search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "FC Goa"

    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் பெங்களூரு அணி 1-0 என்ற கோல் கணக்கில் கோவாவை வீழ்த்தி முதல்முறையாக மகுடம் சூடியது. #ISL2018 #BengalureFC #FCGoa
    மும்பை:

    10 அணிகள் இடையிலான 5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து திருவிழாவில் இறுதிப்போட்டி நேற்றிரவு மும்பையில் அரங்கேறியது. இதில் மகுடத்துக்கான பெங்களூரு எப்.சி.- எப்.சி. கோவா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதல் நிமிடத்தில் இருந்தே இரு அணி வீரர்களும் கோல் அடிக்க தீவிரம் காட்டினர். ஆனால் வழக்கமான 90 நிமிடங்களில் யாரும் கோல் போடவில்லை. 81-வது நிமிடத்தில் பெங்களூரு வீரர் மிகு அடித்த அருமையான ஷாட் கம்பத்தில் பட்டு நழுவியது.



    இதையடுத்து 30 நிமிடங்கள் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. இரண்டு அணி வீரர்களும் தொடர்ந்து ஆக்ரோஷமாக ஆடினர். அவ்வப்போது உரசலும் ஏற்பட்டது. 105-வது நிமிடத்தில் 2-வது முறையாக மஞ்சள் அட்டை பெற்ற கோவா வீரர் அகமது ஜாஹோ வெளியேற்றப்பட்டார். இதனால் எஞ்சிய நேரம் அந்த அணி 10 வீரர்களுடன் ஆடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டது.

    இந்த பரபரப்பான சூழலில் 116-வது நிமிடத்தில் பெங்களூரு அணி கோல் போட்டது. ‘கார்னர்’ பகுதியில் இருந்து அடிக்கப்பட்ட பந்தை பெங்களூரு வீரர் ராகுல் பெகே தலையில் முட்டி வலையை நோக்கி திருப்பினார். பந்து கோவா கோல் கீப்பர் நவீன்குமாரின் கையில் பட்டு வலைக்குள் தெறித்து விழுந்தது. அதுவே வெற்றி கோலாகவும் அமைந்தது. முடிவில் பெங்களூரு அணி 1-0 என்ற கோல் கணக்கில் கோவாவை தோற்கடித்து முதல்முறையாக கோப்பையை சொந்தமாக்கியது. அதே சமயம் கோவா அணி 2-வது முறையாக இறுதி சுற்றில் தோற்று இருக்கிறது. ஏற்கனவே 2015-ம் ஆண்டிலும் தோல்வி கண்டு இருந்தது. வாகை சூடிய பெங்களூரு அணிக்கு ரூ.8 கோடியும், 2-வது இடத்தை பிடித்த கோவா அணிக்கு ரூ.4 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.

    அதிக கோல் அடித்தவர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்த கோவா அணி வீரரான ஸ்பெயினைச்சேர்ந்த பெர்ரான் கோரோமினாஸ் (16 கோல்) தங்க காலணி மற்றும் தங்கப்பந்து விருதை பெற்றார். சிறந்த கோல் கீப்பர் விருதுக்கு பெங்களூரு வீரர் குர்பிரீத் சிங் சந்து தேர்வு செய்யப்பட்டார்.
    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் இன்று பெங்களூரு எப்.சி.-எப்.சி.கோவா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. #BengaluruFC #FCGoa #ISLFinal
    மும்பை:

    5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கடந்த ஆண்டு செப்டம்பர் 29-ந் தேதி தொடங்கியது. ஆசிய கோப்பை கால்பந்து போட்டி அட்டவணை குறுக்கிட்டதால் சில காலம் இடைவெளி விட்டு நடந்த இந்த போட்டியில் லீக் ஆட்டம் முடிவில் பெங்களூரு, எப்.சி., எப்.சி. கோவா, மும்பை சிட்டி எப்.சி., நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி) எப்.சி. ஆகிய 4 அணிகள் அரைஇறுதி சுற்றுக்கு முன்னேறின. ஜாம்ஷெட்பூர் எப்.சி., அட்லெடிகோ டி கொல்கத்தா, எப்.சி.புனே சிட்டி, டெல்லி டைனமோஸ் எப்.சி., கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி. மற்றும் நடப்பு சாம்பியன் சென்னையின் எப்.சி. அணிகள் முறையே 5 முதல் 10 இடங்களை பெற்று அரை இறுதி சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறின.

