என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Erode East By Polls"
- ஈரோட்டில் சில திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டி உள்ளது.
- தேர்தல் ஆணையத்தை பொறுத்தவரை விதிமுறைகளுக்கு ஏற்ப செயல்பட்டது.
ஈரோடு :
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்த வெற்றி எதிர்பார்த்த ஒன்றுதான். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தான் இந்த வெற்றியின் பெருமைகள் சேரும். அவரின் 20 மாத ஆட்சி காலத்தில் தேர்தல் வாக்குறுதிகளில் 80 சதவீதம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. அதற்கு அங்கீகாரமாக தான் மக்கள் இந்த வெற்றியை தந்திருக்கிறார்கள். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மற்றும் ராகுல்காந்தி மீது தமிழக மக்கள் வைத்திருக்கும் அன்புக்கும், பாசத்துக்கும், ஆதரவுக்கும் எடுத்துக்காட்டாக இந்த வெற்றியை பார்க்கிறேன். ராகுல்காந்தியின் ஒற்றுமை நடைபயணத்தின் மூலமாக அவர் மீது தமிழக மக்களுக்கு ஓர் ஈர்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.
ஈரோட்டில் சில திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டி உள்ளது. அமைச்சர் முத்துசாமியுடன் இணைந்து முதல்-அமைச்சரை சந்தித்து ஈரோடு மக்களுக்கு தேவையான கோரிக்கைகளை நிறைவேற்ற பாடுபடுவேன்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இருக்கிற சட்டப்பேரவையில் நானும் பங்கேற்பது பெருமையாக இருக்கிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் என்னை விட வயதில் சிறியவராக இருந்தாலும் அனுபவத்திலும், தியாகத்திலும், செயல் திறனிலும் பல மடங்கு உயர்ந்தவர். வருகிற நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும்.
இன்றைக்கு சில பேர் தேர்தல் ஆணையம் ஒழுங்காக நடந்துகொள்ளவில்லை, மக்கள் ஏமாற்றப்பட்டதாகவும் கூறுகிறார்கள். அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு பேட்டி கொடுத்தபோது, தேர்தல் ஆணையம் சரியாக செயல்பட்டதாக அவரே கூறி உள்ளார். தேர்தல் ஆணையம் நாகரிகமாக, நாணயமாக, சட்டப்படி நடந்து கொண்டது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அனுமதியின்றி செயல்பட்ட தி.மு.க., அ.தி.மு.க. தேர்தல் பணிமனைகள் மூடப்பட்டன. தேர்தல் ஆணையத்தை பொறுத்தவரை விதிமுறைகளுக்கு ஏற்ப செயல்பட்டது.
எனது மகன் விட்டு சென்ற பணியை நான் தொடர உள்ளேன். ஏற்கனவே என் மகன் இங்கு பல பணிகளை தொடங்கி வைத்துள்ளார். அதனை நான் முடிக்க வேண்டும்.
இவ்வாறு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.
- இந்த இடைத்தேர்தல் களத்தைத் தனது இழிவான அரசியலுக்குப் பயன்படுத்தியது அ.தி.மு.க.
- நாலாம்தர ஐந்தாம்தர அ.தி.மு.க. பேச்சாளரைப் போல எடப்பாடி பழனிசாமி பேசியதாக முதல்வர் விமர்சனம்
சென்னை:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் தொடர்பாக திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் காங்கிரசு கட்சியைச் சேர்ந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மகத்தான வெற்றியைப் பெற்றிருக்கிறார்.
இந்த மாபெரும் வெற்றியை வழங்கிய ஈரோடு கிழக்கு தொகுதியின் வாக்காளப் பெருமக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த இடைத்தேர்தல் களத்தைத் தனது இழிவான அரசியலுக்குப் பயன்படுத்தியது அ.தி.மு.க. முன்னாள் முதலமைச்சர், இந்நாள் எதிர்க்கட்சித் தலைவர் என்ற தகுதியை மறந்து, தன்னிலை இழந்து மிகமோசமான சொற்களைப் பயன்படுத்தி பரப்புரை செய்தார் பழனிசாமி.
வேட்டி இருக்கிறதா - மீசை இருக்கிறதா ஆண்மை இருக்கிறதா என்றெல்லாம் நாலாம்தர ஐந்தாம்தர அ.தி.மு.க. பேச்சாளரைப் போல அவர் பேசினார்.
நான்காண்டுகாலம் தனது கையில் பதவி இருந்தபோது மக்களுக்காகத் துரும்பைக் கூட கிள்ளிப் போடாத பழனிசாமி. அதனை எல்லாம் மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைத்து வாய்நீளம் காட்டினார். பதவியேற்ற நாள் முதல் தினந்தோறும் திட்டங்களைத் தீட்டிக் கொண்டிருக்கும் எங்களைப் பார்த்து, 'எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை' என்றார்.
