search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ESI Hospital"

    • மருத்துகள் கையிருப்பில் உள்ளது குறித்தும் ஆய்வினை மேற்கொண்டார்.
    • அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

    சென்னை:

    தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 7 மணியளவில் சென்னை, பல்லாவரம் இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் திடீர் ஆய்வு செய்தார்.

    இந்த மருத்துவமனையில் சுமார் 68,000 காப்பாளர்கள் உள்ளனர். அப்போது மருத்துவமனைக்கு வந்திருந்த வெளிநோயாளிகளிடம் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

    மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் உரிய நேரத்தில் வருகிறார்களா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும், மருந்தகத்தில் போதுமான அளவில் மருத்துகள் கையிருப்பில் உள்ளது குறித்தும் ஆய்வினை மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின் போது இ.எஸ்.ஐ மருத்துவமனைகளின் இயக்குனர் டாக்டர் இளங்கோ மகேஸ்வரன், டாக்டர்கள் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

    • இஎஸ்ஐ மருத்துவ மனை இல்லாதது பெரும் குறையாக உள்ளது.
    • பல்நோக்கு இஎஸ்ஐ மருத்துவமனையின் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும்.

    கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு அவர்களை சந்தித்து கன்னியாகுமரியில் விமான நிலையம் மற்றும் ஹெலிகாப்டர் தளம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என கேட்டு கொண்டேன்.

    வெளிநாட்டு வாழ் குமரி மாவட்டத்தின் மக்கள், சுற்றுலா பயணிகள், கடலில் காணாமல் போகும் மீனவர்கள் மற்றும் நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இவை தேவை என்பதை எடுத்து கூறினேன்.


    அதே போல் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏராளமான தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் உள்ளன ஆனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் எல்லா நோய்களுக்கும் சிகிச்சை அளிக்க கூடிய ஒரு இஎஸ்ஐ மருத்துவ மனை இல்லாதது பெரும் குறையாக உள்ளது.

    காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது கன்னியாகுமரி மாவட்டத்திற்கு அனுமதிக்கப்பட்ட பல்நோக்கு இஎஸ்ஐ மருத்துவமனையின் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டுமென மத்திய தொழிலாளர் நல துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அவர்களை சந்தித்து கோரிக்கை வைத்தேன்.

    • மருத்துவமனையை திறந்து வைக்கும் பிரதமர் மோடி அங்கு பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பேச உள்ளதாக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.
    • மாற்று தேதி விரைவில் அறிவிக்கப்படும் என திருப்பூர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் செந்தில்வேல் தெரிவித்தார்.

    திருப்பூர்:

    பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2-ந்தேதி திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார். மேலும் திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்டினார். 2024ம் ஆண்டு பிறந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்துக்கு வருகை தந்த முதல் நிகழ்ச்சியாக அவரது திருச்சி சுற்றுப்பயணம் அமைந்தது.

    இதையடுத்து மீண்டும் பிரதமர் நரேந்திர மோடி இந்த மாதமே தமிழகத்துக்கு 2-வது முறையாக வருகை தர உள்ளதாக தகவல்கள் வெளியாகின. கேலோ இந்தியா விளையாட்டு போட்டி தமிழகத்தில் வருகிற 19-ந்தேதி தொடங்கி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க வரும்படி பிரதமர் மோடிக்கு தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டெல்லியில் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்.

    இதையடுத்து கேலோ இந்தியா போட்டியை சென்னையில் தொடங்கி வைக்க வரும் பிரதமர் மோடி அன்றைய தினம் திருப்பூர் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

    திருப்பூரில் புதிதாக இ.எஸ்.ஐ., மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையை திறந்து வைக்கும் பிரதமர் மோடி அங்கு பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பேச உள்ளதாக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் திருப்பூரில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக திருப்பூர் மாவட்ட பா.ஜ.க.வினர் அறிவித்துள்ளனர்.