    பெங்களூரு எப்.சி.-நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி) எப்.சி. அணிகள் இடையிலான முதலாவது அரைஇறுதியின் முதல் சுற்றில் பெங்களூரு அணி 1-2 என்ற கோல் கணக்கில் தோவ்வியும், 2-வது தகுதி சுற்றில் பெங்களூரு அணி 3-0 என்ற கணக்கில் வெற்றியும் பெற்றது. கோல் வித்தியாசம் அடிப்படையில் பெங்களூரு எப்.சி. அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. எப்.சி.கோவா-மும்பை சிட்டி எப்.சி. அணிகள் இடையிலான 2-வது அரைஇறுதியின் முதல் சுற்றில் கோவா அணி 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றியும், 2-வது சுற்றில் கோவா அணி 0-1 என்ற கோல் கணக்கில் தோல்வியும் கண்டது. கோல் வித்தியாசம் அடிப்படையில் கோவா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    மும்பையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு நடைபெறும் இறுதிப்போட்டியில் பெங்களூரு எப்.சி.-எப்.சி.கோவா அணிகள் மோதுகின்றன. கடந்த சீசனில் 2-வது இடம் பெற்ற பெங்களூரு அணி தொடர்ச்சியாக 2-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இதேபோல் 2015-ம் ஆண்டில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்த கோவா அணி 2-வது தடவையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்துள்ளது.

    கோவா அணியில் பெர்ரான் கோரோமினாஸ் (ஸ்பெயின்) 16 கோல்கள் அடித்து இந்த போட்டி தொடரில் முன்னிலை வகிக்கிறார். அந்த அணியில் இடம் பிடித்துள்ள எடு பெடியா 7 கோல்கள் அடித்துள்ளார். அவர்கள் இருவரையும் தான் அந்த அணி அதிகம் நம்பி இருக்கிறது. பெங்களூரு அணியில் கேப்டன் சுனில் சேத்ரி (9 கோல்கள்), மிகு (5 கோல்கள்) ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். லீக் ஆட்டம் முடிவில் சமபுள்ளிகள் பெற்ற (10 வெற்றி, 4 டிரா, 4 தோல்வி) இந்த இரு அணிகளும் தற்காப்பு மற்றும் தாக்குதல் ஆட்டத்தில் சிறப்பாக செயல்படுவதால் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

    பெங்களூரு, கோவா அணிகள் இதுவரை 4 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் பெங்களூரு அணி 3 முறையும், கோவா அணி ஒரு தடவையும் வென்று இருக்கின்றன. இந்த சீசனில் இரு அணிகளும் சந்தித்த 2 ஆட்டத்திலும் பெங்களூரு அணியே வெற்றி கண்டது. எனவே அந்த ஆதிக்கத்தை பெங்களூரு அணி இறுதிப்போட்டியிலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இந்த போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    இந்த போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.8 கோடியும், 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.4 கோடியும் பரிசாக வழங்கப்படுகிறது.
    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியின் 31-வது லீக் ஆட்டத்தில் எப்.சி.கோவா அணி 3-2 என்ற கோல் கணக்கில் டெல்லி டைனமோசை தோற்கடித்தது. #ISL2018 #FCGoa #DelhiDynamos
    கோவா:

    5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்றிரவு கோவா நேரு ஸ்டேடியத்தில் அரங்கேறிய 31-வது லீக் ஆட்டத்தில் எப்.சி.கோவா அணி 3-2 என்ற கோல் கணக்கில் டெல்லி டைனமோசை தோற்கடித்தது. ஒரு கட்டத்தில் கோவா அணி 1-2 என்ற கோல் கணக்கில் பின்தங்கி இருந்த நிலையில் பிரான்டன் பெர்னாண்டஸ் (82-வது நிமிடம்), எடு பெடியா (89-வது நிமிடம்) ஆகியோர் கோல் போட்டு அந்த அணிக்கு வெற்றியை தேடித்தந்தனர்.



    கோவா அணி 4 வெற்றி, ஒரு டிரா, ஒரு தோல்வி என்று 13 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. டெல்லி அணிக்கு இது 4-வது தோல்வியாகும். இன்றைய ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி)- மும்பை சிட்டி (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன. 
    ஜாம்ஷெட்பூரில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கோவா அணியை 4-1 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. #ISL2018 #JamshedpurFC #FCGoa
    ஜாம்ஷெட்பூர்:

    5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஜாம்ஷெட்பூரில் நடைபெற்ற போட்டியில் ஜாம்ஷெட்பூர் எப்.சி, கோவா அணிகள் மோதின.

    ஆட்டத்தின் 17-வது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் மைக்கேல் சூசைராஜ் முதல் கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார்.

    இதையடுத்து, கோவா அணியின் சார்பில் மூர்ததா பால் 33வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். அதன் பின்னர், முதல் பாதி முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து சமனிலை வகித்தன.

    இரண்டாவது பாதியில், மைக்கேல் சூசைராஜ் மீண்டும் ஒரு கோல் அடித்தார். தொடர்ந்து, மெமோ 77-வது நிமிடத்திலும், சுமித் பாசி 78-வது நிமிடத்திலும் ஒரு கோல் அடித்தனர்.

