என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fatima (RA)"

    • புனித ரமலானில் உம்ரா செய்வதால் கிடைக்கும் நன்மைகள்.
    • உம்ராவை எத்தனை தடவை வேண்டுமானாலும் நிறைவேற்றலாம்.

    புனித ரமலானில் உம்ரா செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

    புனித ரமலான் மாதம் நோன்புக்கானது (மாதம்) மட்டுமல்ல. நோன்புக்கும் உரியது. நோன்பு அல்லாத பிற வழிபாட்டுக்கும் ஏற்றமானது. புனித ரமலானில் உயர்வான, முதன்மையான வழிபாடு நோன்பாகும். நோன்பை விடுத்து இன்னும் ஏராளமான வழிபாடுகள் புனித ரமலானில் நிரம்பி வழிகின்றன. நிறைவேற்றப்படவும் செய்கின்றன. அவற்றில் நோன்புக்கு அடுத்த அந்தஸ்தில் இடம் பெறுவது புனிதரமலானில் புனித கஅபா ஆலயம் சென்று, அதை தரிசனம் செய்து (உம்ரா செய்து) வருவதாகும்.

    உம்ரா செய்வது என்றால், அதற்கென்று தனி மாதங்களோ, தனி காலங்களோ கிடையாது. ஆண்டு முழுவதும் புனித கஅபா ஆலயம் சென்று தரிசனம் செய்து வரலாம். ஆனால், இவ்வாறு ஹஜ் செய்யமுடியாது. ஹஜ் செய்வ தற்கென்று சில குறிப்பிட்ட மாதங்கள் உண்டு. அவை, ஷவ்வால், துல்கஅதா, துல்ஹஜ் மாதத்தின் முதல் 10 நாட்களாகும். இம்மூன்று மாதங்களை தவிர்த்து வேறுமாதங்களில் ஹஜ்ஜை நிறைவேற்ற முடியாது. எனினும், உம்ராவை நிறைவேற்ற முடியும்.

    உம்ரா செய்ய ஒருவர் நாடினால், அவர் முதலில் தைக்கப்படாத இரண்டு ஆடைகளை அணிந்து புனித கஅபாவில் நுழைய வேண்டும். (இதற்கு இஹ்ராம் ஆடை என்று பெயர்), புனித கஅபாவில் நுழைந்ததும் 7 சுற்றுக்கள் சுற்றி வர வேண்டும், ஸபாவில் ஆரம்பித்து - மர்வா ஆகிய இரண்டு குன்றுகளுக்கு மத்தியில் ஏழு தடவை விரைந்தோட வேண்டும். தலைமுடியை அகற்ற வேண்டும். இவ்வாறு செய்வதுதான் உம்ரா ஆகும்.

    உம்ராவை எத்தனை தடவை வேண்டுமானாலும் நிறைவேற்றலாம். ஆனால் புனித ஹஜ் என்பது வாழ்க்கையில் ஒரு தடவைதான் கடமை. புனித ஹஜ்ஜை ஒரு தடவை மட்டும் நிறைவேற்றினால் போதும். உம்ராவை பல தடவை நிறைவேற்றலாம். இதுதான் நபி வழி.

    கதாதா (ரஹ்) அறிவித்தார். 'நபி (ஸல்) அவர்கள் எத்தனை உம்ராக்கள் செய்தார்கள்? என நான் அனஸ் (ரலி) அவர்களிடம் கேட்டதற்கு அவர், 'நான்கு உம்ராக்கள் செய்தார்கள். அவை: ஹூதைபிய்யா எனுமிடத்தில் துல்க அதா மாதத்தில், இணை வைப்போர் தடுத்த போது செய்யச் சென்றது. இணைவைப்பருடன் செய்த சமாதான ஒப்பந்தப்படி, அடுத்த ஆண்டு துல்கஅதா மாதத்தில் செய்தது. 'ஜிஇர்ரானா' என்ற இடத்திலிருந்து ஒரு போரில் (அது ஹூனைன் போர் என்று கருதுகிறேன்) வெற்றி கொள்ளப்பட்ட பொருட்களை பங்கிட்ட பொழுது செய்தது.

    நபி (ஸல்) அவர்கள் தமது ஹஜ்ஜில் அடங்கியிருந்த உம்ராவையும் சேர்த்து நான்கு உம்ராக்களாகும்' என்றார். பிறகு 'எத்தனை ஹஜ் செய்தார்கள்?" என்று கேட்டதற்கு 'ஒரு ஹஜ் தான், என்றார்கள்.' (நூல்:புகாரி)

    உம்ராவை எந்த மாதத்திலும் நிறைவேற்றலாம். எனினும், புனித ரமலான் மாதத்தில் உம்ராவை நிறைவேற்றுவது நபி (ஸல்) அவர்களுடன் ஹஜ் செய்வதற்கு நிகரானதாகும். 'ரமலானில் செய்யப்படும் ஓர் உம்ரா என்னோடு ஹஜ் செய்வதற்கு நிகராகும்' என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி)

    ஹஜ் வேறு வணக்கம். உம்ரா வேறு வணக்கம். உம்ரா செய்வதினால் மட்டுமே ஹஜ் கடமை நீங்கிவிடாது. எனினும், ரமலானில் உம்ரா செய்தால், ஹஜ் செய்வதால் எந்த நன்மை கிடைக்குமோ அதே நன்மை கிடைக்கும். 'ஓர் உம்ராச் செய்வது, மறு உம்ரா வரை (ஏற்படும் சிறு) பாவங்களுக்குப் பரிகாரமாகும். (பாவச்செயல் கலவாத) ஒப்புக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜூக்குச் சொர்க்கத்தைத் தவிர வேறு கூலி இல்லை' (அறிவிப்பாளர்: ஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்) அபூஹரைரா (ரலி ), நூல் :முஸ்லிம்

    • புனித ரமலானில் 17-ம் நாள் நடந்த `பத்ர் போர்’
    • வெற்றி-தோல்வி என்பது எண்ணிக்கை வைத்து அல்ல. எண்ணங்களை வைத்து.

    புனித ரமலானில் 17-ம் நாள் நடந்த `பத்ர் போர்'

    புனித ரமலான் மாத நோன்பு ஹிஜ்ரி 2-ம் ஆண்டு தான் கடமையாக்கப்பட்டது. அதே ஆண்டில் தான் போர் செய்வதும் கடமையாக்கப்பட்டது.

    நோன்பு என்பது உண்ணாமலும், பருகாமலும் இருந்து உடல் சோர்வுடன், உடல் நலிந்து, மெலிந்து இருப்பது. போர் புரிவது என்பது அழகிய முறையில் ஊட்டச்சத்துக்களை உண்டு, புத்துணர்ச்சி தரும் பானங்களை பருகி உடல் நலத்துடனும், உடல் பலத்துடனும், உடல் வலிமையுடனும் இருப்பது. உடல் தகுதியை நிரூபிப்பது.

    பத்ர் போரின் பின்னணி'

    அபூசுப்யான் தலைமையில் வியாபாரக் கூட்டம் சிரியா தேசத்தில் இருந்து மக்காவை நோக்கி குறைஷித் தலைவர்களுக்குரிய செல்வங்களுடன் திரும்பிக் கொண்டிருந்தது. இவர்களிடம் 50 ஆயிரம் தங்க நாணயங்களுக்கு குறையாத அளவு வியாபாரப் பொருட்கள் 1000 ஒட்டகங்களில் 40 வீரர்களின் பாதுகாப்பில் சென்று கொண்டிருந்தது.

    மக்கா வாசிகளுக்கு பொருளாதார ரீதியாக சேதத்தை ஏற்படுத்துவதற்கு இது முஸ்லிம்களுக்குக் கிடைத்த ஓர் அரிய வாய்ப்பு. எனவே, நபி (ஸல்) அவர்கள் போர்புரியும் எண்ணமின்றி இக்கூட்டத்தை நோக்கி புறப்படும்படி தமது தோழர்களிடம் வேண்டினார்கள். ஆனால், அல்லாஹ்வின் எண்ணம் போர் புரிவதாக இருந்தது. அதுவே நடந்தது.