பூனை கண்ணை மூடிக்கொண்டு, உலகம் இருண்டுவிட்டது என்று நினைப்பதைப் போல பழனிசாமி நினைத்தார். அவரது ஆட்சிக்காலம் இருண்டகாலம் என்பதை மீண்டும் ஒரு முறை அவருக்கு ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் உணர்த்தி இருக்கிறார்கள்.
இந்த வெற்றிக்காக அயராது பாடுபட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சியின் தலைவர்கள், அமைச்சர் பெருமக்கள், கழக முன்னணியினர், மாவட்டக் கழகச் செயலாளர்கள், நிர்வாகிகள், உடன்பிறப்புகள் அனைவருக்கும் இருகரம் கூப்பி நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இது ஈரோடு கிழக்கு தொகுதியின் வெற்றி மட்டுமல்ல, இந்த ஆட்சியின் வெற்றி! கழகத்தின் வெற்றி! இந்த வெற்றிப் பயணத்தைத் தொடர்வோம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- புகார்கள் கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
- வழக்கமான திமுகவின் பாணியும் ஈரோடு கிழக்கு தொகுதியில் அரங்கேற்றப்பட்டது.
சென்னை:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வெற்றிபெற்றுள்ளார். 15 சுற்றுகளாக நடந்த வாக்கு எண்ணிக்கையின் முடிவில் 1,10,556 வாக்குகளை பெற்று ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வெற்றி பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் தென்னரசுவை விட 66,575 வாக்குகள் வித்தியாசத்தில் இளங்கோவன் வெற்றி பெற்றுள்ளார்.
இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்த மக்கள் அனைவருக்கும் அதிமுக சார்பில் இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
திருமங்கலம் பார்முலா என்கிற பெயரில் மக்களின் வாக்குகளை விலைபேசியதைப் போல, ஈரோடு கிழக்கு பார்முலா என ஒன்றை உருவாக்கி, ஆடு மாடுகளை அடைப்பதைப்போல் வாக்காளர்களை அடைத்து வைத்து அருவருக்கத்தக்க ஜனநாயக படுகொலையை அரங்கேற்றியுள்ளது ஆளும் திமுக.
'வாக்காளர் பட்டியலில் முறைகேடு, மக்களை அடைத்து வைத்தல், கட்டற்ற முறையில் பணம், மது, பரிசுப் பொருட்கள் விநியோகித்தல், மக்களை மிரட்டி அச்சமூட்டுதல், கடவுள் நம்பிக்கை கொண்ட மக்களை கோயில் முன்னால் நிறுத்தி எலுமிச்சை பழத்தின் மீது சத்தியம் செய்யச்சொல்லி கட்டாயப்படுத்தி வாக்கு கொள்ளை நடத்தல்' என்று திமுக நடத்திய வரலாறு காணாத அட்டூழியங்களை அதிமுக வெளிக்கொண்டு வந்தும், புகார்கள் கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
ஜாதி, மத ரீதியாக மக்களை பிளந்து அதன்மூலமாக வாக்குகளைப் பெறும் வழக்கமான திமுகவின் பாணியும் ஈரோடு கிழக்கு தொகுதியில் அரங்கேற்றப்பட்டது.
திமுகவினர் பணநாயகத்தின் மூலம் காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெற வைத்துள்ளனர். இந்த வெற்றி குறித்து பெருமை கொள்வது திமுகவுக்கு அழகல்ல.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட த.மா.கா. வேட்பாளர் யுவராஜ் 58,396 வாக்குகள் பெற்றிருந்தார். தற்போது இடைத்தேர்தலில் அவரை விட சுமார் 15,000 வாக்குகள் குறைவாக வாக்குகளை பெற்றுள்ளார் அதிமுக வேட்பாளர் தென்னரசு.
- 2வது இடத்தை அதிமுக வேட்பாளரும், 3வது இடத்தை நாம் தமிழர் கட்சி வேட்பாளரும் பெற்றனர்
- இந்த இடைத்தேர்தலில் போட்டியிட்ட 77 வேட்பாளர்களில் 75 பேர் டெபாசிட் இழந்துள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது. மொத்தம் 15 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன. துவக்கம் முதலே காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார். ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் வாக்கு வித்தியாசம் அதிகமாகிக்கொண்டே சென்றது. இரண்டாவது இடத்தில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவும், மூன்றாம் இடத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதனும் பின்தங்கினர்.
காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை மாலை 6 மணியளவில் நிறைவடைந்தது. வாக்கு எண்ணிக்கை முடிவில், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்.