    இறுதியில், ஜாம்ஷெட்பூர் அணி 4- 1 என்ற கோல் கணக்கில் கோவா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த  வெற்றி மூலம் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. #ISL2018 #JamshedpurFC #FCGoa
    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியின் 21-வது லீக் ஆட்டத்தில் கோவா அணி 4-2 என்ற கோல் கணக்கில் புனே அணியை தோற்கடித்தது. #ISL2018 #FCGoa #PuneCity
    கோவா:

    5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்றிரவு கோவா நேரு ஸ்டேடியத்தில் அரங்கேறிய 21-வது லீக் ஆட்டத்தில் எப்.சி.கோவா- புனே சிட்டி அணிகள் சந்தித்தன. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் பந்து கோவா பக்கமே கணிசமான நேரம் (62 சதவீதம்) சுற்றி வந்தது. முதல் பாதி நேரத்திற்குள் கோவா அணியில் பெர்ரன் கோரோமினாஸ் (5, 35-வது நிமிடம்), ஹூகோ போமஸ் (12-வது நிமிடம்), ஜாக்கிசந்த் சிங் (20-வது நிமிடம்) ஆகியோர் கோல் போட்டனர். மார்சிலோ பெரீரா (8-வது நிமிடம்), எமிலியானோ ஆல்பரோ (23-வது நிமிடம்) ஆகியோர் புனே அணிக்காக பந்தை வலைக்குள் அனுப்பினர். ஆனால் பிற்பாதியில் யாரும் கோல் போடவில்லை. இறுதி கட்டத்தில் முரட்டு ஆட்டத்தில் ஈடுபட்ட நட்சத்திர வீரர் பெர்ரன் கோரோமினாஸ் (கோவா), டியாகோ கார்லஸ் (புனே) ஆகியோர் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டனர்.

    முடிவில் கோவா அணி 4-2 என்ற கோல் கணக்கில் புனே அணியை தோற்கடித்தது. 4-வது ஆட்டத்தில் ஆடிய கோவா அணி 3 வெற்றி, ஒரு டிரா என்று 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. புனே அணிக்கு இது 3-வது தோல்வியாகும். இன்றைய ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எப்.சி.-கேரளா பிளாஸ்டர்ஸ் (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன.
    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி எப்.சி அணியை 5 - 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கோவா அணி அபார வெற்றி பெற்றது. #ISL2018 #FCGoa #MumbaiCityFC
    5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதில் கோவாவில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் எப்.சி. கோவா அணியும், மும்பை சிட்டி எப்.சி அணியும் மோதின.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே கோவா அணியினர் சிறப்பாக ஆடினர். ஆட்டத்தின் 6-வது நிமிடத்தில் பெரான் கரோமினஸ் முதல் கோல் அடித்தார். ஆட்டத்தின் முதல் பாதியில் 1-0 என கோவா அணி முன்னிலை வகித்தது.

    ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 55வது நிமிடத்தில் ஜாக்சந்த் சிங் ஒரு கோலும், 61-வது நிமிடத்தில் எடு பீடியா ஒரு கோலும், 84 மற்றும் 90 வது நிமிடத்தில் பலங்கா பெர்னாண்டசும் கோல் அடித்தனர்.

    இறுதியில், எப்.சி. கோவா அணி 5 - 0 என்ற கோல் கணக்கில் மும்பை சிட்டி எப்.சி. அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் கோவா முதல் இடத்துக்கு முன்னேறியது. #ISL2018 #FCGoa #MumbaiCityFC
    சென்னையில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னையின் எப்.சி அணியை 3 -1 என்ற கோல் கணக்கில் எப்.சி. கோவா அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. #ISL2018 #ChennaiyinFC #FCGoa
    சென்னை:

    5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதில் சென்னையில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னையின் எப்.சி, எப்.சி. கோவா அணிகள் மோதின.

    ஆட்டத்தின் 12-வது நிமிடத்தில் கோவா அணியின் எடு பெடியா முதல் கோலை அடித்தார். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் கோவா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

    ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 53-வது நிமிடத்தில் கோவா அணியின் பெரான் கரோமினாஸ் ஒரு கோலும், 80-வது நிமிடத்தில் மோர்டடா பால் ஒரு கோலும் அடித்தனர். இதனால் கோவா அணி 3 - 0 என முன்னேறியது. 
     
    கடைசியாக வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தின் இறுதியில் சென்னையி எப்.சி அணி சார்பில் ஈலி சபியா ஒரு கோல் அடித்தார்.

