என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Farmers Protest"

    • அரசாங்கம் விவசாயிகளுக்கு துரோகம் இழைத்துள்ளது
    • அரசாங்கத்தின் அட்டூழியங்களுக்கு எதிராகப் போராடுவதற்காக மகாபஞ்சாயத்துக்கள் நடத்தப்பட்டுள்ளன.

    பஞ்சாப் விவசாய தலைவர் ஜக்ஜித் சிங் தல்லேவால் 131 நாட்களாக நடத்தி வந்த காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று (ஞாயிற்றுக்கிழமை) முடித்துக் கொண்டார்.

    கடந்த ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, குறிப்பாக பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டப்பூர்வமாக உத்தரவாதம் செய்ய வலியுறுத்தி அவர் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.

    இருப்பினும் மத்திய அரசு கோரிக்கைகளை ஏற்க மறுத்ததால் அவரின் போராட்டம் தொடர்ந்து வந்தது. 70 வயதான அவர் ஏற்கனவே உடல்நலப்பிரச்னைகளுடன் இருந்த நிலையில் உண்ணாவிரதத்தால் அவரின் உடல்நிலை மோசமடைந்தது. மருத்துவனமயில் சிகிச்சை பெற்று வந்த அவர் தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் இன்று பஞ்சாபின் பதேகர் சாஹிப் மாவட்டத்தில் உள்ள சிர்ஹிந்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கிசான் மகாபஞ்சாயத்தின் போது ஜக்ஜித் சிங் தல்லேவால் தனது உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டுவருவதாக அறிவித்தார்.

    கூட்டத்தில் பேசிய அவர், பஞ்சாப் மற்றும் முழு நாட்டையும் சேர்ந்த விவசாயிகள் ஆதரவாளர்களின் வேண்டுகோளின் பேரில், இன்று எனது சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டுவர முழு மனதுடன் முடிவு செய்துள்ளேன். ஆனால் போராட்டம் தொடரும் என்று அவர் கூறினார். போராட்டதின் வடிவம் வேறுபட்டிருக்கலாம், ஆனால் அது முடிந்துவிடவில்லை என்று அவர் கூறினார்.

    மேலும் மத்திய மற்றும் மாநில அரசை விமர்சித்து பேசிய அவர், ஒருபுறம் அரசாங்கம் எங்களை ஒரு கூட்டத்திற்கு அழைக்கிறது என்றும் மறுபுறம் எங்கள் போராட்டம் இரவில் வலுக்கட்டாயமாக கலைக்கப்படுகிறது. அரசாங்கம் விவசாயிகளுக்கு துரோகம் இழைத்துள்ளது. அரசாங்கத்தின் அட்டூழியங்களுக்கு எதிராகப் போராடுவதற்காக மகாபஞ்சாயத்துக்கள் நடத்தப்பட்டுள்ளன.

    முன்னதாக மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் நேற்று சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதவில், விவசாயிகள் தலைவர் ஜக்ஜித் சிங் தல்லேவாலை உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டுவருமாறு வேண்டுகோள் விடுத்தார்.

    மேலும் முன்னரே திட்டமிடப்பட்ட தேதியின்படி மே 4 ஆம் தேதி காலை 11 மணிக்கு விவசாய அமைப்புகளுடன் மீண்டும் ஒரு சந்திப்பை நடத்துவதாக உறுதியளித்தார். தல்லேவால் தற்போது மருத்துவமனையில் இருந்து திரும்பிவிட்டதாகவும், அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறோம் என்றும் தெரிவித்திருந்தார்.

    மேலும் கோரிக்கைகள் தொடர்பாக மத்திய அரசின் பிரதிநிதிகளுக்கும் விவசாய அமைப்புகளுக்கும் இடையே நடந்து வரும் பேச்சுவார்த்தைகள் தொடரும் என்று உறுதியளித்தார்.

    கடைசியாக கடந்த மார்ச் 19 அன்று மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது. 

    • சிலர் சாலையில் தங்களது விளை பொருட்களை வைத்து விற்பனை செய்தனர்.
    • உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் பொங்கலூர், காட்டூர், காட்டூர் புதூர், உகாயனூர், வடக்கு அவிநாசிபாளையம், தெற்கு அவிநாசிபாளையம், பல்லடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விளைவிக்கக்கூடிய விவசாய விளை பொருட்களான தக்காளி, கத்திரிக்காய், பீர்க்கங்காய், புடலங்காய், பூசணிக்காய், காலி பிளவர் உள்ளிட்டவற்றை விவசாயிகள் தென்னம்பாளையம் தெற்கு உழவர் சந்தை பகுதிக்கு கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம்.

