search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Class II"

    2-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வீட்டுப்பாடங்கள் கொடுக்கக்கூடாது என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்தது.
    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில், சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் குறித்து வக்கீல் எம்.புருஷோத்தமன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.,) நாடு முழுவதும் உள்ள சி.பி.எஸ்.இ. மற்றும் மாநில பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிக்கூடங்கள், 1 மற்றும் 2-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் வழங்கக்கூடாது என்பது உள்பட பல உத்தரவுகளை பிறப்பித்தார்.

    இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, 2-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வீட்டுப்பாடங்களை பல பள்ளிகள் கொடுக்கின்றன என்று நீதிபதி கருத்து தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    அப்போது மத்திய அரசு சார்பில் உதவி சொலிசிட்டர் ஜெனரல் கார்த்திகேயன் ஆஜராகி, 1 மற்றும் 2-ம் வகுப்பு குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது என்று அனைத்து மாநிலங்களின் கல்வித்துறை செயலாளர்களுக்கு மத்திய மனித வளம் மேம்பாட்டு அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது என்று கூறி, அந்த சுற்றறிக்கையை தாக்கல் செய்தார்.

    சி.பி.எஸ்.இ. சார்பில் வக்கீல் நாகராஜன் ஆஜராகி, எங்களுக்கு இன்னும் அந்த சுற்றறிக்கை வரவில்லை என்று கூறினார். இதையடுத்து, அவருக்கு நகல் வழங்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தார். 
    ×