இறுதிச் சுற்று முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 1,10,556 வாக்குகள் பெற்றார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 43,981 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் 7,984 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் ஆனந்த் 1,115 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
இந்த இடைத்தேர்தலில் போட்டியிட்ட 77 வேட்பாளர்களில் 75 பேர் டெபாசிட் இழந்துள்ளனர். காங்கிரஸ், அதிமுக, வேட்பாளர்களைத் தவிர யாரும் டெபாசிட் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியை தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
- காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 91, 066 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
- அதிமுக வேட்பாளர் தென்னரசு 35,532 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு கடந்த 27-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர், தேமுதிக வேட்பாளர்கள் உள்ளிட்ட 77 பேர் போட்டியிட்டனர். இதையடுத்து இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பதிவானது இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. மொத்தம் 15 சுற்றுகளில் வாக்குகள் எண்ணப்படுகிறது. இதுவரை 12 சுற்று வாக்கு எண்ணிக்கை நிலவரம் வெளியாகியுள்ளது.
அதில், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 91, 066 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 35,532 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 6,357 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் 836 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
இதனிடையே இந்த இடைத்தேர்தலில் போட்டியிட்ட77 வேட்பாளர்களில் 75 பேர் டெபாசிட் இழந்துள்ளனர்.
காங்கிரஸ், அதிமுக, வேட்பாளர்களைத் தவிர யாரும் டெபாசிட் பெறவில்லை.
- இன்று காலை முதலே இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் தலைவர்கள் ஈடுபட்டனர்.
- வாக்குப்பதிவு அன்று அனைத்து வாக்குச்சாவடிகளும் 'வெப் காஸ்டிங்' மூலம் கண்காணிக்கப்படும்.
ஈரோடு:
காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா மறைவால் காலியான ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு 27-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. கடந்த பொதுத் தேர்தலைப் போலவே, இடைத்தேர்தலிலும் இந்தத் தொகுதி தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அந்தக் கட்சியின் சார்பில், மறைந்த எம்.எல்.ஏ. திருமகன் ஈவெராவின் தந்தை ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அ.தி.மு.க. தரப்பில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு நிறுத்தப்பட்டு உள்ளார். தே.மு.தி.க.வின் எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சியின் மேனகா நவநீதன், சுயேச்சைகள் என மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டி போடுகிறார்கள்.
இந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே தேர்தல் களம் சூடுபிடிக்கத்தொடங்கி விட்டது. தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பாக அமைச்சர்கள், முன்னாள், இந்நாள் எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் என ஒரு படையே தேர்தலுக்கு பணியாற்றியது. அதேபோல் அ.தி.மு.க. சார்பாக முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் முன்னாள், இந்நாள் எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகளும் தீவிரமாக தேர்தல் பணியாற்றினர்.
இன்று காலை முதலே இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் தலைவர்கள் ஈடுபட்டனர். காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரம் செய்தார். அனல்பறக்கும் வகையில் கடந்த சில தினங்களாக நடைபெற்ற பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.
இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட பகுதியில் தங்கியிருக்கும் வெளியூர் நபர்கள் வெளியேறும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தொகுதிக்கு சம்பந்தமில்லாத நபர்கள் வெளியேறினர். இதனால் பெரும்பாலான சாலைகள் மற்றும் தங்கும் விடுதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. நாளை மறுநாள் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.
தேர்தலையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மொத்தம் உள்ள 238 வாக்குச்சாவடிகளில் 32 வாக்குச்சாவடிகளை பதற்றமானதாக தேர்தல் கமிஷன் கண்டறிந்துள்ளது. அங்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. வாக்குப்பதிவு அன்று அனைத்து வாக்குச்சாவடிகளும் 'வெப் காஸ்டிங்' மூலம் கண்காணிக்கப்படும்.
பிரசாரம் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்த 48 மணி நேரத்துக்கு கருத்துக் கணிப்பு, வாக்குப்பதிவு ஆய்வு முடிவுகள் உள்ளிட்டவற்றை மின்னணு ஊடகங்களில் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. வரும் 27-ம் தேதி மாலை 7 மணி வரை, வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
- தேர்தல் தொடர்பான புகார்களை சி-விஜில் செயலி மூலமாக தெரிவிக்கலாம்.
- 27-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
ஈரோடு :
காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா மறைவால் காலியான ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு 27-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே தேர்தல் களம் சூடுபிடிக்கத்தொடங்கி விட்டது. கடந்த பொதுத் தேர்தலைப் போலவே, இடைத்தேர்தலிலும் இந்தத் தொகுதி தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அந்தக் கட்சியின் சார்பில், மறைந்த எம்.எல்.ஏ. திருமகன் ஈவெராவின் தந்தை ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார்.
அவரை எதிர்த்து அ.தி.மு.க. தரப்பில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு நிறுத்தப்பட்டு உள்ளார். தே.மு.தி.க.வின் எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சியின் மேனகா நவநீதன், சுயேச்சைகள் என மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டி போடுகிறார்கள்.
இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது. வெளியூர் நபர்கள் ஈரோடு கிழக்கு தொகுதியில் இருக்கக்கூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.