    திருப்பூரில் கட்டப்பட்டு வரும் இ.எஸ்.ஐ., மருத்துவ மனையை திறந்து வைக்கும் தேதி மாற்றப்பட்டுள்ளதால், பிரதமர் மோடியின் தமிழக பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாற்று தேதியில் இ.எஸ்.ஐ., மருத்துவமனை திறப்பு விழா மற்றும் பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மாற்று தேதி விரைவில் அறிவிக்கப்படும் என திருப்பூர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் செந்தில்வேல் தெரிவித்தார்.

    • ராணிப்பேட்டை மாவட்ட ஊராட்சி கூட்டம் நடந்தது
    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட ஊராட்சி குழுவின் சாதாரண கூட்டம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஊராட்சி செயலர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி டாக்டர். ராதாகிருஷ்ணன் வாலாஜா ஒன்றியம், வன்னிவேடு ஊராட்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்தவர், எனவே அவரது பிறந்த நாளான செப்டம்பர் 5-ந் தேதி வன்னிவேடு அரசினர் பள்ளியில் மாவட்டத்தின் சார்பில் அரசு விழா கொண்டாட மாவட்ட கலெக்டர், மாவட்ட கல்வி அலுவலரை கேட்டு கொள்வது, அடுத்த ஆண்டு முதல் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆடிக்கிருத்திகை தினத்தை உள்ளூர் விடுமுறை தினம் என அரசாணை வழங்க வேண்டும்.

    நவ்லாக் ஊராட்சி புளியங்கண்ணு கிராம ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிசேரியன் அறுவை சிகிச்சை தொடங்குவதற்கான ஏற்பாடுகளை செய்ய மாவட்ட கலெக்டரை கோருவது, வாலாஜா ரோடு ரெயில் நிலையத்தில் கொரோனாவிற்கு முன்பு நிறுத்தப்பட்டு வந்த அனைத்து ெரயில்களும் மீண்டும் நின்று செல்ல தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம் வலியுறுத்து வது, ராணிப்பேட்டையில் உள்ள ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் 100 படுக்கைகளுடன் கூடிய இ.எஸ்.ஐ. மருத்துவ மனையை மத்திய அரசு நிதி உதவியுடன் உடனடியாக துவங்க கோருவது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதை தொடர்ந்து மாவட்ட கவுன்சிலர்கள் அரசு பஸ்கள் சரிவர இயக்கப்படுவதில்லை எனவே பள்ளி மாணவ, மாணவிகள், பெண்கள்,கட்டிட தொழிலாளர்கள், விவசாயிகள், வியா பாரிகள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முறையான கால நேரத்தில் அரசு பஸ்களை இயக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

    கூட்டத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட ஊராட்சி அலுவலர் உமாபதி நன்றி கூறினார்.

    • சென்னை உயா்நீதிமன்ற வழக்கு காரணமாக நீண்ட காலமாக தொடங்கப்படாமல் இருந்த கட்டுமானப் பணிகள், தமிழக முதல்வரின் துரித நடவடிக்கையால் தொடங்கப்பட்டது.
    • திருப்பூா் மாவட்டத்தில் பணியாற்றி வரும் 3.50 லட்சம் தொழிலாளா்கள் பயனடைவாா்கள்.

    திருப்பூர் :

    திருப்பூா் திருமுருகன்பூண்டி-பூலுவப்பட்டி சுற்றுச்சாலையில் 7.46 ஏக்கரில் ரூ.74 கோடியே 94 லட்சம் மதிப்பீட்டில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை அமைச்சா்கள் சி.வி.கணேசன், மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

    இதன் பின்னா் அமைச்சா் சி.வி.கணேசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் அதிக அளவு தொழிலாளா்கள் வசிக்கும் மாவட்டமாக திருப்பூா் உள்ளது. இ.எஸ்.ஐ. மருத்துவமனை கட்டுமானப் பணிகள் தொடா்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னை உயா்நீதிமன்ற வழக்கு காரணமாக நீண்ட காலமாக தொடங்கப்படாமல் இருந்த கட்டுமானப் பணிகள், தமிழக முதல்வரின் துரித நடவடிக்கையால் தொடங்கப்பட்டு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

