என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Eason"
- பரமேஸ்வரனை ஆராதித்து வழிபட்டால் எம பயம் இராது.
- பிரதோஷ காலமும், சிவராத்திரி காலமும் சிவனுக்கு உகந்த காலங்கள்.
`ஓம் நம சிவாய, ஓம் நம சிவாய' என்று சாதுக்கள் அடிக்கடி சொல்வதைக் கேட்டிருக்கிறோம். சிவ நாம ஜெபம் எம பயத்தைப் போக்கும் என்பர். பரமேஸ்வரனை ஆராதித்து வழிபட்டால், எம பயம் இராது. பிரதோஷ காலமும், சிவராத்திரி காலமும் சிவனுக்கு உகந்த காலங்கள். அந்த காலங்களில் சிவ வழிபாடு செய்பவர்களுக்கு சகல பாக்கியங்களையும் அளித்து, மோட்சத்தையும் ஈசன் அளிக்கிறான்.
சிவனை வழிபடும் போது ஸ்ரீ ருத்ர ஜெபம் செய்வது வழக்கம். அதையடுத்து சமகம் என்பதையும் சொல்வர். ருத்ரத்தில் பரமேஸ்வரனுடைய குணாதிசயங்களை வர்ணித்துவிட்டு நமஸ்காரம் செய்ய வேண்டும். இதில், நமஸ்காரத்தை முதலில் சொல்லிக் கொண்டு, பிறகு பரமேஸ்வரனை பற்றிய வாக்கியங்கள் வருகின்றன.
எடுத்தவுடன் நமஸ்காரம் செய்துவிட்டால், பரமேஸ்வரன் மகிழ்ந்து போகிறார். அதன் பிறகு நாம் சொல்வதையெல்லாம் அன்புடன் கேட்டு அனுக்ரகம் செய்து மோட்சத்தையும் அளிக்கிறார்.
ஒரு வித்வான், `ஏ, பரமேஸ்வரா! முன் ஜென்மத்தில் நான் உன்னை நமஸ்காரம் செய்யவில்லை. இதை எப்படிச் சொல்ல முடிகிறது என்றால், முன் ஜென்மத்தில் உன்னை நமஸ்காரம் செய்திருந்தால் எனக்கு இந்தப் பிறவி கிடைத்திருக்காது! இந்த பிறவி கிடைத்திருப்பதால் முன் ஜென்மத்தில் உன்னை நான் நமஸ்காரம் செய்யவில்லை என்று தெரிந்து கொண்டேன்.
"அப்படி நமஸ்காரம் செய்யாத தற்கு என்னை மன்னித்துவிடு. ஆனால், இப்போது இந்த ஜென்மாவில் உன்னை நமஸ்காரம் செய்கிறேன். நான் மறுபடியும் அடுத்த ஜென்மாவில் உன்னை நமஸ்காரம் செய்யப் போவதில்லை; அதற்காகவும் மன்னித்து விடு. ஏன் தெரியுமா?
இந்த ஜென் மாவில் உன்னை நமஸ்காரம் செய்தவனுக்கு மறு ஜென்மா கிடையாதே! மறு ஜென்மாவே இல்லாதபோது நமஸ்காரம் எப்படி செய்ய முடியும்?
"அதனால், சென்ற ஜென்மாவுக்காக ஒரு நமஸ்காரம், இந்த ஜென்மாவுக்காக ஒரு நமஸ்காரம், அடுத்த ஜென்மாவுக்காக ஒரு நமஸ்காரம், ஆக மூன்று நமஸ்காரம்! என்னை ரட்சிக்க வேண்டும்…' என்று பிரார்த்தித்தாராம்.
இப்படி சுலபமாக முக்தி பெறு வதற்கான வழி சிவ நாம ஜெபம், சிவ வழிபாடு, நமஸ்காரம் எல்லாம் சொல்லப்பட்டுள்ளது. ஆக, பரமேஸ்வரனை பிரார்த்தித்தால், வாழ்நாளில் சுகமும், பரலோக சுகமும் கிடைக்கிறது.