    'போர் தொடுக்கப்பட்டோருக்கு அவர்கள் அநியாயம் செய்யப்பட்டிருக்கின்றார்கள் என்பதனால் (அவ்வாறு போர் தொடுத்த இறை மறுப்பாளர்களை எதிர்த்துப் போரிட) அனுமதி அளிக்கப் பட்டிருக்கிறது. (திருக்குர்ஆன் 22:39)

    குறைஷிகளின் வியாபாரக் கூட்டத்தை பாதுகாக்க அபூஹஜ்ல் தலைமையில் 1000 வீரர்கள், 100 குதிரைகள், 700 ஒட்டகங்கள், 600 கவச ஆடைகளுடன் ஒரு பெரும் படையே வருகிறது.

    இதையறிந்த வியாபாரக் கூட்டத்தின் தலைவர் அபூசுப்யான், 'தாங்கள் பாதுகாப்பாக மக்கா திரும்புகிறோம். இனி எங்களை காக்க ஆள் தேவையில்லை. நீங்கள் திரும்பி விடுங்கள்' என்று அபூஜஹ்லிடம் தூது அனுப்புகிறார்.

    ஆணவம் பிடித்த அபூஜஹ்ல் கேட்க வில்லை. முன்னே எடுத்து வைத்த காலை பின் வாங்கப்போவதில்லை என திமிர்பிடித்து முஸ்லிம்களை நோக்கி முன்னேறினான். இதுவே பத்ர் போருக்கு வழிகோலியது. கி.பி. 624-ம் ஆண்டு ஹிஜ்ரி 2-ம் ஆண்டு ரமலான் பிறை 17-ம் நாள் வெள்ளிக்கிழமை போர் நடந்தது. எனவே, அதற்கு பத்ர் போர் என்று பெயர் வந்தது.

    இதில் முஸ்லிம்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. பத்ர் போரில் நீங்கள் மிகவும் சக்தி குறைந்தவர்களாக இருந்தபோது, அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்தான். ஆகவே, நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ்வை அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.' (திருக்குர் 3:123)

    முஸ்லிம்களின் எண்ணிக்கை 313 நபர்கள். அவர்களிடம் 2 குதிரைகள், 70 ஒட்டகங்கள், 8 வாள்கள், 9 உருக்குச் சட்டைகள், 60 கேடயங்கள் மட்டுமே இருந்தன. இவ்வாறு இருந்தும் இஸ்லாமிய படைக்கு இறையருளால் வெற்றி சாத்தியமானது. வெற்றி - தோல்வி என்பது எண்ணிக்கை வைத்து அல்ல. எண்ணங்களை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது.

    பத்ர் போர் நடப்பதற்கு 7 ஆண்டுகளுக்கு முன்பே வெற்றி தீர்மானிக்கப்பட்டுவிட்டதாக இறைவன் கூறுகின்றான். 'அதி சீக்கிரத்தில் இக்கூட்டத்தினர் சிதறடிக்கப்பட்டுப் புறங்காட்டி ஒடுவர். (திருக்குர் 54:45)

    • மக்கா நகரம் புனிதமானது என்று அறிப்விக்கப்பட்ட தினம்.
    • மக்கா நகரில் இறைவன் கொலையைத் தடை செய்தான்.

    மக்கா நகரம் புனிதமானது என்று அறிப்விக்கப்பட்ட தினம்

    ஹிஜ்ரி 8-ம் ஆண்டு ரமலான் மாத பிறை 17-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று மக்கா மாநகரம் வெற்றி கொள்ளப்படுகிறது. மறுநாள் பிறை 18-ம் தினம் புதன் கிழமை அன்று நபி (ஸல்) அவர்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மக்கா மாநகரம் புனிதம் குறித்து பிரகடனம் செய்கிறார்கள்.

    அபூஷுரைஹ் (ரலி) அறிவிக்கிறார்: அம்ர் பின் ஸயீது என்பவர் (யஸீதுடைய ஆட்சியின் போது) மக்காவை நோக்கி ஓர் ராணுவத்தை அனுப்பியபோது, 'தலைவரே! மக்கா வெற்றிக்கு மறுநாள் நபி (ஸல்) அவர்கள் நின்ற நிலையில் ஆற்றிய உரையை எனது இரண்டு காதுகளும் கேட்டிருக்கின்றன. என் உள்ளம் அதை நினைவில் வைத்திருக்கிறது. நபி (ஸல்) அவர்கள் உரையாற்றிய போது என் கண்கள் இரண்டும் அவர்களைப் பார்த்திருக்கின்றன. அவ்வுரையில் அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து போற்றினார்கள்.

    பின்னர் இந்த மக்கா நகரை மனிதர்களில் யாரும் புனித நகரமாக்க வில்லை. அல்லாஹ்தான் இதனைப் புனித நகரமாக்கினான். எனவே, அல்லாஹ்வையும், இறுதிநாளையும் நம்பியிருக்கும் எந்த மனிதனும் இங்கே ரத்தத்தை ஒட்டுவதோ, இதன் மரம். செடி, கொடிகளை வெட்டுவதோ கூடாது.

    இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இங்கு ஒரு சிறு போர் நடத்தியதை ஆதாரமாகக் கொண்டு எவராவது அவ்வாறு இங்கே போரிடுவது அனுமதிக்கப்பட்டது என்று கருதினால், அவர் தெரிந்து கொள்ளட்டும், 'நிச்சயமாக அல்லாஹ் தன் தூதருக்கு மட்டுமே அனுமதியளித்தான், உங்களுக்கு அவன் அனுமதி அளிக்க வில்லை' என்று அவரிடம் கூறுங்கள். எனக்கு கூட அவன் அனுமதியளித்தது பகல் பொழுதின் சிறிது நேரத்திற்கு மட்டும்தான். இன்று அதன் புனிதம் நேற்றுள்ள அதன் புனிதம் போல் வந்துவிட்டது. இச்செய் தியை இங்கே வராதிருப்பவர்களுக்கு இங்கு வந்திருப்பவர்கள் தெரிவித்து விடட்டும்' என்று நபி (ஸல்) கூறினார்கள். (நூல்:புகாரி)

    மக்காவின் புனிதம் குறித்து நபி (ஸல்) பிரகடனம் செய்தபோதிலும் நபி இப்ராஹீம் (அலை) அவர்களும் மக்காவின் மண்ணை புனிதமாக்கும்படி இறைவனிடம் பிரார்த்தனை புரிந்தார்கள்.

    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்காவைப் புனித நகரமாக ஆக்கினார்கள். அதற்காக பிரார்த்தித்தார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்காவைப் புனித நகரமாக்கியது போன்று நான் மதீனாவைப் புனித நகரமாக்கினேன். இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்காவிற்காக பிரார்த்தித்தது போல் நான் மதீனாவிற்காக அதன் அளவைகளான ஸாஉ, முத்து ஆகியவற்றில் அருள்வளம் கிடைத்திட பிரார்த்தித் தேன்.' (அறிவிப்பாளர்: இப்னு ஜைத் (ரலி), நூல்:புகாரி)

    'மக்கா நகரில் இறைவன் கொலையைத் தடை செய்தான். யுத்தம் செய்ய யாரும் அனுமதிக்கப் படவில்லை. இந்நகரின் முள் செடிகள் அகற்றப்படக்கூடாது. இதன் மரங்கள் வெட்டப்படக்கூடாது. இங்கே தவறி விழும் பொருட்களை மக்களுக்கு அறிவிப்பு செய்பவரைத் தவிர வேறு யாரும் எடுக்கக் கூடாது' (நூல்:புகாரி)

    'வேட்டைப் பிராணிகள் விரட்டியடிக்கப் படக்கூடாது ' (நூல்: புகாரி) என நபி (ஸல்) கூறினார்கள்.