    இந்த மருத்துவமனையானது தரைத் தளம் 4,464.67 சதுர மீட்டா் பரப்பளவு, முதல் தளம் 4,566 சதுர மீட்டா் பரப்பளவு, இரண்டாம் தளம் 3,790.68 சதுர மீட்டா் பரப்பளவு உள்பட மொத்தம் 13,106.80 சதுர மீட்டா் பரப்பளவில் 100 படுக்கை வசதியுடன் கட்டப்பட்டு வருகிறது. மேலும், மருத்துவமனை வளாகத்தில் குடிநீா் வசதி, கழிவறை வசதி, மின்தூக்கி உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் 2023 மே மாத இறுதிக்குள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.இதன் மூலமாக திருப்பூா் மாவட்டத்தில் பணியாற்றி வரும் 3.50 லட்சம் தொழிலாளா்கள் பயனடைவாா்கள் என்றாா்.

    இந்த ஆய்வின்போது, திருப்பூா் மாவட்ட கலெக்டர் வினீத், திருப்பூா் தெற்கு சட்டமன்ற உறுப்பினா்செல்வராஜ், மாநகராட்சி மேயா் என்.தினேஷ்குமாா், துணை மேயா்பாலசுப்பிரமணியம், மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார், தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) மலா்கொடி, இ.எஸ்.ஐ.கோவை மண்டல இயக்குநா் ரகுராமன், திருப்பூா் கிளை மேலாளா் திலீப் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

    • சிவகாசியில் ரூ.150 கோடியில் நவீன வசதிகளுடன் இ.எஸ்.ஐ. மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது.
    • இந்த தகவலை அமைச்சர் கணேசன் தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், ஆமத்தூரில் பட்டாசு தொழிற்சாலைகள் பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் நலன் குறித்த கருத்தரங்கு நடந்தது.தொழிலாளர் நலத்துறை முதன்மைச் செயலாளர் அதுல் ஆனந்த் தலைமை தாங்கினார்.

    தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முகமது நசிமுதீன் விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி, எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், அசோகன், ரகுராமன், சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் முன்னிலை வகித்தர்.

    அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, சி.வி.கணேசன் ஆகியோர் கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினார். இதில் தேசிய குழந்தை தொழிலாளர் திட்டம் மூலம் தொழிற்சாலையில் இருந்து மீட்கப்பட்ட 5 வளர் இளம் பருவத் தொழிலாளர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் மதிப்பிலும், 1 வளர் இளம் பருவத் தொழிலாளிக்கு ரூ.20 ஆயிரம் என மொத்தம் ரூ.1 லட்சத்து 45ஆயிரம் மதிப்பிலான மறுவாழ்வு நிதிக்கான காசோலையை அமைச்சர்கள் வழங்கினர்.

    அமைச்சர் கணேசன் பேசியதாவது:-

    எதிர் காலத்தில் பட்டாசு விபத்துக்களை தடுக்கும் வகையில் விரைவான நடவடிக்கை எடுப்பதற்கு கலெக்டர் தலைமையிலான குழுக்கள் விரைந்து செயல்படும். தமிழ்நாட்டிலேயே விருது நகர் மாவட்டத்தில் அதிக பட்டாசு தொழிற்சாலைகள் இருக்கின்றன. சுமார் 56 ஆயிரம் பட்டாசுத் தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள்.

    விருதுநகர் மாவட்டத்தில் ஏற்படும் பட்டாசு விபத்துக்களை தடுப்பது மட்டுமல்லாமல், தொழிலாளர்களை காப்பற்றுவதற்கும் சிவகாசியில் அரசு தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி சுமார் ரூ.150 கோடி மதிப்பீட்டில், நவீன வசதிகளுடன் அமைக்கப்பட உள்ளது.

    இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி மத்திய அரசிடம் ஒப்புதல் பெறுவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

    விபத்தில்லா பட்டாசு தொழில்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, சென்னையில் ஆய்வு கூட்டம் நடந்தது. அதன் விளைவாக இந்த கருத்தரங்கு நடத்தப்படுகிறது.ஆபத்து என்று தெரிந்தும் மக்கள் வறுமை காரணமாக இந்த தொழிலை செய்து வருகின்றனர். அவர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும், கடமையையும் தமிழக அரசுக்கும், பட்டாசு தொழிற்சாலைகள் உரிமையாளர்களுக்கும் உண்டு.