    இந்தநிலையில் திருப்பூரில் விடிய விடிய பெய்த கனமழையால் தென்னம்பாளையம் தெற்கு உழவர்சந்தையில் மழைநீர் குளம் போல் தேங்கியது. இதனால் விவசாயிகள் கொண்டு வந்த விளைபொருட்களை விற்க முடியாமல் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டனர். மேலும் அதனை எடுத்துச்செல்ல முடியாமல் பூசணிக்காய் ,தக்காளி, கீரைகளை சாலையில் வீசிச்சென்றனர். சிலர் சாலையில் தங்களது விளை பொருட்களை வைத்து விற்பனை செய்தனர்.

    தெற்கு உழவர் சந்தையில் மழைக்காலங்களில் தேங்கும் மழை நீரை அப்புறப்படுத்த வேண்டும் என மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனுக்கள் வழங்கியும் சரியான நடவடிக்கை எடுக்காததால் விவசாயிகள் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இங்கு தேங்கக்கூடிய மழை நீரை வெளியேற்றக்கூடிய வடிகால் வசதியை ஏற்படுத்தாததால் மழைநீர் தேங்கி நீச்சல் குளம் போல் மாறி விடுகிறது. எனவே மாநகராட்சி நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்கக்கூடிய வகையில் தேங்கி கிடந்த மழைநீரில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர்கள், விவசாயிகள் 50க்கும் மேற்பட்டவர்கள் இன்று காலை கப்பல் விடும் போராட்டத்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்றனர். 

    • தமிழகத்தில் ஒரு சில தியேட்டர்களில் படம் நிறுத்தப்பட்டது.
    • ‘எம்புரான்’ திரைப்படத்தை தமிழகத்தில் முற்றிலும் தடை செய்ய வேண்டும்.

    கம்பம்:

    மலையாள நடிகர் மோகன்லால், டொவினோ தாமஸ் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள 'எம்புரான்' திரைப்படத்தில் முல்லைப்பெரியாறு அணை குறித்து சர்ச்சைக்குரிய வசனங்கள் இடம்பெற்றுள்ளது.

    இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் படத்தை தடை செய்ய வேண்டும் என தமிழக விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஏற்கனவே இப்படத்தில் குஜராத் கலவரம் தொடர்பாக காட்சிகள் இடம் பெற்றிருந்ததால் 17 இடங்களில் வந்த படக்காட்சிகளை துண்டித்து மீண்டும் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில் இந்து அமைப்புகள் எதிர்ப்பின் காரணமாக காட்சிகளை வெட்டிய படக்குழு தமிழக விவசாயிகள் வைத்த கோரிக்கையை ஏற்கவில்லை. முல்லைப்பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளதால் படத்தை திரையிடக்கூடாது என்று பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில தியேட்டர்களில் படம் நிறுத்தப்பட்டது.

    இந்நிலையில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கும் வகையில், தேனி மாவட்டம் கம்பத்தில் இன்று போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் தலைமையில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கம்பத்தில் இருந்து பேரணியாக சென்றனர். அப்போது 'எம்புரான்' திரைப்படத்தை தமிழகத்தில் முற்றிலும் தடை செய்ய வேண்டும். இல்லையெனில் அந்த படத்தின் வினியோக உரிமை பெற்றுள்ள கோபுரம் சினிமாஸ் கம்பெனியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என கூறி அந்த அலுவலகம் முன்பு ஏராளமானோர் திரண்டனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி சமாதானப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. 

    • முந்திரி மரங்கள் அழிக்கப்பட்டதை கண்டித்து அதே இடத்தில் முந்திரி நடும் போராட்டத்தை நடத்தினர்.
    • போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மற்றும் கம்யூனிஸ்டுகளை குண்டுகட்டாக போலீசார் கைது செய்தனர்.

    கடலூர் மாவட்டம் மலையடிகுப்பத்தில் தோல் ஆலைக்கு நிலம் எடுத்ததற்கு எதிராக விவசாயிகள், கம்யூனிஸ்டுகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    முந்திரி மரங்கள் அழிக்கப்பட்டதை கண்டித்து அதே இடத்தில் முந்திரி நடும் போராட்டத்தை நடத்தினர்.