    மேற்கூறப்பட்ட அனைத்தும் மக்காவின் புனித எல்லைப் பகுதிகளில் தடை செய்யப்பட்டவையாகும். இவற்றைப் பேணி அவற்றின் புனிதம் காக்கப்பட வேண்டும். புனித மக்காவின் வடக்குப் பகுதி 'தன்ஈம்' ஆகும். தெற்குப் பகுதி 'அளாஹ்' ஆகும். கிழக்குப்பகுதி ஜிஃரானா' ஆகும். வடகிழக்குப் பகுதி வாதிநக்லா' ஆகும். மேற்குப்பகுதி 'ஹூதைபிய்யா' ஆகும்.

    • உண்மையான நோன்பு எது?
    • ஐம்புலன்களையும் அடக்கி ஆள்வது தான் உண்மையான நோன்பு.

    உண்மையான நோன்பு எது?

    உணவு, பானங்கள், உடல் இச்சை ஆகியவற்றை விட்டு தடுத்துக் கொள்வது தான் உண்மையான நோன்பு என நாம் நினைப்பது முற்றிலும் தவறு. நமது உடலின் ஒவ்வொரு உறுப்புக்களும் நோன்பு இருப்பதே உண்மையான நோன்பு ஆகும்.

    நோன்பின் ஒழுக்கங்கள் எட்டு. அவை: வயிறு, கண்கள், காதுகள், மூக்கு, நாக்கு, கை-கால்கள், மறைவிடத்தைப் பேணுதல் ஆகும். ஒட்டுமொத்தத்தில் ஐம்புலன்களையும் அடக்கி ஆள்வது தான் உண்மையான நோன்பு.

    வயிறு: விலக்கப்பட்டவைகளை உண்ணுவது, பருகுவது ஆகியவைகளை விட்டு தடுத்து நோன்பு இருக்க வேண்டும்.

    கண்கள்: விலக்கப்பட்டவைகளையும், ஆபாசங்களையும் பார்ப்பதை விட்டு தடுத்து நோன்பு இருக்க வேண்டும்.

    காதுகள்: பொய், புறம், அவதூறு, ஆபாசம், கவனத்தை திசை திருப்பும் இசை போன்ற விலக்கப்பட்ட செயல்களை கேட்பதை விட்டு தடுத்து நோன்பு இருக்க வேண்டும்.

    மூக்கு: தடை செய்யப்பட்ட மதுவகைகள், புகைவகைகள், போதையூட்டும் பொருட்கள் ஆகியவைகளை நுகர்வதை விட்டும் தடுத்துநோன்பு இருக்க வேண்டும்.

    நாவு: பொய், புறம், அவதூறு, அறிவற்ற பேச்சுக்கள் ஆகியவைகளை விட்டும் தடுத்து நோன்பு இருக்க வேண்டும்.

    கைகள்: அனுமதிக்கப்படாத பொருட்களை தொடுதல், லஞ்சம் வாங்குதல், வரதட்சணை வாங்குதல், வட்டி வாங்குதல், கொடுத்தல், அதற்கு சாட்சியாக இருத்தல், கொலை- கொள்ளையடித்தல் ஆகியவற்றில் இருந்து விலகி இருந்து நோன்பு இருக்க வேண்டும்.

    கால்கள்: தடுக்கப்பட்ட இடங்கள் அனைத்திற்கும் செல்வதை விட்டும் தடுத்து நோன்பு இருக்க வேண்டும்.

    மறைவிடம்: பாலியல் தொந்தரவு, பலாத்காரம், தகாத உறவு போன்ற செயல்களை விட்டு விலகி நோன்பு இருக்க வேண்டும். இவ்வாறு உடலும், உறுப்புகளும் தவிர்க்க வேண்டியவைகளை விட்டு விலகி இருந்து நோன்பு இருக்க வேண்டும்.

    "முஃமீன்களே! உங்கள் முன்னோர்கள் மீது நோன்பு விதியாக்கப்பட்டிருப்பது போன்று, உங்கள் மீதும் விதியாக்கப்பட்டிருக்கிறது. (அதனால்) நீங்கள் பரிசுத்தமானவர்களாக முடியும்".(திருக்குர் ஆன் 2:183)

    "எவர் பொய்யான காரியங்களை செய்வதை யும், பொய்யான பேச்சுக்களையும் விடவில்லையோ, அவர் தமது உணவையும், நீரையும் விட்டுவிடுவ (நோன்புவைப்ப)தில் அல்லாஹ் விற்கு எந்தத் தேவையும் இல்லை என நபி (ஸல்) கூறினார்கள்". (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்:புகாரி)

    "எத்தனையோ நோன்பாளிகள், அவர்களின் நோன்பில் இருந்து பசியையும், தாகத்தையும் தவிர வேறெதுவு (கூலியு)ம் கிடைப்பதில்லை என நபி (ஸல்) கூறினார்கள்". (அறி விப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: தாரமீ)

    பசித்திருப்பது, தாகித்திருப்பது நோன்பல்ல. தகாதகாரியங்கள் முழுவதையும் தவிர்த்து இருப்பது தான் பரிபூரணமான நோன்பு என்பதை நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள்.

    இந்த நோன்பின் மூலம் இறைவனுக்காக மனிதன் பல தியாகங்களை செய்கிறான். உணவு, நீர், இல்லற இன்பம் இவற்றை மனவிருப்பத்தோடு விலக்குகிறான். இவை அவனது நுகர்தலுக்கு உரியவை. ஆயினும், இவற்றைக் குறிப்பிட்ட காலத்துக்கு விலக்கி வாழ்கிறான்.

    ஐம்புலன்களை தேவையானபோது, அடக்கி ஆளும் ஆற்றலை மனிதன் பெறுவதே நோன்பின் தத்துவம். நாமும் அதை பெறுவோம்.

    • மனக்கட்டுப்பாட்டுக்கு பயிற்சி அளிக்கும் நோன்பு.
    • மனதை கட்டுப்படுத்துவது சவாலான காரியம்.

    மனக்கட்டுப்பாட்டுக்கு பயிற்சி அளிக்கும் நோன்பு

    ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல், உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டது. (அதன்மூலம்) நீங்கள் மனத்தூய்மையுடையோர் ஆகலாம்." (திருக் குர்ஆன் 2:183)

    நோன்பின் மூலம் மனது தூய்மை அடைவதாக திருக்குர் ஆன் அழகாக தெரிவிக்கிறது. மனதை கட்டுப்படுத்தி, அதை தூய்மைப்படுத்தும்போது, மனிதனின் பிற உறுப்புகள் தானாகவே தூய்மை அடைந்து விடுகின்றன.

    "அறிந்து கொள்ளுங்கள், மனித உடலில் ஒரு சதைத்துண்டு உள்ளது. அது சீர்பட்டு விட்டால், உடலுறுப்புகள் யாவும் சீராகிவிடும். அது பாழாகி விட்டால் உடலுறுப்புகள் யாவும் பாழாகிவிடும். அறிந்து கொள்ளுங்கள்! அதுதான் உள்ளம்". (அறிவிப்பாளர்:நுஅமான் பின் பஸீர் (ரலி), நூல்:புகாரி)

    நோன்பு கடமையாக்கப்பட்டதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. இருந்தாலும், அடிப்படையான காரணம் மனக்கட்டுப்பாட்டை பெறுவதற்குதான் நோன்பு கடமையாக்கப்பட்டு இருக்கின்றது என இஸ்லாம் கூறுகிறது.

    மனக்கட்டுப்பாடு எப்படி கிடைக்கும்? ஆம், மனதை தூய்மையாக வைத்திருப்பதினால் கிடைக்கும். மனதை தூய்மையாக வைத்திருந்தால் தானாகவே, ஆரோக்கியம் கிடைத்துவிடும், பசிக்கொடுமையை தெரிந்து கொள்ளலாம். மனஅமைதி கிடைத்திடும், ஏழைகள் மீது இரக்கம் பிறந்துவிடும், மன இச்சைகளை ஒதுக்கித் தள்ள முடியும், ஏழைகளுடன் உறவாடி, அவர்களின் சுமைகளை அறிந்து கொள்ள முடியும்.