    இதுவரை தொழிலா ளர்களுக்கு பயிற்சி நிறுவனம் உருவாக்கப்பட்டு அதன் மூலம் 35 ஆயிரத்து 961 தொழிலாளர்களுக்கு, எவ்வாறு பாதுகாப்பாக பணியாற்றவேண்டும் என்ற பயிற்சி அளிக்கப்பட்டு ள்ளது. பட்டாசு விபத்து குறித்து 1241 வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. 800 பட்டாசு ஆலைகளில் இதுவரை ஒரு விபத்து கூட ஏற்படவில்லை. விபத்தில்லா பட்டாசு நடக்கும் ஆலைகள் பின்பற்றும் வழிமுறைகளை மற்ற தொழிற்சாலைகள் வழிகாட்டியாக கொண்டு செயல்பட்டு விபத்துக்களை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தமிழகத்திலுள்ள உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனைகளில் மருந்துகள் கொள்முதலில் மிகப்பெரிய அளவில் நடந்த ஊழலுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார். #KSAlagiri
    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அரசு தொழிலாளர் காப்பீட்டு கழக மருத்துவமனை தொடங்கப்பட்டு 68 ஆண்டுகள் ஆகின்றன. தொழிலாளர்களுக்கும், அவர்களது குடும்பங்களுக்கும் மருத்துவ வசதிகள் செய்து தருவதற்காகவே உருவாக்கப்பட்டதுதான் இ.எஸ்.ஐ. மருத்துவமனைகள். ஆனால் அனைத்துதுறைகளிலும் ஊழல் செய்வதை ஒரு முக்கிய வேலையாக கருதி செயல்பட்டு வருகிற அ.தி.மு.க. ஆட்சியில் மருத்துவத்துறை விதிவிலக்கல்ல.

    தமிழகத்திலுள்ள 65 இ.எஸ்.ஐ. மருத்துவமனைகளில் கடந்த ஆகஸ்ட் 2017 முதல் ஜூலை 2018 வரை மருந்துகள் கொள்முதல் செய்ததில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடைபெற்றிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இ.எஸ்.ஐ. மருத்துவமனைகளுக்கு தேவையான மருந்துகள் வாங்குவதற்கு கொள்முதல் திட்டம் ரூ.13.13 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டது.

    ஆனால் மத்திய மருத்துவ சேமிப்பு கிடங்கின் கண்காணிப்பாளர் மருந்துகளுக்கான கொள்முதல் தொகையை ரூ.40.29 கோடியாக தேவையில்லாமல் உயர்த்தி, தனியார் மருந்து நிறுவனங்களுக்கு கொள்முதல் ஆணை பிறப்பித்திருக்கிறார்.

    இந்த ஆணை பிறப்பித்திருப்பதற்கு பின்னாலே மருத்துவதுறையின் உயர் அதிகாரிகள் செயல்பட்டிருக்கின்றனர். தேவைக்கு அதிகமாக கொள்முதல் செய்யப்பட மருந்துகள் கொண்ட நூற்றுகணக்கான அட்டைபெட்டிகள் மதுரை பிராந்திய இ.எஸ்.ஐ. மருத்துவமனையின் அலுவலர் அறையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த அட்டைபெட்டிகளை வைப்பதற்கு இடமில்லாத காரணத்தால் பயன்படுத்தாத கழிவறைகளில் இவை வைக்கப்பட்டுள்ளன.

    கடந்த 6 மாதங்களுக்கு முன்பாகவே இ.எஸ்.ஐ. மருத்துவமனைகளில் ரூ.27.16 கோடிக்கு தேவைக்கு அதிகமாக கொள்முதல் செய்ததில் நடைபெற்ற ஊழல் குறித்து தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குனரகம் விசாரணை தொடங்கியது. ஆனால் அந்த விசாரணை தொடக்க நிலையில் இருந்து எந்த முன்னேற்றமும் அடையவில்லை.

