுவதை நேர்த்திக்கடனாக வைத்து பக்தர்கள் செய்வது வழக்கம்.

    இந்நிலையில், மதுரை சித்திரைத் திருவிழா ஏற்பாடு தொடர்பாக, இந்து சமய அறநிலையத் துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை பாராட்டுகளை தெரிவித்துள்ளது.

    மேலும், கள்ளழகர் வைபவத்தில், ஆற்றில் இறங்க 2,400 பேரை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

    அழகருக்கு தண்ணீர் பீய்ச்சி அடிப்பதில் பாரம்பரிய விதிகளையே கடைபிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

    ரசாயனம் கலந்த தண்ணீரோ அல்லது பால், தயிர் கலந்த தண்ணீரை அடிக்கக்கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

    அரசின் நடவடிக்கைகள் நீதிமன்றத்திற்கு திருப்தி அளிக்கிறது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    • மின் ஊழியர்கள் மின்கம்பத்தில் ஏறி சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.
    • மின்கம்பத்தில் இருக்கும் ராடு குத்தியதில் ஊழியர்கள் 2 பேர் காயம் அடைந்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பெரிய கோவிலில் இன்று காலை சித்திரை பெருவிழா தேரோட்டம் தொடங்கியது. தஞ்சை மேலவீதியில் இருந்து தேர் காலை 7 மணிக்கு வடம் பிடித்து புறப்பட்டது.

    அப்போது புறப்பட்ட சிறிது நேரத்தில் ஒரு தனியார் நிறுவன பெயர் பலகையில் தேரின் அலங்கார பந்தல் திடீரென சிக்கி கொண்டது. பின்னர் அதனை சரிசெய்து 15 நிமிடங்களுக்கு பிறகு தேர் புறப்பட்டது.

    இதையடுத்து நகர்ந்த தேர் கொங்கனேஸ்வரர் கோவில் அருகே சென்றபோது, மீண்டும் வலது புற மின் கம்பத்தில் தேரின் அலங்காரப் பந்தல் சிக்கியது. பின்னர் இடையூறாக இருந்த மின் கம்பி அகற்றப்பட்ட பிறகு தேர் சுமார் 10 நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் புறப்பட்டு சென்றது.

    ஆனால் அடுத்த 50 அடி தொலைவில் வலது புற மின் கம்பத்தில் தேரின் அலங்காரப் பந்தல் வலது புற மின் கம்பத்தில் சிக்கியதால் மீண்டும் தேர் நின்றது.

    இதையடுத்து மின் ஊழியர்கள் மின்கம்பத்தில் ஏறி சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது மின்கம்பத்தில் இருக்கும் ராடு குத்தியதில் ஊழியர்கள் 2 பேர் காயம் அடைந்தனர்.

    இருந்தாலும் அலங்கார பந்தலை மின் கம்பத்தில் இருந்து அகற்றி சரி செய்யப்பட்டது. தொடர்ந்து காயமடைந்த ஊழியர்கள் 2 பேரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இப்படி 3 முறை மின் கம்பங்களில் சிக்கி தேர் அடிக்கடி நின்றதற்கு அலங்காரப் பந்தலின் அகலம் வழக்கத்தை விட அதிகம் என்பதே முதன்மை காரணமாக கூறப்பட்டது. இதனால் அலங்கார பந்தலின் அகலத்தை தொழிலாளர்கள் குறைத்தனர். அதன் பின்னர் தேரோட்டம் தொடங்கி நடைபெற்றது.

    • பக்தர்களின் வசதிக்காக திருக்கல்யாண மண்டபம், பக்தர்கள் அமரும் பகுதியில் குளிர்சாதன வசதி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.
    • நாளை இரவு யானை, ஆனந்தராயர் பூப்பல்லக்கில் சுவாமி-அம்பாள் வீதி உலா நடக்கிறது.

    மதுரை:

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் நாள்தோறும் காலை, இரவு நேரங்களில் சுவாமி-அம்பாள் மாசி வீதிகளில் உலா வந்து அருள்பாலித்து வருகின்றனர்.