    மனதை கட்டுப்படுத்தி, அதை பக்குவப்படுத்தவும், தூய்மையாக வைத்துக் கொள்ளவும் நினைப்பவர்களுக்கு நோன்பு வைப்பதன் மூலம் அவை கிடைக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

    அன்புச்சகோதரர்களே! உலகில் ஈ, தேனீ ஆகிய இரண்டையும் காணுகின்றோம். ஈ மலத்திலும் உட்காரும், மலரிலும் உட்காரும். ஆனால் தேனீமலரில் மட்டுமே உட்காரும். ஈ நமது ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிப்பது; தேனீயோ உடல் நலனுக்கு உதவுவது; தேனை சேகரித்துத் தருகிறது. "அதில் (தேனில்) மனிதர்களுக்கு நிவாரணம் இருக்கிறது" என்று திருக்குர் ஆன் (16:69) குறிப்பிடுகின்றது.

    மனித மனம் ஈயைப் போன்றது. அதை தேனீ போல மாற்ற வேண்டும். அதாவது நல்லதை நினைக்கவும், சொல்லவும், செய்யவும் பழக்க வேண்டும். இந்த முயற்சியுடைய வாழ்க்கைக்குத் தான் இஸ்லாமிய வாழ்க்கை என்று பெயர். சிறந்த உடையை உடுத்திக் கொள்வதிலும், நறுமணம் பூசிக் கொள்வதிலும், சுவையான உணவு வகைகளை உண்டு மகிழ்வதிலும், அழகிய முறையில் வீட்டை அலங்கரிப்பதிலும் ஆர்வமும், அக்கறையும் நாம் அதிகம் காட்டுகின்றோம்.

    அதேநேரத்தில், மனதை கட்டுப்படுத்து வதிலும், அதை சுத்தப்படுத்துவதிலும் எவ்வளவு கவனக்குறைவாக இருக்கிறோம் என்பதை எண்ணிப்பாருங்கள். மனதை கட்டுப்படுத்துவது மிகப்பெரும் சவாலான ஒரு காரியம். அந்த சவாலை சமாளிக்கும் ஒரு அற்புதமான களம் தான் நோன்பு.

    மனித உறுப்புகளை மனசு கட்டுப்படுத்துகிறது. அந்த மனதை நோன்பு கட்டுப்படுத்தி, சுத்தப்படுத்தி, பக்குவப்படுத்துகிறது. மனதை கட்டுப்படுத்தி, சுத்தப்படுத்த நினைக்கும் முஸ்லிம்களே, ரமலான் மாதம் முப்பதிலும் நோன்பு வையுங்கள். உடலும், உள்ளமும் சுத்தமாகும். மனது உங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும்.

    • புனித ரமலானில் மூடப்படும் நரக வாசல்கள்.
    • நரகத்தில் 7 கதவுகள் உள்ளன.

    புனித ரமலானில் மூடப்படும் நரக வாசல்கள்

    புனித ரமலான் மாதம் வந்துவிட்டால் நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன என நபி (ஸல்) கூறினார்கள்'. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்:புகாரி)

    நரகத்திற்கு ஏழு வாசல்கள் உண்டு. அந்த ஏழு வாசல்களும் ரமலான் மாதம் முழுவதும் இறையருளால் மூடப்படும். அந்த நரகத்தில் நுழைபவர்கள் யாரென்றால் ஷைத்தானைப் பின்பற்றும் வழிகேடர்கள்தான். இதோ இறைவன் கூறுவதை பார்ப்போம்:

    'எனது இறைவனே! இறந்தவர்கள் எழுப்பப்படும் நாள் வரை எனக்கு அவகாசம் கொடுப்பாயாக! என்று இப்லீஸ் (சைத்தான்) கூறினான்'. 'நிச்சயமாக நீ அவகாசம் அளிக்கப்பட்டோரில் ஒருவனாக, குறிப்பிட்ட நேரத்தின் நாள் வரும் வரையில்' என்று இறைவன் கூறினான்.

    (அதற்கு இப்லீஸ்)'என் இறைவனே! என்னை நீ வழிகேட்டில் விட்டு விட்டதால், நான் இவ்வுல கில் (வழிகேட்டைத் தரும் அனைத்தையும்) அவர்களுக்கு அழகாகத் தோன்றும்படி செய்து (அதன் மூலமாக) அவர்கள் அனைவரையும் வழிகெடுத்தும் விடுவேன். அவர்களில் அந்த ரங்க சுத்தியுள்ள (உன்னருள் பெற்ற) உன் நல்ல டியார்களைத் தவிர' என்று கூறினான்.

    (அதற்கு இறைவன் 'அந்தரங்க சுத்தியுள்ள என் நல்லடியார்களின்)' இந்த வழி என்னிடம் (வருவதற்குரிய) நேரான வழியாகும். நிச்சயமாக என் அடியார்கள் மீது உனக்கு எவ்வித அதிகாரமும் இல்லை, உன்னைப் பின்பற்றி வழி கெட்டவர்களைத் தவிர' என்று கூறினான்.

    'நிச்சயமாக (உன்னை பின்பற்றும்) அனைவருக்கும் நரகம் வாக்களிக்கப்பட்ட இடமாகும். அதற்கு ஏழு வாசல் உண்டு; ஒவ்வொன்றும் பங்கிடப்பட்ட (தனித்தனிப்) பிரிவினருக்கு உரியதாகும்.' (திருக்குர்ஆன் 15:36-44)

    நரகத்தில் 7 கதவுகள் உள்ளன. அவை:

    1) ஜஹன்னம்

    2) லளா

    3) ஹூதமா

    4) ஸயீர்

    5) ஸகர்

    6) ஜஹீம்

    7) ஹாவியா

    இவ்வாறு ஏழு வகையான நரகத்தை குறிப் பிட்டு அதன் மூலம் அதனுடைய ஏழு வகையான வழிகளையும், ஏழு வகையான வாசல்களையும், ஏழு வகையான படித்தரங்களையும் இறைவன் நாடுகின்றான்.

    பாவம் செய்தவர்கள் அவர்களின் பாவங்களுக்குத்தக்கவாறு அவர்கள் ஏழு வகையினராக வகைப்படுத்தப்பட்டு ஏழுவகையான வாசல்களின் வழியாக வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு வரப்பட்டு உள்ளே நுழைவிக்கப்படுவார்கள்.

    இது குறித்து திருக்குர்ஆன் இவ்வாறு எச்சரிக்கிறது:

    (அந்நாளில்) நிராகரித்தவர்கள் கூட்டம் கூட்டமாக நரகத்திற்கு இழுத்துக் கொண்டு வரப்படுவார்கள். அவர்கள் அங்கே வந்த வுடன் அதன் வாசல்கள் திறக்கப்படும்; அதன் காவலர்கள் உங்களை நோக்கி: "உங்களிலிருந்து (அல்லாஹ்வின்) தூதர்கள், உங்கள் இறைவனுடைய வசனங்களை உங்களுக்கு ஓதிக் காண்பிக்கிறவர்களாகவும், இந்த நாளை நீங்கள் சந்திக்க வேண்டுமென்பதைப் பற்றி உங்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களாகவும் உங்களிடம் வரவில் லையா?" என்று கேட்டார்கள் ;

    (இதற்கு அவர்கள்) "ஆம் (வந்தார்கள்)" என்று கூறுவார்கள்; எனினும் காஃபிர் களுக்கு வேதனை பற்றிய வாக்கு உண்மையாகி விட்டது. நரகத்தின் வாயில்களுள் நுழைந்து விடுங்கள்; என்றென்றும் அதில் தங்கிவிடுங்கள்" என்று (அவர்களுக்குக்) கூறப்படும்; பெருமை அடித்துக் கொண்டிருந்தோருடைய தங்குமிடம் மிகவும் கெட்டது. (திருக்குர் ஆன் 39:71,72)

    ஆகவே, ரமலானில் மூடப்படும் நரக வாசல் கள் நமது வாழ்நாள் முழுவதும் அது மூடப் பட்டதாகவே இருக்கட்டும். நரக நெருப்பில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள இறைவழியில் நடப்போம்.