இதற்கிடையே தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, சென்னையில் நேற்று நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தம் உள்ள 238 வாக்குச்சாவடிகளில் இதுவரை 32 வாக்குச்சாவடிகளை பதற்றமானதாக தேர்தல் கமிஷன் கண்டறிந்துள்ளது. அங்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும். ஏற்கனவே 5 கம்பெனி துணை ராணுவமும், 2 கம்பெனி ஆயுதப்படை போலீசாரும் பாதுகாப்பு பணியில் உள்ளனர். இவர்கள் தவிர உள்ளூர் போலீசாரும் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள்.
இடைத்தேர்தல் வாக்குப்பதிவின்போது 1,206 பணியாளர்கள் பணியாற்றுவர். வாக்குப்பதிவிற்காக 1,430 வாக்குப்பதிவு எந்திரங்களும், 286 கட்டுப்பாட்டு எந்திரங்களும், அளித்த வாக்கை உறுதி செய்யும் 310 'விவிபாட்' எந்திரங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வாக்குச் சாவடிகளில் பொருத்தப்படும் எந்திரங்களின் எண்ணிக்கைக்கு கூடுதலாக 20 சதவீதம் எந்திரங்கள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன.
தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பாக 688 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து வரப்பட்டதாக ரூ.64.34 லட்சம் மதிப்புள்ள பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதில், ரொக்கத் தொகை மட்டும் ரூ.51.31 லட்சமாகும். கைப்பற்றப்பட்ட மதுபான பாட்டில்களின் மதிப்பு ரூ.11.68 லட்சமாகும்.
தேர்தல் தொடர்பான புகார்களை சி-விஜில் செயலி மூலமாக தெரிவிக்கலாம். இதுவரை சி-விஜில் மூலம் பெறப்பட்ட 2 புகார்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவை பணப்பட்டுவாடா தொடர்பானவை அல்ல. மேலும், 1950 என்ற எண்ணின் மூலம் கட்டுப்பாட்டு மையத்தைத் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இந்தப் புகார்கள் உடனடியாக மாவட்டத் தேர்தல் அதிகாரிக்கும், தேர்தல் நடத்தும் அதிகாரிக்கும் விசாரணைக்காக அனுப்பி வைக்கப்படும்.
அந்தத் தொகுதியில் தி.மு.க. மற்றும் நாம் தமிழர் கட்சியினர் இடையே நடந்த மோதல் மட்டுமே சட்டம்-ஒழுங்கு பிரச்சினையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு அன்று அனைத்து வாக்குச்சாவடிகளும் 'வெப் காஸ்டிங்' மூலம் கண்காணிக்கப்படும். இதுவரை 400-க்கும் மேற்பட்ட தபால் ஓட்டுகள் வந்துள்ளன. ஓட்டு எண்ணிக்கை தொடங்கும் நாள் காலை 8 மணிவரை தபால் ஓட்டுகள் பெறப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகத்துக்கு ரூ.5 லட்சம் கோடி கடனை வைத்து விட்டு சென்றார்கள்.
- மிக விரைவில் ஓ.பன்னீர்செல்வம் ஏதேனும் ஒரு மாநிலத்துக்கு கவர்னர் ஆக்கப்படுவார்.
ஈரோடு :
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கை சின்னத்தில் போட்டியிடுகிறார். அவருக்கு தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் 2-வது நாளாக நேற்று பல்வேறு இடங்களுக்கும் வீதி வீதியாக சென்று வாக்குகள் சேகரித்தார்.
அப்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:-
நான் இந்த தொகுதியில் பார்த்தவரைக்கும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். இந்த தொகுதி மக்களாகிய நீங்கள் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அவரை வெற்றி பெறச்செய்தால், மாதம் தோறும் ஒரு நாள் நான் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வந்து உங்களுடன் இருப்பேன் என்ற உறுதியை இந்த நேரத்தில் அளிக்கிறேன்.
அ.தி.மு.க. சார்பில் ஒரு வேட்பாளர் நிற்கிறார். அவரை தொகுதிக்குள் பல இடங்களில் விடாமல் மக்கள் துரத்துகிறார்கள். அந்த விரக்தியில் இங்கு பிரசாரத்துக்கு வந்த முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏதோதோ பேசி இருக்கிறார். மீசை வச்ச ஆம்பளயா என்கிறார். மீசை இருந்தால் சவரம் செய்வாரோ என்னவோ... எடப்பாடி பழனிசாமியை போல நான் தரம்தாழ்ந்து பேச முடியாது. அப்படி பேசினால் அவரால் தாங்க முடியாது.