    விழாவின் 8-ம் நாளான நேற்று மதுரை நகரின் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் வகையில் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடந்தது. கோவிலில் உள்ள அம்மன் சன்னதி முன்பு உள்ள ஆறுகால் பீடத்தில் நடந்த நிகழ்ச்சியில் ராயர் கீரிடம் சாற்றி, ரத்தின செங்கோலுடன் மீனாட்சி காட்சி அளித்தார்.

    கோவில் அறங்காவலர் குழு தலைவர் ருக்மணி பழனிவேல்ராஜன் அம்மனிடம் இருந்து செங்கோல் பெற்று பிரகாரம் சுற்றி வந்தார். அதனை தொடர்ந்து பட்டத்தரசியாக அம்மனும், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் மாசி வீதிகளில் வெள்ளி சிம்மாசனத்தில் (கைபாரம்) எழுந்தருளினார். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    9-வது நாளான இன்று காலை மரவர்ண சப்பரத்தில் சுவாமி-அம்பாள் எழுந்தருளினர். திக்கு விஜயபுராண வரலாற்று நிகழ்வினை குறிக்கும் வகையில் இன்று இரவு திக்குவிஜயம் நடக்கிறது. அரசியான மீனாட்சி இந்திர விமானத்தில் 4 மாசி வீதிகளில் எழுந்தருளி அஷ்ட திக்கு பாலகர்களை போரில் வெற்றி கொள்ளும் நிகழ்வு நடக்கிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நாளை (21-ந்தேதி) நடக்கிறது. இதற்காக கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபம் தயார் செய்யப்பட்டு வருகிறது. ரூ.30 லட்சம் செலவில் பல டன் மலர்களால் மணமேடை அலங்கரிக்கப்பட்டு வருகிறது. மேலும் பக்தர்களின் வசதிக்காக திருக்கல்யாண மண்டபம், பக்தர்கள் அமரும் பகுதியில் குளிர்சாதன வசதி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.

    நாளை அதிகாலை திருக்கல்யாணத்தில் பங்கேற்பதற்காக திருப்பரங்குன்றத்தில் இருந்து சுப்பிரமணிய சுவாமியும், பவளக்கனிவாய் பெருமாளும் புறப்பாடாகி மீனாட்சி அம்மன் கோவிலில் எழுந்தருளுகிறார்கள். அதிகாலை 4 மணிக்கு கோவில் மண்டகப்படிகளில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் சுவாமி-அம்மன் உலா வருகின்றனர். பின்னர் முத்துராமய்யர் மண்டபத்தில் கன்னி ஊஞ்சலாடும் நிகழ்வு நடக்கிறது.

    அதனை தொடர்ந்து திருக்கல்யாண நிகழ்ச்சிகள் தொடங்குகிறது. முதலில் மணமேடையில் முருகப் பெருமான், பவளக்கனிவாய் பெருமாள் எழுந்தருளுகின்றனர். அதன்பின் மணக்கோலத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் வருகை தருவார்கள். தொடர்ந்து காலை 8.35 மணி முதல் 8.59 மணிக்குள் மீனாட்சி திருக்கல்யாணம் விமரிசையாக நடக்கிறது.

    கோவிலில் நேரடியாக திருக்கல்யாணத்தை காண 12 ஆயிரம் பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக சிறப்பு அனுமதி சீட்டு பெற்றவர்கள் 4 கோபுர நுழைவுவாயில் வழியாக செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சித்திரை வீதிகள் மற்றும் கோவிலை ஒட்டியுள்ள பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள எல்.இ.டி. திரை மூலம் திருக்கல்யாண நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் திருக்கல்யாண விருந்து வழங்கப்படுகிறது. பக்தர்கள் ஆயிரக்கணக்கில் கூடுவார்கள் என்பதால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    நாளை இரவு யானை, ஆனந்தராயர் பூப்பல்லக்கில் சுவாமி-அம்பாள் வீதி உலா நடக்கிறது. மறுநாள் (21-ந் தேதி) காலை தேரோட்டம் நடைபெறுகிறது.

    • அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளிய தியாகராஜர், கமலாம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
    • தேருக்கு முன்பாக ஓதுவார்கள் திருமுறைகளை பாடியபடி சென்றனர்.

    தஞ்சாவூர்:

    உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா 18 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி, இந்த ஆண்டுக்கான சித்திரை பெருவிழா கடந்த 6-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, காலை, மாலை வேளைகளில் சுவாமி, அம்பாள் புறப்பாடு ராஜவீதிகளில் நடைபெற்று வருகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. முன்னதாக அதிகாலை 5.30 மணிக்கு பெரிய கோவிலில் இருந்து தியாகராஜர், கமலாம்பாள், விநாயகர், நீலோத்பலாம்பாள், வள்ளி, தெய்வானை உடனுறை சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் முத்துமணி அலங்கார சப்பரத்தில் எழுந்தருளி அங்கிருந்து புறப்பட்டு மேலவீதியில் உள்ள தேர்நிலை மண்டபத்துக்கு வந்தடைந்தனர்.

    பின்னர், அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளிய தியாகராஜர், கமலாம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதனையடுத்து 7 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. கலெக்டர் தீபக்ஜேக்கப், போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத், ஆணையர் மகேஸ்வரி, பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜாபோன்ஸ்லே ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

    பின்னர், தேருக்கு முன்பாக, விநாயகர், சுப்பிரமணியர் சப்பரங்களும், பின்னால் நீலோத்பலாம்பாள், சண்டிகேஸ்வரர் சப்பரங்களும் பின் தொடர்ந்து செல்ல தியாகராஜர்- கமலாம்பாள் எழுந்தருளிய தேர் பக்தர்கள் வெள்ளத்தில் அசைந்தாடியபடி சென்றது.

    இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு 'ஆரூரா, தியாகேசா' என்ற பக்தி முழக்கத்துடன் வடம்பிடித்து தேரை இழுத்து சென்றனர். பக்தர்களின் பக்தி கோஷம் விண்ணை முட்டியது.

     

    தேருக்கு முன்பாக ஓதுவார்கள் திருமுறைகளை பாடியபடி சென்றனர். மேலும் சிவவாத்தியங்களும் இசைக்கப்பட்டன. கோலாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் தேருக்கு முன்னாள் நடத்தப்பட்டன.

    நான்கு ராஜ வீதிகள் வழியாக தேர் அசைந்தாடியபடி சென்று கொண்டிருக்கிறது. மொத்தம் 14 இடங்களில் நிறுத்தப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டு, அர்ச்சனை நடைபெற்றது. பக்தர்கள் தேங்காய், பழம் கொடுத்து அர்ச்சனை செய்தனர். இன்று பிற்பகலில் தேர் நிலையை வந்து அடையும்.

    பக்தர்களின் வசதிக்காக பல்வேறு இடங்களில் தன்னார்வலர்கள் நீர் மோர் பந்தல்கள் அமைத்திருந்தனர். பல்வேறு இடங்களில் அன்னதானமும் வழங்கப்பட்டது.

    இந்த தேர் திருவிழாவில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கவிதா, சதய விழாக்குழு தலைவர் து.செல்வம் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பாதுகாப்பு பணியில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    • இந்த ஆண்டு கள்ளழகரின் மீது தண்ணீர் பீய்ச்ச முறையாக பதிவு செய்து முன் அனுமதி பெற வேண்டும்.
    • பலர் நேர்த்திக்கடன் வைத்து தண்ணீர் பீய்ச்சுவர்.

    மதுரை:

    மதுரையை சேர்ந்த ரஞ்சித் குமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    மதுரை சித்திரை திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. அதிலும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் சிறப்பானது. அழகர் ஆற்றில் இறங்கும்போது அவர் மீது தண்ணீர் பீய்ச்சுவதை நேர்த்திக்கடனாக வைத்து பக்தர்கள் செய்வது வழக்கம்.