    விவசாயிகளின் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் பங்கேற்றார். இதையடுத்து விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.

    அப்போது மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். பேட்டி அளித்து கொண்டிருந்தபோது சண்முகத்தை தள்ளிக்கொண்டு மற்றவர்களை போலீசார் கைது செய்தனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மற்றும் கம்யூனிஸ்டுகளை குண்டுகட்டாக போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

    • குழுவில் உள்ள கேரளாவைச் சேர்ந்த 2 பேரை நீக்க வேண்டும்.
    • 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை போராட்ட பேரணி.

    கூடலூர்:

    முல்லைப்பெரியாறு அணையை கண்காணிக்க உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட பழைய குழு களைக்கப்பட்டு தற்போது 7 பேர் கொண்ட புதிய கண்காணிப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த குழுவின் தலைவராக தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் அனீஸ் ஜெயின் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஆணையமே முல்லைப்பெரியாறு அணை தொடர்பான அனைத்து விவகாரங்களையும் கவனிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தக் குழு அமைக்கப்பட்ட பிறகு முதல் முறையாக முல்லைப்பெரியாறு அணையின் தன்மை குறித்து நாளை (22-ந்தேதி) ஆய்வு செய்ய வருகின்றனர். இந்த நிலையில் குழுவில் இடம் பெற்றுள்ள கேரளாவைச் சேர்ந்த நீர் பாசனம், நிர்வாகத் தலைமை பொறியாளர் பிரியோஸ், நீர் வளத்துறை தலைமை செயலர் விஸ்வாஸ் ஆகிய 2 பேரையும் நீக்கம் செய்ய வலியுறுத்தி இன்று பெரியாறு, வைகை பாசன விவசாய சங்கத்தினர் முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர்.

    அதன்படி லோயர் கேம்ப்பில் இருந்து தமிழக எல்லையான குமுளியை நோக்கி பேரணியாக சென்று போராட்டம் நடத்த திட்டமிட்டனர். இதனையடுத்து காலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் வரத் தொடங்கினர்.

    இது குறித்து பெரியாறு, வைகை பாசன விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பால சிங்கம் தெரிவிக்கையில், முல்லைப்பெரியாறு அணை தேசிய அணைகள் கட்டுப்பாட்டு ஆணைய தலைவர் அனீஸ் ஜெயின் தலைமையில் 7 பேர் கொண்ட குழு ஆய்வு செய்ய வருகிறது.

    மத்திய நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் இருந்த அணை தற்போது தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

    இந்த குழுவில் உள்ள கேரளாவைச் சேர்ந்த 2 பேரை நீக்க வேண்டும் என தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். கேரளாவைச் சேர்ந்த இவர்களால் அணையில் மேற்கொள்ளப்படும் எந்த பராமரிப்பு பணிகளுக்கும் அனுமதி கொடுக்க மாட்டார்கள்.

    மேலும் பெரியாறு புலிகள் காப்பகம், கேரள நீர்வளத்துறை, கேரள காவல் துறை ஆகிய 3 துறைகள் இணைந்து தமிழக பொறியாளர்கள் அணையில் பணிகள் செய்ய அனுமதி கொடுப்பதில்லை.

    இந்த அணை பாதுகாப்புக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை போராட்ட பேரணி நடத்தி வருகிறோம் என்றார்.

    விவசாயிகள் போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து பென்னிகுவிக் நினைவு மணிமண்டபம், லோயர் கேம்ப், குமுளி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவு போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

    • பாலை 1 லிட்டருக்கு ரூ.10 வீதம் உயர்த்தி, பசும்பாலுக்கு ரூ.45 எனவும், எருமை பாலுக்கு ரூ.51 எனவும் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்.
    • கறவை மாடுகளுக்கு நிபந்தனை இன்றி, வட்டி இன்றி கடன் வழங்க வேண்டும்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் பால் விலையை உயர்த்த கோரி பாலை சாலையில் கொட்டி போராட்டம் நடைபெற்றது. இதற்கு விவசாய சங்க மாவட்ட தலைவர் பெருமாள் ராஜா தலைமை தாங்கினார். சி.பி.எம். ஒன்றிய செயலாளர் வெள்ளை கண்ணன், ஒன்றிய குழு உறுப்பினர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் தவிடு, பருத்திக்கொட்டை, புண்ணாக்கு, கலப்பு தீவனங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ள சூழ்நிலையில் பாலை 1 லிட்டருக்கு ரூ.10 வீதம் உயர்த்தி, பசும்பாலுக்கு ரூ.45 எனவும், எருமை பாலுக்கு ரூ.51 எனவும் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்.

