search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "drivers arrest"

    • காரை சோதனை செய்த போது அதில் சுமார் 20 மூட்டைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
    • ஹான்ஸ் மற்றும் குட்கா மற்றும் சொகுசு காரை பறிமுதல் செய்து டவுன் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    சேலம்:

    சேலம் கருப்பூர் சுங்கசாவடி அருகே இன்று அதிகாலையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், போலீசார் பாலகிருஷ்ணன், கோவிந்தன், ஏட்டு காவேரி உள்ளிட்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 4.30 மணிக்கு ஓசூரில் இருந்து செவ்வாய்பேட்டைக்கு சொகுசு கார் வந்தது.

    இந்த காரை சோதனை செய்த போது அதில் சுமார் 20 மூட்டைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து டவுன் உதவி கமிஷனர் மற்றும் டவுன் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    அவர்கள் பிடிப்பட்ட ஹான்ஸ் மற்றும் குட்கா பொருட்களை பார்வையிட்டனர். இவற்றை காரில் கடத்தி கொண்டு வந்த ராஜஸ்தான் மாநிலம் பாடுமேர் பகுதியை சேர்ந்த டிரைவர் கல்யாண் சிங் (24) என்பவரிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் தான், செவ்வாய்ப்பேட்டையில் உள்ள கடை உரிமையாளர் தேவா என்பவருக்கு இந்த ஹான்ஸ் மற்றும் குட்கா கொண்டு செல்வதாகவும், அவருடைய முகவரி ஏதும் தனக்கு தெரியாது எனவும், வெளியூரில் இருந்து இவற்றை கடத்தி கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

    இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவர் கல்யாண் சிங் மற்றும் அந்த காரில் மாற்று டிரைவராக பணிபுரிந்த செவ்வாய்ப்பேட்டை நரசிம்மன் செட்டி ரோடு பகுதியை சேர்ந்த ராஜா(41) ஆகியோரை கைது செய்தனர். மேலும் ஹான்ஸ் மற்றும் குட்கா மற்றும் சொகுசு காரை பறிமுதல் செய்து டவுன் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    சொகுசு காரில் 20 மூட்டை குட்கா கடத்தி கொண்டு வந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஏற்காட்டிற்கு காதலனுடன் வந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 2 டிரைவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
    ஏற்காடு:

    ஈரோட்டை சேர்ந்தவர் வாசுதேவன் (வயது32). திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இவர் அதே நிறுவனத்தில் பணிபுரியும் தனது காதலியுடன் கடந்த 26-ந் தேதி ஏற்காட்டிற்கு சுற்றுலா வந்தார்.

    இருவரும் ஏற்காட்டை சுற்றி பார்த்த பின்னர் அங்குள்ள தங்கும் விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கினர். அப்போது வாசுதேவன் மது அருந்தினார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இதில் கோபம் அடைந்த காதலி தங்கும் விடுதியில் இருந்து புறப்பட்டு அண்ணா பூங்கா பகுதிக்கு சென்றார். அவரை பின் தொடர்ந்து வாசுதேவன் வந்தார்.

    அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஜெரினாக்காட்டை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் விஜயகுமார் (37), மற்றும் கார் ஓட்டுனர் ஆரோக்கியதாஸ் (32) ஆகிய இருவரும் வாசுதேவனின் காதலியிடம் என்ன தகராறு என நைசாக பேச்சு கொடுத்தனர்.

    அவர் பேசிக்கொண்டிக்கும் போது வாசுதேவன் அங்கு வந்தார். 2 பேரையும் போலீஸ் நிலையத்தில் கொண்டு விடுவதாக கூறி ஆட்டோவில் ஏற்றிய அவர்கள் வாசுதேவன் பாக்கெட்டில் இருந்த பணத்தை பறித்து விட்டு அவரை ஆட்டோவில் இருந்து கீழே தள்ளினர்.

    பின்னர் டிரைவர்கள் 2 பேரும் சேர்ந்து வாசுதேவனின் காதலியை சேலத்தில் இறக்கி விடுவதாக கூறி அழைத்து சென்றனர், ஆரோக்கியதாஸ் பாதி வழியில் இறங்கிவிட்டார்.