    இந்நிலையில் இந்த ஆண்டு கள்ளழகரின் மீது தண்ணீர் பீய்ச்ச முறையாக பதிவு செய்து முன் அனுமதி பெற வேண்டும். பாரம்பரிய முறையில் மட்டுமே தண்ணீர் பீய்ச்ச வேண்டும் என தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி கள்ளழகர் கோவிலின் இணை ஆணையரால் அனுமதிக்கப்பட்டவர்கள் மட்டுமே எதிர்சேவை நிகழ்வின்போது கள்ளழகரின் மீது தண்ணீரை பீய்ச்ச இயலும்.

    இதனால் என் போன்றோர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இது தனிநபரின் வழிபடும் உரிமைக்கு எதிரானது. ஆகவே முறையாக முன் அனுமதி பெற்றவர்கள் மட்டும், பாரம்பரிய முறையில் கள்ளழகரின் மீது தண்ணீர் பீய்ச்ச வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவின் அடிப்படையில் மாவட்ட கலெக்டர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள்முருகன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், கள்ளழகரின் சிலை, ஆபரணங்கள், குருக்கள் மீது தண்ணீரை அதிக அழுத்தத்தில் பீய்ச்சுவதை தடுக்க வேண்டும். ஆனால் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதை எவ்வாறு தடுப்பது? என கேள்வி எழுப்பினர்.

    அதற்கு அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீரா கதிரவன் ஆஜராகி, தோல் பைகளில் தண்ணீர் நிரப்பி, இடுப்பில் கட்டிக்கொண்டு அழுத்தம் கொடுத்தே தண்ணீர் பீய்ச்சுவர். கோடை காலத்தில் தண்ணீர் பீய்ச்சுவது அனைவருக்கும் இதமாகவே அமையும். கள்ளழகரின் ஆசி பெரும் வகையிலேயே தண்ணீர் அனைவரின் மீதும் பீய்ச்சப்படுகிறது.

    இதன் காரணமாகவே, தண்ணீர் பீய்ச்சுபவர்கள் பெரும்பாலும் அழகர் வேடமணிந்திருப்பர். மாவட்ட கலெக்டர் உத்தரவால் பக்தர்கள் மிகுந்த மன வருத்தத்திற்கு உள்ளாகி உள்ளனர் எனவே தண்ணீர் பீச்சி அடிக்கும் கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்ள வேண்டும் என வாதிட்டார்.

    இதைத்தொடர்ந்து நீதிபதிகள், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தின்போது, பிற மாவட்டங்கள் மட்டுமன்றி பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் வந்து கலந்து கொள்வர். கோடை காலத்தில் வெப்பத்தை குறைக்கும் விதமாகவே தண்ணீர் பீய்ச்சப்படுகிறது. இந்த வழக்கம் வேறு பல கோவில்களிலும் நடைமுறையில் உள்ளது. இதனால் பலர் நேர்த்திக்கடன் வைத்து தண்ணீர் பீய்ச்சுவர்.

    மாவட்ட கலெக்டரின் இந்த உத்தரவால், தற்போது வரை 7 பேர் மட்டுமே தண்ணீர் பீய்ச்ச அனுமதி பெற்றுள்ளனர். இது பாரம்பரிய நடைமுறையை பாதிப்பதோடு, பக்தர்களின் மனதையும் புண்படுத்தும் என கருதுவதால் மாவட்ட கலெக்டர் உத்தரவுக்கு தடை விதிக்கப்படுகிறது.