    மேலும் தமிழ்நாடு அரசு அறிவித்த ஊக்கத்தொகை லிட்டருக்கு ரூ.3 வீதம் 4 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள பாக்கித் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் எனவும்,ஆவின் கலப்பு தீவனங்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் தட்டுப்பாடு இல்லாமல் 50 சதவீதம் மானிய விலையில் வழங்க வேண்டும்.

    சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அமர்வு தீர்ப்பின்படி ஆரம்ப சங்கங்களில் இருந்து பாலை வண்டிகளில் ஏற்றுவதற்கு முன்பாக அளவையும், தரத்தையும் குறித்துக் கொடுக்க வேண்டும். கறவை மாடுகளுக்கு நிபந்தனை இன்றி, வட்டி இன்றி கடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

    இதே போல் பழனி தொப்பம்பட்டி, ஒட்டன்சத்திரம், ராமப்பட்டினம் புதூர், கன்னிவாடி, வேடசந்தூர் புது ரோடு, குஜிலியம்பாறை ஆனைப்பட்டி, வத்தலக்குண்டு, விருவீடு, திண்டுக்கல் அரசனம்பட்டி ஆகிய பகுதிகளில் பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • டிஜிட்டல் ரீசர்வே முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக விவசாயிகள் கம்பம் மெட்டில் முற்றுகை போராட்டம் நடத்தப்போவ தாக அறிவித்துள்ளனர்.
    • இதற்காக 5 மாவட்ட விவசாயிகள் சங்க பிரதிநிதி களை சந்தித்து பேசி யுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    கூடலூர்:

    கேரள அரசால் நவம்பர் 1-ந் தேதி நடைபெற உள்ள டிஜிட்டல் ரீசர்வே முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக விவசாயிகள் கம்பம் மெட்டில் முற்றுகை போராட்டம் நடத்தப்போவ தாக அறிவித்துள்ளனர்.

    இது குறித்து பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறியதாவது:-

    கேரளாவில் 14 மாவட்ட த்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 200 கிராமங்களில் குளோபல் நேவிகேசன் சாட்டிலைட் சிஸ்டத்தின் மூலம் மறு சர்வே எனப்படும் ரீ சர்வே வருகிற நவம்பர் 1-ந் தேதி நடத்த உள்ளதாக அம்மாநில அரசு தெரி வித்துள்ளது.

    இந்த மறு ஆய்வால் எல்லைப்பகுதியில் உள்ள தமிழக வன நிலங்கள் கூடுதலாக பறிபோகும் அபாயம் உள்ளது. எல்லை யோரங்களில் விவசாய நிலங்கள் வைத்திருக்கும் தமிழக விவசாயிகளின் நிலையும் மோசமாகும்.

    இடுக்கி, பத்தினம்திட்டா, வயநாடு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் தமிழக எல்லையோரம் உள்ள 15 தாலுகாக்களில் டிஜிட்டல் ரீ சர்வேயை நிறுத்த வேண்டும். இதற்கு முறையான வழி முறைகளை பின்பற்றி அதிகாரிகள் குழுவை கேரளாவுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இதில் தமிழக அரசு காலதாமதம் செய்தால் வருகிற நவம்பர் 1-ந் தேதி கம்பம் மெட்டில் முற்றுகை ேபாராட்டம் நடத்தப்படும் என்றார்.

    ஏற்கனவே முல்லைப்பெ ரியாறு அணை குறித்த சர்ச்சைக்குரிய ஆவணபடம் தயாரித்த வக்கீல் மீது நடவடிக்கை எடுக்கா விட்டால் தமிழக விவாயிகள் போராட்டம் நடத்தப்போவ தாக அறிவித்திருந்தனர்.