    • இறைவனுடனான தொடர்பையும், நெருக்கத்தையும் ஏற்படுத்திக்கொள்வது.
    • இஃதிகாப் இருக்கும் வழக்கம் அரபிகளிடம் இருந்து வந்தது.

    ரமலானில் கடைபிடிக்கப்படும் `இஃதிகாப்'

    இஃதிகாப் என்பது படைப்பினங்களுடன் தொடர்பை முற்றிலும் துண்டித்து, உலக காரியங்களில் உள்ளத்தின் ஈடுபாட்டை நீக்கி, படைத்த இறைவனுடனான தொடர்பையும், நெருக்கத்தையும் ஏற்படுத்திக் கொள்வதாகும். இது ஒரு தொன்மையான வணக்க வழிபாடாகும்.

    நபிகள் (ஸல்) இஸ்லாமிய மார்க்கத்தை போதிப்பதற்கு முன்பே அரேபியாவில் அறியாமைக் காலத்திலும் கூட புனித கஅபாவில் இரவில் தனிமையில் தங்கி, இஃதிகாப் இருக்கும் வழக்கம் அரபிகளிடம் இருந்து வந்தது. புனித கஅபா எனும் ஆலயம் எழுப்பப்பட்டதின் நோக்கத்தை இறைவன் பின்வருமாறு விவரிக்கின்றான்.

    (இதையும் எண்ணிப் பாருங்கள்; கஅபா எனும்) வீட்டை நாம் மக்கள் ஒதுங்கும் இடமாகவும் இன்னும், பாதுகாப்பான இடமாகவும் ஆக்கினோம். இப்ராஹீம் (அலை) நின்ற இடத்தை தொழும் இடமாக நீங்கள் ஆக்கிக்கொள்ளுங்கள்' (என்றும் நாம் சொன்னோம்). இன்னும், என் வீட்டைச் சுற்றி வருபவர்கள், தங்கி இஃதிகாப் இருப்பவர்கள், ருகூவு, சுஜூது செய்பவர்கள் ஆகியோருக்காகத் தூய்மையாக அதனை வைத்திருக்க வேண்டும்' என்று இப்ராஹீமிட மிருந்தும், இஸ்மாயீலிடம் இருந்தும் நாம் உறுதி மொழி வாங்கினோம்.' (திருக்குர்ஆன் 2:125)

    நபி (ஸல்) அவர்கள் நபியாக தேர்வு செய்யப்படுவதற்கு முன்பு ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதம் ஹிரா குகையில் தனித்திருப்பார்கள். அவர்கள் தனித்திருந்த மூன்றாமாண்டு ரமலான் மாதம் பிறை 21 திங்கள் இரவில் முதல் இறைச்செய்தி கி.பி. 610 ஆகஸ்டு 10-ம் தேதி அன்று வருகிறது. இரண்டாவது இறைச்செய்தி 10 நாட்கள் கழித்து ஷவ்வால் முதல்பிறை வியாழன் காலை அருளப்பட்டது. இதுவே, ரமலானின் கடைசி பத்தில் இஃதிகாப் இருப்பதற்கும் ஷவ்வால் முதல்பிறை பெருநாளாக இருப்பதற்கும் காரணமாகும். ஹிஜ்ரி 2-ம் ஆண்டு நோன்பு கடமையாக்கப்பட்ட போது, ரமலானின் கடைசிப் பத்தில் இஃதி காப் இருப்பதும் கடமையாக்கப்பட்டு, நபி களால் கடைபிடிக்கப்பட்டது.

    நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரி 10-ம் ஆண்டு மரணமானார்கள். அதுவரைக்கும் ஒவ்வொரு ஆண்டும் ரமலானில் கடைசி பத்தில் இஃதிகாப் இருந்தார்கள். பத்ர் போர் நடந்ததால் ஹிஜ்ரி 2-ம் ஆண்டும், மக்கா போர் நடந்ததால் ஹிஜ்ரி 8-ம் ஆண்டும் இஃதிகாப் இருக்கவில்லை.

    ரமலானின் ஆரம்ப கால கட்டத்தில் நபி (ஸல்) அவர்கள் லைலதுல்கத்ர் இரவை அடைய விரும்பி ரமலானின் முதல் பத்திலும் இஃதிகாப் இருந்தார்கள். அதில் அந்த இரவு இல்லை என தெரிந்ததும், நடுப்பத்திலும் இருந்தார்கள். அதிலும் அந்த இரவு இல்லை என தெரிந்ததும் கடைசிப்பத்திலும் இருந்தார்கள்.

    மற்றொரு சந்தர்ப்பத்தில் 'ரமலானின் கடைசி பத்தில் இஃதிகாப் இருந்தார்கள். அவர்களுக்காக ஒரு கூடாரம் அமைக்கப்பட்டது. இதைப்பார்த்து நபியின் மனைவியர் ஹப்ஸாவும், ஜைனப் பின்த் ஜஹ்ஷ் ஆகியோரும் பள்ளியில் கூடாரம் அமைத்தனர். காலையில் நபி (ஸல்) இந்த காட்சியைக் கண்டபோது 'இதன் மூலம் நீங்கள் நன்மையைத் தான் நாடுகிறீர்களா?' என்று கேட்டு, அந்த மாதம் இஃதிகாப் இருப்பதை விட்டு விட்டார்கள். பிறகு (அடுத்த) மாதம் ஷவ்வாலில் பத்து நாட்கள் இஃதிகாப் இருந்தார்கள். (அறிவிப்பாளர்:ஆயிஷா (ரலி), நூல்: புகாரி)

    நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு ரமலானிலும் பத்து நாட்களே இஃதிகாப் இருப்பார்கள். அவர்கள் மரணித்த ஆண்டில் இருபது நாட்கள் இஃதிகாப் இருந்தார்கள். (அபூஹுரைரா (ரலி), நூல்:புகாரி 2044)

    • அறிவுக் கண்களை திறந்த மக்கா போரின் வெற்றி.
    • மக்கா வெற்றிக்குப் பிறகு ஒளிவு மறைவின்றி இஸ்லாத்தை பின்பற்றினர்.

    அறிவுக் கண்களை திறந்த மக்கா போரின் வெற்றி

    ஹஜ்ரி 6-ம் ஆண்டு துல்கஅதா மாதத்தின் தொடக்கத்தில் திங்கட்கிழமை அன்று நபி (ஸல்) அவர்களுக்கும், குரைஷிகளுக்கும் இடையே `ஹூதைபிய்யா' எனும் இடத்தில் சமாதான ஒப்பந்தம் ஏற்படுகிறது.

    அதில் ஒன்று 'நபியவர்களுடன் சேர விரும்புவோர் நபியுடன் சேரலாம்; குரைஷிகளுடன் சேர விரும்புவோர் அவர்களுடன் சேர்ந்து கொள்ளலாம். யார் யாருடன் சேர்ந்து கொள்கிறார்களோ அவர் அந்த அணியில் ஒருவராகக் கருதப்படுவார். அவர் மீது யாராவது அத்துமீறினால், அது அந்த கூட்டத்தினர் மீதே அத்து மீறியதாகும்.

    இதற்கேற்ப குஜாஆ கூட்டத்தினர் நபியுடன் சேர்ந்து கொண்டனர். பக்ர் கூட்டத்தினர் குரைஷிகளுடன் சேர்ந்து கொண்டனர். அறியாமைக் காலத்திலிருந்தே குஜாஆ. பக்ர் கூட்டத்தினருக்கிடையே சண்டை நிலவி வந்தது. இந்த ஒப்பந்தத்திற்கு பிறகு சண்டை நிறுத்தப்பட்டது.

    இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு பக்ர் கோத்திரத்தினர். குஜாஆவினரிடம் அத்துமீறி நடந்து கொண்டு, ஹிஜ்ரி 8, ஷஃபான் மாதத்தில் சண்டையிட்டு உயிர்ச் சேதத்தை ஏற்படுத்தினர். பாதிக்கப்பட்ட குஜாஆ கிளையினர் நபி அவர்களிடம் உதவி தேடினர்.