    எதனடிப்படையில் நபர்களை தேர்வு செய்கிறார்கள்? என்பது குறித்து கள்ளழகர் கோவிலின் இணை ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மதுரை மாவட்ட கலெக்டர் எந்த அதிகாரத்தின் அடிப்படையில் இந்த உத்தரவை பிறப்பித்தார்? சட்ட அலுவலர் அல்லது கோவில் நிர்வாகத்திடம் ஆலோசிக்கப்பட்டதா? என்பது குறித்து விளக்கமளிக்கும் வகையில் அவர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கை வருகிற 22-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 20-ந்தேதி (சனிக்கிழமை) மாலை மாப்பிள்ளை அழைப்பு விருந்து நடக்கிறது.
    • தேவையான காய்கறிகளை பரவை, மாட்டுத்தாவணி காய்கறி சந்தை வியாபாரிகளும், சமையல் கியாஸ் சிலிண்டர்களை எரிவாயு நிறுவனத்தினரும் வழங்குகின்றனர்.

    மதுரை:

    உலகப் புகழ்பெற்ற மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் வருகிற 21-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். சுவாமி-அம்மன் திருக்கல்யாணம் முடிந்த பின்பு பக்தர்களுக்கு கல்யாண விருந்து வழங்கப்படுவது வழக்கம்.

    கடந்த சில ஆண்டுகளாக பாதுகாப்பு காரணங்களுக்காக மீனாட்சி பஜார் அருகே உள்ள சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் விருந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டும் திருக்கல்யாண விருந்து வழங்கப்பட உள்ளது. 20-ந்தேதி (சனிக்கிழமை) மாலை மாப்பிள்ளை அழைப்பு விருந்து நடக்கிறது.

    திருக்கல்யாணத்தன்று காலை 7 மணி முதல் இடைவெளி இல்லாமல் பக்தர்கள் அனைவருக்கும் கற்கண்டு சாதம், வெண்பொங்கல், சாம்பார் சாதம், தக்காளி சாதம், வடை, பச்சடி ஆகியவை வழங்கப்பட உள்ளன. இதற்கு தேவையான காய்கறிகளை பரவை, மாட்டுத்தாவணி காய்கறி சந்தை வியாபாரிகளும், சமையல் கியாஸ் சிலிண்டர்களை எரிவாயு நிறுவனத்தினரும் வழங்குகின்றனர்.

    அரிசி, பருப்பு, எண்ணெய், நெய் மற்றும் மளிகை பொருட்களை பொதுமக்களும், பக்தர்களும் வழங்கி வருகின்றனர். எனவே விருந்துக்கு தேவையான பொருட்களை கொடுக்க விரும்புபவர்கள் சேதுபதி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வழங்கலாம்.

    மேற்கண்ட தகவலை பழமுதிர்ச்சோலை திருவருள் முருகன் பக்த சபை தெரிவித்துள்ளது.

    • சித்திரை திருவிழாவுக்கான பந்தக்கால் முகூர்த்தம் கடந்த பிப்ரவரி மாதம் 8-ந்தேதி நடைபெற்றது.
    • கடைசி நாளான 23-ந்தேதி தீர்த்த வாரி விழாவும், மாலையில் வெள்ளி ரிஷப வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடைபெறுகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பெரிய கோவில் மாமன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. உலக பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு தினமும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள், பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

    இத்தகைய பல்வேறு சிறப்புகள் வாய்ந்த பெரிய கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் சித்திரை திருவிழா 18 நாட்கள் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு சித்திரை திருவிழாவுக்கான பந்தக்கால் முகூர்த்தம் கடந்த பிப்ரவரி மாதம் 8-ந்தேதி நடைபெற்றது.

    இந்த நிலையில் 18 நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழா கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 20-ந் தேதி (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு மேல் 7.20 மணிக்குள் நடைபெற உள்ளது.

    விழாவின் கடைசி நாளான 23-ந்தேதி தீர்த்த வாரி விழாவும், மாலையில் வெள்ளி ரிஷப வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடைபெறுகிறது. அன்றைய தினம் மாலையில் கொடியிறக்கத்துடன் விழா முடிவடைகிறது.

    இந்நிலையில் தஞ்சை பெரிய கோவில் சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு அம்மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு வருகிற 20-ந்தேதி விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் அறிவித்துள்ளார்.