    இறுதியில், சென்னையின் எப்.சி அணியை 3-1 என்ற கணக்கில் கோவா அணி வீழ்த்தி வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் முதல் இடம் பிடித்தது. #ISL2018 #ChennaiyinFC #FCGoa
    சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று இரவு நடக்கும் ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியின் 8-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி, எப்.சி.கோவா அணியை எதிர்கொள்கிறது. #ISL2018 #ChennaiyinFC #FCGoa
    சென்னை:

    10 அணிகள் இடையிலான 5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று (சனிக்கிழமை) இரவு நடக்கும் 8-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி, எப்.சி.கோவா அணியை எதிர்கொள்கிறது. மெய்ல்சன் ஆல்வ்ஸ் தலைமையிலான சென்னை அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் 0-1 என்ற கோல் கணக்கில் பெங்களூரு அணியிடம் தோல்வியை தழுவியது. மந்தர் ராவ் தேசாய் தலைமையிலான கோவா அணி தனது முதலாவது ஆட்டத்தில் கவுகாத்தியுடன் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா கண்டது.

    இந்த சீசனின் முதல் வெற்றியை ருசிக்க இரண்டு அணிகளும் வரிந்து கட்டுவதால் இந்த ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம். உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு சென்னை அணிக்கு பலம் சேர்க்கும். சென்னை அணியின் பயிற்சியாளர் ஜான் கிரிகோரி கூறுகையில், ‘பெங்களூருவுக்கு எதிராக எங்கள் அணி சிறப்பாக தான் செயல்பட்டது. இருப்பினும் நாங்கள் கோல் அடிக்க கிடைத்த வாய்ப்புகளை சரியாக முழுமை செய்யவில்லை. அந்த தவறை வரும் ஆட்டங்களில் சரி செய்வோம். சிறிய வாய்ப்பு கிடைத்தாலும் அதனை கோலாக மாற்றுவதில் கோவா அணியினர் சிறந்தவர்கள். எனவே தடுப்பு ஆட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமானதாகும்’ என்றார்.

    இவ்விரு அணிகளும் இதுவரை 9 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 5-ல் சென்னையும், 3-ல் கோவாவும் வெற்றி பெற்றன. ஒரு ஆட்டம் டிராவில் முடிந்தது. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.  #ISL2018 #ChennaiyinFC #FCGoa
    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கோவா-கவுகாத்தி அணிகள் இடையிலான ஆட்டம் யாருக்கும் வெற்றி தோல்வியின்றி ‘டிரா’வில் முடிந்தது. #ISL2018 #NorthEastUnited #FCGoa
    கவுகாத்தி:

    5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னையின் எப்.சி., பெங்களூரு எப்.சி., நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி), எப்.சி.கோவா, மும்பை சிட்டி, ஜாம்ஷெட்பூர், அட்லெடிகோ டி கொல்கத்தா, கேரளா பிளாஸ்டர்ஸ், டெல்லி டைனமோஸ், புனே சிட்டி ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.



    இந்த நிலையில் கவுகாத்தியில் நேற்றிரவு நடந்த 3-வது லீக் ஆட்டத்தில் கவுகாத்தி-கோவா அணிகள் மல்லுகட்டின. இதில் பலம் வாய்ந்த கோவா அணி முழுமையாக ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கவுகாத்தி அணியினர் ஈடுகொடுத்து ஆடினர். கோவா கோல் கீப்பர் முகமது நவாஸ் செய்த தவறால் 8-வது நிமிடத்தில் கவுகாத்தி வீரர் பெடரிகோ காலெகோ கோல் அடித்தார். அதாவது தனது பகுதியை விட்டு வெளியே வந்து பந்தை பிடித்த முகமது நவாஸ் அது ஆப்-சைடு என்று அறிவிக்கப்படும் என்று நினைத்தார். ஆனால் நடுவரோ உடனடியாக பிரிகிக் வாய்ப்பு வழங்கினார். அவர் திரும்புவதற்குள் பந்தை பெடரிகோ கோலாக மாற்றினார்.

    இதன் பின்னர் 14-வது நிமிடத்தில் பதிலடி கொடுத்த கோவா அணியின் நட்சத்திர வீரர் பெரன் கோராமினோஸ் கோல் அடித்தார். 39-வது நிமிடத்தில் எதிரணியின் மூன்று தடுப்பாட்டக்காரர்களை ஏமாற்றி கோராமினோஸ் மீண்டும் ஒரு கோல் போட்டார். இதனால் 2-1 என்ற கோல் கணக்கில் கோவா முன்னிலை பெற்றது. ஆனால் இந்த முன்னிலையை அவர்கள் தக்க வைத்துக் கொள்ள தவறினர். 53-வது நிமிடத்தில் கவுகாத்தி கேப்டன் பார்த்தோலோம் ஓக்பேச் தலையால் முட்டி கோல் அடித்தார். முடிவில் இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.

    மும்பையில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் லீக்கில் மும்பை சிட்டி-ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதுகின்றன. #ISL2018 #NorthEastUnited #FCGoa 
    ×