search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Devi 2 Review"

    தேவி படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘தேவி 2’ படத்தின் விமர்சனம்.
    தேவி படத்தின் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக படம் ஆரம்பிக்கிறது. ரூபி பேயிடம் போட்ட ஒப்பந்தம் காரணமாக இரண்டு வருடங்களுக்கு மேலாக வீட்டிற்குள்ளேயே தமன்னாவை வைத்திருக்கிறார் பிரபுதேவா. மீண்டும் பேய் தொல்லை இல்லாமல் இருப்பதற்காக ஜோசியர் ஒருவர் அறிவுரையின் படி தமன்னாவை மொரிசியஸ் அழைத்து சென்று வேலை பார்த்து வருகிறார் பிரபுதேவா.

    அங்கு ரூபி மீண்டும் தமன்னா உடம்பில் இருக்கிறதா என்று சில சோதனைகளை பிரபுதேவா செய்கிறார். ஆனால், ஏதும் இல்லாததால் மகிழ்ச்சியாக வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் பிரபுதேவாவை இரண்டு பேய் பிடிக்கிறது. இதையறிந்த தமன்னா, பிரபுதேவாவை எப்படி காப்பாற்றினார்? பேயின் நோக்கம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.



    படத்தின் நாயகனாக நடித்திருக்கும் பிரபுதேவா, தனக்கே உரிய பாணியில் நடிப்பு, காமெடி, நடனம் என அசத்தி இருக்கிறார். குறிப்பாக, பேய் தன்னுள் புகுந்தவுடன், அதற்கேற்ப அவர் காட்டும் உடல் மொழி அசத்தல்.

    நாயகியாக வரும் தமன்னா, மாறுபட்ட நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். குறிப்பாக பாடல் காட்சிகளில் ரசிகர்களை சீட்டிலேயே கட்டி வைத்திருக்கிறார். அவருடைய நடிப்புக்கு தீனி போடும் படமாக அமைந்திருக்கிறது. அதுபோல், மற்ற கதாநாயகிகளாக வரும் நந்திதா சுவேதா, டிம்பிள் ஹயாதி ஆகியோரும் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள். கோவை சரளா மற்றும் ஆர்.ஜே.பாலாஜி இருவரும் ஆங்காங்கே ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார்கள். 



    தேவி படத்தின் வெற்றி கொடுத்த உற்சாகத்தில், 2வது பாகத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் விஜய். ஆனால், முதல் பாகம் அளவிற்கு இரண்டாம் பாகம் வெற்றி பெறுமா என்பது சந்தேகம் தான். படத்தை ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை காமெடி படமாகவே எடுத்திருக்கிறார். ஆனால், பார்க்கிற நமக்குத்தான் ஏனோ சிரிப்பு வரவில்லை. கதாபாத்திரங்களை சிறப்பாக கையாளத் தெரிந்த விஜய், திரைக்கதையில் கவனம் செலுத்த மறந்திருக்கிறார். 



    அயனன்கா போஸின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது. சாம் சி.எஸ்.-யின் இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. பின்னணி இசையிலும் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார்.

    மொத்தத்தில் ‘தேவி 2’ மிரட்டல் குறைவு.
    ×