    இதனிடையே மீண்டும் ஒரு பிரச்சினையாக கேரள அரசு டிஜிட்டல் ரீ சர்வே முறை தமிழக விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக - கேரள எல்லையில் உள்ள 3 வழித்தடங்களிலும் போராட்டம் நடைபெறும் என்றும் இதற்காக 5 மாவட்ட விவசாயிகள் சங்க பிரதிநிதி களை சந்தித்து பேசி யுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    • ஓடைப்பட்டியில் விவசாய சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் நாளை சின்னமனூரில் இருந்து தேனி வரை விவசாயிகள் பாதயாத்திரை செல்லும் போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.
    • காய்கறி மொத்த மார்க்கெட், வர்த்தக சங்கம் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளிடமும் விவசாயிகள் ஆதரவு கேட்டுள்ளனர்.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் லோயர்கேம்பில் இருந்து பழனிசெட்டிபட்டி வரை உள்ள 14707 ஏக்கர் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியாகும். இங்கு இருபோக நெல்சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. பாசனத்திற்கு முல்லைபெரியாற்றின் நீரையே பெரிதும் நம்பியுள்ளனர். சின்னமனூர் கிழக்கில் முத்துலாபுரம், ஓடைப்பட்டி, வெள்ளையம்மாள்புரம், அப்பிபட்டி, தென்பழனி, காமாட்சிபுரம், எரசை, கன்னிசேர்வைபட்டி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.

    இங்கு நிலத்தடி நீர் முழுவதும் வற்றியதால் முல்லைபெரியாற்று அருகே உள்ள நிலங்களில் போர்வெல் அமைத்து குழாய்கள் மூலம் தோட்டங்களுக்கு கொண்டுவரப்படுகிறது. இதன்மூலம் சுமார் 3000 ஏக்கரில் பயிர்சாகுபடி செய்யப்படுகின்றன.

    கடந்த 2014-ம் ஆண்டு இதற்கு அரசிடம் அனுமதி பெறப்பட்டது. 2018-ம் ஆண்டு தனிநபர் தொடர்ந்த வழக்கால் குறிப்பிட்ட 5 பேர் தண்ணீர் கொண்டு செல்ல மதுரை ஐகோர்ட்டு கிளை இடைக்கால தடை விதித்தது. அந்த உத்தரவில் தண்ணீர் கொண்டுசெல்லும் குழாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிடவில்லை என விவசாய சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

    ஆனால் அதிகாரிகள் 42 விவசாய பகிர்மான குழாய் லைன்களை துண்டித்துள்ளனர். இதனால் கடந்த 3 மாதங்களாக 3000 ஏக்கர் பயிர்கள் தண்ணீரின்றி கருகியது. இதனால் விவசாயிகள் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதித்ததாக தெரிவித்தனர். கடந்த வாரம் ஒருங்கிணைந்த விவசாய சங்கத்தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் சின்னமனூரில் போராட்டம் நடைபெற்றது.

    இந்த நிலையில் ஓடைப்பட்டியில் விவசாய சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் நாளை சின்னமனூரில் இருந்து தேனி வரை விவசாயிகள் பாதயாத்திரை செல்லும் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். இதனால் ஓடைப்பட்டியில் தோட்ட வேலைகள், காய்கறிகள் மார்க்கெட்டுகளுக்கு அனுப்புவதும் நிறுத்தப்பட்டுள்ளது. குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்பாமல் கடைகள் அடைக்கப்படுகின்றன.

    மேலும் இங்குள்ள ஊராட்சிகளில் கிராமசபை கூட்டங்களை நடத்தாமல் புறக்கணிக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் சின்னமனூரில் உள்ள காய்கறி மொத்த மார்க்கெட், வர்த்தக சங்கம் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளிடமும் விவசாயிகள் ஆதரவு கேட்டுள்ளனர்.

    • நில உரிமைச் சான்றின் மூலம் பல்வேறு திட்டங்களில் விவசாயிகள் பயனடைந்து வருகிறார்கள்.
    • திருப்பூர் மாவட்ட கலெக்டர் நில உரிமைச்சான்று கொடுக்கக்கூடாது என்று வாய்மொழியாக உத்தரவிட்டிருப்பதாகத் தெரிகிறது,

    மடத்துக்குளம் :

    கூட்டு பட்டாவில் உள்ள நிலங்களுக்கு ஆவணப்படி நில உரிமைச்சான்று வழங்கக்கோரி மடத்துக்குளம் தாலுகா அலுவலகம் முன்பு விவசாயிகள் நாைள முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். மடத்துக்குளம் தாசில்தார் அலுவலகம் முன்பு நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப் போவதாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் அறிவித்துள்ளது.

    இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

    தமிழ்நாடு முழுவதும் மின்சாரத்துறை, பத்திரப்பதிவுத்துறை, கூட்டுறவுத்துறை, ஒன்றிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பயிர்க் கடன் பெறுவதற்கு மற்றும் அரசின் கொள்முதல் திட்டங்களில் நெல், கொப்பரை போன்றவற்றை விற்பனை செய்வதற்கு என அனைத்திலும் கூட்டு பட்டாவில் உள்ள நிலங்களுக்கு நில உரிமைச் சான்று மேற்கண்ட துறைகளிடம் கட்டாயம் வழங்க வேண்டியதுள்ளது.

    நிலம் அமைந்துள்ள கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலர் எழுதிக் கொடுக்கும் நில உரிமைச் சான்றின் மூலம் இது போன்ற திட்டங்களில் விவசாயிகள் பயனடைந்து வருகிறார்கள். ஆனால் தற்போது திருப்பூர் மாவட்ட கலெக்டர் நில உரிமைச்சான்று கொடுக்கக்கூடாது என்று வாய்மொழியாக உத்தரவிட்டிருப்பதாகத் தெரிகிறது. இதனால் கூட்டுப்பட்டா வைத்துள்ள விவசாயிகள் பயிர்க்கடன் பெற முடியாமலும், மின் இணைப்பு பெற முடியாமலும், நெல் கொள்முதல் திட்டத்தில் நெல்லை விற்பனை செய்ய முடியாமலும் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

    மற்ற மாவட்டங்களில் வழங்கப்பட்டு வரும் நில உரிமைச்சான்று திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது ஏன் என்பதற்கான முறையான விளக்கம் கூட இதுவரை கிடைக்கவில்லை.

    தற்போது அமராவதி ஆயக்கட்டுப் பகுதிகளில் நெல் அறுவடை செய்யப்பட்டு கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய பதிவு செய்வதற்காக விவசாயிகள் காத்து கொண்டிருக்கிறார்கள்.நில உரிமைச்சான்று பெற முடியாததால் பல விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.எனவே தகுதியுள்ள விவசாயிகளுக்கு நில உரிமைச்சான்று வழங்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அல்லது எந்த அரசுத்துறைகளும் நில உரிமைச்சான்று கேட்கக்கூடாது என்று உத்தரவிட வேண்டும்.பெரும்பாலான நிலங்கள் உட்பிரிவு செய்யப்படாமல் கூட்டு பட்டாவாகவே உள்ள நிலையில் விவசாயிகளிடம் நெல் கொள்முதலை தவிர்க்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகவே இது தெரிகிறது.இதனைக் கண்டித்து அனைத்து விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யும் வகையில் உரிமைச்சான்று வழங்க வேண்டும் என்று கோரி நாளை காலை 10 மணி முதல் மடத்துக்குளம் தாலுகா அலுவலகம் முன் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களையும் முன்னெடுத்து வந்தனர்.
    • அடுத்த கட்ட நடவடிக்கையாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர்.

    அன்னூர்,

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அன்னூர் ஒன்றியங்களில் உள்ள பள்ளேபாளையம், இலுப்பநத்தம், பொகளூர், குப்பனூர், அக்கரை செங்கம்பள்ளி, வடக்கலூர் உள்ளிட்ட 6 ஊராட்சிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 3,850 ஏக்கரில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் வாயிலாக சிப்காட் அமைக்க அரசு முடிவு செய்தது.

    இதற்கு அப்பகுதி கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களையும் முன்னெடுத்து வந்தனர்.

    கோவை வந்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலி–னையும் நேரில் சந்தித்து மனு அளித்தனர். அப்போது விவசாயிகளை பாதிக்கும் எந்தொரு திட்டத்தையும் செயல்படுத்தப் போவதில்லை என முதல்வர் உறுதி அளித்தாக விவசாயிகள் தெரிவித்தனர். இதன் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அன்னூரில் சிட்கோ அமைப்பதற்காக 3731 ஏக நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசாணை வெளியிட்டது. இதனால் இப்பகுதி விவசாயிகள் அதிர்ச்சி அடைந்து சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.

    தொடர்ந்து நமது நிலம் நமதே போராட்ட குழுவின் சார்பில் அன்னூரை அடுத்துள்ள குழியூரில் 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்ட இருசக்கர வாகன பேரணி நடந்தது.