    தஞ்சாவூர் மாவட்ட அரசு அலுவலகங்களுக்கும் ஏப்.20-ந்தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    • 21-ந்தேதி அழகர் மலையில் இருந்து கள்ளழகர் மதுரைக்கு புறப்பாடாகிறார்.
    • 22-ந்தேதி புதூரில் எதிர்சேவையும், 23-ந்தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபமும் நடக்கிறது.

    மதுரை:

    தமிழகத்தில் நடைபெறும் திருவிழாக்களில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா பிரசித்தி பெற்றதாகும். வருடத்தின் 12 மாதங்களும் மீனாட்சி அம்மன் கோவிலில் பல்வேறு திருவிழாக்கள் நடந்தாலும் சித்திரை மாதத்தில் நடக்கும் சித்திரை திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதனைத்தொடர்ந்து கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா நடக்கும்.

    மதுரையில் சைவமும், வைணவமும் இணையும் வகையில் நடக்கும் சித்திரை திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். அத்தகைய சிறப்பு வாய்ந்த மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று (12-ந்தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கியது. சித்திரை திருவிழா இன்று தொடங்கி வருகிற 23-ந்தேதி வரை நடக்கிறது.

    விழாவில் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் மறுநாள் (21-ந்தேதி) விமரிசையாக நடைபெறுகிறது. அன்று இரவு மணக்கோலத்தில் சுவாமி-அம்பாள் யானை, ஆனந்தராயர் பூப்பல்லக்கில் வீதி உலா வருகின்றனர்.

    22-ந்தேதி காலை திருத்தேரோட்டம் நடக்கிறது. 23-ந் தேதி இரவு வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி-அம்பாள் வீதி உலா வருகிறார்கள்.

    சித்திரை திருவிழாவின் நடைபெறும் நாட்களில் தினமும் இரவு சுவாமி-அம்பாள் 4 மாசி வீதிகளில் உலா வருகிறார்கள். அப்போது சாலையின் இருபுறமும் பல்லாயிரக்கணக்கானோர் குடும்பம், குடும்பமாக வந்து சாமி தரிசனம் செய்வார்கள். இதன் காரணமாக மாசி வீதிகள் மக்கள் வெள்ளத்தில் தத்தளிக்கும்.

    மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா இறுதிக்கட்டத்தை எட்டும்போது பிரசித்தி பெற்ற கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா வருகிற 19-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை நடக்கிறது. 21-ந்தேதி அழகர் மலையில் இருந்து கள்ளழகர் மதுரைக்கு புறப்பாடாகிறார்.

    22-ந்தேதி புதூரில் எதிர்சேவையும், 23-ந்தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபமும் நடக்கிறது.

    இந்நிலையில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் திருவிழாவையொட்டி ஏப்.23-ந்தேதி மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஏப்.23-ந்தேதிக்கு பதிலாக மே 11-ந்தேதி சனிக்கிழமை வேலை நாள் என்று மாவட்ட கலெக்டர் சங்கீதா அறிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இன்று கொடியேற்று விழாவை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு திருவனந்தல் பூஜை நடந்தது.
    • காலை 6.30 மணிக்கு சங்கரலிங்கசுவாமி சன்னதி முன்பு அமைந்துள்ள கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது.

    சங்கரன்கோவில்:

    தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் சித்திரை பிரமோற்சவ திருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

    விழா நாட்களில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதிஉலா வருவர். இந்த ஆண்டிற்கான சித்திரை பிரமோற்சவ திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக நேற்று பெருங்கோட்டூர் சென்று கோவில் யானை கோமதி பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    இன்று கொடியேற்று விழாவை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு திருவனந்தல் பூஜை நடந்தது. தொடர்ந்து கொடிப்பட்டம் வீதி உலா நடந்தது. காலை 6.30 மணிக்கு சங்கரலிங்கசுவாமி சன்னதி முன்பு அமைந்துள்ள கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து கொடிமரத்துக்கு அபிஷேகங்கள், தீபாராதனை நடைபெற்றது. இதில் அறங்காவலர் குழு தலைவர் வக்கீல் சண்முகையா, துணை ஆணையர் கோமதி, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ராமகிருஷ்ணன், வெள்ளைச்சாமி, முத்துலட்சுமி, முப்பிடாதி உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 21-ந்தேதி (ஞாயிறுக்கிழமை) காலை 9 மணிக்கு மேல் நடைபெறுகிறது.

