ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டிகள் கடந்த 2008-ம் ஆண்டு முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடந்த 10 சீசன் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 முறை பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. மற்ற இரண்டு முறை சென்னை அணிக்கு, ஐபிஎல் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டதால் பிளே-ஆப் சுற்றில் சென்னை அணி இல்லாமல் இருந்தது.
இந்நிலையில், இந்தாண்டு நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் புள்ளிகள் அடிப்படையில் இரண்டாவது இடம் பிடித்த சென்னை அணி முதல் பிளே-ஆப் போட்டியில் வெற்றி பெற்று முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இது சென்னை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவது ஏழாவது முறையகும். இதுவரை ஐபிஎல்லில் 9 முறை விளையாடியுள்ள சிஎஸ்கே இரண்டு முறை மட்டுமே இறுதிப் போட்டியில் விளையாடவில்லை.
சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை விளையாடியுள்ள இறுதிப் போட்டிகள் குறித்து காணலாம்:
முதல் சீசன் (2008):
2008-ம் ஆண்டு நடைபெற்ற முதல் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் ஆகிய அணிகள் அரை இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றன.
அரையிறுதியில் பஞ்சாப் அணியை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இறுதிப்போட்டியில் ராஜஸ்தான் அணியை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ரன்கள் குவித்தது. சுரேஷ் ரெய்னா அதிகபட்சமாக 30 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். யூசுப் பதான் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
தொடர்ந்து பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 41 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது. ஆனால் யூசூப் பதான் 39 பந்துகளில் மூன்று பவுண்டரிகள், நான்கு சிக்ஸர்கள் உட்பட 56 ரன்கள் குவித்தார். இறுதி ஓவரில் எட்டு ரன்கள் தேவை என்ற நிலையில் பாலாஜி வீசிய அந்த ஓவரின் கடைசி பந்தில் ராஜஸ்தான் கேப்டன் ஷேன் வார்னே பவுண்டரி அடித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வெற்றி பெற செய்தார். இதன்மூலம் முதல் ஐபிஎல் கோப்பையை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கைப்பற்றியது.
2008 சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ்
2009-ம் ஆண்டு சென்னை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறவில்லை.
மூன்றாவது சீசன் (2010):
மூன்றாவது ஐபிஎல் சீசனில் லீக் சுற்று முடிவில் நான்கு அணிகள் 14 புள்ளிகளை எடுத்திருந்தன. ஆனால் பெங்களூரு அணியும், சென்னை அணியும் ரன் ரேட் அடிப்படையில் அரை இறுதிக்கு முன்னேறின. முன்னதாக மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெக்கான் சார்ஜர்ஸ் ஐதராபாத் அணிகள் அரை இறுதிக்குத் தகுதி பெற்றிருந்தன.
சென்னை அணி டெக்கான் சார்ஜர்ஸ் அணியை எளிதாக வென்று இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதியது. முதலில் ஆடிய சென்னை அணி, மும்பை அணிக்கு 169 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. சுரேஷ் ரெய்னா 35 பந்துகளில் 57 ரன்கள் குவித்தார்.
தொடர்ந்து விளையாடிய மும்பை அணியால் 149 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் வெற்றி பெற்ற சென்னை அணி, முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது.
2010 சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ்
நான்காவது சீசன் (2011):
4-வது ஐபிஎல் தொடரின் லீக் சுற்றின் முடிவில் சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா ஆகிய அணிகள் பிளே-ஆப் சுற்றுக்குத் தகுதி பெற்றன. பிளே-ஆப் சுற்றில் சென்னை அணி பெங்களூரை வென்று நேரடியாக இறுதிப்போட்டியில் நுழைந்தது. சென்னை எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில் சென்னை அணி மீண்டும் பெங்களூரு அணியைச் சந்தித்தது.
முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி முரளி விஜய் மற்றும் மைக் ஹசியின் சிறப்பான ஆட்டத்தால் 205 ரன்கள் குவித்தது. முரளி விஜய் 52 பந்தில் 95 ரன்கள் எடுத்தார். பெங்களூரு அணியில் யாரும் நிலைத்து நின்று விளையாடவில்லை. இதனால் 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ், சொந்த மண்ணில் மீண்டும் கோப்பையை கைப்பற்றியது.
2011 சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ்
ஐந்தாவது சீசன் (2012):
5-வது சீசன் தொடரில் லீக் சுற்றில் பெங்களூரு அணியும் சென்னை அணியும் தலா 17 புள்ளிகளை எடுத்திருந்தாலும் ரன்ரேட் அடிப்படையில் சென்னை நான்காவது அணியாக பிளே-ஆப் சுற்றுக்குள் நுழைந்தது. மும்பை, டெல்லி, கொல்கத்தா அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறிய மற்ற மூன்று அணிகளாகும்.