வேட்டியை பற்றி பேசிய அவர் எப்படி முதல்-அமைச்சர் ஆனார். கூவத்தூரை மறந்து விட்டீர்களா?. ஒரு எம்.எல்.ஏ. விட்டால் போதும் என்று பஸ் ஏறி தப்பித்து ஓடினாரே. ஒருவர் சுவர் ஏறி குதித்தாரே... அங்கே நீங்கள் எப்படி முதல்-அமைச்சர் ஆனீர்கள். இதோ இப்படித்தான் (சசிகலா காலில் எடப்பாடி பழனிசாமி நெடுஞ்சாண் கிடையாக விழுந்த படத்தை எடுத்துக்காட்டினார்). இவரை தெரிகிறதா... மீசை தெரிகிறதா... வேட்டி தெரிகிறதா...
நீங்கள் ஆட்சியில் இருந்தபோது இதுவரை வரலாற்றில் அல்லாத வகையில் தலைமை செயலகத்தில் சி.பி.ஐ. சோதனை நடந்ததே. அப்போது உங்கள் மீசை என்ன செய்தது. தூத்துக்குடியில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டபோது டி.வி.யில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என்றீர்களே அப்போது உங்கள் மீசை என்ன செய்தது. ஜெயலலிதா அம்மையார் இறந்த பிறகு கொடநாட்டில் 3 கொலைகள், தொடர் கொள்ளைகள் நடந்ததே அப்போது உங்கள் மீசை என்ன செய்தது.
அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகத்துக்கு ரூ.5 லட்சம் கோடி கடனை வைத்து விட்டு சென்றார்கள். ரூ.5 லட்சம் கோடி கடன் இருந்த சூழலிலும், கொரோனா நிவாரண நிதியாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் வழங்கப்பட்டது. கொரோனா நிவாரணமாக 12 பொருட்கள் கொடுக்கப்பட்டது. பெண்களுக்கு பஸ்சில் கட்டணமில்லா பயணம் செயல்படுத்தப்பட்டது.
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 19 மசோதாக்கள் கவர்னரின் கையெழுத்துக்காக அவரது அலுவலகத்தில் காத்திருக்கின்றன. தமிழக உரிமை சார்ந்த இந்த மசோதாக்களை கையெழுத்து போட்டு புதுடெல்லிக்கு அனுப்பி வைக்கும் கோரிக்கையுடன் எப்போதாவது எடப்பாடி கவர்னரை சந்தித்து இருக்கிறாரா... அவரும் ஓ.பன்னீர்செல்வமும் கவர்னரையும், பிரதமர் மோடியையும் சந்திப்பது தமிழக உரிமை சார்ந்த பிரச்சினைகளுக்காக அல்ல, அவர்களின் கட்சி பிரச்சினை சார்ந்தது.
பா.ஜனதா என்பது ஆடியோ, வீடியோ வைத்து நடக்கிற கட்சி. உன் வீடியோ என்னிடம் இருக்கு, உன் ஆடியோ என்னிடம் இருக்கு என மிரட்டி கட்சி நடக்கிறது. அதுமட்டுமின்றி அது கவர்னர் பயிற்சி மையமாக உள்ளது. முன்பு இல.கணேசன், அக்காள் தமிழிசை சவுந்தரராஜன், இப்போது சி.பி.ராதாகிருஷ்ணன் கவர்னர்களாக மாறி இருக்கிறார்கள். மிக விரைவில் ஓ.பன்னீர்செல்வம் ஏதேனும் ஒரு மாநிலத்துக்கு கவர்னர் ஆக்கப்படுவார். அவருக்கு இப்போதே நமது வாழ்த்துகள். எடப்பாடி பழனிசாமி தமிழக பா.ஜனதா தலைவர் ஆகிவிடுவார். அ.தி.மு.க.வை பா.ஜனதாவில் இணைத்து விடுவார். இவர்கள் எப்படி தமிழக மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பார்கள்?.
உங்களை அன்பாக, பணிவாக, பண்பாக, உரிமையாக, தலைவரின் மகனாக, அதைவிட கருணாநிதியின் பேரனாக கேட்கிறேன். தந்தை பெரியாரின் பேரனுக்கு, கருணாநிதியின் பேரன் நான் கேட்கிறேன். ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு கை சின்னத்தில் வாக்களியுங்கள். நன்றி.
இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
அவருடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, சு.முத்துசாமி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இளைஞர் அணி துறை செயலாளர் கே.ஈ.பிரகாஷ் மற்றும் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- தவறு செய்பவர்களின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதும் இல்லை.
- வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து கொண்டேதான் இருக்கிறது.
சென்னை :
கோவை மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் தலைவர் ஈஸ்வரன், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், ''சட்டங்கள் பல இருந்தாலும் தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து கொண்டேதான் இருக்கிறது. ஆனால் தவறு செய்பவர்களின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதும் இல்லை.
