search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Feel Sad"

    வாக்குரிமை பெற்றவர்கள் தேர்தலில் ஓட்டு போடாவிட்டால் பின்னர் வருந்த நேரிடும் என வானொலியில் பிரதமர் மோடி கூறினார். #PMModi #Vote #MannKiBaat
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி மாதந்தோறும் இறுதி ஞாயிற்றுக்கிழமையில் வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். ‘மன் கீ பாத்’ எனப்படும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு தகவல்களை அவர் பகிர்ந்து கொள்கிறார்.

    அந்தவகையில் நேற்று ஒலிபரப்பான மன் கீ பாத் உரையில், வாக்களிப்பதன் முக்கியத்துவம் மற்றும் தேர்தல் கமிஷனின் அயராத பணிகளை பிரதமர் சுட்டிக்காட்டினார். குறிப்பாக, கடந்த 25-ந் தேதி வாக்காளர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில், முதல் முறை வாக்களிக்கப்போகும் இளம் வாக்காளர்களுக்கு அவர் அறிவுரைகளை வழங்கி இருந்தார்.

    இது தொடர்பாக மோடி கூறியதாவது:-

    21-ம் நூற்றாண்டில் பிறந்தவர்கள் முதல் முறையாக நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க இருக்கின்றனர். தேசத்தின் கடமைகளில் தோள்கொடுக்கும் வாய்ப்பை எதிர்கொள்ள இருக்கின்றனர். தேச கட்டுமானத்தின் பங்குதாரர்களாக பயணத்தை தொடங்க உள்ளனர். அவர்களின் தனிப்பட்ட கனவை தேசத்தின் கனவுடன் இணைப்பதற்கான நேரம் வந்திருக்கிறது.

    வாக்களிக்க தகுதி வாய்ந்த இளம் சமூகத்தினர் அனைவரும் தங்களை வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ள வேண்டும். வாக்காளர் ஆவதன் மூலம் வாக்குரிமையை பெறுகிறோம். இது, நமது வாழ்க்கை பயணத்தின் முக்கியமான சடங்குகளில் ஒன்று என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும்.

    அதேநேரம் வாக்களிப்பது புனிதமான கடமை என்ற உணர்வும் நம்மிடம் தானாகவே வளர வேண்டும். எந்த காரணத்தை முன்னிட்டும் ஒருவர் வாக்களிக்க முடியவில்லை என்றால், அது ஒருவரை காயப்படுத்தும். வாக்குரிமை பெற்றவர்கள் ஓட்டு போடாவிட்டால் பின்னர் வருந்த நேரிடும்.

    எனவே வாக்களிக்கும் கடமையின் முக்கியத்துவத்தை மக்கள் நிச்சயம் புரிந்து கொள்ள வேண்டும். அதைப்போல வாக்காளர் பதிவு மற்றும் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வை பரப்புவதில் முக்கிய பிரபலங்களும் இணைந்து கொள்ள வேண்டும்.

    இந்தியாவில் தேர்தல் நடத்தப்படுவது உலக நாடுகளுக்கு பிரமிப்பாக இருக்கிறது. தேர்தல் கமிஷன் மற்றும் அதன் திறன்வாய்ந்த செயல்பாடுகளால் ஒவ்வொரு குடிமகனும் பெருமை அடைகின்றனர். ஒவ்வொரு வாக்காளருக்கும் தனது வாக்குரிமையை தேர்தல் கமிஷன் உறுதி செய்கிறது. இதுதான் நமது ஜனநாயகத்தின் அழகு.

    நேர்மை மற்றும் சுதந்திரமான முறையில் தேர்தல் நடப்பதுக்கு உறுதுணையாக இருக்கும் ஒவ்வொரு மாநிலத்தின் தேர்தல் கமிஷன்கள், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவர் மீதும் மிகுந்த மதிப்பு வைத்திருக்கிறேன்.

    இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.  #PMModi #Vote #MannKiBaat
    ×