    இதன் தொடர்ச்சியாக இன்று காலை 10 மணியளவில் அன்னூர் தாலுகா அலுவலகம் முன்பு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் குவிந்தனர். அவர்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போரா–ட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட–வர்கள், எங்களுக்கான நிரந்தர தீர்வை கொண்டு வர வேண்டும். இல்லையெனில் அடுத்த கட்ட நடவடிக்கையாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர்.

    விவசாயிகள் போராட்டம் பற்றிய தகவல் அறிந்ததும் மாவட்ட எஸ்.பி. பத்ரிநாராயணன் தலை–மையில், மேட்டுப்பாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி, மதுவிலக்கு காவல்துறை துணை கண்காணிப்பாளர் செல்வராஜ்,அன்னூர் இன்ஸ்பெக்டர் நித்யா, காரமடை இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் மேற்பார்வையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் துகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    போராட்டம் காரணமாக அன்னூரில் இருந்து சக்தி செல்லும் வாகனங்கள் அனைத்தும் மாற்றுப்பாதை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்க மாநில தலைவர் வேணுகோபால், நமது நிலம் நமது தலைவர் ரவிக்குமார், நமது நிலம் நமது செயலாளர் ராஜன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • பொள்ளாச்சி-பல்லடம் ரோட்டில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • மழைகாலங்களில் வீணாகும் நீரை குளம், குட்டைகளில் சேகரிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ெபாள்ளாச்சி,

    பி.ஏ.பி.பாசன விவசாயிகள் வாழ்வாதா–ரத்தை பாதுகாத்திட வலியுறுத்தி–யும், பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும் விவசாயிகள் மாவட்ட குழு சார்பில் பொள்ளாச்சி-பல்லடம் ரோட்டில் தனியார் மண்டபம் எதிரே விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் பழனிசாமி தலைமை தாங்கினார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் 50 பெண்கள் உள்பட 700-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

    விவசாயிகள் கூறும்போது பி.ஏ.பி.கால்வாய் ஒரங்களில் உள்ள மின் இணைப்புகளை அதிகாரிகள் வேகமாக துண்டித்து வருகின்றனர். இதனை உடனடியாக நிறுத்த வேண்டும்.

    பரம்பிக்குளம், ஆழியாறு பாசன பகுதி விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். ஆனைமலையாறு, நல்லாறு தி்டத்தை நிறைவேற்ற வேண்டும். பி.ஏபி.கால்வாய்களை சீரமைக்க வேண்டும். மழைகாலங்களில் வீணாகும் நீரை குளம், குட்டைகளில் சேகரிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தென்னை விவசாயிகளின் கோரிக்கையையும் நிறைவேற்ற வேண்டும் என்றனர்

    இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

    • பன்னீர் கரும்புடன் கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி பகுதியில் விவசாயிகள் மறியல் செய்தனர்.
    • மறியலால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு, குள்ளஞ்சாவடி, பண்ருட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் பன்னீர் கரும்பை சாகுபடி செய்துள்ளனர்.

    இந்த கரும்பு பொங்கல் பண்டிகையையொட்டி அறுவடை செய்யப்படும். முன்னதாக இந்த கரும்பை வியாபாரிகள் வந்து விவசாயிகளிடம் நேரிடையாக கரும்புக்கு பணம் கொடுத்து விடுவார்கள். இதனால் பன்னீர் கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது பொங்கல் தொகுப்பின் போது பன்னீர் கரும்பு வழங்கப்பட்டு வந்தது.

    இதேபோல் தி.மு.க. ஆட்சி வந்ததும் கடந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்புடன் பன்னீர் கரும்பு வழங்கப்பட்டது.

    ஆனால் இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்புடன் பன்னீர் கரும்பு வழங்கப்படவில்லை என தெரியவந்துள்ளது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இன்று காலை ஏராளமான விவசாயிகள் ஒன்று திரண்டனர். அவர்கள் பன்னீர் கரும்புடன் கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி பகுதியில் மறியல் செய்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அப்போது விவசாயிகள் கூறுகையில், பொங்கல் பண்டிகையையொட்டி அரசு பன்னீர் கரும்பு கொள்முதல் செய்யாததால் எங்களுக்கு பெரியளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, அரசு மறுபரிசீலனை செய்து பன்னீர் கரும்பு பொங்கல் தொகுப்புடன் வழங்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    ×