என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Elavarasan"

    ரஜினி கட்சி தலைமை நிர்வாகி இளவரசன் ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். #RajiniMakkalMandram
    சென்னை:

    ரஜினி மக்கள் மன்றத்தின் தலைமை பொறுப்பில் வி.எம்.சுதாகர் இருந்து வருகிறார். நீண்ட காலமாக ரஜினியுடன் இருந்துவரும் சுதாகர் அவரது ரசிகர் மன்றத்தையும் நிர்வகித்து வருகிறார். இவருக்கு துணையாக இருக்கும் வகையில் ரஜினி மக்கள் மன்றத்தின் தலைமை பொறுப்பில் ராஜு மகாலிங்கம் நியமிக்கப்பட்டார்.

    திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் தயாரிப்பு நிர்வாகியாக செயல்பட்டு வந்த ராஜு மகாலிங்கமும் சுதாகருக்கு துணையாக இருந்துவந்தார். சில மாதங்களில் ரஜினி மக்கள் மன்றத்தின் அமைப்பு செயலாளராகவும் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவராகவும் டாக்டர் இளவரசன் நியமிக்கப்பட்டார்.

    இவர் பொறுப்புக்கு வந்த உடன் அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. நீண்ட காலமாக ரஜினி ரசிகர் மன்றத்தில் இருந்து வந்த மூத்த நிர்வாகிகள் ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் நீக்கப்பட்டது சர்ச்சையானது.

    இதற்கிடையே இளவரசன் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்டு ஒதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கடந்த டிசம்பர் மாத இறுதியில் செய்தி வந்தது. இளவரசனை தொடர்புகொள்ள முடியாத நிலையில் ரஜினி மக்கள் மன்றத்திலும் இதுகுறித்து எந்தவித விளக்கமும் அளிக்கப்படவில்லை.

    ஆனால் நேற்று இளவரசன் நீக்கத்தை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள். இளவரசனின் வேண்டுகோளுக்கு இணங்க அவர் விலக்கப்படுவதாக கூறினாலும் இளவரசன் நீக்கப்பட்டதில் ரஜினி மன்ற நிர்வாகிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அவர்கள் கூறியதாவது:-

    ரஜினி இளவரசன் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து இருந்தார். அவர் மீது மன்ற நடவடிக்கைகளில் வந்த புகார்களை விட அவரது தனிப்பட்ட செயல்பாடுகள் மீதும் பல புகார்கள் வர தொடங்கின. முக்கியமாக கடலூர், விருத்தாச்சலம், விழுப்புரம் மாவட்டங்களில் மணல் திருட்டு தொடர்பான புகார்களில் இளவரசன் பெயர் அடிபட்டது. இதுதான் அவர் நீக்கப்பட முக்கிய காரணமாக அமைந்தது.

    ரஜினி பேட்ட படத்திலேயே மணல் கொள்ளைக்கு எதிராக வசனம் பேசியிருந்தார். நதி இணைப்பு, காவிரி விவகாரம் என்று தமிழகத்தின் தண்ணீர் பிரச்சினைக்கு முக்கியத்துவம் தருபவர் ரஜினி. தனது கட்சியிலேயே மணல் கொள்ளைக்கு காரணமானவர் இருக்கக்கூடாது என்ற நோக்கத்தில் அவரை நீக்கி உள்ளார்.

    தமிழ்நாட்டில் மொத்தம் 66,573 பூத் கமிட்டிகள் இருக்கின்றன. இவற்றில் சுமார் 60 ஆயிரம் பூத் கமிட்டிகளை எங்கள் கட்சி சார்பில் நியமித்துவிட்டோம். உறுப்பினர் எண்ணிக்கையும் ஒரு கோடியை தாண்டி விட்டது. ரஜினி எதிர்பார்த்த இலக்கை தொட்டுவிட்டோம். எனவே ரஜினி விரைவில் கட்சி தொடங்குவார்.

    ஆனால் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பா அதற்கு பின்பா என்பதை இப்போது சொல்ல முடியாது. அது அவர் எடுக்கும் முடிவை பொறுத்தது.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள். #RajiniMakkalMandram
    ×