    நபி (ஸல்) அவர்கள் தமது தோழமை அணியினரின் உதவிக்காக, ஹிஜ்ரி 8-ம் ஆண்டு ரமலான் பிறை 10-ல் தம்முடன் 10 ஆயிரம் தோழர்களுடன் மதீனாவிலிருந்து மக்கா நோக்கிப் புறப்பட்டார்கள். இந்த போர் புனித ரமலான் மாதத்தில் நடந்ததால் நபி (ஸல்) அவர்களும், நபித் தோழர்களும் நோன்பு வைத்திருந்தார்கள்.

    கி.பி. 630, ஜனவரி 10, ஹிஜ்ரி 8, ரமலான் பிறை 20-ம் நாளன்று நபி (ஸல்) அவர்களின் படை மக்காவிற்கு நுழைந்து, அதை வெற்றி கொள்கிறது.

    மக்கா வெற்றி கொள்ளப்பட்ட பிறகுமக்கா குரைஷிகள் பதட்டம் அடைந்தார்கள். மக்காவின் அதிகாரம் நபி (ஸல்) கீழ் வந்துவிட்டது.

    அவரையும், அவரது தோழர்களையும் நாம் பல்வேறு விதங்களில் கொடுமைப்படுத்தி உள்ளோம். எனவே அவர் நம்மை பழிவாங்கி விடுவார்' என்று நினைத்தனர்.

    அந்த சமயத்தில் 'குரைஷிக் கூட்டமே! நான் உங்களிடம் எவ்விதம் நடந்து கொள்வேன் என கருதுகிறீர்கள்?' என நபி கேட்க, 'நல்லமுறையில் நடந்து கொள்வீர்கள். நீங்கள் எங்களுக்கு சிறந்த சகோதரராகவும், எங்களில் சிறந்த சகோதரரின் மகனாகவும் இருக்கிறீர்' என பதில் கூறினர்.

    உடனே நபி (ஸல்) அவர்கள் 'நான் உங்களுக்கு யூசுப் நபி தமது சகோதரருக்குக் கூறியதைப் போன்றுதான் கூறுவேன். உங்களை எந்தவிதத்திலும் பழிவாங்கப்படாது. நீங்கள் மன்னிக்கப்பட்டவர்கள், நீங்கள் செல்லலாம்' என்று கூறினார்கள்.

    நபி (ஸல்) அவர்கள் எதிரிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கினார்கள். அபூசுப்யான் வீட்டில் அடைக்கலம் பெற்றவரும், புனிதகஅபா ஆலயத்தில் அடைக்கலம் பெற்றவரும் அபயம் பெற்றனர். பிறகு, நபி (ஸல்) மக்காவில் 19 நாட்கள் தங்கியிருந்து தூய இஸ்லாத்தை எடுத் துரைத்தார்கள்.

    இதுநாள் வரை மக்காவில் திரை மறைவில் இஸ்லாமிய நெறியைக் கடைப்பிடித்து வாழ்ந்து வந்த முஸ்லிம்கள், மக்கா வெற்றிக்குப் பிறகு ஒளிவு மறைவின்றி இஸ்லாத்தை பின்பற்றினர்.

    அலைகடலென மார்க்கத்தை நோக்கி படையெடுத்து வந்து ஏற்றுக்கொண்டனர். இப்போர் அறிவுக் கண்களைத் திறந்து, அறியாமைக் கதவுகளை அடைத்து, இஸ்லாத்தை ஏற்பதற்கு குறுக்கிட்ட தடைக்கல்லைத் தகர்த்தெறிந்தது.

    • இறை நம்பிக்கைக்கு எதிரான தீய செயல்.
    • மது அருந்துவது இறைநம்பிக்கைக்கு எதிரான ஒரு தீய செயல்.

    இறை நம்பிக்கைக்கு எதிரான தீய செயல்

    இஸ்லாம் மது அருந்துவதை பெரும் "பாவங்களில் ஒன்றாக கருதுகிறது. மீறி மது அருந்துவோருக்கு கசையடி தண்டனை வழங்கும்படி பரிந்துரை செய்கிறது.

    மது அருந்துவது இறைநம்பிக்கைக்கு எதிரான ஒரு தீய செயல் ஆகும். மதுவை இஸ்லாம் ஒரே கட்டத்தில் தடை செய்யவில்லை. நான்கு கட்டங்களில் மதுவுக்கு எதிராக நடவடிக்கைகளை முன்வைத்து அது முற்றிலும் தடை செய்யப்பட்டது.

    மது தீய பானம் என்பதை இறைவன் அறிவுறுத்தி முதல் தடை நடவடிக்கையை மேற்கொள்கின்றான். இந்த அறிவுரையால் சில பேர் மது அருந்துவதை விட்டுவிட்டனர். உமர் (ரலி) நபியிடம் வந்து மது சம்பந்தமாக தெளிவான ஒரு தீர்வை எங்களுக்கு தாருங்கள் என வேண்டினார். ஆதலால், பின்வரும் இறை வசனம் இறங்கியது.

    'பேரீச்சை, திராட்சை பழங்களில் இருந்து மதுவையும், நல்ல ஆகாரங்களையும் நீங்கள் உண்டாக்குகிறீர்கள். நிச்சயமாக இதில் சிந்திக்கும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது. (திருக் குர்ஆன் 16:67)

    மது அருந்துவது பெரும் பாவமாகும் என இறைவன் பிரகடனப் படுத்தியபோது இந்த பெரும் பாவத்திலிருந்து பெரும்பான்மை மக்கள் விலகிக் கொண்டனர்.

    (நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். நீர் கூறும்: 'அவ்விரண்டிலும் பெரும்பாவம் அவ்விரண்டிலும் இருக்கிறது. மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு. ஆனால், அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனை விட பெரிது. (திருக்குர்ஆன் 2:219)

    சில பேர் மதுவை விடாமல் அருந்திக்கொண்டு அறிவை இழந்து கொண்டும், சோதனையில் மாட்டிக்கொண்டும் இருந்தனர். இத்தகைய சூழ்நிலையில் மீண்டும் உமர் (ரலி) இறைவா! மது சம்பந்தமாக இன்னும் ஒரு தெளிவான ஒரு தீர்வை எங்களுக்கு வழங்கிடு!' என்றார்கள். உடனே இறைவன் மூன்றாம் கட்ட தடையை இறக்கி வைக்கின்றான்.

    'இறை நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் ஒதுவது இன்னது என்று நீங்கள் அறிந்துகொள்ள முடியாதவாறு நீங்கள் போதையில் இருக்கும்போது தொழுகைக்கு நெருங்காதீர்கள்' (திருக்குர் ஆன் 4:43)

    பின்னர், நிரந்தரத் தடை வேண்டி உமர் (ரலி) இறைவனிடம் இறைவா! மது சம்பந்தமாக இறுதியான தீர்க்கமான ஒரு தீர்வை தருவாயாக' என வேண்டியபோது நான்காவது நிரந்தரத் தடை வந்தது.

    'ஈமான் கொண்டோரே! மதுவும், சூதுவும், கற்சிலை வழிபாடும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும் ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களில் உள்ளவையாகும். ஆகவே, நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம் மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி இறைவனின் நினைவில் இருந்தும், தொழுகையில் இருந்தும் உங்களை தடுத்துவிடத்தான். எனவே அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா?' (திருக்குர்ஆன் 5:90,91)

    ஹிஜ்ரி 3-ம் ஆண்டு உஹத் யுத்தத்திற்கு பின் மது நிரந்தரமாகத் தடை செய்யப்பட்டு விட்டது.

    இந்த தடை உத்தரவை நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரி 8-ம் ஆண்டு மக்கா வெற்றி கொள்ளப்பட்ட பிறகு புனித ரமலானில் மறுதடவையாகத் தடை செய்கிறார்கள். ஏனென்றால் இந்த தடை பற்றி தெரியாதவர் தெரிந்து கொண்டு, தவிர்த்துக் கொள்ள வேண்டியதாகும்.

    • தர்மத்தில் சிறந்தது புனித ரமலானில் வழங்கப்படும் தர்மமே.
    • நபி அவர்கள் மனிதர்களில் மிகப் பெரும் கொடையாளியாகத் திகழ்ந்தார்கள்.