- கோவிலின் முகப்பில் இரு கோபுரங்கள் உள்ளன.
- இறைவன் தாண்டவமாடி காட்சி தரும் ஐதீகம் நடைபெறுகிறது.
உத்தரகோசமங்கை ஆலய அமைப்பு மிக சிறப்பானதாகும். இந்த கோவில் முன் பகுதி மிகவும் விஸ்தாரமாக உள்ளது. வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்களை இங்கு நிறுத்தவும், ஓய்வு எடுக்கவும் தாராளமான இடவசதி உள்ளது.
கோவிலின் முகப்பில் இரு கோபுரங்கள் உள்ளன. இடது பக்கம் அம்பிகை சன்னதிக்கு எதிரில் சிவசக்தி என்ற பெயரில் ஐந்து நிலைகளோடு ஒரு கோபுரம் உள்ளது. வலது பக்கம் ஈசன் சன்னதிக்கு எதிரில் உள்ள ராஜகோபுரமும் மிகப்பழமை வாய்ந்து ஏழு நிலைகளோடு உள்ளது. அந்த இரு கோபுரங்களும் நம்மை ஒருங்கே வரவேற்கும் அழகு மனதுக்கு உற்சாகத்தை தரும்.
இரு வெளிக்கோபுரங்கட்கும் உள் கோபுரங்களும் உள்ளன. வலது பக்க உள்கோபுரம் ஐந்து நிலைகள். இடது பக்க உள்கோபுரம் மூன்று நிலைகள். வலது பக்கம் உள்ள கோபுரத்தின் முன்னால் நர்த்தன விநாயகர், சுப்பிரமணியர் தரிசனம் பெறலாம். உட்புறம் வலப்பக்கம் குளம்.
உள்கோபுரம் கண்டு தொழுது பிறகு உள்ளே செல்லலாம். இடது பக்க பிரகாரத்தில் வாகனங்கள் வாயிலைத் தாண்டி திரும்பினால் தட்சிணாமூர்த்தி தனியே கால் மேல் கால் மடித்துப்போட்டு, அபயவராத முத்திரைகளுடன் ஒரு கையை உயர்த்தி ஒரு கையை தாழ்த்தி அமர்ந்து காட்சி தருவதை காணலாம். சிவலிங்க பாணமும் நாகப் பிரதிஷ்டையும் பக்கத்தில் உள்ளன.
விநாயகரை தொழுது பலிபீடம் கொடிமரம், நந்தி இவற்றை வணங்கியவாறே உள்வாயிலைத் தாண்டி சென்றால் பெரிய மண்டபத்தை அடையலாம். முதல் தூணில் குவிந்த கைகளுடன் ராமநாதபுரம் சேதுபதி, ஷண்முக ராஜேஸ்வர சேதுபதி, ராஜேஸ்வர முத்துராமலிங்க சேதுபதி முதலியோர் கற்சிலைகளாகக் காட்சி அளிக்கின்றனர். இந்த கோவிலில் பல டன் எடையுள்ள பெரிய கோவில் மணி உள்ளது. இதன் ஓசை 5 மைல் தொலை வரை கேட்கும்.
பிரகாரச்சுவரில் திருவாசக பகுதிகளான பொன்னூசல், நீத்தல் விண்ணப்பம் பதிகங்கள் கல்லில் பொறித்துப் பதிக்கப்பட்டு உள்ளன. தொடர்வது அறுபத்துமூவர் மூலத்திரு மேனிகளின் தரிசனம், சப்த மாதாக்கள், முடிவில் விநாயகரும் ரிஷபாரூடரும் காட்சி தருகின்றனர்.
வலம் முடித்து துவார பாலகர்களை தொழுது, உட்சென்றால் மூலவரின் அருமையான தரிசனம். எதிரில் நந்திதேவர், நீர்கட்டும் அமைப்பில் அனுக்ஞை விநாயகரைக் கும்பிட்டு உட்புறமாகப் பார்த்தால் மங்களேசுவரர் மங்களமாகக் காட்சி அளிக்கிறார் சதுர ஆவுடையார்.
