என் மலர்
நீங்கள் தேடியது "Follicular Monitoring"
- ஃபோலிகுலர் என்பது அண்டவிடுப்பினை கண்டறிய உதவும் எளிமையான ஸ்கேன்.
- கருப்பையின் நுண்ணறை வளர்ச்சியை மருத்துவர் ஆராய்வார்.
குழந்தைபேறு வேண்டும் தம்பதியர் கருத்தரிக்க முயற்சித்தும் இயலாத நிலையில் பெண்ணின் அண்டவிடுப்பினை கண்காணித்து அந்த நேரத்தில் திட்டமிடுவதன் மூலம் கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கும். அண்டவிடுப்பின் சுழற்சியை கண்காணிக்க ஒவ்வொரு மாதமும் ஃபோலிகுலர் ஆய்வு செய்ய டாக்டர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
ஃபோலிகுலர் ஆய்வு என்பது அண்டவிடுப்பினை கண்டறிய உதவும் எளிமையான ஸ்கேன் பரிசோதனை. இது மாதவிடாய் கால சுழற்சியில் 9 ஆம் நாளுக்கு பிறகு அண்டவிடுப்பு உண்டாகும் வரை தொடரும். இந்த முட்டை எப்போது வெளிவரும் என்பதை கணக்கிடுவதற்காக கருப்பையின் நுண்ணறை வளர்ச்சியை மருத்துவர் ஆராய்வார். ஏனெனில் இந்த நேரத்தில் தம்பதியர் திட்டமிட்டால் அது கருத்தரிப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்யும்.
ஆய்வுகளின் படி அல்ட்ராசவுண்ட் வழியாக மாதவிடாய் சுழற்சியை கண்காணித்தாலும் கருத்தரிக்க சில மாதங்கள் வரை ஆக கூடும்.
ஒரு பெண் மாதவிடாய் சுழற்சியின் போது அதாவது 9 முதல் 20 நாட்களில் பல முறை ஃபோலிகுலர் ஸ்கேன் செய்ய வேண்டியிருக்கும். இது வலியற்ற செயல்முறை. இதனால் கருப்பையில் இருக்கும் நுண்ணறை வளர்ச்சியை பார்க்க இவை உதவுகிறது.
இது பெண் உறுப்பின் வழியாக செய்யப்படும் பரிசோதனை ஆகும். சோனாகிராஃபர்கள் நுண்ணறைக்குள் முட்டையின் வளர்ச்சியை கண்காணிக்க உதவுகிறது. முட்டையை வெளியிடும் காலத்தை மட்டும் அல்லாமல் இதன் மூலம் மேலும் பல விஷயங்களை காணலாம்.
வளர்ச்சி குறைபாடான நுண்ணறைகள், முன்கூட்டியே சிதைந்த நுண்ணறைகள், கர்ப்பப்பை புறணிக்குள் முட்டையை பொருத்துதல் என எல்லாவற்றையும் இந்த பரிசோதனையின் மூலம் செய்ய முடியும்.
மேலும் இந்த பரிசோதனையின் மூலம் கருச்சிதைவு வரலாறு, ஐவிஎஃப் சிகிச்சை, அண்டவிடுப்பு குறைபாடு போன்றவற்றையும் அறிய முடியும்.
35 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், கருவுற முயற்சித்து ஒரு வருடம் வரை காத்திருந்தும் கருவுறுதலை சந்திக்காமல் இருந்தால் அவர்களுக்கு இந்த ஃபோலிகுலர் ஆய்வு அவசியம் தேவை. ஏனெனில் இந்த பெண்ணுக்கு கர்ப்பப்பை குறைபாடு, பி.சி.ஓ.எஸ் போன்றவற்றை கொண்டிருந்தால் ஒழுங்கற்ற மாதவிடாய் இருக்கும். அதனால் அண்டவிடுப்பு சுழற்சி நடைபெறாமல் இருக்கும்.
அதே நேரம் கருவுற்தல் மருந்துகள் பயன்படுத்தி ஆறுமாதங்கள் கடந்தும் நீங்கள் கருத்தரிக்கவில்லை என்றால் அது கவனிக்க வேண்டிய விஷயமாகும். ஃபோலிகுலர் கண்காணிப்பின் போது பிரச்சனைகள் கண்டறியப்படும் என்றாலும் அது பெண்களின் வயதை பொறுத்தது.
- பருவமடையும் போது ஈஸ்ட்ரோஜன் அளவுகள் உயரும்.
- மாதவிடாய் சுழற்சியில் புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன் முக்கியப் பங்கு வகிக்கிறது.
மகளிரின் ஆரோக்கியமான மாதவிடாய் சுழற்சிக்கு ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன் இரண்டுமே இன்றியமையாதது. மாதவிடாய் சுழற்சியின் முதல் பாதியில் ஈஸ்ட்ரோஜன் அதிகமாக இருக்கும். இது பாலிகுலர் பிரீயட் என்று அழைக்கப்படுகிறது.