    சித்திரைத்திருநாளில் சுவாமி, அம்பாள் இரண்டு தேர்களும் ஓடும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • டிக்கெட் பதிவு செய்ய வருபவர்கள் ஆதார் நகல், போட்டோவுடன் கூடிய அடையாளச் சான்று, மொபைல் எண், இ-மெயில் முகவரி ஆகியவை அளிக்க வேண்டும்.
    • அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் முன்பதிவு செய்திருந்தால் குலுக்கல் முறையில் தேர்வு செய்து மொபைல் மற்றும் இ-மெயிலில் 14-ந்தேதி அன்று தகவல் தெரிவிக்கப்படும்.

    மதுரை:

    உலகப் புகழ்பெற்ற மதுரையில் முத்திரை பதிக்கும் மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா வருகிற 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று காலை 9.55 மணிக்கு மேல் 10.19 மணிக்குள் மிதுன லக்னத்தில் சுவாமி சன்னதி கொடி மரத்தில் கொடியேற்றப்படுகிறது.

    விழா நாட்களில் மீனாட்சி-சுந்தரேசுவரர் காலை, இரவு என இரு வேளைகளும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, மாசி வீதிகளை வலம் வருவர். ஏப்ரல் 19-ந்தேதி மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், 20-ந்தேதி திக்கு விஜயம் நடைபெறுகிறது.

    சிகர நிகழ்ச்சியாக மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் 21-ந்தேதி நடக்கிறது. அன்றைய தினம் காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் திருக்கல்யாண வைபவங்கள் மேற்கு, வடக்கு ஆடி வீதி சந்திப்பில் நடைபெறும்.

    இந்தாண்டு மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை பக்தர்கள் காண வசதியாக ரூ.200, ரூ.500 கட்டண சீட்டுகள் வைத்திருப்பவர்கள் வடக்கு கோபுரம் வழியாகவும், கட்டணமில்லா தரிசன முறையில் முதலில் வருபவர்களுக்கு முதலில் அனுமதி என்ற முறையில் தெற்கு கோபுரம் வழியாக மொத்தம் சுமார் 12 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

    இதற்கான கட்டண டிக்கெட் முன்பதிவானது கோவில் இணையதளமான maduraimeenakshi.hrce.tn.gov.in மற்றும் இந்து சமய அறநிலையத்துறை இணையதளமான hrce.tn.gov.in ஆகியவற்றில் இன்று (9-ந்தேதி) தொடங்கி வருகிற 13-ந்தேதி இரவு 9 மணி வரை பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    ஒருவர் இரண்டு ரூ.500 கட்டண டிக்கெட் மட்டுமே பெறமுடியும். ரூ.200 டிக்கெட்டை ஒருவர் 3 பெறலாம். ஒரே நபர் ரூ.500, ரூ.200 டிக்கெட்டுகளை பெற முடியாது. இந்த பதிவின்போது, பிறந்த தேதி சரியாக இருக்க வேண்டும்.

    பக்தர்களின் வசதிக்காக கோவிலுக்கு சொந்தமான மேற்கு சித்திரை வீதி பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதியில் கோவில் பணியாளர்கள் மூலம் ரூ.500, ரூ.200 டிக்கெட் முன்பதிவு வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    டிக்கெட் பதிவு செய்ய வருபவர்கள் ஆதார் நகல், போட்டோவுடன் கூடிய அடையாளச் சான்று, மொபைல் எண், இ-மெயில் முகவரி ஆகியவை அளிக்க வேண்டும். அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் முன்பதிவு செய்திருந்தால் குலுக்கல் முறையில் தேர்வு செய்து மொபைல் மற்றும் இ-மெயிலில் 14-ந்தேதி அன்று தகவல் தெரிவிக்கப்படும்.