அடுத்த தரிசனம் மங்களாம்பிகை. நான்கு கரங்களுடன் அபயம் ஒரு கரம், ஒரு கரம் தொடையில் நிறுத்தி, இருகரங்களில் தாமரையில் ருத்ராட்சமும் ஏந்தித் தரிசனம் தருகின்றாள். இத்தலத்தில் சுவாமியை அம்பாள் பூசிப்பதாக ஐதீகம்.
நடராஜாருக்குரிய ஆறு அபிஷேக காலங்களிலும் இச்சன்னத்தியில் இறைவன் தாண்டவமாடி காட்சி தரும் ஐதீகம் நடைபெறுகிறது.
இத்தலத்தில் உள்ள எல்லா பிரகாரங்களும் அழகுமிக கற்தூண்களுடன் அமைந்துள்ளன. பிரகார அழகு ராமேஸ்வரத்தில் உள்ள மூன்றாம் பிரகாரத்தை நினைவூட்டுகிறது. தூண்களில் பிட்சாடனார், ஊர்த்தவர் சிற்பங்கள் உள்ளன. உலா வருவதற்குரிய நடராஜத் திருமேனிகள் வைக்கப்பட்டுள்ளன. வெளிச்சுற்றில் வல்ல¬ப விநாயகரைத் தரிசிக்கலாம்.
ஆதிசிதம்பரம் எனப்படும் அற்புதத் தனிக்கோயிலை அடுத்து காணலாம். நடராஜப் பெருமானுக்குத் தனிக்கோயில், கோயிலுக்கு உள்ளேயே குளத்தின் எதிரில் உள்ளது. பலிபீடம், கொடிமரம், நந்தியை தொழுது முன்மண்டபம் சென்றால், சேதுபதிகள் வண்ணங்களில் சுதையில் தூண்களில் காட்சி அளிக்கின்றனர்.
சுற்றிலும் அகழி அமைப்பு உள்ளது. எனவே சன்னதிக்கு உட்செல்ல மரப்படிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் தற்போது படியில் ஏறி இறங்காமல் செல்ல வழிசெய்துள்ளனர். கருவறை தெற்கு நோக்கிய சன்னதியாக உள்ளது. இங்கு அக்கினி மத்தியில் நடராஜப் பெருமான் ஆடுவதாக சொல்லப்படுகிறது. அம்பிகைக்கான அறையில் ஆடிய நடனத்தைத்தான் அம்பலவாணர், தில்லையம்பலத்தில் ஆடினார்.
இங்குள்ள கூத்தப்பிரான்- நடராஜர் அதி அற்புதமானவர். ஐந்தரை அடி உயரம் முழுவதும் மரகதத்திருமேனி, விலை மதிப்பிட முடியாத இப்பெருமான் ஆண்டு முழுவதும் சந்தனக் காப்பிலேயே பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
இப்பெருமான் வெளியே உலா வருவதில்லை. பெருமான் திருமேனியை உள்வைத்தே சன்னதி கட்டப்பட்டுள்ளதால் திருமேனியே வெளியே கொண்டுவர இயலாது.
மார்கழி திருவாதிரையில் இப்பெருமானுக்கு மிகப்பெரிய அபிஷேகம் சிறப்பாக நடைபெறுகிறது. இதைச் செய்பவர்கள் திருப்பத்தூர் வள்ளல் ஆறுமுகம் பிள்ளையவர்களின் குடும்பத்தினர்.
அன்று ஒருநாள் மட்டுமே சந்தனக்காப்பு முழுவதும் களையப்பட்டு, அபிஷேகங்கள் கண்கொள்ளாக் காட்சியாக அற்புதமாக நடைபெறும். வாழ்நாளில் ஒருமுறையாவது இந்நாளில் கட்டாயமாக சென்று தரிசிக்க வேண்டும்.
அபிஷேக ஆராதனைகள் முடிந்த பிறகு மீண்டும் சந்தனக்காப்பு சார்த்தப்படும். அக்காப்பிலேயே அடுத்த மார்கழி திருவாதிரை வரை பெருமான் ஆண்டு முழுவதும் காட்சித் தருவார்.