    விஜயகுமார் ஏற்காட்டில் தனக்கு தெரிந்த தங்கும் விடுதிக்கு அந்த பெண்ணை அழைத்து சென்று பலாத்காரம் செய்தார். பின்னர் நேற்று அதிகாலை 1.45 க்கு அந்த பெண்ணை சேலம் புதிய பஸ் நிலையத்தில் இறக்கி விட்டு விட்டு ஏற்காடு வந்தார்.

    இது குறித்து வாசுதேவன் ஏற்காடு போலீஸ் நிலையத்திலும், வாசுதேவனின் காதலி சேலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திலும் காவல் புகார் கொடுத்தனர்.

    ஏற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் ஒண்டிக்கடை பகுதியில் இருந்த விஜயகுமார் மற்றும் ஆரோக்கியதாஸ் ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரனை நடத்தினர். மேலும் சேலம் ரூரல் டி.எஸ்.பி. சூர்ய நாரயணன் ஏற்காடு போலீஸ் நிலையத்திற்கு வந்து அவர்களிடம் விசாரனை நடத்தினார்.

    விசாரணை முடிவில் விஜயகுமார் மீது கற்பழிப்பு, வழிப்பறி, மிரட்டல் ஆகிய பிரிவுகளிலும், ஆரோக்கியதாஸ் மீது வழிப்பறி, மிரட்டல் ஆகிய பிரிவுகளிலும் வழக்கு பதிவு செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். கைதான 2 பேரும் இன்று சேலம் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.  #Tamilnews
    கர்நாடக சொகுசு பஸ்களில் கடத்தி சென்ற 18 குட்கா மூட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் பஸ் டிரைவர்கள் 2 பேரை கைது செய்தனர்.
    சேலம்:

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து சேலம் வழியாக பல்வேறு மாவட்டங்களுக்கு தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்திச் செல்லப்படுகிறது. இதை தடுக்க போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில், பெங்களூருவில் இருந்து சேலம் வழியாக கோவைக்கு செல்லும் சொகுசு பஸ்களில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்தப்படுவதாக அழகாபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் செந்தில், சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் சேலம் -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கருப்பூர் சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த கர்நாடக பதிவெண் கொண்ட 2 சொகுசு பஸ்களை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டபோது, ஒரு சொகுசு பஸ்சில் பொருட்கள் வைக்கும் அறையில் 6 மூட்டைகளும் மற்றொரு சொகுசு பஸ்சில் 12 மூட்டைகளும் இருந்தது.

    இந்த மூட்டைகளை பிரித்து பார்த்தபோது, அதில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா புகையிலை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இந்த 18 மூட்டைகளும் பறிமுதல் செய்து, சூரமங்கலம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதன் மதிப்பு ரூ.2½ லட்சம் இருக்கும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    அந்த பஸ்களை ஓட்டி வந்த டிரைவர்கள் திருச்சியை சேர்ந்த கண்ணன், பெருந்துறையை சேர்ந்த வெங்கடேஷ் ஆகிய இருவரிடமும் கோவைக்கு சென்று பயணிகளை இறக்கி விட்டு விட்டு, திரும்ப சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். அதன்படி 2 டிரைவர்களும் கோவையில் பயணிகளை இறக்கி விட்டு, சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் ஆஜரானார்கள்.

    இதையடுத்து அவர்களிடம் குட்காவை அனுப்பி வைத்தது யார்?, இதை எங்கு கொண்டு செல்ல முயன்றீர்கள்? இதற்கு யார்? யார்? உடந்தை என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டது.

    விசாரணையில் அவர்கள் போலீசாரிடம், குட்கா கடத்தல் சம்பவம் தொடர்பாக பல்வேறு திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் சம்பந்தப்பட்டவர்ளை கைது செய்தவதற்கான நடவடிக்கையில் போலீசார் மும்முரமாக இறங்கி உள்ளனர்.

    ஆஜரான 2 சொகுசு பஸ் டிரைவர்களிடம் விசாரணை முடிந்ததும், பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உடனடியாக கைது செய்யப்பட்டனர்.

    இதையடுத்து கண்ணன், வெங்கடேஷ் ஆகியோர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
    ×