அவர்கள் தண்டிக்கப்படுவதும் இல்லை. எனவே, இதுபோன்ற தேர்தல் முறைகேடுகளை விசாரிக்க ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழு அமைக்க வேண்டும் என்று மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு மனு கொடுத்தும் இதுவரை எந்த பதிலும் இல்லை. எனவே என் மனுவை பரிசீலிக்கும் வரை ஈரோடு கிழக்கு தொகுதிக்கு நடைபெற உள்ள இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்து. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ஏற்கனவே மற்றொரு வழக்கில் இது சம்பந்தமான நிவாரணங்கள் வழங்கப்பட்டு உள்ளதால், இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன் என்று உத்தரவிட்டனர்.
- வாக்குப்பதிவு 27-ந்தேதிநடக்கிறது.
- பிரசாரம் 25-ந்தேதி மாலை 5 மணிக்கு நிறைவடைகிறது.
ஈரோடு :
தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அ.தி.மு.க. வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. தென்னரசு ஆகியோர் போட்டியில் உள்ளனர்.
இதுதவிர தே.மு.தி.க. சார்பில் எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் ஆகியோரும் போட்டியிடுகிறார்கள். இதேபோல் 73 பேர் இந்த போட்டியில் களம் இறங்கி இருக்கிறார்கள்.
தி.மு.க.வின் 21 மாத கால ஆட்சிக்கு மக்கள் மதிப்பெண் அளிக்கும் தேர்தலாக இது உள்ளது. எனவே கூட்டணி கட்சியான காங்கிரஸ் போட்டியிட்டாலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக இந்த தேர்தல் களத்தை தீவிரமாக கண்காணித்து வருவதுடன், அமைச்சர் துரைமுருகனை ஈரோடு களத்துக்கு நேரில் அனுப்பி, பணிகளை செம்மைப்படுத்தி உள்ளார்.
தேர்தல் பொறுப்பாளராக அமைச்சர் முத்துசாமி செயல்படுகிறார். அவருக்கு உறுதுணையாக மூத்த அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு ஆகியோர் பணியாற்றுகிறார்கள். இதுபோல் 25-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் ஈரோட்டில் முகாமிட்டு, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி கட்சியினரை முழுமையாக ஒருங்கிணைத்து வாக்குகள் சேகரித்து வருகிறார்கள்.
அ.தி.மு.க தரப்பில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மிக முக்கியமான தேர்தல். முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணி இல்லாமல் அ.தி.மு.க.வை தாங்கிப்பிடிக்க தன்னால் முடியும் என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் அவருக்கு இந்த வெற்றி மிக மிக முக்கியமானதாக உள்ளது.
எனவே, தேர்தல் அறிவித்த நாள் முதல் ஈரோட்டுக்கு அடிக்கடி வந்து நிர்வாகிகளை சந்தித்து தேர்தல் பணியாற்றி வருகிறார். அ.தி.மு.க. அணிக்கு தேர்தல் பொறுப்பாளராக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் உள்ளார். மூத்த நிர்வாகிகள் பலரும் ஈரோட்டில் முற்றுகையிட்டு ஓட்டுகள் கேட்டு வருகிறார்கள்.
தே.மு.தி.க. சார்பில் மாநில செயலாளர் எல்.கே.சுதீஷ், விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் மற்றும் முக்கிய தலைவர்கள் முற்றுகையிட்டு பிரசாரம் செய்கிறார்கள். கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று அனல் பறக்கும் பிரசாரம் மேற்கொண்டார்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முதல்கட்ட பிரசாரத்தை முடித்து உள்ளார்.
அ.தி.மு.க. தரப்பில் எடப்பாடி பழனிசாமி 3 நாள் தொடர் பிரசாரம் செய்து மக்கள் மத்தியில் வாக்குகள் கேட்டு இருக்கிறார். 2-ம் கட்ட பிரசாரத்தை நாளை (செவ்வாய்க்கிழமை) மீண்டும் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அ.தி.மு.க.வின் கூட்டணி கட்சியான த.மா.கா. தொடக்க நாள் முதலே அ.தி.மு.க. வேட்பாளருக்காக தீவிர பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது. கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் முதல்கட்ட பிரசாரத்தை முடித்து உள்ளார். பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை நேற்று வீதி வீதியாக சென்று தென்னரசுவுக்கு ஆதரவு திரட்டினார். இன்றும் (திங்கட்கிழமை) அவர் அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஓட்டுகள் கேட்கிறார்.
கூட்டணி கட்சியான புதிய நீதிக்கட்சி நிறுவன தலைவர் ஏ.சி.சண்முகம் 24 மற்றும் 25-ந் தேதிகளில் பிரசாரம் செய்வதாக தெரிவித்து உள்ளார்.
தி.மு.க. கூட்டணியில் தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. தனது பிரசாரத்தை முடித்து சென்று இருக்கிறார். இளைஞர் அணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்றும் (திங்கட்கிழமை), நாளையும் (செவ்வாய்க்கிழமை) சூறாவளி பிரசாரம் மேற்கொள்கிறார்.
அதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 24 மற்றும் 25-ந் தேதிகளில் ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் மக்களை சந்தித்து ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு கை சின்னத்தில் வாக்குகள் சேகரிக்கிறார்.
காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் மத்திய மந்திரிகள் ப.சிதம்பரம், கே.வி.தங்கபாலு, திருநாவுக்கரசர் உள்பட அனைவரும் ஈரோட்டுக்கு வந்து வார்டு வாரியாக சென்று வாக்குகள் சேகரித்து வருகிறார்கள்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தொடக்கத்தில் செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு வாக்குகள் சேகரித்தார். நேற்று ம.தி.மு.க. தலைமை கழக செயலாளர் துரை வைகோ ஈரோட்டில் பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் ரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் பிரசாரம் மேற்கொண்டு இருக்கிறார்கள்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொகிதின் செயல்வீரர்கள் கூட்டத்தில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு வாக்குகள் சேகரித்தார். அடுத்தகட்ட தலைவர்கள் ஈரோட்டில் பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வார்டு வாரியாக சென்று மக்களிடம் வாக்குகள் சேகரித்தார்.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தலைமையில் கட்சியின் அனைத்து கட்டநிர்வாகிகளும் கை சின்னத்துக்கு வாக்குகள் கேட்டு பணியாற்றி வருகிறார்கள்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு சென்று உள்ளார்.
இதற்கிடையே காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளித்து கூட்டணியில் புதிதாக இணைந்து உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொண்டர்கள் காங்கிரசின் கை சின்னத்துக்கு வாக்கு கேட்டு தீவிர பணியாற்றி வருகிறார்கள். அவர்களுக்கு உற்சாகம் ஊட்டும் வகையிலும் கட்சி தலைவர் கமல்ஹாசன் நேற்று மாலை வந்தார். அவர் ஈரோடு கருங்கல்பாளையம், சூரம்பட்டி நால்ரோடு, சம்பத் நகர், வீரப்பன்சத்திரம், பி.பி.அக்ரகாரம் பகுதிகளில் கை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தார்.
இப்படி ஒட்டுமொத்த கட்சிகளின் தலைவர்களும் ஈரோட்டை நோக்கி படை எடுத்தவண்ணம் இருக்கிறார்கள். தலைவர்களின் சூறாவளி சுற்றுப்பயணம், அனல் பறக்கும் பிரசாரங்களால் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது.
வாக்குப்பதிவு 27-ந் தேதி நடக்கிறது. எனவே பிரசாரம் 25-ந் தேதி மாலை 5 மணிக்கு நிறைவடைகிறது.
வரும் நாட்களில் இன்னும் பிரசாரத்தின் வேகம் அதிகரிக்கும். தேர்தல் திருவிழா இன்னும் களைகட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- மின்கட்டணம் 54 சதவீதம் உயர்த்தி விட்டனர்.
- வீட்டு வரி, கடைவரி என அனைத்தும் உயர்ந்து விட்டது.
ஈரோடு :
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவுக்கு வாக்கு கேட்டு முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 3-வது நாளாக நேற்று ஈரோட்டில் பிரசாரம் செய்தார். கருங்கல்பாளையம் ராஜகோபால் தோட்டம் முதல் சூரம்பட்டி நால்ரோடு வரை பிரசாரத்தில் ஈடுபட்டு இரட்டை இலை சின்னத்துக்கு அவர் ஆதரவு திரட்டினார்.
அவர் ராஜகோபால் தோட்டம் பகுதியில் பேசியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. ஆட்சியில் 10 ஆண்டுகளில் எந்த திட்டமும் செய்யவில்லை என்று பச்சை பொய் கூறுகிறார்.
21 மாத ஆட்சியில் தி.மு.க. ஈரோடு கிழக்கு தொகுதியில் ஒரு பணி கூட செய்யவில்லை.
அமைச்சர்கள் வீதி வீதியாக வந்து வாக்காளர்களுக்கு ரூ.1000, ரூ.2000 என்று கொடுக்கிறார்கள். தேர்தல் ஆணையம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நான் முதல்-அமைச்சராக இருந்தபோது 110 விதியின் கீழ் 5 லட்சம் முதியோருக்கு உதவித்தொகை வழங்க உத்தரவிட்டு 90 சதவீதம் பேருக்கு வழங்கினேன். ஆனால் 21 மாத தி.மு.க. ஆட்சியில் 7 லட்சம் முதியோருக்கு உதவித்தொகை நிறுத்தப்பட்டு உள்ளது.
10 ஆண்டுகளில் 53 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு மடிக்கணினி கொடுத்தோம். அதை தி.மு.க. அரசு நிறுத்தி விட்டது. அம்மா 2 சக்கர வாகனம் வழங்கும்திட்டம், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் என்று அ.தி.மு.க. திட்டங்களை நிறுத்தி விட்டனர்.