    தமிழகத்தில் அமைய விருக்கிற புதிய ஆட்சியில் தொழிலாளர்களுக்காக நடத்தப்படுகிற இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்காக மருந்து கொள்முதலில் ஊழல் செய்த மருத்துவதுறை அதிகாரிகள் உரிய விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார். #KSAlagiri
    இ.எஸ்.ஐ. மருத்துவமனைகளில் 2 ஆயிரத்து 255 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. நர்சிங், பார்மசி உள்ளிட்ட துணை மருத்துவ படிப்புகளை படித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். #ESIHospital
    புதுடெல்லி:

    இ.எஸ்.ஐ. மருத்துவமனைகளில் 2 ஆயிரத்து 255 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. நர்சிங், பார்மசி உள்ளிட்ட துணை மருத்துவ படிப்புகளை படித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விவரம் வருமாறு:-

    மத்திய தொழிலாளர் நலத்துறையின் கீழ், இ.எஸ்.ஐ. கழகம் எனப்படும் தொழிலாளர் காப்பீட்டு கழக நிறுவனமும், மருத்துவமனைகளும் செயல்பட்டு வருகின்றன. மாநிலம் தோறும் இதன் மருத்துவமனை கிளைகள் உள்ளன. தற்போது இந்த மருத்துவமனைகளில் ஸ்டாப் நர்ஸ், பார்மசிஸ்ட், லேப் டெக்னீசியன், லேப் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    தமிழ்நாடு, டெல்லி, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், தெலுங்கானா, பீகார், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் மொத்தம் 2 ஆயிரத்து 255 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் தமிழகத்திற்கு 111 இடங்கள் உள்ளன. ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பணியிடங்கள் விவரத்தையும், பணிப்பிரிவு வாரியான காலியிட விவரத்தையும் முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம்.

    இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...

    கல்வித்தகுதி

    பிளஸ்-2 படிப்புடன், டிப்ளமோ நர்சிங் படித்தவர்கள் ஸ்டாப் நர்ஸ் பணிக்கு விண்ணப்பிக்கலாம். பார்மஸி பட்டப்படிப்பு படித்தவர்கள், அறிவியல் பாடங்களில் பட்டப்படிப்பு படித்தவர்கள், துணை மருத்துவ டிப்ளமோ படிப்பு படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன.

    வயது வரம்பு

    ஸ்டாப் நர்ஸ் பணிக்கு 32 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. அதிகபட்சம் 37 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வும் அனுமதிக்கப்படுகிறது.

    தேர்வு செய்யும் முறை


    ஆன்லைன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

    கட்டணம்

    விண்ணப்பதாரர்கள் ரூ.500 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள், அனைத்துப் பிரிவு பெண் விண்ணப்பதாரர்கள் ரூ.250 கட்டணம் செலுத்தினால் போதுமானது.

    விண்ணப்பிக்கும் முறை

    விருப்பமும், தகுதியும் இருப்பவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் ஜனவரி 21-ந் தேதியாகும். தமிழக விண்ணப்பதாரர்கள், விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.esichennai.org என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம். #ESIHospital
    புதுவை கோரிமேட்டில் ரூ.100 கோடி செலவில் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதனை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை கோரிமேட்டில் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரி விரிவுபடுத்தப்பட உள்ளது. அங்கு ரூ.100 கோடி செலவில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட உள்ளது. இதற்காக ஆஸ்பத்திரி அருகே உள்ள அரசுக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலத்தை இ.எஸ்.ஐ. நிர்வாகம் கேட்டுள்ளது.

    இந்த நிலையில் அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி ஆகியோர் இன்று கோரிமேடு இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு சென்றனர். ஆஸ்பத்திரி முழுவதும் பார்வையிட்ட அவர்கள் பின்னர் ஆஸ்பத்திரி விரிவாக்கத்துக்கு தேவைப்படும் நிலத்தையும் பார்வையிட்டனர்.

    இதுகுறித்து அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறும்போது, இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி விரிவாக்கத்துக்கு தேவையான அரசுக்கு சொந்தமான நிலத்தை கொடுப்பது தொடர்பாக அமைச்சரவையில் முடிவு செய்யப்படும் என்றார்.

    ×