    `தர்மத்தில் சிறந்தது புனித ரமலானில் வழங்கப்படும் தர்மமே'

    'தர்மத்தில் சிறந்தது எது?" என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'அது ரமலானில் செய்யும் தர்மம் ஆகும்' என்று பதிலளித்தார்கள்.' (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூல்: திர் மிதி)

    புனித ரமலான் மாதம், மாதங்களில் சிறந்ததாக அமைந்ததைப் போன்று அதில் நிறைவேற்றப்படும் அனைத்து நற்காரியங்களும் சிறந்ததாக அமைந்து விடுகின்றன. குறிப்பாக அதில் வழங்கப்படும் தர்மமும் மற்ற மாதங்களில் வழங்கப்படும் தர்மத்தை விட சிறந்ததாக அமைந்து விடுகிறது. இதனால்தான் நபி (ஸல்) அவர்கள் இந்த மாதத்தில் தமது கொடைத்தன்மையை விரிவுப்படுத்தியதுடன் அதிகப்படுத்தியும் செய்துள்ளார்கள்.

    நபி (ஸல்) அவர்கள் மனிதர்களில் மிகப் பெரும் கொடையாளியாகத் திகழ்ந்தார்கள். (சாதாரண நாட்களை விட) ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களை ரமலான் மாதத்தில் சந்திக்கும் போது நபி (ஸல்) அவர்கள் மிக அதிகமாக வாரி வாரி வழங்கும் கொடையாளியாகத் திகழ்ந்தார்கள்.

    ஜிப்ரீல் (அலை) அவர்கள் ரமலான் மாதத்தின் ஒவ்வொரு இரவிலும் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து (அதுவரை) அருளப்பட்டிருந்த குர்ஆனை நினைவுபடுத்துவார்கள். இருவருமாகத் திருக்குர்ஆனை ஒதும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். தொடர்ந்து வீசும் காற்றைவிட (வேக மாக) நபி (ஸல்) அவர்கள் நல்ல காரியங்களில் மிக அதிகமாக வாரி வழங்கும் கொடையாளியாகவே திகழ்ந்தார்கள்.(அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்:புகாரி)

    நபி (ஸல்) அவர்களின் சொல்படியும், அவர்களின் செயல்படியும் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் நோன்பு நோற்ற நிலையில் தான தர்மம் செய்தது நமது கவனத்தை ஈர்க்கிறது.

    ஒரு தடவை முஆவியா (ரலி) அவர்கள், அன்னை ஆயிஷா (ரலி) அவர்களுக்கு 1180 வெள்ளிக்காசுகளை அன்பளிப்பாக அனுப்பி வைத்தார்கள். அன்று அன்னையார் அவர்கள் நோன்பு நோற்றிருந்தார்கள். நோன்பு நோற்ற நிலையில் தமக்கு அன்பளிப்பாகக் கிடைத்த அனைத்து வெள்ளிக் காசுகளையும் மக்களிடையே பங்கு வைத்து வாரி வழங்கி விட்டார்கள்.

    நோன்பு திறக்கும் இப்தார் நேரம் வந்ததும், தமது பணிப்பெண்ணிடம் நோன்பு திறக்க உணவு கேட்டார்கள். பணிப்பெண் ரொட்டியையும், ஆலிவ் எண்ணெய்யையும் கொண்டு வந்து, 'தாங்கள் இன்று பங்கீடு செய்த வெள்ளிக் காசுகளிலிருந்து நோன்பு திறக்க இப்தார் உணவுக்காக இறைச்சி வாங்கி வரக்கூட ஒரு காசையும் மிச்சம் வைக்காமல் ஏன் அனைத்தையும் வாரி வழங்கினீர்கள்?' என்று கேட்டாள். அதற்கு அன்னை ஆயிஷா (ரலி), 'இதை முன்பேநீ எனக்கு ஞாபகப்படுத்தி இருந்தால், நான் அவ்வாறே செய்திருப்பேனே!' என்று கூறினார்கள்.

    'எவர் ஒருவர் ஒரு நோன்பாளிக்கு நோன்பு திறக்க உணவு வழங்குகிறாரோ அவருக்கு, நோன்பாளிக்கு வழங்கப்படும் நன்மை போன்று கிடைக்கும். இதனால் நோன்பாளியின் நன்மையில் இருந்து எதுவும் குறைக்கப்பட மாட்டாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.' (அறிவிப்பாளர்: ஜைத் பின் காலித் ஜூஹ்னீ (ரலி), நூல்: திர்மிதி)

    நபி (ஸல்) அவர்களைப் போன்று நபித் தோழர்களும் ரமலானில் அதிகமாக கொடையளித்து வந்துள்ளனர். நபி (ஸல்) அவர்கள் முதற்கொண்டு நல்லோர்கள் வரை நோன்பு நோற்ற நிலையில் கொடையளிப்பதையும், அன்னதானம் வழங்கு வதையும் சிறந்த செயலாக கருதினார்கள்.

    • புனித ரமனாலில் கடமையான ஜகாத்.
    • வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வை யன்றி வேறுயாருமில்லை.

    புனித ரமலானில் கடமையான ஜகாத்

    இஸ்லாம் என்பது ஒரு மாளிகை போன்றது. அதற்கு ஐந்து தூண்கள் உண்டு. ஜகாத் என்பது மூன்றாவது தூண் ஆகும்.

    1) வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வை யன்றி வேறுயாருமில்லை என்றும், முகம்மது (ஸல்) அவர்கள் இறைத்தூதர் என்றும் உறுதியாக நம்புதல்,

    2) தொழுகையை நிலை நிறுத்து தல்

    3) ஜகாத் வழங்குதல்

    4) ஹஜ் செய்தல்

    5) ரமலானில் நோன்பு நோற்றல்

    ஆகிய ஐந்து காரியங்களின் மீது இஸ்லாம் நிறுவப்பட்டுள் ளது என நபி (ஸல்) கூறினார்கள்.' (அறிவிப்பா ளர்: உமர் (ரலி), நூல்:புகாரி) திருக்குர்ஆனில் கிட்டத்தட்ட 82 இடங்களில் தொழுகையுடன் இணைத்து ஜகாத்தும் கூறப்பட்டிருக்கிறது.

    'இது(வேதம்) நம்பிக்கையாளர்களுக்கு நேர் வழி காட்டியாகவும், நன்மாராயமாகவும் இருக்கிறது. அவர்கள் தொழுகையை நிலைநிறுத்துவார்கள். இன்னும், ஜகாத்தையும் கொடுப்பார்கள். மேலும், அவர்கள் மறுமை மீது நம்பிக்கை. கொள்வார்கள்.' (திருக்குர்ஆன் 27:2,3)

    'இறைநம்பிக்கையாளர்கள் யாரென்றால். அவர்கள் ஜகாத்தையும் நிறைவேற்றுவார்கள்.' (திருக்குர் ஆன் 23:4)

    ஹிஜ்ரி 2- ஆம் ஆண்டு ரமலான் பிறை 28-ம் நாளன்று மதீனாவில் ஜகாத் முழுமையாகவும் விபரமாகவும் கடமையாக்கப்பட்டது. '(நபியே!) அவர்களுடைய செல்வத்தில் இருந்து தர்மத்திற்கானதை எடுத்துக் கொண்டு, அதனால் அவர்களை உள்ளும் புறமும் தூய்மையாக்குவீராக, இன்னும் அவர்களுக்காக பிரார்த்தனை செய்வீராக; நிச்சய மாக உமது பிரார்த்தனை அவர்களுக்கு (சாந்தியும்) ஆறுதலும் அளிக்கும். அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றான்.' (திருக்குர் ஆன் 9:103)

    ஜகாத்தின் மூலப்பொருட்கள் என்பது தங்கம், வெள்ளியாகும். 87½ கிராம் தங்கம் அல்லது 612 கிராம் வெள்ளி இருந்து, அவை ஓராண்டு முழுவதும் குறைவில்லாமல் இருந்தால், இவற்றில் நாற்பதில் ஒரு பங்கு என்ற அடிப்படையில் நூற்றுக்கு இரண்டரை சதவீதம் ஜகாத் கடமையாகும். இவ்விரண்டும் இல்லாதபட்சத்தில் கையில் பணம் மட்டுமே இருந்தால், 612 கிராம் வெள்ளி அளவுக்கு அந்த பணம் இருந்தால், அதில் இருந்து நூற்றுக்கு இரண்டரை சதவீதம் ஜகாத் கொடுக்க வேண்டும்.