மின்கட்டணம் 54 சதவீதம் உயர்த்தி விட்டனர். இன்னும் 4 ஆண்டுகளில் 24 சதவீதம் உயரும். வீட்டு வரி, கடைவரி என அனைத்தும் உயர்ந்து விட்டது. இப்படி படித்தவர்கள், பாமரர்கள் என்று அனைவரையும் ஏமாற்றி ஆட்சிக்கு வந்தது தி.மு.க., எனவே இந்த தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
- 7½ லட்சம் முதியோர்களின் உதவித்தொகையை ரத்து செய்து இருக்கிறது.
- ஆண்டுக்கு 6 சதவீதம் மின்சார கட்டணத்தை உயர்த்துகிறார்கள்.
ஈரோடு :
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் கே.எஸ்.தென்னரசுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்து அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி நேற்று பிரசாரம் செய்தார். வீரப்பம்பாளையம், பெரியவலசு நால்ரோடு, பன்னீர்செல்வம் பூங்கா, வீரப்பன்சத்திரம் ஆகிய பகுதிகளில் அவர் வாக்குகள் கேட்டு பேசினார்.
வீரப்பம்பாளையம் பகுதியில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது கூறியதாவது:-
21 மாதகாலமாக மக்களை சந்திக்க வராத அமைச்சர்கள், இப்போது தேர்தல் என்றதும் இங்கேயே முகாம் அமைத்து வீதிவீதியாக வருகிறார்கள். மக்களை ஏமாற்ற பரோட்டா போடுவது, வடை சுடுவது என்று ஏமாற்றுகிறார்கள். பரோட்டா போடவும், டீ போடவுமா நீங்கள் வெற்றி பெற்றீர்கள். இந்த கிழக்கு தொகுதிக்கு நல்ல திட்டங்கள் கொண்டு வர வேண்டும் என்றுதானே மக்கள் வாக்களித்தார்கள். ஆனால் அதை செய்யாமல் மக்களை ஏமாற்றுகிறீர்கள். இப்போதும் ஒரு அமைச்சராவது தாங்கள் செய்த ஒரு திட்டத்தை பற்றி கூற முடியுமா?.
இங்கு மக்களை ஆடு, மாடுகள் போன்று கொட்டகைக்குள் அடைத்து வைத்திருக்கிறார்கள். 120 இடங்களில் அப்படி அடைக்கப்பட்டு உள்ளனர். நான் பிரசாரத்துக்கு வந்திருப்பதால் அவர்களுக்கு ரூ.2 ஆயிரம் கிடைத்து இருக்கிறது. 2 நேரம் பிரியாணியும் கொடுக்கிறார்கள். மக்களே அது உங்கள் பணம். நீங்கள் செலுத்திய வரிப்பணம் உங்களிடமே திரும்பி வருகிறது. அதை வாங்கிக்கொள்ளுங்கள். ஓட்டு மட்டும் கே.எஸ்.தென்னரசுக்கு இரட்டை இலை சின்னத்துக்கு போடுங்கள்.
மக்களுக்கு பணம் கிடைப்பதில் எனக்கு மகிழ்ச்சிதான். நான் வந்ததால் அதிகமாக கொடுக்கப்படுவதும் மகிழ்ச்சிதான். ஆனால் எப்படி நீங்கள் அடைத்து வைத்தாலும் மக்கள் அ.தி.மு.க.வுக்குத்தான் வாக்களிப்பார்கள். கண்ணுக்கு எட்டிய தூரம்வரை அ.தி.மு.க.வினரை காண வில்லை என்று காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார். அப்படி என்றால் எதற்காக இத்தனை அமைச்சர்கள் இங்கேவர வேண்டும். அ.தி.மு.க.வை சந்திக்க பயம். அவர்களின் பயம் நம் வெற்றியை உறுதி செய்து விட்டது.
21 மாதத்தில் எந்த ஒரு திட்டத்தையும் தி.மு.க. நிறைவேற்றவில்லை. ஆனால், 7½ லட்சம் முதியோர்களின் உதவித்தொகையை ரத்து செய்து இருக்கிறது.
வீட்டு வரியை உயர்த்தமாட்டோம் என்று தேர்தலுக்கு முன்பு அறிவித்து விட்டு 100 சதவீதம், வீடு, கடை வரிகளை உயர்த்தி இருக்கிறார்கள். ஆண்டுக்கு 6 சதவீதம் மின்சார கட்டணத்தை உயர்த்துகிறார்கள். இதுதான் திராவிட மாடல். இந்த தேர்தல் ஆட்சி மாற்றத்துக்கான தேர்தல். கே.எஸ்.தென்னரசுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறேன்.
இவ்வாறு முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
வழி நெடுகிலும் மக்களை சந்தித்து ஓட்டுகள் கேட்ட முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2-வது நாளாக இன்றும் (வியாழக்கிழமை) பிரசாரம் மேற்கொள்கிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்