search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "EVMs row"

    பாராளுமன்ற தேர்தலில் தோல்வி அடைவோம் என்ற பயத்தில்தான், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மீது எதிர்க்கட்சிகள் சந்தேகம் கிளப்புவதாக அமித்ஷா குற்றம் சாட்டி உள்ளார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் இன்று (வியாழக்கிழமை) எண்ணப்படுகின்றன. இதில் ஒப்புகைச்சீட்டுகளை முதலில் எண்ணிவிட்டு, வாக்குகளை பிறகு எண்ண வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து உள்ளன. இது தொடர்பாக 22 எதிர்க்கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் தேர்தல் கமிஷனை சந்தித்து வலியுறுத்தின.

    ஆனால் இதை நிராகரித்த தேர்தல் கமிஷன், வாக்குகளை முதலில் எண்ணிவிட்டு பின்னரே ஒப்புகைச்சீட்டுகள் எண்ணப்படும் என திட்டவட்டமாக கூறிவிட்டது. இதில் தற்போது கடைப்பிடிக்கும் நடைமுறையே பின்பற்றப்படும் என கூறியுள்ளது.

    இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் இத்தகைய கோரிக்கையை பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா குறை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறியிருப்பதாவது:-

    வாக்கு எண்ணும் நடை முறையை மாற்ற வேண்டும் என தேர்தல் கமிஷனில் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து இருப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. இந்த விவகாரத்தில் எந்த முடிவானாலும், அதை அனைத்துக்கட்சிகளின் ஒருமித்த கருத்தின் அடிப்படையிலேயே எடுக்க வேண்டும்.

    6-வது கட்ட வாக்குப்பதிவு முடிந்த பிறகுதான் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு எதிரான போராட்டத்தை எதிர்க்கட்சிகள் தொடங்கின. பின்னர். தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெறும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியானதும், இந்த போராட்டங்கள் தீவிரமடைந்தன.

    எனவே தேர்தலில் தோல்வியடைவோம் என்ற பயத்தால்தான் வாக்குப்பதிவு எந்திரங்கள் மீது எதிர்க்கட்சிகள் சந்தேகம் கிளப்புகின்றனர். வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு எதிராக போராடுவது மக்களின் தீர்ப்பை அவமதிக்கும் செயலாகும். இதுபோன்ற ஜனநாயக நடைமுறைகள் மீது கேள்வி எழுப்புவதன் மூலம் உலக அரங்கில் நாட்டையும், அதன் ஜனநாயகத்தையும் அவமதிக்கின்றனர். அவர்கள் புகாரில் உண்மையில்லை, சுயநலமே அடங்கி இருக்கிறது.

    தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் மூலம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் நம்பகத்தன்மையை எப்படி கேள்வி எழுப்ப முடியும்? மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மூலம் தேர்தல் நடத்தி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெற்றி பெறவில்லையா?

    அப்படி வாக்குப்பதிவு எந்திரங்களை நம்பவில்லை என்றால், அந்த தேர்தல்களுக்கு பின்னர் நீங்கள் ஏன் அரசு அமைத்தீர்கள்? மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மூலமான தேர்தலில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றால், அது தேர்தல் வெற்றி என்றும், தோல்வியடைந்தால் அதற்கு வாக்குப்பதிவு எந்திரங்கள்தான் காரணம் என்றும் கூற முடியுமா?

    இவ்வாறு அமித்ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதே கருத்தை மத்திய மந்திரியும், லோக் ஜனசக்தி கட்சி தலைவருமான ராம்விலாஸ் பஸ்வானும் கூறியுள்ளார். அவர் கூறுகையில், ‘எதிர்க்கட்சிகள் தோல்வியடைவது உறுதியானால், அவர்கள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மீதுதான் புகார் கூறுவார்கள் என நான் பல மாதங்களாக கூறி வருகிறேன். மின்னணு வாக்குப்பதிவு தொடர்பான வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டே 4 முறை விசாரித்து விட்டது. தோல்வியை மறைக்க அவர்கள் பல்வேறு போலி காரணங்களை கூறிவருகின்றனர்’ என தெரிவித்தார்.
    ×