    அவ்வாறு டிக்கெட் உறுதி செய்யப்பட்ட தகவல் கிடைத்தவர்கள் வருகிற 15-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதியில் தங்களுக்கு வந்த எஸ்.எம்.எஸ்., இ-மெயிலை காண்பித்து பணம் செலுத்தி திருக்கல்யாண டிக்கெட்டை பெறலாம்.

    டிக்கெட் பெற்றவர்கள், திருக்கல்யாண நாளான வருகிற 21-ந்தேதி காலை 7 மணிக்குள் கோவிலுக்கு வந்து, அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் அமர்ந்து மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தை தரிசிக்கலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • கள்ளழகர் வருகையின்போது அழகர் வேடமிட்ட பக்தர்கள் அவர் வைகை ஆற்றில் இறங்கும்போது நீரை பீய்ச்சி அடிக்கும் நேர்த்திக் கடனை செலுத்துவர்.
    • தோல் பையில் மோட்டார் பொருத்தி அதிவேகத்தில் தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை கட்டுப்படுத்தும் வகையில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    மதுரை:

    மதுரை சித்திரை திருவிழா வருகிற 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம் 23-ந்தேதி சித்திரா பவுர்ணமி தினத்தன்று நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியை காண தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரைக்கு வருகை தர உள்ளனர். நடப்பாண்டில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பல்வேறு முன்னேற்பாடுகளையும், பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் விரைவாக நடத்தி வருகிறது.

    இந்த சூழலில் சித்திரை திருவிழாவில் கலந்து கொள்ள வரும் பக்தர்களுக்கு உணவு, தண்ணீர், பானகம் உள்ளிட்டவற்றை வழங்குவதற்கு மாவட்ட உணவு பாதுகாப்பு துறையில் முன் அனுமதி பெற வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு முன்பு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவின்பேரில் இனிவரும் ஆண்டுகளில் உணவு பாதுகாப்புத்துறையின் அனுமதி பெற்ற பிறகே நீர், மோர் பந்தல், அன்னதானம் உள்ளிட்டவற்றை பக்தர்கள் வழங்க வேண்டும்.

    அதேபோல் கள்ளழகர் வருகையின்போது அழகர் வேடமிட்ட பக்தர்கள் அவர் வைகை ஆற்றில் இறங்கும்போது நீரை பீய்ச்சி அடிக்கும் நேர்த்திக் கடனை செலுத்துவர். இந்த நேர்த்திக்கடனின்போது தோல் பையில் நிரப்பிய தண்ணீரை துருத்தியின் மூலமாக பீய்ச்சி அடிப்பது வழக்கம்.

    ஆனால் கடந்த சில ஆண்டுகளாக சிலர் தோல் பையில் சிறிய மோட்டார் பொருத்தி அதிவேகத்தோடு நீரை பீய்ச்சி அடிப்பதுடன் வாகனத்தில் வரும் அழகர், அழகருடன் பயணிக்கும் பட்டர்கள், பெண்கள், பக்தர்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில் தோல் பையில் மோட்டார் பொருத்தி அதிவேகத்தில் தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை கட்டுப்படுத்தும் வகையில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    இதையொட்டி அழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து நேர்த்திக்கடன் செலுத்த விரும்பும் பக்தர்கள் கோவில் நிர்வாகத்தில் முன்பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு இன்று (7-ந்தேதி) தொடங்கி வருகிற 20-ந் தேதி வரை நடைபெறுகிறது. அதே சமயம் உயரழுத்த மோட்டார் பம்பு, மின் மோட்டார்கள் ஆகியவற்றின் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கள்ளழகர் அழகர் கோவில் மலையில் இருந்து புறப்பட்டு வைகை ஆற்றுக்கு வரும் வரை இடையில் உள்ள எந்த இடத்திலும் தண்ணீரை பீய்ச்சி அடிக்கக்கூடாது என ஐகோர்டு பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    ×