மார்கழித் திருவாதிரை நாளில், வாய்ப்பும் திருவருள் பெற்றவர்களும் அவசியம் சென்று ஆடல் வல்லானைத் தரிசித்து ஆனந்தம் பெறவேண்டும். நாள்தோறும் உச்சிக்காலத்தில் நடைபெறும் ஸ்படிகலிங்க, மரகதலிங்க, அன்னாபிஷேகம், தரிசனங்களை காண கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
நடராஜர் சன்னதி வழிபாடு முடிந்தபிறகு முன் மண்டபம் செல்லலாம். அங்குள்ள சிறிய மேடையில் தான் உச்சிக்காலத்தில் ஸ்படிக, மரகத லிங்கங்களை வைத்து அபிஷேகம் செய்கின்றனர். அதை தரிசிக்கும்போதே வலப்பக்கச் சாளரத்தின் வழியே கைக்கூப்பிய நிலையில் உள்ள மாணிக்கவாசகரையும் இடப்பக்கம் சாளரம் வழியாக திரும்பி உமா மகேஸ்வரையும் ஒருசேரத் தரிசிக்கலாம்.
உமாமகேஷ்வரர் சன்னதிக்கு படிகளேறிச் சென்று தரிசித்து விட்டு மறுபுறமுள்ள படிகள் வழியே இறங்கி பிராகர வலமாக வந்தால் திருப்பதிகங்கள் எழுதப்பட்டுள்ளதை பார்க்கலாம். குருந்த மர உபதேசக் காட்சி சந்நிதியும் கண்டு இன்புறலாம்.
கல்லில் குருந்த மரம் செதுக்கப்பட்டு கீழே அமர்ந்து இறைவன் (குருமூர்த்தமாக) உபதேசிக்க எதிரிர் மாணிக்கவாசகர் உபதேசம் பெறும் காட்சி அற்புதமாக உள்ளது.
இதையடுத்து மாணிக்க வாசகர் சன்னதி கண்டு வழிபடலாம். கோஷ்டமூர்த்தம் `ஏகபாத திரிமூர்த்தி' அருமையானது.
நடராஜர் கோயிலுக்கு பக்கத்தில் தனியே சகஸ்ரலிங்க சந்நிதி உள்ள தனிக்கோயில் உள்ளது. மூலத்திருமேனியில் நெடுக்குக்கீற்றுகள் உள்ளன. 3 ஆயிரம் ஆண்டு பழமையான தலமரம் இருப்பதை அங்கு காணலாம். வியாசரும் காகபுஜண்டரும் இங்கு தவம் செய்வதாக ஐதீகம். இதன் பக்கத்தில்தான் தலவிருட்சமான இலந்தை மரம் உள்ளது.
இந்த சகஸ்ரலிங்கக் கோயில் எழுந்ததற்கான வரலாறு, நடராசர் கோயிலில் முன் மண்டபத்தில் மேற்புறத்தில் வண்ண ஓவியமாக எழுதப்பட்டுள்ளது.
ஆயிரம் சிவ வேதியர்களின் உருவம் பொறிக்கப்பட்ட ஒரே சிவலிங்கமான சகஸ்ரலிங்கத்தை தரிசனம் செய்துவிட்டு கடைசியாக மாணிக்கவாசகரை தரிசனம் செய்தல் வேண்டும். அதன்பிறகு வடக்குவாசல் வழியாக செல்ல வேண்டும். இப்படி முறையாக உத்தரகோச மங்கை தலத்தில் வழிபாடு செய்தால் மனிதர்களுக்கு பிடிக்கப்பட்ட தோஷங்கள், பாவங்கள், கிரகங்கள், மனச்சஞ்சலங்கள், பிணிகள் அனைத்தையும் பனித்துளி போல ஈசன், ஈஸ்வரி நீக்கிவிடுவார்கள் என்பது ஐதீகம் ஆகும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்