search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Collective Newsroom"

    • பிபிசி இந்தியா சார்பில் குஜராத் கலவரம் தொடர்பாகவும் ஆவணப்படம் வெளியானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது
    • இந்திய பிபிசி நிறுவனத்தின் தில்லி, மும்பை அலுவலகங்களில் வருமானவரித் துறை சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன

    பிபிசி இந்தியா என்கிற பெயரில் பிரிட்டன் அரசாங்கத்தின் பொது நிறுவனத்தின் கிளையாக இயங்கிவந்த நிறுவனமே, பிபிசி செய்திகளை வெளியிட்டு வந்தது. அதன் அனைத்து அம்சங்களுக்கும் முழுமையாக பிபிசி நிறுவனமே பொறுப்பாக இருந்துவந்தது. இங்கு பணியாற்றும் ஏழு மொழிகளின் பிரிவுகளைச் சேர்ந்த 200+ ஊழியர்களும் பிபிசி ஊழியர்களாக இருந்துவந்தனர்.

    பிபிசி இந்தியா சார்பில் குஜராத் கலவரம் தொடர்பாகவும் அப்போது முதல்வராக இருந்த தற்போதைய பிரதமர் மோடி குறித்தும் ஆவணப்படம் கடந்தாண்டு வெளியிடப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    அதானி குழுமம் தொடர்பான இண்டென்பர்க் அறிக்கையை முன்வைத்து பிபிசி சிறப்புச் செய்திகளை வழங்கியிருந்தது.

    இந்நிலையில், குஜராத் கலவரம் தொடர்பான ஆவணப்படம் வெளியான அடுத்த சில வாரங்களில் இந்திய பிபிசி நிறுவனத்தின் தில்லி, மும்பை உட்பட்ட அலுவலகங்களில் வரி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் வருமானவரித் துறை சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

    விதிமுறை மீறல் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்பட்டதால் அந்நிறுவனத்தின் அலுவலகங்கள் இந்தியாவில் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டது

    இதனை அடுத்து தற்போது கலெக்டிவ் நியூஸ் ரூம் என்ற பெயரில் தனியாக செய்தி ஏஜென்சியை தொடங்கி இந்த ஏஜென்சி இந்தியாவில் இருந்து பிபிசி நிறுவனத்திற்கு செய்திகளை தயாரித்து தர இருக்கிறது.

    அதன்படி, பிபிசி செய்திகளை இனி 'கலெக்டிவ் நியூஸ்ரூம்' என்கிற புதிய இந்திய தனியார் நிறுவனம் வெளியிடும். அதாவது செய்தி வெளியீட்டு உரிமையை இந்திய நிறுவனமே கையாளும் எனக் கூறப்பட்டுள்ளது.

    இந்த தனியார் நிறுவனம் வேறொரு நிறுவனம்தான் என்றாலும், பிபிசி தரப்புக்குத் தொடர்பே இல்லாத நிறுவனம் என்றும் சொல்லிவிட முடியாது. நான்கு மூத்த பிபிசி பத்திரிகையாளர்கள் ராஜினாமா செய்துவிட்டு, கலெக்டிவ் நியூஸ்ரூம் நிறுவனத்தை நிறுவியுள்ளனர்.

    இந்த நிறுவனத்தில், 2021 நேரடி அந்நிய முதலீட்டுச் சட்டப்படி, 26 சதவீதம் அளவுக்கு தங்களின் நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிக்குமாறு பிரிட்டன் அரசாங்க நிறுவனமான பிபிசி மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.

    புதிய நிறுவனம் தற்போது பிபிசிக்கான உள்ளடக்கத்தை உருவாக்கி வெளியிடும், ஆயினும் எதிர்காலத்தில் ஒரு சுதந்திரமான ஊடக நிறுவனமாக பிற நிறுவனங்களுக்கும் உயர்தர உள்ளடக்கத்தை உருவாக்க விரும்புகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பிபிசி நியூஸ் தமிழ், பிபிசி நியூஸ் தெலுங்கு, பிபிசி நியூஸ் ஹிந்தி, பிபிசி நியூஸ் மராத்தி, பிபிசி நியூஸ் குஜராத்தி, பிபிசி நியூஸ் பஞ்சாபி ஆகிய 6 இந்திய மொழிகளுடன் பிபிசி ஆங்கிலத்திற்கும் டிஜிட்டல் மற்றும் யூடியூபில் இந்திய நேயர்களுக்கான செய்திகளை கலெக்டிவ் நியூஸ்ரூம் தயாரித்து வெளியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    ×