    ஜகாத் கொடுப்பவர் சொந்த வீடு, சொந்த வாகனம், சொந்த தொழில் நிறுவனம், தம் மீதுள்ள கடன் போக மீதமுள்ள பணம் அந்த அளவை அடைந்தால் மட்டுமே அவர் மீது ஜகாத் கடமையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஜகாத் வாங்குவதற்கு தகுதியானவர் களின் பட்டியலை திருக்குர்ஆன் பின்வரு மாறு கூறுகிறது. 'ஜகாத் எனும் நிதிகள்

    1) வறியவர்கள்

    2) ஏழைகள்

    3) நிதியை வசூலிக்கும் ஊழியர்கள்

    4) எவர்களுடைய இதயங்கள் (இஸ்லாத்தின் பால்) ஈர்க்கப்படுகின்றனவோ அத்தகையவர்கள்

    5) அடிமைகள் விடுதலை செய்வ தற்கும்

    6) கடனாளிகள்

    7) அல்லாஹ்வின் பாதையில் (அறப்போரில்) உள்ளவர்கள்

    8) வழிப்போக்கர்கள் ஆகியோருக்கு உரியவை

    இது அல்லாஹ் விதித்த கடமையாகும். அல்லாஹ் (யாவையும்) அறிபவன். மிக்க ஞானமுடையவன்.' (திருக்குர் ஆன் 9:60)

    ஹிஜ்ரி 2-ம் ஆண்டு ரமலானில் ஜகாத் கடமையாக்கப்பட்டது. ரமலானில் ஜகாத் கொடுப்பது ஏற்றமானது; அதற்கு கூலி பன் மடங்கு வழங்கப்படும். ரமலான் அல்லாத மாதங்களிலும் தமக்கு வசதியான காலகட்டத்தில் ஜகாத் வழங்கலாம். மாறாக, ஒரு போதும் ஜகாத் வழங்காமல் மோசடி செய்து விடக்கூடாது. அவ்வாறு இருந்தால் உங்களது பொருளாதாரத்தில் அபிவிருத்தி ஏற்படாது. மாறாக அது அழிந்து போய்விடும்.

    • சிறப்புகள் நிறைந்த லைலத்துல்கத்ர்
    • ஆயிரம் மாதங்களை விட சிறந்த ஓர் இரவு இருக்கிறது.

    சிறப்புகள் நிறைந்த லைலத்துல்கத்ர்

    புனித ரமலான் மாதம் எத்தகைய சிறப்பு வாய்ந்தது எனில் அதில்தான் ஆயிரம் மாதங்களை விட சிறந்த ஓர் இரவு இருக்கிறது. அதுதான் கண்ணியமிக்க, பாக்கியமிக்க லைலத்துல் கத்ர் எனும் இரவு ஆகும். அதில்தான் இறைவேதங்களில் இறுதி வேதமான திருக்குர்ஆன் வேதம் இறங்கியது.

    இறைத்தூதர் முகம்மது நபி (ஸல்) அவர்கள் ஹிரா எனும் குகையில், இறைவனை நாடி தனிமையில் தவம் செய்தபோது, அவரது நாற்பது வயதில் முதல் இறைச்செய்தி இறங்குகிறது.

    அதிலிருந்து கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் மக்காவில் மார்க்கப் பணியில் தம்மை ஈடுபடுத் திக் கொண்டார். பிறகு மதீனாவை நோக்கி அவர் நாடு துறந்து சென்றார். இது ஹிஜ்ரத் என்று சொல்லப்படுகிறது. இந்த ஆண்டு முறைக்கு ஹிஜ்ரி என்றும் சொல்லப்படுகிறது. கணக்கிடப்படுகிறது.

    ஹிஜ்ரி 2-ம் ஆண்டு புனித ரமலான் மாதத்தில் நோன்பு கடமையாக்கப்படுகிறது. நபி (ஸல்) அவர்களுக்கு முதல் இறைச்செய்தி இறங்கி, கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் கழித்த பிறகு தான் புனித ரமலானில் நோன்பு கடமை யாக்கப்பட்டது. நபியவர்களுக்கு முதல்முறையாக இறைச்செய்தி இறங்கியதும் புனித ரமலா னில் அமைந்துள்ள லைலத்துல் கத்ர் என்ற இரவில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஹிஜ்ரி 2-ம் ஆண்டு நோன்பு கடைப்பிடிக்கப்படுவதற்கு முன்பே ரமலான் மாதமும் இருந்தது. லைலத்துல்கத்ர் எனும் இரவும் இருந்தது. எனினும், புனித ரமலானில் நோன்பு நோற்பது என்பதும், அதில் இறுதிப்பத்தில் லைலத்துல் கத்ரைத் தேடி அடைவது என்பதும் ஹிஜ்ரி 2-ம் ஆண்டிலிருந்து முறைப்படுத்தப்பட்டு, கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

    இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த லைலத்துல் கத்ர் எனும் இரவு நபி (ஸல்) அவர்களின் சமுதாயத்திற்கு கிடைக்கப்பெற காரணம் யாதெனில், 'யூதர்களில் ஒரு மனிதர் வாழ்ந்தார்.

    அவர் இரவில் இறைவணக்கம் புரிவார். பகலில் அறப்போர் புரிவார். இவ்வாறு அவர் ஆயிரம் மாதங்கள் செய்தார்' என்ற செய்தி நபித்தோழர்களுக்கு கிடைத்த போது ஆச்சரியப்பட்டு இந்த பாக்கியம் எங்களுக்கு கிடைக்காதா? என ஏங்கினார்கள். அப்போது அவர்களின் ஏக்கத்தை இறைவன் போக்கி இத்தகைய இரவை சன்மானமாக வழங்கினான்.

    'நபி ஜகரிய்யா, நபி ஹிஸ்கீல், நபி அய்யூப், நபி யூஷஃபின்நூன் ஆகிய நான்கு நபிமார் களும் 80 ஆண்டுகள் இறைவணக்கம் புரிந்தார்கள். கண் இமைக்கும் நேரம் கூட இறைவனுக்கு மாறு செய்யவில்லை' என நபி (ஸல்) கூறியபோது, நபித்தோழர்கள் ஆச்சரியப்பட்டார்கள். அப்போது ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து இறைவன் அருளிய இறை வசனத்தை கொண்டு வந்து ஒதிக் காட்டுவார்கள்.

    'மேலும், கண்ணியமிக்க இரவு என்ன என்பதை' உமக்கு அறிவித்தது எது? கண்ணிய மிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக்க மேலானதாகும். (திருக்குர்ஆன் 97:2,3)

    நபி (ஸல்) அவர்களின் சமுதாயத்தினரின் ஆயுட்காலம் முந்தைய சமுதாயத்தினரை விட மிகவும் குறைவு. அவர்களைப் போன்று ஆயுள் முழுவதும் நம்மால் வணங்க இயலாது. நமது இயலாமையை போக்கத்தான் இறை வன் இத்தகைய இரவை ரமலானின் இறுதிப்பத்தில் அமைத்திருக்கின்றான்.

    அந்த இரவை ஆயுளில் ஒரு தடவை அடைந்தாலே போதும். ஆயுள் முழுவதும் அடைந்தால் அதன் நன்மைகளை வார்த்தையால் வர்ணிக்க இயலாது.

    'எவர் லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுட னும், நன்மையை எதிர்பார்த்தும் நின்று வணங்குபவரின் முன்னர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும் என நபி (ஸல்) கூறினார் கள்'. (நூல்: புகாரி)

    ×