பிளே-ஆப் எலிமினேட்டர் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணியை 38 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வென்றது. பிளே-ஆப் குவாலிபையர்-2 சுற்றில் டெல்லியை 86 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற சிஎஸ்கே இறுதிப் போட்டியில் கொல்கத்தாவைச் சந்தித்தது. இதன்மூலம் சென்னை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவதில் ஹாட்ரிக் சாதனை படைத்தது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில் கொல்கத்தாவுக்கு 191 ரன்களை இலக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயித்தது. சென்னை அணி தரப்பில் ரெய்னா 38 பந்துகளில் 73 ரன்கள் குவித்தார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் கம்பீர் 2 ரன்களில் அவுட் ஆனாலும் மற்றொரு தொடக்க வீரரான பிஸ்லா 48 பந்துகளில் 89 ரன்கள் குவித்தார். காலிஸ் 49 பந்துகளில் 69 ரன்கள் எடுத்தார்.
இறுதி ஓவரில் ஒன்பது ரன்கள் தேவைப்பட்ட நிலையில் பிராவோ பந்து வீச மனோஜ் திவாரி இரண்டு பவுண்டரிகளை அடித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதல் ஐபிஎல் கோப்பையை கைப்பற்ற உதவினார்.
2012 சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
ஆறாவது சீசன் (2013):
இந்த சீசனில் லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் சென்னை அணி முதலிடம் பிடித்தது. மும்பை , ராஜஸ்தான், ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகளும் பிளே-ஆப் சுற்றுக்குத் தகுதி பெற்றிருந்தன.
முதல் குவாலிபையர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை, சென்னை 48 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. ஆனால் மும்பை அணி இராண்டாவது குவாலிபையர் போட்டியில் வெற்றி பெற்று, மீண்டும் சிஎஸ்கே அணியை இறுதிப் போட்டியில் சந்தித்தது.
முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி பொல்லார்டின் அதிரடி ஆட்டத்தால் 148 ரன்களை குவித்தது. சென்னை அணியில் தோனியைத் தவிர மற்ற வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை. இதனால் 20 ஓவர்களில் சென்னை அணியால் 125 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. கேப்டன் தோனி 45 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தார். இப்போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் சென்னை அணி தொடர்ந்து இரு இறுதிப் போட்டிகளில் தோல்வியடைந்தது.
2013 சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்
2014-ம் ஆண்டு சென்னை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறவில்லை.
எட்டாவது சீசன் (2015):
இந்த சீசனிலும் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தோடு குவாலிபையர் சுற்றுக்குள் நுழைந்தது சென்னை அணி. மும்பை, பெங்களூரு, ராஜஸ்தான் அணிகளும் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறின.
முதல் குவாலிபையர் போட்டியில் மும்பை அணியிடம் 25 வித்தியாசத்தில் சென்னை அணி தோற்றது. இரண்டாவது குவாலிபயர் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று சென்னை அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
இறுதிப்போட்டியில் சென்னை அணியின் வெற்றிக்கு 203 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஸ்மித் தவிர சென்னை அணியில் யாரும் சரியாக பேட்டிங் செய்யவில்லை. இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சென்னை சூப்பர் கிங்ஸால் 161 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இரண்டாவது முறையாக மும்பை அணியிடம் இறுதிப் போட்டியில் தோற்று கோப்பையை தவறவிட்டது சென்னை அணி.
2015 சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்
அடுத்த இரு சீசன்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாட தடை விதிக்கப்பட்டதால், சென்னை அணி பங்குபெறவில்லை.
11-வது சீசன் (2018):
இதையடுத்து இந்தாண்டு மீண்டும் களமிறங்கிய சென்னை அணி சிறப்பாக விளையாடி புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்து, பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. இதுதவிர ஐதராபாத், கொல்கத்தா, ராஜஸ்தான் அணிகளும் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.
முதல் பிளே-ஆப் போட்டியில் சென்னை அணி ஐதராபாத்தை வீழ்த்தி 9-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது. இதுவரை விளையாடிய ஆறு இறுதிப் போட்டிகளில் சென்னை அணி நான்கு முறை தோல்வி அடைந்துள்ளது. இதன் மூலம் அதிக முறை இறுதிப் போட்டியில் தோற்ற அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளது. இந்நிலையில் நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் ஐதராபாத் சன் ரைஸர்ஸ் அணியை எதிர்கொள்கிறது சென்னை அணி.
கேன் வில்லியம்சன் தலைமையிலான ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த சீசனில் ஏற்கனவே மூன்று முறை தோற்கடித்துள்ளது. இதற்கு ஐதராபாத் பதிலடி கொடுக்குமா அல்லது சென்னை அணி வெற்றி பெற்று மூன்றாவது முறையாக கோப்பையை வெல்லுமா என்பது நாளை தெரிந்துவிடும். #IPL2018 #VIVOIPL #ChennaiSuperKings