search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Disciplinary action team"

    ரஜினி மக்கள் மன்றத்தில் எந்த மாவட்ட நிர்வாகிகளிடம் பிரச்சனை ஏற்படுகிறதோ, அதை அந்த மாவட்டத்திலேயே தீர்த்து வைத்துக் கொள்ளும் வகையில் ஒழுங்கு நடவடிக்கை குழு ஒன்றை உருவாக்க ரஜினி உத்தரவிட்டுள்ளார். #Rajinikanth
    சென்னை:

    அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர் மன்றத்தை “ரஜினி மக்கள் மன்றம்” என்று பெயர் மாற்றம் செய்து உறுப்பினர்கள் சேர்க்கையை தீவிரப்படுத்தியுள்ளார்.

    அதன் அடிப்படையில் அனைத்து மாவட்டங்களுக்கும் புதிய நிர்வாகிகளை ரஜினி நியமனம் செய்துள்ளார். ஒவ்வொரு மாவட்டத்திலும் உயர்நிலைக்குழு, மகளிர் அணி, இளைஞர் அணி, வக்கீல்கள் அணி, வணிகர்கள் அணி என்று ஒவ்வொரு பிரிவுக்கும் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் பெரும்பாலான மாவட்டங்களில் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பல மாவட்டங்களில் செயல்படாதவர்களை முக்கிய பொறுப்புகளில் அமர்த்தி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் முறையாக செயல்பட முடியாத நிலை உள்ளது.

    ரஜினி அரசியல் பணியை விட, சினிமா படப்பிடிப்புகளில் தற்போது பிசியாக இருப்பதால், நிர்வாகிகள் ஒருவர் மீது ஒருவர் கூறும் குற்றச்சாட்டுக்களை காது கொடுத்து கேட்டு, தீர்த்த வைக்க முடியாத நிலையில் உள்ளார். ரஜினி மக்கள் மன்றத்தின் தலைமை நிர்வாகி வி.எம்.சுதாகரும் தமிழ்நாடு முழுவதும் சென்று பிரச்சனைகளை உடனுக்குடன் தீர்க்க முடியாத சூழ்நிலை உள்ளது.

    இதையடுத்து ரஜினி மக்கள் மன்றத்தில் எந்த மாவட்ட நிர்வாகிகளிடம் பிரச்சனை ஏற்படுகிறதோ, அதை அந்த மாவட்டத்திலேயே தீர்த்து வைத்துக் கொள்ளும் வகையில் ஒழுங்கு நடவடிக்கை குழு ஒன்றை உருவாக்க ரஜினி உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவை எப்படி அமல்படுத்த வேண்டும் என்பது தொடர்பாக ஒவ்வொரு மாவட்ட ரஜினி மக்கள் மன்ற பொறுப்பாளருக்கும் சுற்றறிக்கை ஒன்றை சுதாகர் அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தங்களுக்கு உள்ள குறைகளை சொல்ல, ஒரு ஒழுங்கு நடவடிக்கை குழு ஏற்படுத்தப்படுகிறது. இந்த குழு உறுப்பினர்களின் குறைகள், பிரச்சனைகளை கேட்டறிந்து தீர்த்து வைக்கும்.

    ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவராக அந்தந்தந்த மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளர் இருப்பார். வக்கீல் அணி, இளைஞர் அணி, மகளிர் அணி, வர்த்தகர் அணி ஆகியவற்றில் இருந்து தலா ஒருவர் இதில் உறுப்பினராக இருப்பார்கள். இந்த 5 பேரும் ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு பொறுப்பேற்று செயல்படுவார்கள்.

    இந்த ஒழுங்கு நடவடிக்கை குழுவிடம் உறுப்பினர்கள் தங்கள் பிரச்சனைகளை கூறியதும், அது மிகவும் முக்கியமான பிரச்சனையாக இருந்தால் உடனே ஒழுங்கு நடவடிக்கை குழு கூடி விவாதித்து முடிவு செய்யும். இல்லையெனில் மாதத்துக்கு 2 தடவை ஒழுங்கு நடவடிக்கை குழு கூடி பேசும்.

    சில உறுப்பினர்கள் மாநில தலைமை அலுவலகத்துக்கு புகார்களை அனுப்பியபடி உள்ளனர். அந்த புகார்கள் அனைத்தும் அந்தந்த மாவட்ட ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும். மாவட்ட ஒழுங்கு நடவடிக்கை குழுதான், புகார்கள் அடிப்படையில் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பார்கள்.

    இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    சுதாகரின் இந்த சுற்றறிக்கையை ஏற்று ரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகள் ஒழுங்கு நடவடிக்கை குழு அமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் சில மாவட்டங்களில் இதற்கு எதிர்ப்பும் அதிருப்தியும் காணப்படுகிறது.

    மாவட்ட நிர்வாகிகள் மீதுதான் புகார்கள் உள்ளது. அந்த புகார்களை அவர்களே விசாரித்தால், எப்படி உரிய, நியாயமான தீர்வு கிடைக்கும் என்று ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    இதனால் ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்படுபவர்கள் நடுநிலையாளர்களாக இருக்க வேண்டும் என்றகோரிக்கை எழுந்துள்ளது. #Rajinikanth
    ×