இந்த காலகட்டத்தில் முதல் இரண்டு வாரங்களில் கருமுட்டை விடுவிப்பு நடைபெறுகிறது. இதன் பின்னர் புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன் ஆதிக்கம் செலுத்துகிறது.
இனப்பெருக்க காலங்களில் சினைப்பைகள் ஈஸ்ட்ரோஜனின் பெரும்பகுதியை உருவாக்குகின்றன. இதுதவிர சிறுநீரகங்களின் மேல் உள்ள அட்ரீனல் சுரப்பிகள் மற்றும் அடிபோஸ் திசுக்கள் (உடல் கொழுப்பு) ஈஸ்ட்ரோஜனை சுரக்கின்றன. கர்ப்ப காலத்தில் நஞ்சுக்கொடியும் ஈஸ்ட்ரோஜனை சுரக்கிறது.

ஈஸ்ட்ரோஜன் செயல்பாடுகள்
ஈஸ்ட்ரோஜன் மனநிலையை ஒழுங்குபடுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் மூளையின் பாகங்கள் உட்பட உடலில் எல்லா இடங்களிலும் ஈஸ்ட்ரோஜன் செயல்படுகிறது.
மனநிலையை மாற்றும் செரோடோனின் ரசாயனத்தையும் மூளையில் உள்ள செரோடோனின் ஏற்பிகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்கிறது.
மூளையில் 'நல்ல உணர்வு' ரசாயனங்களான எண்டோர்பின்களின் உற்பத்தி மற்றும் விளைவுகளை மாற்றியமைக்கிறது. நரம்புகளை சேதங்களிலிருந்து பாதுகாத்தல் மற்றும் நரம்பு வளர்ச்சியைத் தூண்டுகிறது.

சினைப்பைகள் கருமுட்டையை வெளியிடும் போது, கர்ப்பத்திற்கு தயார்படுத்த கருப்பையின் எண்டோமெட்ரியம் புறணியை அடர்த்தியாக்குகிறது. கருமுட்டை வெளிவரும் நாட்களில் ஈஸ்ட்ரோஜன் உச்சத்தை அடைகிறது. இது மிகவும் வளமான காலம். கர்ப்பப்பை சளிச்சுரப்பை அதிகரித்து கருவுறுதல் நிகழ, விந்தணு நீந்த உதவுகிறது.
பருவமடையும் போது ஈஸ்ட்ரோஜன் அளவுகள் உயரும். மார்பகங்கள் மற்றும் ஒட்டுமொத்த உடல் அமைப்பில் மாற்றங்கள் ஏற்பட்டு இரண்டாம் நிலை பாலின பண்புகளுக்கு வழிவகுக்கிறது. சீரான மாதவிடாய் சுழற்சி நடைபெற புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோனுடன் முக்கியப் பங்கு வகிக்கிறது.
இந்த ஹார்மோன்கள் மாதவிடாயை சீராக வைத்திருக்க ஒரு நுட்பமான சமநிலையில் இணைந்து செயல்படுகின்றன. தாம்பத்தியத்திற்கு வசதியாக யோனி சுவர்களை மென்மையாகவும், மீள்தன்மையுடனும், உயவூட்டுவதாகவும் வைத்து, வலியைக் குறைக்கிறது.

மெனோபாஸ் காலம்
பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் மெனோபாஸ் காலத்தில் ஈஸ்ட்ரோஜன் சுரக்கும் அளவுகுறையும். இது மாதவிடாய் நிறுத்தத்திற்கு சில காலங்களுக்கு முன்பே ஆரம்பிக்கும். தொடர்ந்து 12 மாதங்களுக்கு மாதவிடாய் இல்லாதபோது அதிகாரப்பூர்வமாக மெனோபாஸ் தொடங்குகிறது. இது பொதுவாக 51 வயதில் நடக்கும்.
இந்த வயது நபருக்கு நபர் வேறுபடும். மாதவிடாய் நின்றவுடன், ஈஸ்ட்ரோஜன் அளவுகள் குறைந்து, யோனி வறட்சி, மனநிலை மாற்றங்கள், இரவில் வியர்த்தல் போன்ற அறிகுறிகள் காணப்படும்.
ஈஸ்ட்ரோஜன் குறைபாடு காரணமாக மனநிலை மாற்றங்கள் அடிக்கடி ஏற்படும். ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி, தலைவலி, சிறுநீர்ப் பாதை தொற்று ஏற்பட வாய்ப்பு உண்டு.

ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சமநிலை ஏற்படுத்தும் உணவுகள்:
ஆளி விதைகள் மற்றும் அலிசி விதைகள் (பிளாக் சீட்), சோயா பீன் இவைகளில் உள்ள பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள், ஐசோபிளேவன் போன்றவை ஈஸ்ட்ரோஜன் சமநிலைக்கு உதவும்.
பாலுக்கு மாற்றாக சோயா பால் குடிக்கலாம். உலர்ந்த அத்திப்பழம், பேரீச்சம்பழம், கருப்பு திராட்சைப்பழம், பூண்டு, பெருங்காயம், எள் விதைகள், முட்டைக்கோஸ், காலிபிளவர், பிரக்கோலி, வேர்க்கடலை, பாதாம், பிஸ்தா, வால்நட், பெர்ரி வகை பழங்கள், கருஞ்சீரகம், பெருஞ்சீரகம், கோதுமை ஆகியவை நல்லது.
மன அழுத்தத்தை நீக்க இறை பிரார்த்தனை, தியானம், உடற்பயிற்சி செய்ய வேண்டும். போதுமான நேரம் இரவில் தூங்க வேண்டும்.